அமெரிக்காவில் எனது பேத்தி வளரும் முறை!
[ இதே அடிப்படையில் எல்லா தாய்மார்களும், தன் குழந்தைகளை வளர்த்தால் அந்தக் குழந்தைகள் ஒழுக்கமான, இறையச்சம் உள்ளவர்களாக வளர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி. ]
நான் சமீபத்தில் எனது குடும்பத்தாரை பார்ப்பதற்கு அமெரிக்கா சென்று இரண்டு மாதங்கள் ரெட்மென்ட் (REDMAND) நகரில் தங்கி வந்தேன். அங்கே உழைப்பிற்கு சென்ற முஸ்லிம்கள் அனைவரும் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதுமட்டுமின்றி இறையச்சத்தோடு முறையாக வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த நாட்டில் எனக்கு நான்கு வயதில் மரியம் என்ற பெயருடைய பேத்தி இருக்கிறாள். ஒரு நாள் எனது மகள், தன் பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தது.
எனது பேத்தி மரியம் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டாமல், தாய் செயலுக்கு இடையூறு செய்தது. உடனே எனது மகள் எனது பேத்தியை உற்சாகப்படுத்த, உனக்கு காக்கா கதை சொல்றேன் எனக் கூறி, உணவு ஊட்டத் தொடங்கினார்.
அது பாடப் புத்தகத்தில் வந்த தெரிந்த கதையாக இருந்தாலும், எனது மகள் சொன்ன கதையை நானும் கூர்ந்து கவனித்தேன்.
“ஒரு காட்டில் ஒரு காகம் இரைத் தேடி பறந்து-அலைந்தது. அது எதிர்பார்த்தபடி சரியாக இரை கிடைக்கவில்லை. அலைந்த கலைப்பில் காகத்திற்கு தாகம் எடுத்தது. உடனே காகம், அல்லாஹ்வை நினைத்து, ‘அல்லாஹ்வே எனக்கு இன்று சரியான இரையும் கிடைக்கலே, தாகத்திற்கு தண்ணீருமில்லை. இறைவா என்மீது கருணை காட்டு, தாகம் தீர்க்க உதவி செய், யா அல்லாஹ்!’ என அல்லாஹ்விடம் வேண்டிக் கொண்டு, காகம் தண்ணீர் தேடி பறந்தது.
அல்லாஹ் காகத்தின் நிலையை அறிந்து, அதற்கு உதவி செய்தான். ஒரு இடிந்த கட்டிடத்திற்கு அருகில் ஒரு பானை இருந்ததைக்கண்டு காகம் பறந்து வந்து அதன் மீது அமர்ந்தது. பானை உள்ளே தலையை விட்டுப் பார்த்தது. பானையின் அடியில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. இதைப் பார்த்த காகத்திற்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இருந்தாலும் எட்டிக் குடிக்க முடியவில்லை.
உடனே காகம் அல்லாஹ்விடம் வேண்டியது. இறைவா, எனக்கு தண்ணீரை காட்டிவிட்டாய், இருந்தும் அதனை என்னால் குடிக்க இயலவில்லையே… என மனம் வருந்தி, “எனக்கு உதவி செய் இறைவா” என்று துஆ செய்தது.
இறைவன் அதற்கு சிந்திக்கும் அறிவைக் கொடுத்தான். அதன்படி பக்கத்தில் சிதறிக் கிடந்த பொடி கற்களை பொறுக்கி தண்ணீர் பாணைய்ல் போட ஆரம்பித்தது. இப்படி காகம் புத்திசாலித்தனமாக செயல்பட்டதால், அடியில் கிடந்த தண்ணீர் பாணையின் மேல் பக்கம் உயர்ந்து வந்தது. இது எல்லாம் வல்ல இறைவனின் செயல்.
காகம் மேலே வந்த தண்ணீரை தாகம் தீர குடித்து, மன திருப்தி அடைந்து அல்ஹம்துலில்லாஹ் என்றது. உதவி செய்த அல்லாஹ்விற்கு மனப்பூர்வமாக நன்றி கூறி இறைவனை நினைத்தபடி காட்டில் மீண்டும் இரைதேடி பறந்தது.
இன்ஷா அல்லாஹ் இப்படித்தான் நாமும் எதைச் செய்தாலும், அல்லாஹ்வை நினைக்க வேண்டும். நமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டு, மனப்பூர்வமாக துஆச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நமக்கு கடைசி வரை அல்லாஹ் உதவி செய்வான். என எனது பேத்திக்கு, என் மகள் மார்க்கத்தின் வழிமுறையையும், ஒழுக்க நெறி முறைகளையும் கற்பித்துக் கொடுத்தார்.
எனது மகளின் இந்த செயல் என் பேத்தியின் பசிக்கு உணவாகவும், அறிவுப் பசிக்கு தீனியாகவும் அமைந்ததை பார்க்கும் எனக்கு மிக மிக மகிழ்ச்சியை தந்தது. மகளை பாராட்டி, அல்லாஹ்விற்கு நன்றி கூறினேன். இதே அடிப்படையில் எல்லா தாய்மார்களும், தன் குழந்தைகளை வளர்த்தால் அந்தக் குழந்தைகள் ஒழுக்கமான, இறையச்சம் உள்ளவர்களாக வளர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி. அல்ஹம்துலில்லாஹ்.
– ஹாஜி, எஸ். செய்யது அலீ, தொண்டி
ரஹ்மத் மாத இதழ். டிசம்பர் 2015
www.nidur.info