வேறு எதற்காக…?
கூத்தாநல்லூர் ஜின்னா
சென்னை குளமான போது உங்களை
மீட்டவர்கள் சென்னை குப்பையான
போதும் உங்களை மீட்கிறார்கள்…
பயங்கரவாதிகள் என்றீர்கள் பயங்கர
வெள்ளத்தில் உங்களோடு நின்றோம்.
தீவிரவாதிகள் என்று திட்டினீர்கள்
தீவிரமாய் உங்கள் தெருக்களை
கூட்டினோம்.
குண்டு வைப்பவர்கள் என்றீர்கள்
உங்களை எங்கள் தோளில் சுமந்து
தொண்டு செய்து காட்டினோம்.
உயிர் பலி கொடுப்பவர்கள் என்றீர்கள்
எங்கள் உயிரை துட்சமென நினைத்து
உங்கள் உயிர் காக்க ஓடி வந்தோம்.
ஆபத்தானவர்கள் என்றீர்கள் ஆபத்து உங்களுக்கு என்றவுடன் எங்கள் வியாரத்தையும் விட்டு நின்றோம்.
அடிப்படை வாதிகள் என்றீர்கள் அடிப்பட்ட உங்களை வெள்ள நீரில் மூச்சுமுட்ட கரை ஏற்றினோம்.
பழமைவாதிகள் என்றீர்கள் ஆனால் உங்களுக்கு சேவகம் செய்யும் கடமை வாதிகள் என்றல்லவா நீந்தி வந்தோம்.
படிப்பறிவு இல்லாதவர்கள் என்றீர்கள் அதுமட்டும் உண்மை சொந்தங்களே..
ஆமாம் சக மனிதன் துயரத்தில் இருக்கும் போது தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் கயமை தனத்தை நாங்கள் இன்னும் படிக்கவில்லை.
இவையெல்லாம் எதற்காக செய்தோம்
உங்களிடம் எங்களுடைய மனித
நேயத்தை நிரூபிப்பதற்காகவா
இல்லை இல்லை.
பார்ப்போரிடம் பாராட்டும் பரிசும்
பெருவதற்காகவா இல்லை இல்லவே இல்லை.
வேறு எதற்காக…?
மனிதனாக பிறந்தால் இப்படி தான்
வாழ வேண்டும் என்பதற்காக.
மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
மனித குளத்திற்கு இதை தான் போதித்தார்கள் என்பதற்காக.
எப்படியும் வாழலாம் என்கிற மனிதர்கள் மத்தியில் ஒரு முஸ்லிம் இப்படி தான் வாழ வேண்டும் என்று எங்களுக்கு இறைவன் இட்ட கட்டளயை நிறை
வேற்றுவதற்காக.
“இஸ்லாம் என்பதே “பிறர் நலம் நாடுவது’ தான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 95)
-கூத்தாநல்லூர் ஜின்னா