தம்பி, எங்க கஷ்டத்த உங்க கஷ்டமா நினைச்சி பாவிக்கிறிங்க!
கடலூர் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஊடகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் உடனடியாக கிடைக்கிறது.
ஆனால், குக்கிராமங்கள்…?
கடலூர் மாவட்டம், வடலூர் குறிஞ்சிப்பாடி தாண்டி அன்னவல்லி என்கிற கிராமத்தில் நண்பர்களோடு நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர்,
“தம்பி எங்க கஷ்டத்த உங்க கஷ்டமா நினைச்சி பாவிக்கிறிங்க, இந்த நாளு நாளா சாம்பார் சாதம், புளி சாதம், சப்பாத்தி, கஞ்சினு பலபேர் பலவிதமா இயற்கை உருவாக்கின எங்கள் பசிக்கு உங்களால் முடிந்தளவு உதவிகளை பெருவதில் ஆறுதல் அடைகிறோம் நாங்கள்”
“இது நமக்கான உதவிதானம்மா”
“‘வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ வள்ளலார் வாழ்ந்த பூமியில் வாழ்கிற நாங்கள் பசியின் கொடுமை அறியாதவர்களல்ல தம்பி” என்றவர் மேலும் சொன்னார்,
“நாங்களும் பகுத்துண்டு வாழ்ந்தவர்கள்தாம், பலபேருக்கு பசியாற்றியவர்கள்தாம். ஆனால் இந்த இயற்கை…?
நம்மை எப்டியெல்லாம் புரட்டிப்போடுகிறது”
அந்தம்மா சொல்லி முடித்தவுடன் நீண்டதொரு அமைதி
“சரி சாப்டுங்கம்மா”
“பிறகு சாப்டுக்குறோம்ப்பா”
“ஏம்மா…வேற எதா தேவையா…? பாய், தலகாணி, போர்வை, மாத்திரைகள் இப்டி எதா வேணுமா”
“அதெல்லாம் இருக்குப்பா”
“இப்டி நீங்க சொல்லும்போதே, வேற எதோ தேவைனு தெரியுது. அது என்னனு சொன்னாதானம்மா புரியும்”
நீண்ட பேரமைதிக்குப்பின்…
கலங்கிய கண்களுடன் தலை குனிந்து மெல்லியக் குரலில் அந்தம்மா சொன்னார்
”முதல்ல நாங்க பாத்ரூம் போகனும்”
சில்லிடுகிற தொடையளவு நீரில் நின்றிருந்தும் உடம்பு முழுக்கச் சுட்டது அந்த வார்த்தைகள்.
வீடு முழுக்கத் தண்ணீர், எப்டி இயற்கை உபாதைகளைக் கழிப்பார்கள் என்பதை எப்படித்தான் மறந்துபோனோம் நாம்.
இது ஏதோ கீழ்கோடியில் அன்னவல்லி என்கிற குக்கிராமத்தில் அல்லல்படுகிற ஒரு பெண்மணியின் வாய்மொழி அல்ல.
கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பேரிடர் பாதித்த மாவட்டங்களின் ஒட்டு மொத்த பெண்மணிகளின் வாக்குமூலம் அது.
சில நாட்களுக்கு முன்பாக திண்டிவனம் நகரில் அமைக்கப்பட்ட இதுபோன்ற #நடமாடும்_கழிப்பறைகள் தற்போதைய அத்தியாவசியம்.
இந்த தகவலை சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறைக்கும் கொண்டு சென்றிருக்கிறோம். ஒரு குரல் ஓசை மெலியது, பல குரல்களின் ஓசை வலியது. இந்த செய்தி சுகாதாரத் துறையின் காதுகளை எட்ட 104 என்ற எண்ணில் டயல் செய்து ‘நீரில் மூழ்காத நடமாடும் கழிப்பறைகள்’ என்ற வாக்கியத்தைப் பதியுங்கள்.
தற்போதைய தேவை ‘எது’ என்பதை நாம் உணரவேண்டிய தருணமிது.
source: http://adiraiannaviyar.blogspot.in/2015/12/blog-post_22.html