Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

‘நிவாரணப் பணிகளில் முஸ்லிம்கள் முன்னிலை’ – பாதிக்கப்பட்ட மக்களின் ஒருமித்த குரல்

Posted on December 8, 2015 by admin

‘நிவாரணப் பணிகளில் முஸ்லிம்கள் முன்னிலை’ – பாதிக்கப்பட்ட மக்களின் ஒருமித்த குரல்

இது நாம் சொல்வதல்ல; பாதிக்கப்பட்ட மக்களின் ஒருமித்த குரல். ஆனால், இதில் எனக்கு வியப்பில்லை.

காரணம், முஸ்லிம்கள் ஊடகத்தில் முகத்தைக் காட்டிக்கொள்ளவோ தீவிரவாதப் பழியைத் துடைக்கவோ நல்லபேர் எடுக்கவோ இந்த மகத்தான சேவையைச் செய்யவில்லை. அவர்கள் பின்பற்றும் மார்க்கம் சொன்ன கட்டளைக்கு அடிபணிந்து, இறைவனின் அன்பையும் நெருக்கத்தையும் எதிர்பார்த்தே இந்தத் தொண்டை மேற்கொண்டனர்.

ஒரு உண்மையான முஸ்லிம், மற்றவர் துயரத்தைக் கண்டு வாளாவிருக்கமாட்டான். ஓடிப்போய் தன்னால் முடிந்த உதவிகளை நல்குவான். அது, தம்மைக் கொல்ல வந்த பகைவனாக இருந்தாலும் சரியே!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இல்லாத பகைவர்களா? அந்தப் பகைவர்களுக்குக்கூட நன்மையே செய்யுமாறுதான் இறைவன் கட்டளையிட்டான். அப்படி நடந்துகொண்டால் பகைவனும் நண்பனாகக்கூடும் என்று விளக்கமளித்தான்.

“நன்மையும் தீமையும் சமமாகா. நன்மையைக் கொண்டே (தீமையை) வெல்வீராக! அப்போது, யாருக்கும் உமக்குமிடையே பகைமை இருக்கிறதோ அவர்கூட உற்ற நண்பரைப் போன்று மாறிவிடுவார்” (அல்குர்ஆன் 41:34) 

அவ்வாறே, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் மீது அன்பும் கருணையும் காட்டாதவர்மீது இறைவன் கருணை காட்டமாட்டான். (ஸஹீஹுல் புகாரி)

மறுமை நாளில் மனிதனிடம் இறைவன் இப்படிக் கேட்பானாம்: மனிதா! உன்னிடம் நான் உணவு கேட்டேன்; நீ எனக்கு உணவளிக்கவில்லையே! அப்போது மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதி! உனக்கு எப்படி நான் உணவளிப்பேன்?” என்பான். அதற்கு இறைவன், “என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவு கேட்டான்; அவனுக்கு நீ உணவு தரவில்லை. அவனுக்கு மட்டும் நீ உணவளித்திருந்தால், அதை என்னிடம் (இப்போது) நீ அடைந்திருப்பாய்?” என்பான். அவ்வாறே, தண்ணீர் கேட்டதாகவும் இறைவன் கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)

நிவாரணப் பணியில்ஸ கடந்த பத்து நாட்களாக சென்னை மாநகரை வரலாறு காணாத கனமழை புரட்டிப் போட்டுவிட்டது. சென்னை மாவட்டம் மட்டுமன்றி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் பெருவெள்ளத்தில் சிக்கின. அதிலும் கடந்த சில நாட்களாக கடலூர் உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களும், புதுச்சேரி மாநிலமும் பேரிழப்புகளைச் சந்தித்தன.

இது மனிதத் தவறுகளால் நிகழ்ந்திருக்கட்டும்! இயற்கைச் சீற்றத்தால் நிகழ்ந்திருக்கட்டும்! எப்படியானாலும், இலட்சக்கணக்கான மக்கள் பேரிழப்புகளைச் சந்தித்தனர்.

இறப்பு மட்டும் 294பேர் என்று அரசு கூறினாலும், உண்மையில் அதைக் காட்டிலும் பன்மடங்கானபேர் வெள்ளத்தில் சிக்கியும் வேறு முறைகளிலும் உயிரிழந்துள்ளனர் என்பது அதிகாரிகள் மட்டத்தில் பேசிக்கொள்ளப்படும் இரகசியமாகும் என்று சொல்லப்படுகிறது.

விலை உயர்ந்த பொருட்கள், பள்ளி மற்றும் கல்லூரி புத்தகங்கள், முக்கியமான ஆவணங்கள், அடையாள அட்டைகள், உணவுப் பொருட்கள், வாகனங்கள்ஸ என எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு, அடுத்த வேளை உணவுக்கும் ஒரு செம்பு குடிநீருக்கும் வழியில்லாமல் மக்கள் நின்றது பாறையையும் கரைத்துவிடும் துயரம். குழந்தைகள் பாலின்றி, நோயாளிகள் மருத்துவ உதவியின்றி, கர்ப்பிணிகள் சுமையை இறக்கிவைக்க இடமின்றி, முதியோர் மற்றும் பெண்கள் வெளியேற வழியின்றி பட்ட அவதிகள் எழுத்தில் அடங்கா. பலரிடம் பணம் இருந்தது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

சொந்தங்கள் இருந்தனர் ஊரில். அவர்களால் இங்குள்ளவர்களுடன் தொலைபேசியில்கூடப் பேச முடியாத நெருக்கடி. ஏன்? என்று கேட்க ஆளில்லாத யுகமுடிவு நிலை.

அரசாங்கம் விழித்து உதவிக்கு வருவதற்குள் நிலைமை கைமீறிவிட்டது. இந்த நெருக்கடியான நிலையில்தான் சமூகக் கரம் தேவைப்படுகிறது. உதவிக்கு ஏங்கும் மனிதர் எந்த மதம்? எந்த சாதி? எந்த மொழி என்றெல்லாம் வேறுபாடு பார்ப்பதற்குரிய நேரமன்று இது.

இஸ்லாம் காட்டிய வழியில், கூப்பிடாமலேயே உணவுப் பொட்டலங்களையும் குடிநீர் பாக்கெட்களையும் பாய், துப்பட்டி போன்ற அவசர பொருட்களையும் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு, இடுப்பளவு தண்ணீரில் நடந்து அல்லது படகில் நீந்திச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய பொற்கரங்கள் முஸ்லிம் இளைஞர்களின் பண்பட்ட மனிதநேயக் கரங்களாகும்.

பார்ப்போர் அதிசயிக்க, ஊடகங்கள் பல அலட்சியம் செய்ய, பாதிக்கப்பட்டோரின் கண்களும் கல்புகளும் அகல விரிய – இரவு, பகல் பாராமல் – களப் பணியாற்றிய அந்த இளவல்களும் அவர்களுக்கு வழிகாட்டிய தலைவர்களும் பாராட்டுக்குரியவர்கள்; நன்றிக்குரியவர்கள். அவர்களை எவ்வளவு மெச்சினாலும் தகும்.

முஸ்லிம்களைப் பற்றிய தவறான பார்வையை நொடியில் மாற்றிப்போட்டவர்கள் இந்தத் தம்பிகள்; பெண்களும்தான். தங்கள் பங்கிற்குக் களம் கண்ட அந்தச் சகோதரிகள் சமுதாயக் கண்மணிகள். முழு ஈடுபாட்டோடு, இளவல்கள்தான் இப்படி என்றால், முஸ்லிம் பெருங்குடி மக்கள் தாராளமாக அள்ளிக் கொடுத்ததை என்னவென்று வர்ணிப்பது?

அரசாங்கம் கொடுப்பதற்கும் சாதாரண குடிமக்கள் கொடுப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அரசாங்கம் தரும் உதவிகளை வாங்குவதற்கு அணிவகுத்து நிற்போர் மத்தியில், பிறருக்கு உதவ அணிவகுக்கும் கூட்டம் எவ்வளவு பண்பட்ட, கண்ணியமான கூட்டமாக இருக்க வேண்டும்!

பணமாக, துணியாக, தானியமாக, பொருளாக எனப் பல வழிகளில் நிவாரண உதவிகளை வழங்கிய ஜமாஅத்தார் பாராட்டுக்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

உதவப்போன இளவல்களும் ஏனோதானோ என்றில்லாமல், ஈடுபாட்டுடன் பணியாற்றியதைக் காண முடிந்தது. மேல் மாடியிலிருந்து கீழே இறங்க ஏணி இல்லாமல், நம் இளைஞர்களின் தோள்களில் கால்களைப் பதித்துக் கீழே இறங்கிய பெண்களையும் ஆண்களையும் பார்க்க நேர்ந்தபோது மெய்சிலிர்த்துவிட்டேன்.

கர்ப்பிணிகளைப் பக்குவமாகக் கையாண்டு கொண்டு சேர்த்ததையும் குழந்தைகளையும் முதியோரையும் அரவணைத்து எடுத்துச் சென்றதையும் கண்டபோது அந்த இளைஞர்கள் உயரத்துக்குச் சென்றுவிட்டார்கள்.

நந்தகோபால் என்ற நண்பர் கூறுவதைக் கேளுங்கள்:

மாடியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த எங்கள் குடும்பத்தை இஸ்லாமியர்கள் சிலர் மீட்டனர். ஒருவர் உணவு பார்சல் வழங்கினார். அதில் முட்டை இருந்த்து. உடனே மன்னிப்புக் கேட்ட அவர், சைவ பார்சலை வழங்கினார். என் பேத்தி காய்ச்சலால் நடுங்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட இஸ்மாயில் என்ற இளைஞர், தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரித்தார். கண்கள் கலங்க என் தம்பி இஸ்மாயிலுக்கு நன்றி!

ராஜ்குமார் கூறுகிறார்:

கேமராவும் இராணுவமும் நுழையாத இடங்களில்கூட முஸ்லிம்கள் உதவினார்கள். அவர்களில் யாரும் செல்ஃபி எடுத்துக்கொள்ளவில்லை. சென்னை அம்பேத்கர் நகரில் மட்டும் 5ஆயிரம் பேருக்கு உணவும் தண்ணீரும் வழங்கினர்.

பாராட்டு மழை நாளேடுகளிலும் சமூக வலைத்தளங்களிலும் முஸ்லிம் சேவகர்களுக்குப் பாராட்டும் நன்றியும் குவிந்தவண்ணமுள்ளன.

தி இந்து தமிழ் நாளேட்டின் தமிழ் எழுத்தாளர் சமஸ் (06.12.2015) குறிப்பிட்டிருப்பது முக்கியமானது. அவர் எழுதுகிறார்:

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்: இதுநாள்வரை பொதுச் சமூகம் யாரை அதிகம் வெறுப்புணர்வோடும் கசப்புணர்வோடும் பார்த்துக் கடந்ததோ, ஒரு வீட்டை வாடகைக்கு விட யோசித்ததோ அந்த இஸ்லாமிய மக்கள்தான் ஓடிஓடி உதவுவதில் முன்னிலையில் நிற்கிறார்கள்.

இவர் சொன்னதற்கேற்ப, மீட்புப் பணியின்போது ஒரு நிகழ்ச்சி: நம் தம்பிகளில் ஒருவர், வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட குடும்பம் ஒன்றைக் காப்பாற்றி வெளியே கொண்டுவந்தார். அவர்களில் ஒரு பெரிய மனிதர். இவர் அந்த பில்டிங்கின் உரிமையாளர். சில மாதங்களுக்குமுன் அவரிடம் போய் இதே தம்பி வாடகைக்கு வீடு கேட்டுள்ளார். ‘முஸ்லிம்’ என்பதால் அப்பெரியவர் வீடு தர மறுத்துவிட்டார். அவரைத்தான் காப்பாற்றி பள்ளிவாசலில் தங்கவைத்தார் அந்த இளைஞர்.

செல்வி சொல்கிறார்:

இந்த வெள்ளத்தில் மட்டுமன்றி, சுனாமியிலும் இஸ்லாமியர்கள் அரும்பணி ஆற்றினர்.

கமலி பன்னீர் செல்வம் நெகிழ்கிறார்: மூன்று மாடி கட்டடம். கீழ்தளத்தில் நாங்கள். முதல் மாடியில் சுபைதா குடும்பம். இவர்கள் பாதுகாப்புக் கருதி படகில் வெளியே சென்றுவிட, தங்கள் வீட்டுச் சாவியை எங்கள் வசம் கொடுத்துவிட்டார்கள். இரண்டாவது மாடியில் இருந்த கிறிஸ்தவர் வீட்டிலிருந்து அரிசி எடுத்து சுபைதா வீட்டில் வைத்து சமைத்து உயிர் பிழைத்தோம். சுபைதா இல்லைன்னா நாங்க பிழைத்திருக்க முடியாது.

நன்றி வெளிப்பாட்டின் உச்சகட்டமாக மோகன் கூறுவதைக் கேளுங்கள்:

என் மனைவி நிறைமாதக் கர்ப்பிணி. பெயர்: சித்ரா. வெள்ளத்தில் சிக்கிக்கொண்டோம். உதவிக்கு வந்த பொறியாளர் யூனுஸ் எங்களைக் காப்பாற்றிப் பத்திரமான இடத்தில் சேர்த்தார். அங்கே பிரசவ வலி ஏற்பட்டு, குழந்தையும் பிறந்தது. மகிழ்ச்சியில் குழந்தைக்கு யூனுஸ் என்றே பெயர் சூட்டிவிட்டோம்.

விஜய சங்கர் சொல்கிறார்:

வழிபாட்டுத் தலங்களைத் திறந்துவிட்டதில் தீவிரம்; மத வேற்றுமையின்றி அடைக்கலம் அளித்ததில் தீவிரம்; அதிவேகமாய் நிவாரணம் வழங்கியதில் தீவிரம்; சந்தேகமே இல்லை; இவர்கள் தீவிரவாதிகள்தான். இனி என்ன? தேர்தல் வரும். அரசியல்வாதிகள் வருவார்கள். ஓட்டுக்காக மத, சாதி வேறுபாட்டை ஊட்டுவார்கள். மக்களைப் பிரிப்பார்கள். வெள்ளமோ சுனாமியோ வந்து மக்களை ஒன்றுபடுத்தும்!

சிதம்பரம் மகேஷ் அதைத்தான் சொல்கிறார்:

எப்போதும் பக்கத்து வீட்டு சலீமும் டேவிட்டும் எங்களுக்கு நண்பர்கள்தான். அரசியல்வாதிகளான நீங்கள்தான் பிரிக்கிறீர்கள்.

ராஜ்குமார் கூறுகிறார்:

இனி ஒரு பாபர் மசூதியும் இடிக்கப்படக் கூடாது. மழைக்கு ஒதுங்க உதவும். K.P. முத்து: நபிகள் நாயகத்தின் வழியைப் பின்பற்றும் இஸ்லாமியர்கள் என்றும் பிறரின் துன்பங்களை உணர்வார்கள். பள்ளிவாசலை சாதி – மதம் பேதம் பார்க்காமல் வழங்கினார்கள். இஸ்லாமியர்களுக்கு நன்றி.

விக்னேஷ் குமார்:

முஸ்லிம் மக்கள் தங்களது சகோதரத்துவத்தையும் பெருந்தன்மையையும் நிரூபித்துவிட்டனர்.

இத்தனை பேரின் அன்பு இருக்கையில், நாம் ஏன் தனிமைப்பட வேண்டும்? இப்போதும்கூட சிலர், நம் சேவைகளைக் கொச்சைப்படுத்தியதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவ்வாறே, நம்மில் சிலரே சிலரது கடின உழைப்பிற்கு உள்நோக்கம் கற்பிப்பதையும் கண்டுகொள்ள வேண்டியதில்லை. அல்லாஹ்விடம் மட்டுமே பிரதிபலனை எதிர்பார்ப்போம்! பாராட்டோ நன்றியோகூட தேவையில்லை.

-முஹம்மது கான் பாகவி

source: http://khanbaqavi.blogspot.in/2015/12/blog-post.html

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 5

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb