தண்ணீர் தேசம்
A.சிக்கந்தர் M.Sc., M.Phil., விருத்நகர்.
நான் மழைத்துளி பேசுகிறேன்…!
மானிடனே! உன்னைப்பார்த்து…!
தண்ணீரில் தத்தளிக்கிறது சென்னை!
நிறைய நிறைய யோசிக்கச் செய்கிறதா உன்னை?
யோசிக்க நேரமில்லாமல் ஓடித் திரிந்தாயே!
கொஞ்சம் நின்று யோசி!
இனியாவது இயற்கையை நேசி!
நான் ஆட்சி புரிய வேண்டிய தண்ணீரின்
தேசத்தை நீ ஆக்கிரமித்தாய்!
ஆண்டாண்டு காலமாக அபகரித்தாய்!
அழித்துத் தீர்த்தாய்!
பராமரிக்க மறுத்தாய்! மறந்தாய்!
நான்கைந்து நாட்கள்தானே
நான் உன்னை ஆக்கிரமித்தேன்?
ஆவேசத்தில் கொட்டித் தீர்த்தேன்!
எனது சொந்த மண்ணை காண வந்தேன்!
நான் வெளியேரத் தாமதமானதும்
அன்றாட வாழ்வு ஸ்தம்பித்துப் போனதும்
புலம்புகிறாயே! பிதற்றுகிறாயே! உன்னால் இந்த
இடர்தனைப் பொறுக்க முடியவில்லையே மானிடா?
எனது பொறுமையை… எனது அருமையை
எத்தனை ஆண்டுகளாய் சோதித்துப் பார்த்திருப்பாய்?
எனது தண்ணீர் தேசத்தை
பட்டா போட்டுவிட்டு…
காங்கிரீட் காட்டை கட்டிவிட்டு
நீர்நிலைகளை அழித்துவிட்டு
மண்ணை சுரண்டி அள்ளிவிட்டு,
பள்ளத்தை மேடாக்கி – இயற்கை
வளத்தைப் பாழாக்கி, நிலத்தடி நீரினையும்
தூரமாக்கி, தண்ணீர் தேசத்தையே கோரமாக்கி,
இன்று புலம்புகிறாயே மானிடா!
இது வெற்றுப் புலம்பலடா… சுயநலப் பிதற்றலடா!
நானி(நீரி)ன்றி உலகு அமையாது
என்ற போதும் மழைத்துளியே வாழ்வின்
ஆதாரம் என்ற போதும் மதிக்காத நீ
சேதாரம் என்றதுமே திகைக்கிறாயே!
தேவை வேண்டி நின்றபோது, தாகத்தில்
தவித்துத் திரிந்தபோது வரவேற்ற நீ… இன்று
என்னை வெளியேற்றத் துடிக்கிறாயே!
நீரின் வேரறுக்க நினைக்கிறாயே!
நானிருக்க வேண்டிய இடத்தில் இன்று நீ!
இது எனது பூர்வீக தேசம்…
இடம் தேடி வந்து விட்டேன்.
இனி வெளியேரப் போவதில்லை!
நீயே வெளியேறு! உனது காங்கிரீட்
காட்டை வேறோடு பிடுங்கிக் கொண்டு!
மண்ணிற்கு நான் வாணூட்டும் தாய்ப்பால்…!
கருணைக் கடலும் என்னுள் உண்டு…
நான் ஆக்கவே… அருட்கொடையாய்
பூவுலகில் படைக்கப் பட்டவன்
அழிப்பது எனது நோக்கமல்ல…
ஆக்கிரமிப்பும் எனது பழக்கமல்ல!
கடைசியாய் இரக்கம் காட்டுகிறேன்!
கருணையாய் உபதேசம் கூறுகிறேன்
இனியாவது தண்ணீர் தேசத்தின்
நீர்நிலைகளை சீராக்கி
நீர்வழித்தடங்களை நேராக்கி,
விதிமுறைகளை முறையாக்கி,
மண்வளத்தை சிறப்பாக்கி
வாழக் கற்றுக்கொள்!
இயற்கையை நேசி!
இயற்கை சீரழிவை விட்டும் காப்பாற்ற
இறையிடத்தில் யாசி
– “ஜமா அத்துல் உலமா” மாத இதழ், டிசம்பர் 2015