மழை… மழை… மழையோ மழை…!!
தண்ணீருக்கு அலைந்தவன்
மழைக்கு ஏரியை உடைக்கிறான்
ஏரிக்குள் வீடு..!!
வராமல் அடம் பிடித்தது
போகவும் அடம் பிடிக்கிறது
மழை..!!
தமிழில் குளிரும் சொல்
மழை!
விண்ணிலிருந்து
விழும் ஈட்டி
வானத்தையும் பூமியையும்
கட்டப்பார்க்கும்
நீர் நூல்.
மின்னல் கத்தி வெட்டியதில்
மேகப்பழத்தில் வடியும் சாறு
சில்லிடத்தெரிக்கும் பன்னீர்
நதியிதழ்களுக்காய் வழியும் தேன்
தாவரத் தாகம்தீர்க்க வானம்கொடுத்த இளநீர்
விண்மரத்தில் வடியும்கள்
பருவகாலத்து நீர்ச்சாலை
கொட்டும் மொட்டு
குதிக்கும் நீரீசல்
நிலப்பாறையில் விழுந்து உடையும் மேகக்குருவி இட்ட
நீர்முட்டை
ரசிக்கும் கண்ணுக்கு விருந்து
ருசிக்கும் நாவுக்கும் மருந்து
நனையும் மேனிக்குள் ரகசிய மின்னல்
ஆனால்
ஓட்டைக் குடிசைக்காரனுக்கு
நீர்வெடி….
நடைபாதை பூக்களுக்கு
உறக்கம் கெடுக்கும் நீர்க்கொசு
சாலையோரக் கடைக்காரனுக்கு
வானவிசம்
ஒன்னுமில்லாதவனுக்கு
மழை என்னும் பிழை.
=============================
கப்பலே நாங்கள்தான்..!!
தண்ணீரே உனக்கு கண்ணீரில்
கடிதமெழுதினேன்
சிலநாட்களில் வந்து சேர்ந்தாய்
மழையாய் மண்ணில்…!!
உன் வரவினில்
மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டபோது
போட்டியாய் நீ ஏன்
மகிழ்ச்சி கொண்டாய்..??
எங்கள் வீட்டுக் குடங்கள்
தலைகவிழ்ந்து கிடக்கிறது என்று
வருத்தமுடன் எழுதி இருந்தேன்…
உன் வரவில் குடங்கள் நிறையவில்லை
காணாமல் அல்லவா போய்விட்டது
எங்கள் வீட்டுக் குடங்களை மட்டும்
அடித்துச் செல்லவில்லை நீ
எங்களின் மகிழ்ச்சியையும் தான்..!!
உன் வரவு வாசல்வரை என்றால்
காகித கப்பலை மிதக்கவிடுகிறோம்
இல்லையென்றால்
கப்பலே நாங்கள்தான்..!!
======================