சுவனத்துக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர் பணி!
அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி)
கற்பித்தல் என்பது ஒரு தொழிலல்ல புனிதமான பணி
கற்பித்தல் என்பது ஒரு தொழிலல்ல. அது ஒரு புனிதமான பணி நபிமார்களின் பணி. நபி (ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம்) அவர்கள் தன்னை அறிமுகப் படுத்தும்போது கூறினார்கள்:
“நான் இந்த உலகத்திற்கு ஓர் ஆசிரியனாக அனுப்பப்பட்டுள்ளேன்.”
அல்லாஹுத் தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அறிமுகப்படுத்தும் போது, “மக்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் போதிப்பவர் கற்றுக் கொடுப்பவர்” (அல்ஜுமுஆ: 2) என்று அறிமுகப்படுத்துகின்றான்.
உலகத்தில் தோன்றிய எல்லா நபிமார்களும் ஆசான்களாகத் திகழ்ந்தனர். அத்தகைய இறைத் தூதர்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள்தான் ஆசிரியர்கள். இவ்வாறு ஆசான்களாக வந்த இறைத்தூதர்கள் இரண்டு செய்திகளைச் சொன்னார்கள்.
01. அல்லாஹ்வுக்கு மாத்திரம் இபாதத் செய்யுங்கள். அவனைத் தவிர வணங்கி வழிபடுவதற்கு வேறு இலாஹ் இல்லை. அவனுக்குக் கட்டுப்பட்டு வழிப்படுங்கள்.
02. இந்தப் போதனையைப் புரிவதற்காக எங்களுக்கு எந்தவோர் ஊதியத்தையோ சம்பளத்தையோ கூலியையோ உங்களிடம் நாம் கேட்கவில்லை. நாம் உங்களுக்கு கற்பிக்கிறோம். சத்தியத்தை எடுத்துச் சொல்கிறோம். சரி, பிழையை பிரித்துக் காட் டுகிறோம். இதற்கான கூலியை உங்களிடம் நாம் எதிர்பார்க்கவில்லை. இதற்கான கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது.
கற்பித்தல் மாத்திரமல்ல, வேறு எந்தத் தொழிலாக இருந்தாலும் வெறும் பணத்திற்காக மாத்திரம் தொழில் புரியக் கூடாது. தொழில், உழைப்பு என்பது பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வழியேயன்றி அதுதான் எமது இலட்சியம் அல்ல. எமது இலட்சியம் சுவனமும் இறைதிருப்தியுமே ஆகும். மக்களுக்கு சேவை செய்கின்ற அவர்களாகவும் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாகவும் பணியாற்ற வேண்டும். எமது வாழ்வாதாரத்திற்காக நாம் செய்யும் அந்த சேவைக்கு சிறிது ஊதியம் எதிர் பார்க்கின்றோம் என்ற மனோநிலையில்தான் நாம் உழைப்பில் ஈடுபட வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“மனிதர்களுக்கு நல்ல விடயங்களை சொல்லிக் கொடுப்பவர்களுக்கு மலக்குகள் எந்நேரமும் துஆ செய்து கொண்டிருக்கின்றனர்.”
நல்ல விடயங்களைக் கற்றுக் கொடுப்பது என்பதன் அர்த்தம், இஸ்லாத்தைக் கற்பிப்பது மாத்திரமல்ல. புவியியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற ஏனைய விடயங்களைக் கற்பிப்பதும் நல்ல விடயங்கள்தான். அதனை முறையாக கற்பித்தால் அவர்களுக்கு அல்லாஹ்வின் கூலி கிடைக்கும். செய்யும் தொழிலுக்கூடாக சுவனம் செல்ல வேண்டுமென்றால் இந்தப் பார்வை அவசியம். ஏனெனில், செய்யும் தொழில் அமானத் ஆகும். ஓர் ஆசிரியர் மாத்திரமல்ல, எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் தொழில் ஓர் அமானத் என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
அர்ப்பணமும் தியாகமும்
தொழிலில் அர்ப்பணமும் தியாகமும் இருக்க வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தைப் போதிக்க வந்தவர்கள் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்தவர்கள். எனவே, அவர்களிடத்தில் இந்த ஆசிரியப் பணிக்கான அழகிய முன்மாதிரிகளைக் காணலாம். இறைதூதரைப் பற்றி அல்குர்ஆன் இப்படிக் கூறுகிறது:
“(விசுவாசிகளே! ) நிச்சயமாக உங்களிலிருந்து ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் கஷ்டத்துக்குள்ளாகி விட்டால் (அது) அவருக்கு மிகவும் வருத்தமாகவே இருக்கும். அன்றி, உங்களை பெரிதும் விரும்புகின்றவராகவும் விசுவாசிகள் மீது மிகவும் அன்பும் கிருபையும் உடைய வராகவும் இருக்கின்றார்.” (9: 28)
இத்தகைய அர்ப்பணம் ஆசிரியர்களிடம் அவசியம் இருக்க வேண்டும். நபி ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய நபித் தோழர்களைப் பார்த்து கூறினார்கள்:
“நிச்சயமாக ஒருவருக்கு அவருடைய தந்தையைப் போல உங்களைப் பொறுத்தவரையில் நான் இருக்கிறேன்.” (அபூதாவூத், அந்நஸாஈ, இப்னு மாஜா)
ஒரு தந்தை தனது பிள்ளைகளுடன் எந்தளவு அன்பாக, அக்கறையாக இருக்கின்றாறோ அந்தளவுக்கு அல்லது அதைவிட அதிக அக்கறையுள்ளவனாக நான் உங்கள் விடயத்தில் இருக்கிறேன் என நபியவர்கள் கூறினார்கள்.
ஆசிரியர்கள் தமது மாணவர்கள் விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டும். தங்கள் மீது தமது ஆசிரியர்கள் எந்தளவு தூரம் அக்கறையாக இருக்கின்றார்கள் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். ஆசிரியர்கள் தமது கற்பித்தல், கரிசனைமிக்க பார்வை, மாணவர்கள் கூறும் விடயங்களை செவிதாழ்த்திக் கேட்டல், அவர்களது விடயத்தில் ஆர்வமும் ஈடுபாடும் காட்டுதல் என்பவற்றின் மூலம் ஆசிரியர்கள் தமது விவகாரங்களில் அக்கறையுடன் நடந்து கொள்கின்றார்கள் என்பதை மாணவர்களுக்கு மனப்பூர்வமாக உணரச் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் தமது மாணவர்களுக்கு சொல்லால், செயலால், நடத்தையால் இவற்றைக் காண்பிக்க வேண்டியிருக்கிறது.
எமது பிள்ளைகள் விடயத்தில் அக்கறையுடன் செயற்படும் நாம், எம்மிடம் கற்கும் எமது மாணவர்கள் விடயத்தில் அத்தகைய ஆர்வத்தோடு செயற்படுகிறோமா என்பது குறித்து சற்று சிந்திக்க வேண்டும். இது குறித்து மறுமையில் நாம் பதில் சொல்லியாக வேண்டும்.
கற்பித்தல் பணியில் இமாம்களின் முன்மாதிரி
நபிமார்களின் வாரிசுகளான எமது முன்னைய இமாம்கள், ஸலபுஸ் ஸாலிஹீன்கள் இந்த அறிவுப் பணிக்கு எத்தகைய பங்காற்றி இருக்கிறார்கள் என்பதை நாம் வரலாற்றில் காணலாம். ஹதீஸ் துறைப் பேராசிரியரான இமாம் ஸுப்யான் அஸ்ஸவ்ரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
“எனது மாணவர்கள் கற்பதற்காக என்னைத் தேடி வராதபோது நான் அவர்களைத் தேடி அவர்களது வீடுகளுக்குப் போய் பாடம் கற்பித்துக் கொடுக்க விரும்புகின்றேன்.” (இப்னு அப்தில் பர், கிதாபுல் இல்ம்)
இமாம் ஷாபி ரஹிமஹுல்லாஹ் மற்றோரு முக்கியமான ஆசிரியர். அவர் தனது மாணவரான ரபீஃ என்பவரை அழைத்து அவரிடம் கூறுவார்:
“ரபீஃ! உனக்கு அறிவைத் தர வேண்டுமென்பதில் நான் எந்தளவுக்கு தீவிர ஆசை, ஆர்வம், வேட்கை கொண்டுள்ளேன் என்றால், அறிவை உணவுக் கவளமாகப் பிசைந்து உனக்கு ஊட்ட முடியும் என்றிருந்தால் அப்படியும் செய்வேன்.” (இப்னு அப்தில் பர்)
இத்தகைய அர்ப்பணமும் தியாகமும் இருந்தால் அத்தகைய ஆசிரியர் சுவனத்தை ஆசிக்கலாம். இந்தப் பார்வை, நோக்கு, சிந்தனைப் பாங்கு என்பன ஓர் ஆசிரியரின் அணிகலன்களாக திகழ வேண்டும்.
அன்பும் பணிவும்
எம்மோடு பணி செய்கின்றவர்களுடன் நாம் அன்பாகவும் பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். நபியவர்களைப் பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுகின்றபோது,
“நபியே! அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீங்கள் அவர்களோடு நளினமாக, நயமாக, அன்பாக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் படைத்தவராகவும் இருந்திருந்தால் அவர்கள் உங்களை விட்டும் விரண்டோடியிருப்பார்கள்.” (ஆலுஇம்ரான் : 159)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்த உன்னதமான பண்பே அன்புதான். மக்களோடு, மற்றவர்களோடு அன்பாக இருத்தல் எனும் உயரிய பண்பைப் பெற்றிருந்தார்கள் நபியவர்கள். தன்னோடு பணியாற்றிய எவரையும் எச்சந்தர்ப்பத்திலும் நபியவர்கள் தண்டித்ததில்லை.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களி டம் 10 வருடங்கள் பணியாளராக சேவை புரிந்த அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:
“அந்த பத்து வருடங்களில் ஒரு நாளாவது நபியவர்கள் நான் ஒரு வேலையைச் செய்ததற்காக ஏன் செய்தீர்கள் என்றோ ஒன்றை செய்யாமல் விட்டதற்காக ஏன் இதனைச் செய்யவில்லை என்றோ கேட்டதில்லை.”
7ஆம் நூற்றாண்டில் மனிதர்கள் நாகரிகமற்று, பண்பாடற்று இருந்த காலத்தில் இத்தகைய உயர்ந்த நாகரிகத்தையும் பண்பாடுகளையுமே நபியவர்கள் கற்றுத் தந்தார்கள்.
அனுதாபம் காட்டுதல்
ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அன்பு செலுத்துவது போலவே தவறு செய்கின்ற, குற்றமிழைக்கின்ற மாணவர்கள் மீது அனுதாபம் காட்ட வேண்டும். இதுவும் ஓர் இஸ்லாமிய ஆசிரிய, ஆசிரியையிடம் இருக்க வேண்டிய பண்பு.
ஒருநாள் காட்டுப்புற அரபி ஒருவர் மஸ்ஜிதுந் நபவியில் சிறுநீர் கழித்து விடுகின்றார். அப்போது ஸஹாபாக்கள் கோபமடைந்து அவரைத் தாக்க முனைகிறார்கள். நபியவர்கள் அவரை விட்டுவிடுமாறு கூறி அவரை அழைத்து அவருக்கு உபதேசித்து விட்டு ஸஹாபாக்களிடம், “ஒரு வாளி நீரைக் கொண்டுவந்து இங்கே ஊற்றுங்கள்” என்று கூறிவிட்டு, “மனிதர்களுக்கு எதையும் இலகுபடுத்துபவர்களாகவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்களே தவிர எதையும் கஷ்டப்படுத்தி, சிரமப்படுத்தி கடினமாக்குபவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை” என ஸஹாபாக்களுக்கு போதனை செய்தார்கள். (முஸ்லிம்)
நபிகளாரின் போதனா முறையை, கற்பித்தல் அணுகுமுறையை சற்று அவதானித்துப் பாருங்கள். பாடசாலை வருகின்ற மாணவர்களின் பின்னணிகள் வேறுபட்டதாக இருக்கும். அவர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்கின்ற சூழல் வித்தியாசமானதாயிருக்கும். அவர்களின் பெற்றோரின் பின்னணி, சூழல் என்பவற்றுக்கேற்ப வேறுபாடுகள் இருக்கும். அப்போது அந்த மாணவர்களை அனுதாபத்தோடு பார்த்து அவர்களைத் திருத்தும் அளவுக்கு எம்மிடம் பொறுமை இருக்க வேண்டும். மாணவர்கள் தவறிழைக்கின்றபோது பொறுமையுடன் அணுகி அவர்களைத் திருத்த முயற்சிக்க வேண்டும். இந்தத் தகுதி, திறமை இல்லா விட்டால் அந்தப் புனிதமான பணியை செவ்வனே செய்ய முடியாது.
அன்பு காட்டுவது மாத்திரமல்ல, தவறுசெய்கின்ற மாணவர்களை அரவணைக்க வேண்டும். அன்பின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் அரவணைத்து, தவறுகளைத் திருத்தி, அவர்களை நெறிப்படுத்துவது. அந்தளவுக்குப் பக்குவமும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் ஓர் ஆசிரியரிடம் இருக்க வேண்டும்.
நாம் இயந்திரங்களோடு பணியாற்றுபவர்களல்ல மாறாக மாணவர்களோடு, பிஞ்சு உள்ளங்களோடு உறவாடுபவர்கள். அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் ஆசிரியர்களின் கைகளில்தான் இருக்கிறது. ஆசிரியர்கள் தட்டிக் கொடுக்கலாம் அல்லது தட்டி விடலாம்.
ஆசிரியர்களின் ஒவ்வொரு வார்த்தையும் அந்த மாணவர்களின் நனவிலி மனதில் பதியும். சில ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்த்து தவறான, கடுமையான, பிழையான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறான வார்த்தைகளால் பிள்ளைகளின் மனது பாதிப்படைகிறது. அதனால் நாம் ஏசுகின்ற, திட்டுகின்ற வார்த்தை அவர்களது உள்ளங்களைப் பாதிப்படையச் செய்து அவர்களை அவ்வாறே மாற்றி விடுகின்றது. இதற்கெல்லாம் நாம் பொறுப்புக் கூறியாக வேண்டும்.
ஊக்குவித்தல்
செய்யும் தொழிலின் ஊடாக இறைதிருப்தியைப் பெற நாடினால் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமது மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் நம்பிக்கையூட்டும் நல்ல வார்த்தைகளைக் கூற வேண்டும்.
உதாரணமாக, சில மாணவர்கள் அதிக திறமை படைத்தவர்களாக இருப்பார்கள். அவர்களை பாராட்டி ஊக்கு விக்க வேண்டுமே தவிர, அவர்களை மட்டம் தட்டி விடக் கூடாது. மாணவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதனால் அவர்கள் சோர்வடைந்து மனந்தளர்ந்து போய்விடுவார்கள். இதனால் அவர்களின் திறமைகள் மங்கிப் போவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. இது குறித்தும் நாம் மறுமையில் விசாரிக்கப்படுவோம்.
எனவே, இத்தகைய மாணவர்களைப் பாராட்டி, ஊக்குவித்து, ஆர்வமூட்டுவதுடன் அந்த மாணவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தனது ஸஹாபாக்களை ஊக்கப்ப டுத்துபவர்களாக இருந்தார்கள்.
அபூ மூஸா அல்ஷ்ரி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அருமையாக அல்குர்ஆனை ஓதக்கூடியவர். நபியவர்கள் அவரை அழைத்து அபூ மூஸாவே! அல்குர்ஆனைக் கொஞ்சம் ஓதுங்கள். நீங்கள் ஓதுவதை நான் செவியேற்க விரும்புகிறேன் எனக் கூறுவார்கள். “தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய புல்லாங்குழல்” என்று அவரை வர்ணிப்பார்கள். அபூமூஸா அல்அஷ்ரி (ரழியல்லாஹு ன்ஹு) அவர்களும் நபியவர்களின் வேண்டுகோளை ஏற்று சந்தோஷமாக ஓதுவார்கள்.
அபூபக்ர், உமர், உஸ்மான், அலி (ரழியல்லாஹு அன்ஹும்) போன்றேரை “அஸ்ஸித்தீக்” உண்மையாளர் என்றும் அபூ உபைதா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை “இந்த சமூகத்தின் நம்பிக்கைக்குரியவர்” என்றும் பாராட்டினார்கள் பட்டம் சூட்டினார்கள்.
அறிவுச் செருக்கிலிருந்து தவிர்ந்திருத்தலும் கண்ணியம் பேணலும்
எந்த ஆசிரியரிடமும் அறிவுச் செருக்கு வரக் கூடாது. மாறாக, அவர்களிடம் பணிவும் அடக்கமும் இருக்க வேண்டும். ஓர் ஆசிரியரிடம் இருக்க வேண்டிய மற்றோரு பண்புதான் சுயமரியாதை பேணல். ஒரு முஃமின் எதை இழந்தாலும் தனது கண்ணியத்தை இழக்கக் கூடாது. பணத்திற்காக பணியாற்றுபவராக ஒரு முஸ்லிம் இருக்க முடியாது.
இன்று கல்வி என்பது தொழில் சார்ந்ததாக, பட்டம், சான்றிதழ் சார்ந்ததாக மாறிவிட்டது. குறிப்பிட்ட ஒரு துறையில் கற்றால் எவ்வளவு உழைக்கலாம், எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் சிந்திக்கிறார்கள். மாறாக, கல்வியினால் ஊருக்கும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் என்ன பயன் என்று யாரும் சிந்திப்பதில்லை.
இமாம் அபூஹாஸிம் அவர்கள் கற்றுக் கொடுக்கும் பணி புரிந்தவர்கள். அப்பாஸியருடைய ஆட்சிக் காலத்தில் இவரை கலீபா அப்துல் மலிக் அவரது அவைக்கு அழைத்து அவரிடம் “இமாமவர்களே! உங்களுக்கு என்ன வேண்டும்? எதை வேண்டுமானாலும் கேளுங்கள்” என்றார்.
அதற்கு இமாமவர்கள் கூறினார்கள்: “கலீபாவே! எனக்கு ஒரேயொரு தேவைதான் இருக்கிறது. அந்தத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே நான் அலைந்து திரிகிறேன். உங்களால் முடியுமென்றிருந்தால் அந்தத் தேவையை நிறைவேற்றித் தாருங்கள்.”
அப்போது கலீபா, “சொல்லுங்கள் இமாம் அவர்களே!” என்றதும் இமாமவர்கள், “என்னை நரகத்திலிருந்து விடுவித்து சுவனத்தில் நுழைவிக்க வேண்டும். இதுதான் எனது தேவை” என்றார்கள்.
உடனே கலீபா, “எனக்கும் அந்தத் தேவைதான் இருக்கிறது” என்று கூறினார். இப்படிப்பட்ட மனிதர்களை எந்தப் பல்கலைக்கழகம், எந்தப் பாடசாலை, எந்த கல்வி நிறுவனம் உருவாக்கியிருக்கிறது?
முன்மாதிரி
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதாரணபுருஷர்களாக திகழ வேண்டும்.
“மனிதர்களுக்கு நன்மையை ஏவுகின்ற நீங்கள் உங்களை மறந்து விட்டீர்களா?” என்று அல்குர்ஆன் கேட்கிறது. கற்பிக்கின்ற ஆசிரியர்களிடத்தில் இத்தகைய முன்மாதிரிகள் இல்லாதபோது மாணவர்கள் எதனை முன்மாதிரியாகக் கொள்வது?
ஆயிரம் மனிதர்கள் தங்களுடைய பேச்சினால் ஒரு மனிதனில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைவிட ஒரு மனிதன் தனது முன்மாதிரியால் ஆயிரம் மனிதர்களிடத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிகப் பலமானது.
எனவே, மாணவர்கள் ஆசிரியர்களின் முன்மாதிரிகளையே பார்க்கின்றனர். அவர்களது வெறும் பேச்சுக்களை விட செயல்களுக்கு, நடத்தைகளுக்கு முன்மாதிரிகளுக்கு அதிக தாக்கம் செலுத்தும் சக்தி இருக்கிறது. வகுப்பிற்கு நேர காலத்தோடு ஆசிரியர் சமுகமளித்தால் அது பிள்ளைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவதுதான் முக்கியமானது.
இஹ்லாஸ்
அடுத்த முக்கியமான பண்புதான் இஃலாஸ். மேற் சொன்ன அனைத்திற்கும் அடிப்படையாக அமைவது இந்த இஃலாஸ்தான். நாம் அல்லாஹ்விடமிருந்தே வந்தோம், அவனுக்காகவே வாழ்கிறோம், அவனிடமே மீள உள்ளோம் என்ற உணர்வு அவசியம். இந்த உணர்வு இருந்தால் அல்லாஹ்வுக்காகச் செயற்படுவார்.
இந்தப் பண்புகள் இல்லாததன் மோசமான விளைவுகளை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இவற்றுக்கெல்லாம் நாம்தான் பதில் சொல்ல வேண்டும். ஆசிரியர் பணி மிகவும் பொறுப்பான ஒரு பணி. ஆசிரியர்களின் முறையான வழிகாட்டல்கள் கிடைக்கப் பெறாமையினால் வீதிகளில் சுற்றித் திரிகின்ற, சிறைச்சாலைகளில் வாடுகின்றவர்கள் குறித்து ஆசிரியர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.
( ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களின் விரிவுரையிலிருந்து தொகுக்கப்பட்டது.)
நன்றி: அல்ஹஸனாத் ஒக்டோபர் 2015 இதழ்
source: http://sheikhagar.org/