சிரியா மீது நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? -ஏஞ்சலினா
[ “உலக நாடுகளே, நீங்கள் விமானத்தில் உணவும், மருந்தும் போடுவதால், அம்மக்கள் உயிரோடிருக்க முடிகிறது என்றால், அவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்தால் அவர்கள் மீது குண்டும் போடப்படுகிறது.
தயவு செய்து உங்கள் எல்லைகளைப் பூட்டிவிட்டு உணவுகளை எறியாதீர்கள், அது குண்டைவிடக் கொடியது.” ]
சிரியா அகதிகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா பேசிய உரை, உலகின் மனசாட்சியை இன்றளவும் உலுக்கி வருகிறது. அந்த உரையின் முக்கியமான 5 பாயிண்ட்கள் இங்கே…
1) ‘உலக நாடுகளின் தலைவர்களே, குடிமக்களே… உங்களின் நாய்க்குட்டிகள் கூட உச்சபட்ச பாதுகாப்பில் தூங்கும் நேரத்தில்தான், ‘என் மகளைத் துப்பாக்கி முனையில் ஒருவன் பாலியல் அடிமையாகக் கடத்திப் போனதைத் தடுக்க வழியின்றி வேடிக்கை பார்த்தேன்’ என ஒரு தாய் என்னிடம் அழுதபோது, நான் என் கண்களைத் தாழ்த்திக்கொள்ள நேர்ந்தது!’’
2) “ஒரு பெண் பிள்ளை, தன் சின்னஞ்சிறிய சகோதரர்களையும், சகோதரிகளையும் குடும்பத் தலைவியாகக் காத்து வருகிறாள் ஓர் அகதிக் கூடாரத்தில். அந்தச் சிறுமியின் தாய் விமானக் குண்டுவீச்சில் இறந்து போயிருந்தார். அவர்களின் தந்தை ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். அவரின் நிலை என்னவெனத் தெரியவில்லை. ஆக, குடும்பத் தலைவி பொறுப்பேற்றுக் கொண்ட அந்தப் பெண்ணின் வயது 11”
3) ‘பல கட்டடங்களைக் கட்டிய ஒரு பொறியாளர், அகதியாய் உயிர் பிழைக்க தப்பிச் செல்லும் போது அவரது கண் முன்பாக அவரின் மகள் சென்ற படகு விபத்துக்குள்ளாகி 8 வயது மகள் கடலில் மூழ்கிச் சாவதை செய்வதறியாமல் பார்த்துக் கதறினார்’ என்று அவருடைய உறவினர்கள் அவர்களுடைய மொழியில் சொன்னது எனக்குப் புரியவில்லை. ஆனால், ஆறு பிள்ளைகளின் தாயாக அதன் வலியை உணர்ந்தேன்!”
4) “கால்கள் அற்ற ஒரு இளைஞனைச் சந்தித்தேன், உனக்குச் செயற்கைக் கால்கள் வேண்டுமா, வேறெதுவும் உதவி வேண்டுமா? எனக் கேட்டேன், ‘ஒரே ஒரு உதவி. எனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது. நாங்கள் ஏன் நிர்மூலமாக்கப்பட்டு இரவில் பனிகொட்டும் பாலைவனத்தில் கூடார வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டோம்? இதற்கு மட்டும் பதில் தெரிய வேண்டும்’ என்றான். கனவான்களே எனக்குத் தெரியும், இதற்கு உங்களிடத்திலும் பதில் இல்லை என்று!”
5) “உலக நாடுகளே, நீங்கள் விமானத்தில் உணவும், மருந்தும் போடுவதால், அம்மக்கள் உயிரோடிருக்க முடிகிறது என்றால், அவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்தால் அவர்கள் மீது குண்டும் போடப்படுகிறது. எவ்வளவு பணம் வேண்டும், எவ்வளவு மருந்துகளும், உணவும் வேண்டும்? எனக் கேட்கும் விசாலமான மனது உங்களுக்கு இருக்கலாம், ஆனால் சிரியா மக்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கதகதப்பான கூடாரம் மட்டுமே. அது உயிர்ப் பாதுகாப்பு மிக்க உங்கள் நாடுகளில் வேண்டும். தயவு செய்து உங்கள் எல்லைகளைப் பூட்டிவிட்டு உணவுகளை எறியாதீர்கள், அது குண்டைவிடக் கொடியது”
ஐ.நா பாதுகாப்பு சபையில் ஜோலி ஆற்றிய இந்த உரைக்குப் பின் ஐரோப்பாவில் சிரியா அகதி மக்கள் மீதான கரிசனப்பார்வை அதிகரித்தது. அதே கருத்துக்களை இப்போதும் நாம் மனதில் கொள்ள வேண்டும்!
– செந்தில் குமார்