மத இணக்கம் காத்த மா மனிதர் திப்புசுல்தான்
மஞ்சை வசந்தன்
[ திப்புசுல்தான் உயிரோடு இருக்கும் வரை, இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கம் செலுத்தவே முடியாது என்பதே இந்திய வரலாற்றின் உண்மை நிலை. திப்புசுல்தான் உயிரோடு இருக்கும் இந்தியாவில் ஓர் அங்குலம்கூட ஆங்கில ஆதிக்கத்தை அதிகப்படுத்த முடியாது என்று ஆங்கில அரசே ஒப்புக் கொண்டது.]
வரலாற்று ஆசிரியர்கள் சிலரால் குற்றங் கற்பித்து, களங்கம் கற்பித்து, உண்மைக்கு மாறாக இழிவுபடுத்தி எழுதப்பட்ட திப்பு சுல்தான் ஓர் உன்னத மனிதர், மத இணக்கம் காத்தவர்.
அவரது உண்மையான வரலாற்றையும், அவரது உண்மையான சாதனைகளையும் அறிந்து கொண்டால் அவர்மீது நமக்கு அளவற்ற மதிப்பு ஏற்படும் என்பதோடு அவரை இழித்து எழுதிய வரலாற்று ஆசிரியர்கள்மீது அளவில்லா வெறுப்பு ஏற்படும்.
ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர், இந்திய வரலாறு என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அது கல்லூரி பாடப் புத்தகமாகவும் இருந்தது. திப்புசுல்தான் வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மதம் மாற்ற முயன்றதால், அதை எதிர்த்து 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று அந்நூலில் எழுதப்பட்டிருந்தது.
திப்புசுல்தான் ஆட்சி பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த, காந்தி தர்ஷன் சமிதியின் தலைவர் பி.என். பாண்டே என்பவர், அந்நூலின் ஆசிரியர் ஹரிபிரசாத்துக்கு உடனே ஒரு கடிதம் எழுதி மேற்கண்ட செய்திக்கு ஆதாரம் என்ன என்று கேட்டார்.
மைசூர் கெசட்டரில் இருந்து எடுத்தேன் என்று ஹரி பிரசாத் பதில் எழுத, திரு பி.என். பாண்டே அவர்கள் உடனே மைசூர் பல்கலைக் கழக துணைவேந்தருக்குக் கடிதம் எழுதி இச்செய்தி உண்மையா? மைசூர் கெசட்டரில் உள்ளதா என்று கேட்டார்.
3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட எந்தத் தகவலும் மைசூர் கெசட்டரில் இல்லை.. என்று பதில் வந்தது.
இப்படிப்பட்ட மோசடிப் பேர் வழிகள் காலங் காலமாய் இட்டுக் கட்டும் கதைகள்தான் கண்ணியம் மிக்க முகலாய மன்னர்களை மத வெறியர்களாய், கொடுங்கோலர்களாய் காட்டின.
500 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் அடக்குமுறையில் மற்ற மதத்தாரை இஸ்லாமியர்களாக மாற்ற முயற்சி செய்திருந்தால், இந்தியாவே இஸ்லாமிய நாடாக ஆகியிருக்கும் என்பதை ஓரளவு சிந்திக்கின்றவர்களால்கூட உணர முடியும்.
உண்மையில் திப்புசுல்தான் இந்துக்களையும், இந்துக்களின் கோயில்களையும் மிகவும் மதித்ததோடு, ஏராளமாய் உதவியும் உள்ளார். 156 இந்து ஆலயங்களை திப்பு சுல்தான் நேரடியாகப் பராமரித்து வந்தார். அவற்றையெல்லாம் உள்ளே நாம் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். திப்பு சுல்தானின் பிரதம மந்திரி பூர்ணியா ஒரு பிராமணர். அவரது படைத் தளபதி கிருஷ்ணராவ் ஒரு பிராமணர், மராட்டிய இந்து மன்னனால் அடித்து நொறுக்கப்பட்ட சிருங்கேரி மடத்தைச் செப்பனிட்டதோடு, அம்மன்னனால் கொள்ளையடித்து செல்லப்பட்ட சிருங்கேரி மடத்து சாரதாதேவி சிலைக்குப் பதிலாய் புதிய சிலையை அமைத்துக் கொடுத்தார் திப்புசுல்தான்.
அண்ணல் காந்தியடிகள்:
நல்ல இஸ்லாமியரான திப்பு சுல்தான், மதுவிலும், மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராக வாழ்ந்தார். வருவாய் இழப்புகளைப் பற்றிக் கவலைப்படாது முழு மதுவிலக்கை அமுலாக்கிய இவர் ஓர் உன்னதமான மன்னன்.
ஆங்கில கனோனல் மெடோஸ் டெய்லர்:
திப்பு சுல்தான் கவுரவமான பெரிய மனிதர். அவரைப் போன்ற உயர்ந்த கொள்கையுடைய மனிதரை இந்துஸ் தானம் இனிமேல் எப்போதும் பார்க்காது. வியக்கத்தக்க திறமையும் ஊக்கமும் கொண்டு, மக்களைக் கவர்ந்து எல்லோரிடமும் அன்போடும், கருணையோடும் நடந்து கொண்டார். மாஷா அல்லாஹ்! திப்புசுல்தான் கண்ணியம் மிகுந்த தலைவன்!
ஆங்கில சேனாதிபதி மேஜர் டிரோம்:
திப்பு சுல்தானின் ஆட்சி தன்னிச் சையானதும் கண்டிப்பானதுமானாலும், குடிமக்களைப் பாதுகாத்து, உதவிகள் செய்து, அவர்களின் நன்மையை நோக்க மாகக் கொண்டு நடத்தும் செங்கோ லாட்சியே அல்லாமல் துன்புறுத்தும் கொடுங்கோலாட்சியல்ல! திப்புசுல்தானின் ஆட்சிக்குட்பட்டிருந்த மக்கள், தாராள மாய்ப் பெற்று மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ்ந்தார்கள்.
திப்புவை வெற்றிகொண்ட கர்னல் ஆர்தர் வெல்லெஸ்லி கீழ்க்கண்டவாறு அவர் பற்றிக் கூறுவது திப்புவின் தீரத்திற்கு மிக உயர்ந்த சான்றிதழாகும்.
திப்புவின் படை பலமும் அதை இயக்கும் அவரது திறமையும் உலகின் தலைசிறந்த படைகளுக்கு ஒப்பானது! சற்று விழிப்புடன் அவர் இருந்திருப் பாரேயானால், பெங்களூர் காடுகளில் ஆங்கிலேயர்களாகிய நாம் ஓடி ஒளிய வேண்டியிருந்திருக்கும்
கவிஞர் இக்பால்:
ஏ! காவிரியே! கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நீ வீரநடை போடுகிறாயே!
நீ சுமந்து செல்லும் செய்தி என்ன வென்று உனக்கு நினைவுள்ளதா?
நீ எந்த மாவீரனைச் சுற்றி நாள் தவறாமல் வலம் வந்து கொண்டிருந் தாயோ – அந்த
மாவீரனின் குருதி உனது அலைகளில் கொப்பளிக்கிறதே! அதுதான் அந்தச் செய்தி!
அன்று கிழக்கு தூங்கிக் கொண்டிருந்தபோது, அவன் மட்டும் விழித்துக் கொண்டிருந்தான்!
தமிழ் கலைக் களஞ்சியம்: திப்பு தூயவர், ஒழுக்கம் மிக்க சமயப் பற்று மிக்கவர். அறிவு மிக்கவர். அரசியல் திறன் உடையவர். அரபி, உருது, கன்னடம், பாரசீக மொழிகளை நன்கு பேசுவார். சிறந்த நிர்வாகி, சிறந்த நூல் நிலையம் வைத்திருந்தார். புதிய நாண யங்கள் வெளியிட்டார். வேளாண் மையைப் பெருக்கினார். மதுவிலக்கை அமுலாக்கினார். சிருங்கேரி மடத்திற்கு திப்பு எழுதிய 21 கடிதங்கள் அவர் இந்து மதத்தின் இனிய நண்பர் என்பதை விளக்குகின்றன.
பாரதப் பெரியோர்கள் என்னும் பொருள் உடைய பாரத் கி கவுரவ் என்ற இந்தி நூலில்:
தந்தையின் சபதத்தை நிறைவேற்றுவ தற்காகத் தீவிர முயற்சியில் தனது உயிரைத் தியாகம் செய்த திப்புசுல்தான் இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் முன்னணி வரிசையில் முத லாவதாகப் பாராட்டப்படத்தக்கவர்.அதை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஷாஹே ஷஹ்தா (தியாகிகளின் சக்கரவர்த்தி) என்று கவுரவிப்பது மிகவும் பொருத்த மானதாகும்.
காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா:
இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரித்து வைப்பதில் ஆதாயம் கண்ட ஆங்கிலேயர், இந்தியாவில் ஆட்சி புரிந்த முஸ்லீம் மன்னரை மதவெறி பிடித்துக் கொடுமை புரியும் ஜந்துக்கள் என்று எழுதியுள்ளனர். அப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரம் மலிந்துள்ள சரித்திர ஏடுகளை மாற்றி எழுத வேண்டும்! திப்பு சுல்தான் இந்துக்களைத் துன்புறுத்துகிறவன் என்று எழுதியிருக்கிறார்கள். அது உண்மையல்ல. திப்பு பக்தி மிகுந்த முஸ்லீம் போலவே பக்தி மிகுந்த இந்துவாகவும் இருந்தான்!
இந்திய சரித்திரக் களஞ்சியம் – ப. சிவனடி:
அய்ரோப்பாவில் நெப்போலியனும், இந்தியாவில் திப்பு சுல்தானும் பிரிட்டிஷ் பேரரசிற்கு பெருந் தடையாய் இருந்தனர். பிரிட்டிஷ் மணிமுடியின் பேராளராய் வந்திருந்த,காரன் வாலீஸும், வெல்லஸ் லியும் வாழ்வா சாவா என்று கங்கணங் கட்டிக் கொண்டு சிங்கத்தின் குகைக் குள்ளே சென்று மைசூர் நாட்டிற்குள் ளேயே போரைக் கூட்டிச் சென்று இந்திய விடுதலை வேட்கையை அவித்து விட்டனர்.
பேதமில்லாத உத்தர பூமியான போர்க்களத்தில் வெல்ல வந்தோரும், வெல்லப்படப் போவோரும் மாய்ந்து கிடந்த சமர்க்களத்தில் பிணத்தோடு பிணமாய் திப்பு சுல்தான் வீழ்ந்து பட்ட அந்தக் கணமே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஏற்றம் விடிந்து விட்டது
முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி:
கி.பி. 1792-இல் பிரான்ஸின் தலைநகர் பாரீஸில் மக்கள் புரட்சி ஆரம்பமாகி, சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை என்ற சங்கநாதம் எழுந்ததுமே அதனுடைய எதிரொலி இந்தியத் திருநாட்டிலும் கேட்டது! திப்புசுல்தானின் தலைநகரான சீரங்கப்பட்டணத்தில் அன்றைய தினமே இப்புரட்சிக் குரல் எதிரொலித்திருக்கிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். (குறிப்பு: 07.06.1985இல் பாரீஸில் இராஜீவ் பேசியது)
மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்:
இந்தியாவை வென்று அடிமை படுத்த வேண்டும் என்று எண்ணிய வெள்ளையர்களின் ஆதிக்கப் பேராசைக்குப் பெரும் தடைக்கல்லாக நின்றவர் திப்பு ஆங்கில ஆட்சியை எதிர்த்து தேச பக்தியுடன் இறுதி வரை போராடிய வீறுகொண்ட புலியாக அவர் எதிரிகளை விரட்டினார். இந்தப் பாவத்திற்காகவே, இந்துக்களையும் உருவ வழிபாட்டையும் வெறுத்த, வெறிகொண்ட முஸ்லீமாக சித்தரிக்கப்பட்டார். ஆனால், திப்பு இந்துக் கோயில்களுக்கு உதவிய நடுநிலையாளராகவே திகழ்ந்தார்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை:
தென்னகத்தின் உண்மையான தேசிய இயக்கம் முஸ்லீம் பெரு வீரரான ஹைதர் அலியால் தொடங்கப்பட்டது. தென்னகத்தில் மட்டு மல்லாமல் கீழ்த்திசையிலேயே மேலை நாட்டாரின் ஆதிக்க வெறியை எதிர்க்க நின்றவர்கள் பேரரசர் ஹைதர்அலியும் அவரது மகன் திப்புசுல்தானும் மட்டுமே! குடிமன்னரான திப்புசுல் தானின் வீழ்ச்சியே குடிமக்களின் எழுச்சிக்குரிய முதல் தூண்டுதலாய் தேசிய இயக்கத்தின் முதல் அலையாய் அமைந்தது!
உண்மை! திப்புசுல்தான் உயிரோடு இருக்கும் வரை, இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கம் செலுத்தவே முடியாது என்பதே இந்திய வரலாற்றின் உண்மை நிலை.
மராட்டிய மன்னர்களும், ஹைதராபாத் நிஜாமும் ஆங்கிலேயர்களின் அடிவருடி. ஆங்கிலேயரின் நிழலில் சுகங்கண்டு. ஆங்கில ஆதிக்கம் பரவ துணை நின்ற துரோக நிலையில், மானமுள்ள, நாட்டுப் பற்றுள்ள, தீரமிக்க வீரனாய் வீறுகொண்டு நின்று, ஆங்கிலேயர்களை விரட்டியடித்து நின்ற காவல் அரணாக திப்புசுல்தான் மிளிர்ந்தார். அவரைப் போல் மற்ற இந்து மன்னர்களும் நின்றிருந்தால் ஆங்கிலேயர்கள் அடிச்சுவடேயில் லாமல் அப்புறப்படுத்தப் பட்டிருப்பார்கள்.
ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிரான உண்மையான முதல் போர் ஹைதர்அலியிடமே உருப் பெற்றது. அப்பெரும் பணிக்குத் தனது மகன் திப்புசுல்தானை, அவரது 15 ஆவது வயதிலே தயார் செய்தார். ஆம் 15ஆம் வயதிலே திப்பு போர்களம் சென்றார். திப்புசுல்தானைக் கண்டு பிரிட்டிஷ் பேரரசே நடுங்கிற்று. திப்புசுல்தான் உயிரோடு இருக்கும் இந்தியாவில் ஓர் அங்குலம்கூட ஆங்கிலஆதிக்கத்தை அதிகப்படுத்த முடியாது என்று ஆங்கில அரசே ஒப்புக் கொண்டது. இத்தனைக்கும் திப்பு சுல்தான் பரம்பரை, மன்னர் பரம்பரையன்று. அவர் தாத்தா ஒரு சாதாரண மனிதர். பின் எப்படி மன்னரானார்? அது மட்டுமா அவரது வாழ்வே வியப் பிற்குரியது; புதிர் நிறைந்தது.
(தொடரும்)