மண்ணைக்கவ்விய மாட்டுக்கறி அரசியல்
-ஏ.கே.கான்
[ மதவாதத்தை தூண்டும் வகையில் யாரும் எதையும் பேசலாம், எந்தக் கருத்தையும் சொல்லலாம், நான் பேச மாட்டேன். அமைதியாக இருப்பேன். அது தான் எனது சாமர்த்தியம் என்று நினைத்துக் கொண்டிருந்த மோடிக்கு மக்கள் உரக்கப் பேசுவார்கள் எனும் பதிலடி சரியான பாடமாகும்.]
1999ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வந்தது பாஜக- நிதிஷ்குமார் கூட்டணி. மூன்று முறை கூட்டாக தேர்தலை சந்தித்த இந்தக் கூட்டணி கடைசியாக 2009ம் ஆண்டும் கூட்டாக தேர்தலை சந்தித்து ஆட்சியைப் பிடித்தது. 2010ம் ஆண்டு ஜூன் மாதம் பிகாரின் கோஷி பகுதியை வெள்ளம் புரட்டிப் போடுகிறது.
வெள்ள நிவாரணத்துக்காக பல மாநிலங்களும் பிகாருக்கு உதவிகள் வழங்கிய நிலையில், குஜராத் சார்பில் ரூ. 5 கோடியை வழங்கினார் அம் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி. அத்தோடு பிகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவின் தேசிய செயற்குழு கூடுகிறது. இதையடுத்து பாட்னா வரும் பாஜக தலைவர்களுக்காக தனது வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார் நிதிஷ்குமார்.
நல்லா தான் போய்கிட்டு இருந்தது…
எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்த நிலையில், பிகாருக்கு ரூ. 5 கோடி நிவாரண உதவி கொடுத்தது தொடர்பாக பிகாரின் முன்னணி பத்திரிக்கைகளில் ரூ. 35 லட்சம் செலவு செய்து ஒரு விளம்பரத்தை வெளியிடுகிறார் நரேந்திர மோடி. அப்போது வெளியூரில் இருந்த நிதிஷ்குமார் காலையில் பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வந்த இந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு கடுப்பாகிறார். என்ன பிச்சை போடுகிறார்களா என்று கேட்டவாறே, பாட்னாவில் உள்ள தனது இல்லத்தின் செயலாளருக்கு போன் செய்து பாஜகவினருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தை ரத்து செய்ய உத்தரவிடுகிறார்.
சார், ஷாமியானா எல்லாம் போட்டாச்சு, 5 ஸ்டார் ஹோட்டல்களில் இருந்து சமையல்காரர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள், சமையல் ஆரம்பமாகப் போகிறது என்று பதில் பேசிய செயலாளருக்கு டோஸ் விழுகிறது. ஷாமியானைவை கழற்றி வீசிவிட்டு, சமையல்காரர்களை உடனே வீட்டை விட்டு வெளியே போகச் சொல் என்று கூறிவிட்டு பாஜக தரப்புக்கு போன் செய்து விருந்து கேன்சல் என்று அறிவிக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில்….
அன்று தான் விழுந்தது பாஜக- நிதிஷ்குமார் இடையிலான கூட்டணியின் பெரும் விரிசல்…. நிதிஷ்குமார் ஆட்சிக்கு பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற, லாலுவும் காங்கிரசும் உள்ளே புகுந்து முட்டு கொடுத்து ஆட்சியைக் காக்கின்றன. இடையே முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மகா தலித் சமூகத்தைச் சேர்ந்த மாஞ்சியை முதல்வராக்கிறார் நிதிஷ்.
மாஞ்சி தன்னையே ஒதுக்க ஆரம்பிக்க அவரை நீக்கிவிட்டு மீண்டும் முதல்வரானார் நிதிஷ். அடுத்து பிரதமர் வேட்பாளராக மோடியை பாஜக அறிவிக்க, அதை மிகக் கடுமையாக எதிர்க்கிறார் நிதிஷ். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிதிஷ், லாலு, காங்கிரஸ் ஆகியோர் தனித்தனியே போட்டியிட எதிர்க் கட்சிகளின் பிளவாலும் வீசிய மோடி அலையாலும், தலித் கட்சிகளான ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி, ராஷ்ட்ரீய லோக் சமாத் கட்சி ஆகியவற்றுடன் அமைத்த கூட்டணியாலும் மொத்தமுள்ள 40 இடங்களில் 31ல் வெல்கிறது பாஜக.
ஆளுக்கு 101….
இந் நிலையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க, லாலு தேர்தலில் போட்யிட தடை நிலவும் நிலையில், தனது கட்சியையும் மானத்தையும் காக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. தனித்து நின்றால் தோல்வியே என்பதால் லாலுவுடன் சேர வேண்டிய கட்டாயம் நிதிஷுக்கு. இருவரும் நெருங்க வேண்டிய கட்டாயம் இருந்தாலும் நெருங்க விடாமல் ஈகோ தடுக்க, உள்ளே நுழைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. இரு தரப்பிடமும் பேசிப் பேசி கூட்டணி அமைக்க வைத்தார். தானும் அந்தக் கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து தங்களுக்கு தலா 101 சீட்டுகளை எடுத்துக் கொண்ட லாலுவும் நிதிஷும் காங்கிரசுக்கு 41 இடங்களைத் தர, ராகுலுக்கே அதிர்ச்சி. இவ்வளவு சீட்டா?… ஐயோ என்ற பயம்.
எல்லாமே நாங்க (மட்டும்) தான்….
அடுத்து ஆரம்பிக்கிறது பிரச்சாரம். டெல்லியில் அடி வாங்கினாலும் மற்ற சில மாநிலங்களில் வென்ற தெம்போடு தேர்தலை எதிர்கொள்கிறது மோடி அண்ட் அமித் ஷா கம்பெனி. பாஜகவின் தேசியத் தலைவர்கள், பிகார் தலைவர்கள், லோக்கல் தலைவர்கள் என அனைவரையும் ஒதுக்கி வைத்துவிட்டு வழக்கமான இறுமாப்புடன் தேர்தல் வேலையை ஆரம்பிக்கிறார் அமித் ஷா. பாஸ்வான், லோக் சமாதா கட்சி தவிர நிதிஷ்குமாரால் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மாஞ்சியையும் கூட்டணியில் சேர்க்கிறார்கள். இந்த 3 தலித் கட்சிகள் மூலம் மாநிலத்தில் உள்ள தலித்களின் ஒட்டு மொத்த ஓட்டையும் கவர்வது என்பது மோடி- அமித் ஷாவின் திட்டம். வேட்பாளர் பட்டியல், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் கோஷம் என அனைத்தையும் மோடியும் அமித் ஷாவுமே முடிவு செய்கிறார்கள். முதல்வர் வேட்பாளராக யாரையும் அறிவிப்பதில்லை என்று முடிவெடுக்கிறார்கள்.
மறைமுக ஜாதிக் கூட்டணி…
லாலுவுக்கு யாதவர்கள், முஸ்லீம்கள், நிதிஷூக்கு குர்மி இனத்தினர் மட்டுமே வாக்களிப்பார்கள். இதை ஜாதி, மதவாதக் கூட்டணியாகக் காட்டினால் மிச்சமுள்ள மக்கள், அதில் பெரும்பாலானவர்கள் பிராமணர்கள், தாகூர்கள் உள்ளிட்ட முற்படுத்தப்பட்டவர்களும், தலித் கட்சிகள் தங்களோடு இருப்பதால் தலித்களின் ஓட்டும் தங்களுக்கே நிச்சயம் என்று நினைக்கிறார்கள். அதாவது யாதவர்கள்- முஸ்லீம்கள் அல்லாத ஒரு மறைமுக ஜாதிக் கூட்டணியை அமைக்கிறார்கள். மேலும் இருக்கவே இருக்கிறது மோடி அலையும் மீடியாவின் மறைமுகமான ஆதரவும் சமூக வலைத்தளங்களில் உள்ள தங்கள் ஆதரவாளர்களின் உதவியும் என்று நம்புகிறார்கள்.
மறந்து போன பாஜக….
இவர்கள் மறந்துபோன முக்கியமான விஷயம், நிதிஷ்குமார் அரசின் சாதனைகளை. அவர் ஒன்றும் லாலு பிரசாத் அல்ல. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பிகாரில் மின் உற்பத்தியை 12 மடங்கு உயர்த்தியிருக்கிறார், சாலைகள் போட்டிருக்கிறார், சமூக விரோதிகளை சிறையில் அடைத்து சட்டம் ஒழுங்கை காத்துள்ளார், பள்ளிகளை திறந்துள்ளார், ஆசிரியர்களை நியமித்துள்ளார், ஜாதி- மதம் பாராமல் அனைத்துத் தரப்பினருக்கும் உரிய அரசை நடத்தியுள்ளார். இதெல்லாம் மோடி அலைக்கு முன் எடுபடுமா என்ற நினைப்பு பாஜகவுக்கு. ஆனால், பிரச்சாரம் ஆரம்பித்த உடனேயே தெரிந்துவிட்டது, நமக்கு பலம் போதாது என்பது.
இதையடுத்து தீவிர மதவாதத்தை கையில் எடுத்தது மோடி- அமித் ஷா தரப்பு. மாட்டுக் கறி, இட ஒதுக்கீடு ரத்து என்று ஆர்எஸ்எஸ் தரப்பை விட்டும் தனது தரப்பை விட்டும் மக்களை மதரீதியில் பிரிக்க முயன்றனர். அதாவது லாலுவுக்கு யாதவர்களும் முஸ்லீம்களும் வாக்களித்தால், மற்ற அனைவரையும் தனது குடைக்குக் கொண்டு வர இந்த மதவாத பிரச்சாரம் உதவும் என்பது பாஜகவின் திட்டம்.
மாட்டுக் கறி….
இதனால் தான் இந்தத் தேர்தலே மாட்டுக் கறி தின்பவர்களுக்கும் மாட்டுக் கறி சாப்பிடாதவர்களுக்கும் இடையிலான தேர்தல் என்றார் பாஜக மாநிலத் தலைவர் சுஷில் மோடி. பாஜகவின் மதவாத பிரச்சாரத்தை லாலுவைவிட்டு ஜாதிரீதியில் ஹேண்டில் செய்த நிதிஷ்குமார் தனது பிரச்சாரத்தை ஜென்டில் மேன் பிரச்சாரமாகவே கடைசி வரை நடத்தினார். நிதிஷ்குமாரின் டிஎன்ஏவிலேயே தவறு இருப்பதாக விஞ்ஞானி நரேந்திர மோடி கண்டுபிடித்தபோது, அதை மிக அழகாக பிகார் மக்களின் டிஎன்ஏவை கேவலப்படுத்திவிட்டார் நரேந்திர மோடி என திசை திருப்பினார் நிதிஷ்.
உங்கள் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சொல்லுங்கள் என நிதிஷ் திருப்பித் திருப்பிக் கேட்டார். ஆனால், இதற்கு பாஜகவிடம் பதிலே இல்லை (யாரையாவது ஒருவரை வேட்பாளராக அறிவித்தால் மற்ற ஜாதிக்காரர்கள் ஓட்டு போட மாட்டார்கள், இதனால் அனைத்து இந்துக்களின் ஓட்டையும் வாங்க முடியாது என்பது பாஜகவின் நிலை). அதே நேரத்தில் லாலுவுடன் கைகோர்த்ததால் நிதிஷ் ஜாதிக் கூட்டணி அமைத்துவிட்டதாக பாஜக கேள்வி எழுப்ப, 3 தலித் கட்சிகளை கூட்டணிக்குள் வைத்திருக்கும் நீங்கள் அமைத்துள்ளது ஜாதிக் கூட்டணி இல்லாவிட்டால் வேறு என்ன என்ற நிதிஷ்குமாரின் கேள்விக்கும் பாஜகவிடம் பதில் இல்லை.
சொந்த காசில் சூனியம்….
பிகாரை நிதிஷ் 10 ஆண்டுகளாக பாழ்படுத்திவிட்டார் என்ற பாஜகவின் மகா முட்டாள்தனமான பிரச்சாரம் தான் மோடி- அமித் ஷா கம்பெனியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம். இந்த 10 ஆண்டுகளில் ஏழரை வருடம் நிதிஷ் கூட்டணியில் பாஜகவும் இருந்தது. இதைக் கூட மறந்துவிட்டு பொத்தாம் பொதுவாக நிதிஷை கேவலப்படுத்த முயன்றது பாஜக. இதை மக்களிடம் தெளிவாக எடுத்துச் சென்றனர் நிதிஷ், லாலு, ராகுல் காந்தி ஆகியோர்.
பருப்பு விலையை கட்டுப்படுத்த முடியாத, கார்ப்பரேட் முதலாளிகளுக்கான மோடி மாடல் சிறந்ததா, ஏழைகளுக்கான நிதிஷ் மாடல் சிறந்ததா என்ற பட்டிமன்றத்தையே இந்தக் கூட்டணி நடத்தியது. கடைசியில் நிதிஷ் மாடல் வென்றிருக்கிறது. பாஜகவின் தோல்விக்கு மிக முக்கியமான இருந்திருப்பது அதன் கூட்டணிக் கட்சிகள் தான். 80 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டும் வென்றுள்ளன இந்தக் கட்சிகள். இது ராம்விலாஸ் பாஸ்வானுக்கு மிகப் பெரிய பாடம் புகட்டிய தேர்தல்.
எல்லா தரப்பினரும் நிராகரித்த பாஜக…
அதே நேரத்தில் யாதவர்கள், முஸ்லீம்கள், குர்மி இனத்தினர் மட்டுமல்லாமல் அனைத்து மதங்களையும் ஜாதிகளையும் சேர்ந்தவர்கள் நிதிஷ்- லாலு கூட்டணிக்கு வாக்களித்திருப்பதால் தான் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளனர். அதே போல பெருவாரியான பெண்களும், இளம் வயது வாக்காளர்களும் வாக்களித்துள்ள தேர்தல் இது. இவர்களும் பாஜகவை நிராகரித்துள்ளனர்.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஒரு டிவி சேனல் நடத்திய எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் நிதிஷ் கூட்டணிக்கு 170 இடங்கள் கிடைக்கும் என்று தெரியவர, அந்தக் கருத்துக் கணிப்பையே வெளியிடாமல் நிறுத்துவிட்டது அந்த சேனல். இது மாதிரியான மீடியாக்கள், ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் மிக ஆக்டிவாக உள்ள வலதுசாரி ஆதரவாளர்களை நம்பி இன்னும் மோடி அலை வீசிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு இந்தத் தேர்தல் மிக மோசமான பாடத்தை புகட்டியுள்ளது.
மத்தியில் என்ன தான் செய்தீர்கள்…?
அதே போல பாஜகவை முறியடிக்க நிதிஷுக்கு வாக்களியுங்கள் என டெல்லி இமாம் மாதிரியான தலைகள் வெட்டி முழக்கம் ஏதும் செய்யாமல் அமைதி காத்ததும், அதே நேரத்தில் நேரடியாகவே ஆர்எஸ்எஸ் வாய்சில் பாஜகவின் பிரச்சாரம் அமைந்ததும் தோல்விக்கு மிக முக்கிய காரணம். பாஜக என்ற முகமூடியுடன் ஆர்எஸ்எஸ் இருக்கும்வரை தான் பாஜக தப்பும். முகமூடியை கழற்றினால், அது பாஜகவுக்கு எதிராகவே மக்களை ஒருங்கிணைக்கும் என்பதையும் இந்தத் தேர்தல் சுட்டிக் காட்டியிருக்கிறது.
பிகாரில் போட்டியிட்ட இடங்களில் கடந்த தேர்தலைவிட 50% இடங்களை இழந்திருக்கிறது பாஜக. கருப்புப் பணத்தை கொண்டு வருவோம், வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற பெரும் கோஷத்துடன் அமைந்தது தான் மோடியின் மத்திய ஆட்சி. ஆனால், வங்கி சீர்திருத்தங்கள், நிலம், தொழிலாளர் சீர்திருத்த சட்டங்கள் என எல்லாமே பெண்டிங்.
எல்லாமே விளம்பரம்….
அதே போல கடந்த 10 மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி வரலாறு காணாத வகையில் சரிந்து கொண்டிருக்கிறது. அதை சரி செய்யவோ, விலைவாசியை கட்டுப்படுத்தவோ எந்த முயற்சிகளும் இல்லை. ஸ்வச் பாரத், மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என ட்விட்டர், பேஸ்புக்குக்கு தீனி போடும் விஷயங்களைத் தவிர அன்றாட மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் ஏதும் கண்ணில் தெரியவில்லை.
மதரீதியில் மக்களை பிரித்து ஓட்டு அறுவடை செய்யலாம் என்ற Polarization திட்டம் பூமராங் ஆகி counter- polarization நடந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை சரிந்து போய் கிடக்கும் நிலையிலேயே விலைவாசியை கட்டுப்படுத்த முடியாவிட்டால், இதன் விலை உயரும்போது நிலைமை என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.
சமாளிப்பு வாதம் உதவாது…
இப்போதும் கூட பிகாரில் பாஜக தான் மிக அதிகமாக வாக்குகளை வாங்கியுள்ளது, லாலும் காங்கிரசும் நிதிஷுடன் ஒன்று சேர்ந்ததால் தான் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டது என பாஜக தரப்பின் வாதம். இந்த முறை மிக அதிகமான இடங்களில் போட்டியிட்ட ஒரே கட்சி பாஜக தான் என்பதையும், பாஜகவும் ஒன்றும் தனித்துப் போட்டியிடவில்லை என்பதும் இவர்களால் மறைக்கப்படும் உண்மை.
இவ்வாறு உண்மைகளை மறைத்துவிட்டு டிவியிலும் ட்விட்டரிலும் வாதம் செய்வது பாஜகவுக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. தோல்விக்கான காரணத்தை உணர்ந்து தங்களைத் திருத்திக் கொள்வது தான் பாஜக முன் இப்போது உள்ள ஒரே தீர்வு. ஆனால், உண்மைகளை மூடி மறைத்து, மோடிக்கு வலிக்காமல் நியூஸ் போடும் மீடியாக்கள், ட்விட்டர் பேர்வழிகளால் பாஜகவுக்கு நஷ்டமே மிஞ்சும்.
அமித் ஷா தான் பொறுப்பு….
அதே போல பாஜக என்றால் மோடியும் அமித் ஷாவும் மட்டுமே என்ற நிலை உருவாகிவிட்டது. இதனால் பிகார் தோல்விக்கும் இந்த இருவர் மட்டுமே காரணம் என்ற வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இதில் மோடியை விட கட்சியின் தலைவர், பிகார் தேர்தலை கையாண்டவர் என்றவர் என்ற முறையில் தோல்விக்கு அமித் ஷா தான் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். இனியாவது யார் எப்போது, எதை சாப்பிட வேண்டும் என்று மெனு கார்ட் எழுதிக் கொண்டிருக்காமல், நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் ஒரு முறை ட்விட்டர் பக்கம் போய் படித்துப் பார்க்க வேண்டியது மத்திய அமைச்சர்களின் பொறுப்பு.
வழக்கமாக எல்லா பிரச்சனைகளுக்கும் கருத்துத் தெரிவிக்கும் பிரதமர் மோடி, எதற்கெல்லாம் கருத்து தெரிவிக்க வேண்டுமோ அதற்கு கருத்து எதையும் சொல்லாமல், மதவாதத்தை தூண்டும் வகையில் யாரும் எதையும் பேசலாம், எந்தக் கருத்தையும் சொல்லலாம், நான் பேச மாட்டேன். அமைதியாக இருப்பேன். அது தான் எனது சாமர்த்தியம் என்று இன்னும் நினைத்துக் கொண்டிருந்தால், மக்கள் உரக்கப் பேசுவார்கள், பிகாரில் பேசியது மாதிரி. ரூ. 5 கோடி நிவாரண உதவி தந்துவிட்டு அதை ரூ. 35 லட்சம் செலவு செய்து விளம்பரம் செய்து நிதிஷுடன் மோதலை ஆரம்பித்து வைத்தது மோடி தான். மோடி ஆரம்பித்து வைத்ததை நிதிஷ் முடித்துவிட்டார்!
சிறுபான்மையினர் பங்கு
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கணிப்பின்படி, முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் மகா கூட்டணிக்குக் கிடைத்ததே அதன் வெற்றிக்குக் காரணம் என்றால் அது மிகையாகாது. பீகார் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் முதலான சிறுபான்மை வாக்காளர்கள் தங்களின் சமய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்; பீகார் தேர்தல் இந்தியா முழுமைக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும்; மதவெறி சக்திகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று யோசித்து, திட்டமிட்டு பா.ஜ.க.வைத் தோற்கடித்துள்ளார்கள்.
பீகாரில் முஸ்லிம் மக்கட்தொகை 15 விழுக்காடு. மொத்தம் 23 முஸ்லிம்கள் நிதீஷ் கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பின் – 12 பேர்; ஐ.ஜ.த. சார்பில் – 5 பேர்; காங்கிரஸ் சார்பில் – 6 பேர்; சி.பி.எம். சார்பில் வென்ற ஒருவரையும் சேர்த்து 24 முஸ்லிம்கள் சட்டப் பேரவை உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ளனர்.
இது மொத்த உறுப்பினர்களில் 10 விழுக்காடு ஆகும். பீகாரில் மகா கூட்டணி அமைத்த சூட்சுமதாரர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
இதில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பங்கு உண்டு.
ஒரு தேசிய கட்சி; முன்னாள் ஆளும் கட்சி மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா? அதுவும் 41 இடங்களை வாங்கிக்கொண்டு – என ஈகோ பார்த்திருந்தால், இப்போது கிடைத்த 27 இடங்கள்கூட நிச்சயமாகக் கிடைத்திருக்காது. அவ்வாறே லாலுவையும் சும்மா சொல்லக் கூடாது. கூடுதல் இடங்களைப் பெற்றும் நிதீஷ்தான் முதல்வர் என்று தன்முனைப்பு காட்டாமல் அறிவித்தார்.
ஆக, தீய சக்தியை அடக்கிவைக்க, நல்ல சக்திகள் தங்களிடையே விட்டுக்கொடுத்து, கௌரவம் பார்க்காமல் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதுதான் பீகார் சொல்லும் பாடம்.