வெட்கித் தலைகுனிகிறேன் –அட்மிரல் எல் ராம்தாஸ்
(Admiral-l-Ramdas (கப்பல் படை முன்னாள் தலைமைத் தளபதி அட்மிரல் எல் ராம்தாஸ் அவர்கள் எழுதிய கடிதத்தின் முழுமையான தமிழாக்கம்)
மாண்புமிகு ஜனாதிபதி ப்ரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு,
கனத்த இதயத்துடன் தங்களுக்கு இந்த திறந்த மடலை நான் எழுதும் இவ்வேளையில், நம் பாசத்திற்குரிய நாடும் நாட்டு மக்களும் மிகக்கடுமையான சவால்களையும் நம்முடைய நல்லிணக்க பாரம்பரியத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகிறார்கள்.
நாடு சுதந்திரம் அடைந்த சில நாட்களில், 14 வயது நிரம்பிய நிலையில் இந்திய ராணுவத்தில் இணைந்தேன். 45 ஆண்டுகளுக்கு பின், இந்தியக் கப்பல் படையின் தலைவராக (1990 to 1993) பொறுப்பேற்றேன். இந்தக் காலகட்டங்களில் இந்திய பிரிவினையின் பயங்கரங்கள் முதல் நவீன இந்தியாவின் முற்றிலும் மாறுபட்ட டிஜிட்டல் இணைப்பு வரை இந்தியா பல்வேறு மாறுதல்களை கடந்துள்ளதை நான் கண்டுள்ளேன்.
ஹிந்து மத கலாச்சாரத்தில் வளர்க்கபட்டவன் என்ற முறையில் நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். நான் அறிந்த, அனுபவித்த என் ஹிந்து மதம் கணிவானது, அசாதாரண பன்முகத்தன்மையின் மத்தியிலும் அனைவரயும் அரவணைத்து, அனைத்தையும் நேசிக்கவும் மதிக்கவும் கற்றுகொடுதது.
மக்களிடயே பயத்தையும் பிரிவினையையும் பரப்பிவரும் தற்போதுல்ல “ஹிந்துத்வா” என்ற அடையாளத்தின் வன்முறைக்கும் சகிப்புத்தன்மை இல்லாத போக்கிற்கும் என் ஹிந்து மதம் எந்த காலத்திலும் இடம் கொடுத்ததில்லை.
இன்று நம் சக குடிமக்களின் மீது, குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் தலித் சமூகதினற்கு எதிராக நடைபெறும் சம்பவங்களையும் தாக்குதல்களையும் காணும் பொழுது, 80 வயதைக் கடந்த முன்னாள் ராணுவ வீரனாக வெட்கித் தலை குனிகிறேன்.
45 வருடங்களாக நான் பணிபுரிந்த நம் இந்திய இராணுவம், மதச்சார்பின்மை பண்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுதுகாட்டகும். போர்க் கப்பலோ நீர்முழ்கிக் கப்பலோ, விமானங்களோ, போர் அமைப்புகளோ, சாதி அடிப்படையிலோ மத அடிப்படையிலோ எவரையும் வேறுபடுத்தியோ பாரபட்சமாகவோ நடத்தியதில்லை. ஒன்றாக பயிற்சி செய்து, ஒன்றாக போராடி, ஒன்றாக உணவருந்தி, ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாக உயிர் நீப்போம்.
2014ஆம் ஆண்டு மே மாதத்தில் தற்போதைய (நரேந்திர மோடி) அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து, நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதை நாம் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்?. குறிப்பிட்ட சில சமூகத்தினர் தனிமைப் படுத்தப் பட்டிருக்கின்றனர்.
உதாரணத்திற்கு, முஸ்லிம் சமூகத்தினர். இன்று, ஒரு முஸ்லிம் சகோதரரோ சகோதரியோ தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் வழிபாட்டுத் தளங்களின் மீதும், உணவு பழக்க வழக்கங்கள் மீதும், தனி மனித சுதந்திரத்தின் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த சம்பவங்கள் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாதவை. ஒருதலைபட்சமான மனப்பான்மை கொண்ட கும்பல் ஒன்று, பல இறப்புகளுக்கு காரணமாக உள்ளது. மூத்த தலைவர்களின் தொடர்ச்சியான, நேரடியான அவதூறு பேச்சுகள் எண்ணிலடங்காதவை.
பெரும்பான்மையினரின் ஆதரவையும் பலத்தையும் கொண்டு இந்தியாவை ஒரு ஹிந்து தேசமாக மாற்றியமைக்கும் ஒற்றை குறிக்கோளுடன் RSS மற்றும் அதை சார்ந்த அமைப்புகளும் நன்கு திட்டமிட்ட ஒரு முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இவர்களின் இந்த முயற்சி குழப்பத்தை விளைவிக்கும் என்பது குறைந்தபட்ச அவதானிப்பே. அவர்களின் முயற்சியின் விளைவாக, வெறும் வதந்திகளின் அடிப்படையில் கலகக்காரர்கள் சட்டதிட்டங்களை புறக்கணித்து பொது மக்களை அச்சுறுத்தி தாக்கும் ஆபத்தான ஒரு செயல்பாடு துவங்கியுள்ளது. இது போன்ற சம்பவங்களில், சட்டத்தையும் மக்களையும் பாதுகாக்க வேண்டியவர்கள் அப்பட்டமான ஒருதலைபட்சத்துடன் செயல்பட்டு வருகிறார்கள்.
இவை அனைத்திலும் மிகுந்த அதிர்ச்சியை தருவது, இந்த சம்பவங்களை பற்றியோ அதில் பங்கேற்றவர்களின் நடத்தை பற்றியோ நாட்டின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தெளிவான தீர்க்கமான கண்டனம் தெரிவிக்காமல் போனதுதான். அரசின் எதிர்வினை, ஒவ்வொரு முறையும் மிகவும் அலட்சியமாக உள்ளது.
சீற்றத்துடன் வலுவான நிலையை எடுக்க வேண்டிய அரசாங்கத்தின் ஒருங்கிணைத்த எதிர்வினை, இந்த சம்பவங்களின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டு, அவற்றை ”துருதிருஷ்டவசமான” சம்பவங்களெனக் கூறி கடந்து செல்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சரவை உறுப்பினர்களும், முதல் அமைச்சர்களும் இதை ஆமோதிக்கும் பொழுது, ஆளும் கட்சியும் அதன் சகோதர அமைப்புகளும் ஒரு திட்டத்துடன் செயல்படுவதாகவே தோன்றுகிறது.
சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறித்துவர்கள், தலித் மக்கள், பழங்குடியினர் என அனைவருமே தாங்கள் புறக்கணிக்கப் பட்டுவிட்டதாகவும் ஓரங்கட்டுபட்டு விட்டதாகவும் நினைக்கும் வேளையில், இது போன்ற செயல்கள் நெருப்புடன் விளையாடுவதற்கு ஈடானது என்பதை நாட்டின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு நான் சுட்டிகாட்ட தேவையில்லை.
நமக்கே உரிய இந்த அற்புதமான பன்முகத்தன்மையை ஒரு வலிமையாக கருதாமல் போனதால், சர்வதேச அரங்கில் நாம் அதிகமாக தனிமைப்பட்ட, குறுகிய மனம் படைத்த, சகிப்புத் தன்மையற்ற, இனவெறி மற்றும் பாசிச எண்ணங்கள் உடையவர்களாக பார்க்கப் படுகிறோம். நலிவடைந்த சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட வன்முறை, கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்காத, மனித உரிமைகள் மிதிக்கப்படாத ஒரு முழுமையற்ற ஜனநாயகம் என்ற தோற்றத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்துகிறது.
பிரதமரும் அவருடைய அமைச்சரவையும் ஜனாதிபதி முன், இந்திய அரசியலமைப்புச் சட்டதை நிலைநிறுத்துவோம் என்று பதவி பிரமாணம் ஏற்கிறார்கள். நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும் பொழுது, அவர்கள் அதை நிறைவேற்ற தவறி உள்ளனர் என்பது நிரூபணம் ஆகிறது. இதை போன்ற முக்கிய பிழையானது தேசிய பாதுகாப்பிற்கும் தேசிய ஒருமைபாட்டிற்கும் நல்லதல்ல.
மேற்கூறிய சம்பவங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் துரிதமாகவும், எவ்விதமான ஐயங்களுக்கு இடமளிக்காமலும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். மேலும், சட்டத்தை நிலை நிறுத்த, தவறிழைத்தவர்களை தண்டிக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை மட்டுமே இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, அவை விளிம்பு அமைப்புகளோ அல்லது பிரதான அமைப்போ, பல்வேறு விஷயங்களில் பல விதமாக நம் நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் பன்முகக் கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிராகவும் விரோதமாகவும் பேசுபவர்களுக்கும் செயல்படுபவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும்.
5000 வருடங்களுக்கும் மேலாக பலதரப்பட்ட மக்களும் அவர்களின் கலாச்சாரமும் தொடர்ந்து மாறுதல்களுக்கு உள்ளாகி, இன்று ஒரு தனித்துவம் வாய்ந்த கலவையாக பிரதிபலிக்கிறது இந்தியா. நம்முடைய இந்த வேற்றுமையும் தனித்துவமமும் உலகில் வேறு எங்கும் அமையாது.
எனவே, ஒரு மதம் அல்லது ஒரு கலாச்சாரம் சார்ந்த அடையாளம் என்பது நம் நாட்டின் தொன்மையான நாகரீகத்திற்கு ஒரு அவமானமாகவே அமையும்.
மாண்புமிகு ஜனாதிபதி மற்றும் மாண்புமிகு பிரதமர் அவர்களே, நம் இந்திய அரசியலமைப்பு சட்டம் அற்புதமாய் வெளிப்படுத்தி இருக்கும் ஒவ்வொரு குடிமகனின் உரிமையான பேச்சு சுதந்திரம், வழிபாடு மற்றும் கூட்டமைப்பு சுதந்திரங்களை காப்போம் என்றே உறுதிமொழி எடுத்து உள்ளீர்கள்.
ஒரு முன்னாள் அதிகாரியாகவும் ராணுவ வீரனாகவும் நானும் அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்த உறுதிமொழி எடுத்துள்ளேன். அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதை போலவும் வழிகாட்டும் நெறிகளில் விரிவாக விளக்கி இருப்பதை போலவும், நாட்டின் ஒவ்வொவொரு குடிமகனின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலையாய கடமை ஆகும். இந்திய நாட்டு மக்களால் அளிக்கப்பட்ட ஈடில்லா பொறுப்பை கொண்டு தலைமை தளபதி மற்றும் தலைமை நிர்வாகி எனும் பொறுப்பில் இவற்றை உறுதியாக நீங்கள் அமல்படுத்த வேண்டும்.
இதை நாம் இப்பொழுதே களைய மறுத்தால், பிற்காலத்தில் அது வேர்விட்டபின் மிகவும் தாமதமாகிவிடும். நம் ஜனநாயகத்தின் நம்பகத் தன்மையையும், அனைத்து மக்களின் கண்ணியம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட தேவைப்படும் அனைத்து முயற்சிகளையும் நீங்கள் மேற்கொள்வீர்கள் என்று இந்திய நாட்டின் பிரஜைகளாக நாங்கள் எதிர்பார்கிறோம்.
அட்மிரல். எல். ராம்தாஸ்
source: http://thetamilpost.in/2015/11/02/admiral-l-ramdass-letter-to-modi/