இமாம் மாலிக் விளங்கியதுவும், முஃதஸிலாக்களால் விளங்க முடியாமல் போனதுவும்!
ஷேய்க் உஸ்தாத் M.A.M.மன்ஸூர், நளீமி
இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி ‘முஅத்தா’ நூலை இயற்றினார்கள். அது ஹதீஸ் துறையில் முதன்மை நூலாக அமைந்தது. ஆதாரபூர்வமான (ஸஹீஹ்) ஹதீஸ்கள் மட்டுமே திரட்டப் பட்டன.
இமாம் ஷாஃபிஈ அல்குர்ஆனுக்கு அடுத்த ஆதாரபூர்வமான நூல் முஅத்தா என்றார்கள்.
கலீபா மன்ஸுர்தான் இந்த நூலை இயற்றுமாறு வேண்டினார் என பல ராவிகள் அறிவிப்புச் செய்துள்ளனர்.
கலீபா மன்ஸுர் இவ்வாறு ஒரு நூலை இயற்றி அதனைப் பின்பற்றச் செய்வதன் மூலம் கருத்து வேறுபாடுகளையும் அதனால் தோன்றும் பிளவுகளையும் ஒழிக்க விரும்பினார்.
கலீபா மன்ஸுர் கூறியதாக இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார். ‘இதனை நான் ஒரே அறிவாக ஆக்க விரும்புகிறேன். கவர்னர்கள், படைத்தளபதிகள்,நீதிபதிகள் அனைவருக்கும் இது பற்றி அறிவிப்பேன். இதனையே அவர்கள் நடை முறைப்படுத்த வேண்டும். யாரும் கருத்து வேறுபாடுபட்டால் அவரைக் கொன்றுவிடுவேன்.’
அதற்கு இமாம் மாலிக் கூறிய பதில்: ‘இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இச்சமூகத்தில் வாழ்ந்தார்கள். அவர்களும் போராடச் சென்றார்கள். எனினும் அவர்களது காலப் பிரிவில் அதிகம் நாடுகள் வெற்றி கொள்ளப்படவில்லை. பின்னர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு பொறுப்பேற்றார்கள். அவர்கள் காலத்திலும் அதிகமான நாடுகள் வெற்றி கொள்ளப்படவில்லை. பின்னர் உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆட்சிக்கு வந்தார்கள். அவர்களது காலத்திலேயே நிறைய நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டன. அந்நிலையில் நபித் தோழர்களை அவ்வெல்லா நாடுகளுக்கும் ஆசிரியர்களாக அனுப்புவது தவிர வேறு வழி இருக்கவில்லை. அந்த ஒவ்வொரு ஸஹாபியிடமிருந்தும் பெற்ற அறிவு, வழிகாட்டல் அந்தந்த நாடுகளில் பரம்பரை பரம்பரையாக வருகிறது. நீர் இப்போது அவர்களை அவர்களது அறிவை விடுத்து அவர்களுக்கு தெரியாத அறிவின் பக்கம் திருப்ப முனைந்தால் அதனை அவர்கள் குப்ராகவே காண்பார். எனவே, ஒவ்வொரு நாட்டு மக்களும் நிலைத்து நிற்கும் அறிவை ஏற்றுக் கொள். இந்த அறிவை உனக்காக வைத்துக் கொள்.’
அப்பாஸிய கிலாபத்திலேயே கலீபா மஃமூனின் காலப்பிரிவு வந்தது. முஃதஸிலாக்கள் ஒரு வித்தியாசமான புதிய சிந்தனையைக் கொண்டு வந்தார்கள். அரச கொள்கையாகியது. மக்கள் மீதும் அறிஞர்கள் மீதும் அக் கொள்கையை அரச அதிகாரத்தின் மூலம் திணிக்க முயன்றார்கள். மிகப் பெரியதொரு குழப்ப நிலை தோன்றியது. முஸ்லிம் சமூகத்தில் பல இஸ்லாமிய அறிஞர்களும் சித்திரவதைக்குட்பட்டனர்.
ஆனால் இமாம் தன் சிந்தனையை அரச கொள்கையாக்க அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தும் முனையவில்லை. ஸஹாபாக்கள் நாடுகள் பலவற்றில் பரவிப் போனார்கள். அவர்கள் இறைத்தூதரிடமிருந்து பெற்ற அறிவு வித்தியாசமாக இருந்தது. அவர்களது சிந்தனைப் போக்கும் மனோநிலையும் வித்தியாசமாக இருந்தது.
அத்தோடு இஸ்லாம் அரபு தீபகற்பத்தை விட்டு வெளி யேபரந்து ஒரு நிலப்பரப்பில் பரந்து விட்டது. அப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்களும் வித்தியாசமாகவே இருந்தனர். இது ஒரு சிறியதொரு காலப்பிரிவு மாற்றமல்ல ஒன்று அல்லது ஒன்றரை நூற்றாண்டு காலவளர்ச்சி இது. இப்பின்னணியிலேயே இமாம் மாலிக் குறிப்பிட்டதொரு சிந்தனை அதிகார பூர்வமாக திணிக்கப்படுவதை மறுத்தார்கள். இது இமாமின் மக்கள் வாழ்வு பற்றிய ஆழ்ந்த அறிவைக்காட்டுகின்றது.
அதிகாரப் பூர்வமாக சிந்தனையை திணிக்க முனைந்த முஃதஸிலாக்கள் தோற்றுப் போனார்கள். வரலாற்றிலும் அவர்கள் செல்வாக்கு இழந்து காணாமல் போனார்கள். ஆனால் இமாம் மாலிகின் சட்ட சிந்தனையைப் பின்பற்றுபவர்கள் இன்று உலகெல்லாம் வாழ்கிறார்கள். இமாம் மாலிக்கின் நூலும் இன்று வரை வாழ்கிறது. அதிகாரத்தாலும் வன்முறையாலும் ஒரு சிந்தனையை வாழ வைக்க முடியாது.