சமகால அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல்
[ குர்ஆன் சுன்னாவின் பின்னணியிலிருந்து அறிவு மற்றும் சிந்தனை கட்டி எழுப்பப்படாமல் இருப்பதும், மனிதனின் சிந்தனையை வடிவமைப்பதில் பெரும் பங்களிப்பு செய்யும் பள்ளிக்கூடம், பல்கலைக் கழகங்களின் பாடத் திட்டங்கள் இஸ்லாமிய அறிவியல் கோட்பாட்டின் அடிப்படைகளில் வடிவமைக்கப்படாமல் இருப்பதும் பல சிக்கல்களை நவீன உலகில் தோற்றுவித்துள்ளன.
மதச் சார்பின்மை இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையைக் கூட ஆட்டங்காண வைத்தது. ஏனெனில் நவீன மேற்கத்திய அறிவும், அதன் வாழ்வொழுங்கும் மதச்சார்பின்மை – Secularism, சடவாதம் Meteriaism, தாராண்மைவாதம் Libaralism, ஆகிய இஸ்லாத்தின் கொள்கைகளோடு முற்றிலும் முரண்பட்டு மோதுகின்ற அடித்தளங்கள் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதன் விளைவாக மேற்குலகும் அதன் தாக்கத்துக்கு உட்பட்ட இஸ்லாமிய உலகும் பெரும்நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வந்தன.
இத்தகைய மேற்கத்திய செல்வாக்கை நீக்கி இஸ்லாமிய அடிப்படைகளை Islamic World View ஏற்படுத்தும் நோக்கோடு அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாமிய மயப்படுத்தல் என்ற கொள்கை பல்வேறு சொற்றொடர்களால் வழங்கப்படுகிறது.
அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் Islamization of Knowledge,
சமகால அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் – Islamization of Contemporary or Present day Knowledge,
நவீன கல்வியை இஸ்லாமிய மயப்படுத்தல் – Islamization of Modern Knowledge,
மனித அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் – Islamization of Human Knowledge,
சமகாலப்படுத்தல் – Relavantization
முதலான சொற்பிரயோகங்களால் இக்கொள்கை நவீன காலத்தில் அறிமுகமாகியுள்ளது. இத்தகைய சொற்பிரயோகங்களுக்கிடையில் மிக நுணுக்கமான வித்தியாசங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.]
சமகால அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல்
அஷ்ஷேக் எம்.ஜெ.எம். அரஃபாத் கரீம் (நளீமி)
முன்னுரிமையும் பின்னணியும்
சுருக்கம்
சமகால அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் என்ற கொள்கை என்பது முஸ்லிமின் சிந்தனையைப் பாதித்துள்ள சிக்கல்களிலிருந்து அவனை விடுவித்து, இஸ்லாமிய அடிப்படைகளால் அவனை வடிவமைப்பதற்குத் தேவையான வழிமுறையை உருவாக்குவதற்கான
செயல் திட்டமாக சமகால அறிஞர்களால் முன் வைக்கப்பட்டது. இஸ்லாமிய மயப்படுத்தல் இயக்கத்தின் முன் வரிசைப் போராளிகள், இக்கொள்கை சமகால உலகில் தோற்றம் பெறுவதற்கான நியாயங்கள், இந்த நிகழ்ச்சி நிரலின் வழியாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆராய்கிறது இக்கட்டுரை.
அறிமுகம்
அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் என்ற கோட்பாடு கடந்த மூன்று நூற்றாண்டுகளாக அதிக கவனயீர்ப்பை முஸ்லிம் அறிவு ஜீவிகள் மட்டத்தில் பெற்றுள்ளது. சமகால முஸ்லிம் உம்மாவும் பொதுவாக மனித இனமும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு சிறந்த தீர்வாக “இஸ்லாமிய மயப்படுத்தல்” என்ற கொள்கை பல்வேறு மட்டங்களால் முன் மொழியப்பட்டு வருகிறது.
இக்கோட்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு பல்வேறு நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டு சர்வதேச மட்டத்தில் பல்வேறு மாநாடுகள் நடத்தப்பட்டு, இஸ்லாமிய உலகின் சிந்தனையாளர்களால் பல அறிவுப் பங்களிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ‘அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல்’ என்ற நிகழ்ச்சி நிரலை சமகாலப் பிரச்சனைகளுக்கு தீர்வுத் திட்டமாக முன் வைத்தவர்களுள் பேராசிரியர் இஸ்மாயீல் ராஜி ஃபாரூகி(1) பேராசிரியர் நகீப் அல் அல் அத்தாஸ் (2) ஆகியோர் முன்னணி வகிக்கிறார்கள். இவ்விரு சிந்தனையாளர்களும் இக்கோட்பாட்டை மிகச் சரியாக உலகிற்கு முன் வைப்பதிலும் அதன் கருத்து, அவசியம், எல்லைகள், இலக்குகள் என அனைத்துப் பரிமாணங்களையும் தழுவியதாக, இக்கோட்பாட்டை சமூகத் தளத்தில் பேசுபொருளாக ஆக்குவதிலும் சமகால முஸ்லிம்களின் பிரச்சனைக்குத் தீர்வாக முன் வைப்பதிலும் பெரும் பங்காற்றினார்கள்.
பேராசிரியர் இஸ்மாயீல் ஃபாரூக்கி 1981 ஆம் ஆண்டில் இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம் (IIIT) யையும் பேராசிரியர் நகீப் அல் அத்தாஸ் 1987 இல் கோலாலம்பூரில் இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரீகம் என்பவற்றுக்கான சர்வதேச நிறுவனத்தை ISTAK யையும் தோற்றுவித்தார்கள். இவ்விரு அறிஞர்களின் சிந்தனை தாக்கத்துக்கு உட்பட்ட புத்தி ஜீவிகள் குழு ஒன்று சர்வதேச மட்டத்தில் தோன்றி அவர்களோடு இஸ்லாமிய மயப்படுத்தல் என்ற நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அறிவை இஸ்லாமிய மயப்படுத்தலுக்கான நியாயம்
‘அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல்’ என்ற கோட்பாடு தோன்றுவதற்கு பல்வேறு நியாயங்கள், காரணிகள் இருந்தன. அவற்றுள் பிரதானமான காரணங்களுள் ஒன்றாக முஸ்லிம் சமூகத்தின் கல்வி சார்ந்த பிரச்சனை அடையாளப்படுத்தப்படுகிறது. இன்று கல்விக் கொள்கை என்பது மதம் சார்ந்த கல்வி, மதம் சாராத கல்வி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது அறிவை இஸ்லாமிய மயப்படுத்த வேண்டும் என்பதற்கு பின்னாலுள்ள பிரதான நியாயமாகும்.
முஸ்லிம்களின் கல்வி தொடர்பாக 1977 ஆம் ஆண்டு மக்காவில் நடைபெற்ற முதலாவது உலக மாநாட்டைத் தொடர்ந்து (மக்கா உலக மாநாடு)(3) முஸ்லிம் உம்மத்தின் பிரதான பிரச்சனையாக அடையாளப்படுத்தப்பட்டது. சமகா உலகில் அறிவை இரட்டைத் தன்மையோடு கூறுபோட்டு பார்க்கும் நிலை தோன்றி, மதச் சார்பற்ற கொள்கையானது அறிவை தெய்வீகத்திலிருந்து வசதியாக விடுவித்து விட்ட அதேவேளை, இன்று தெய்வீக அறிவு பல்வேறு நிறுவனங்களில் வெறுமனே ஃபிக்ஹ், இபாதா மற்றும் உஸுலுத்தீன் என்ற எல்லைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட நிலை தோன்றியுள்ளது.(4)
இதன் விளைவாக அறிவு பற்றிய இஸ்லாத்தின் விரிந்த பார்வை சமகாலச் சூழலில் முழுமை பெறாத நிலையில் வேறு பல சிக்கல்களையும் சவல்களையும் முஸ்லிமின் சிந்தனையிலும், சமூக வாழ்விலும் ஏற்பட்டுள்ளது.
குர்ஆன் சுன்னாவின் பின்னணியிலிருந்து அறிவு மற்றும் சிந்தனை கட்டி எழுப்பப்படாமல் இருப்பதும், மனிதனின் சிந்தனையை வடிவமைப்பதில் பெரும் பங்களிப்பு செய்யும் பள்ளிக்கூடம், பல்கலைக் கழகங்களின் பாடத் திட்டங்கள் இஸ்லாமிய அறிவியல் கோட்பாட்டின் அடிப்படைகளில் வடிவமைக்கப்படாமல் இருப்பதும் பல சிக்கல்களை நவீன உலகில் தோற்றுவித்துள்ளன.
இந்தப் பின்னணியில் இத்தகைய இரட்டைத் தன்மை கொண்ட அறிவுப் பாரம்பர்யத்தை நீக்குவதற்குத் தேவையான வழிவகைகளை சிந்திக்கையில் நவீன இஸ்லாமிய அறிஞர்களான இஸ்மாயீல் ஃபாரூகி, நகீப் அத்தாஸ், அபூ சுலைமான், இமாதுத்தீன் கலீல், தாஹா ஜாபிர் அல்வானி, கமால் ஹஸன் போன்றோர் மனித அறிவை இஸ்லாமியப் படுத்துவதே சமகால உலகின் முதன்மைத் தேவை என்பதைக் கண்டறிந்தார்கள். அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் என்ற இயக்கத்தை தோற்றுவிப்பதில் வேறு காரணிகளும் செல்வாக்கு செலுத்துவதை நவீன வரலாற்றை நோக்குகையில் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் பின் வரும் காரணிகளையும் இத்துறையில் ஈடுபாடு காட்டும் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் :
1. மிக அதிகமான முஸ்லிம் நாடுகள் இரண்டாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து காலனித்துவவாதிகளின் அரசியல் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றன. முஸ்லிம் நாடுகள் அரசியல் ரீதியாக சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, முஸ்லிம் உலகின் அரசியல் பிரச்சனைகளுக்கான இஸ்லாமிய தீர்வுகளைத் தேட வேண்டிய நிலை உருவானது. இத்தகைய தனித்துவமிக்க இஸ்லாமிய அரசியல் தீர்வுகளை தூய மற்றும் பரந்துபட்ட இஸ்லாமிய தளத்திலிருந்து சிந்தித்து, தகுந்த தீர்வுத் திட்டங்களை வகுப்பதன் தேவை குறித்து சிந்தித்த போது அறிவை இஸ்லாமியப் படுத்துவதின் அவசியம் உணரப்பட்டது.(5) iiit LOGO
2. சோசலிஸ மற்றும் முதலாளித்துவ பொருளியல் கொள்கைகள் உலக முன்னேற்றத்துக்கு வழியமைக்காது என்பதை உலக அனுபவம் உணர்த்தியதைத் தொடர்ந்து, இஸ்லாமிய தீர்வுகளையும், மாற்றீடுகளையும் பற்றி சிந்தித்து இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து செயல்படுத்துவதன் அவசியம் குறித்து சிந்திக்க ஆரம்பித்த போது, அறிவை இஸ்லாமிய மயமாக்குதல் என்ற கொள்கை உலகின் கவனத்தை ஈர்த்தது.(6)
3. முஸ்லிம் உம்மா எதிர்கொள்ளும் உட்புற Internal மற்றும் வெளிப்புறக் External காரணிகளும் இக்கொள்கையின் தோற்றத்தை நவீன காலத்தில் ஏற்படுத்தியது. இஸ்மாயீல் ஃபாரூகி புறக் காரணிகளால் இத்தேவை உணரப்பட்டதையும், நகீப் அல் அத்தாஸ் அகக் காரணிகளால் இஸ்லாமிய மயப்படுத்தலின் தேவை உணரப்பட்டதையும் விளக்குகிறார்கள்.
இஸ்மாயீல் ஃபாரூகி 1982 ஆம் ஆண்டு மேற்கொண்ட இஸ்லாமிய மயப்படுத்தல் என்ற சிந்தனையை விரிவாக விளக்கும் “செயல் திட்டம்” என்ற தனது ஆக்கத்திலே – முஸ்லிம் உம்மத் சமகாலத்தில் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்சனையாக Malaise of Ummah – சிந்தனை சிக்கலை அடையாளப்படுத்துகிறார். முஸ்லிம் உம்மத் அரசியல் ரீதியாக பிரிந்து ஒற்றுமையிழந்து, இராணுவ ஆட்சிக்கு உட்பட்டிருக்கும் அதே வேளை, பொருளாதார ரீதியாக அபிவிருத்தியடையாமல் மேற்குலகைச் சார்ந்து, எண்ணெய் வளத்தை பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத பெரும் அறிவியல் பின்னடைவுக்கு உட்பட்டிருக்கிறது.
மார்க்க – கலாச்சார ரீதியாக மேற்குமயப்பட்டு, இஸ்லாம் மற்றும் அதன் கலாச்சார தனித்துவத்தை விட்டும் முஸ்லிம் சமூகம் வெகு தூரத்தில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய காரணிகளால் அரசியல், பொருளாதார, கலாச்சாரம் முதலான பகுதிகள் இஸ்லாமிய அடிப்படைகளால் ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும் என்ற கருத்தை புறக்காரணங்களாக ஃபாரூக்கி குறிப்பிடுகிறார்.(7)
அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவுக்கு பிரதான காரணம் அதன் உட்புறக் காரணிகளே என வரையறுக்கும் நகீப் அத்தாஸ், மிகவும் பிரதானமாக Las of Adab ஒழுக்க வீழ்ச்சியை அடையாளப்படுத்துகிறார். இங்கு ஒழுக்க வீழ்ச்சி என்பது உடல், அறிவு, ஆன்மா முதலானவை அவற்றுக்கான பணிகளை செய்யத் தறியதன் விளைவாக ஒரு முஸ்லிம் சமநிலைத் தன்மையை இழந்து உள்ளார்ந்த சிக்கலுக்குள் அவனது அறிவு தள்ளப்பட்டிருப்பதாகும்.(8)
எனவே இஸ்லாமிய மயப்படுத்தல் தொடர்பான ஃபாரூகி, அத்தாஸ் ஆகியோரது நிலைப்பாட்டினையும், அறிவு சார்ந்த மறுமலர்ச்சி ஒன்றின் அவசியம் பற்றி அவர்களிருவரும் முன்வைக்கும் கருத்துக்களையும் நோக்கும் போது, முஸ்லிமின் உள்ளத்தையும், சிந்தனையையும் மேற்கத்திய மதச்சார்பற்ற சிந்தனைகள் ஆக்கிரமித்திருப்பதையும் உடனடியாக மேற்குமயப்படுத்துவதிலிருந்து விடுதலை செய்து, இஸ்லாமிய ரீதியாக பண்படுத்தி, இஸ்லாமிய கருத்துக்களையும் எண்ணக்கருக்களையும் வழங்குவதை அடிப்படையாகக் கொண்ட செயல் திட்டமே இன்றுள்ள முதன்மைப் பணியாக அவர்கள் இனம் கண்டிருப்பதை காண முடிகிறது.
இஸ்லாமிய உம்மத் வேண்டி நிற்கும் சமகாலத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கோடு முன் வைக்கப்பட்ட ஒரு தீர்வுத் திட்டமாகத்தான் இஸ்லாமிய மயப்படுத்தல் என்ற கொள்கையை பார்க்க வேண்டியுள்ளது. இத்தகைய நியாயங்களின் பின்னணியில்தான் இஸ்லாமியமயப்படுத்தல் என்ற எண்ணக்கரு ஒரு கொள்கையாக தோற்றம் பெற்று, அறிவை இஸ்லாமியமயப்படுத்தல் என்ற இயக்கமாக செயல்பட்டு வருகிறது.
அறிவை இஸ்லாமியப் மயப்படுத்தலின் கருத்து
hiflu lஇஸ்லாமிய மயப்படுத்தல் இயக்கம் முஸ்லிம் உம்மாவை அதன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுப்பிவிட்டுள்ளது. முஸ்லிம் உம்மத் நீண்ட பல ஆண்டுகளாக மேற்கத்திய காலனித்துவத்துக்கு பணியாற்றி விட்டு, இப்போது தூய இஸ்லாமிய வாழ்வு நெறியைத் தேடி புதுப்பொலிவோடு பயணிக்க ஆரம்பித்துள்ளது. மேற்கத்திய காலனித்துவ செல்வாக்குக்கு உட்பட்டிருந்த காலப் பிரிவில், மதச் சார்பின்மை (Secular World view) ன் வழியாகவே முஸ்லிம் உம்மத் அதன் அறிவையும், வாழ்வியல் ஒழுங்கையும் கட்டியெழுப்பி இருந்தது.
மதச் சார்பின்மை இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையைக் கூட ஆட்டங்காண வைத்தது. ஏனெனில் நவீன மேற்கத்திய அறிவும், அதன் வாழ்வொழுங்கும் மதச்சார்பின்மை – Secularism, சடவாதம் Meteriaism, தாராண்மைவாதம் Libaralism, ஆகிய இஸ்லாத்தின் கொள்கைகளோடு முற்றிலும் முரண்பட்டு மோதுகின்ற அடித்தளங்கள் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.(9) அதன் விளைவாக மேற்குலகும் அதன் தாக்கத்துக்கு உட்பட்ட இஸ்லாமிய உலகும் பெரும்நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வந்தன.
இத்தகைய மேற்கத்திய செல்வாக்கை நீக்கி இஸ்லாமிய அடிப்படைகளை Islamic World View ஏற்படுத்தும் நோக்கோடு அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாமிய மயப்படுத்தல் என்ற கொள்கை பல்வேறு சொற்றொடர்களால் வழங்கப்படுகிறது.
அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் Islamization of Knowledge, சமகால அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் – Islamization of Contemporary or Present day Knowledge, நவீன கல்வியை இஸ்லாமிய மயப்படுத்தல் – Islamization of Modern Knowledge, மனித அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் – Islamization of Human Knowledge, சமகாலப்படுத்தல் – Relavantization முதலான சொற்பிரயோகங்களால் இக்கொள்கை நவீன காலத்தில் அறிமுகமாகியுள்ளது. இத்தகைய சொற்பிரயோகங்களுக்கிடையில் மிக நுணுக்கமான வித்தியாசங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1960 களில் நகீப் அத்தாஸ் இஸ்லாமிய மயப்படுத்தல் – Islamization என்ற சொற்பிரயோகத்தையும் அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் Islamization of Knowledje – என்பதை இஸ்மாயீல் ஃபாரூகி தனது ஆக்கங்களில் பயன்படுத்தி வந்திருப்பதோடு, மனித அறிவை அல்லது சமகால அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல், Islamization of human Knowledje என்பதை பேராசிரியர் கமால் ஹஸன்(10) அதிகமாகப் பயன்படுத்துவார்.
பல்வேறு சொற்பிரயோகங்கள் இஸ்லாமியமயப்படுத்தல் என்ற சிந்தனையை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டாலும் “சமகால அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல்” என்று குறிப்பிடுவது எல்லாவகையிலும் பொருத்தமானது எனக் கருதலாம். ஏனெனில் அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் எனும்போது பொதுவாக அனைத்து வகையான அறிவையும் குறிக்கும், வஹியுடைய அறிவும் அதனுள் உள்ளடக்கப்படும் என்பது போன்ற மயக்கங்கள் இருப்பதனால் சமகால அறிவு அல்லது மனித அறிவை இஸ்லாமிய மயப்படுத்துதல் என்று குறிப்பிடுவது பொருத்தமானதே. (11)
எனவேதான் இஸ்லாமிய மயப்படுத்தல் என்பதை விளக்கும் நகீப் அத்தாஸ் முஸ்லிமின் சிந்தனைக்குள் புகுந்திருக்கும் மேற்கத்திய செல்வாக்கை விடுத்து (Liberation Process – இஸ்லாமிய அடிப்படைகளை புகுத்துவதை Infusion Process இஸ்லாமிய மயப்படுத்துதலின் செயல் திட்டமாக விளக்குகிறார்.(12)
இந்த வகையில் முஸ்லிமின் சிந்தனையை ஆக்ரமித்துள்ள இஸ்லாத்துக்கு ஒவ்வாத கொள்கை கோட்பாடுகளை விட்டும் அவனது அறிவை விடுவித்து, இஸ்லாத்தின் தூய சிந்தனைகளை அவனில் விதைப்பதன் மூலம் இன்றைய முஸ்லிம் உலகு எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல்களுக்கு தீர்வு காண்பதே இஸ்லாமிய மயப்படுத்துதல் என்ற நிகழ்ச்சி நிரலின் இலக்காகும்.
முடிவுரை
மனித அறிவை இஸ்லாமிய மயப்படுத்துதல் அல்லது சமகால அறிவை இஸ்லாமிய மயப்படுத்துதல் என்ற நிகழ்ச்சி நிரல் முஸ்லிமின் சிந்தனை சிக்கலுக்கு தீர்வுத் திட்டமாக முன்வைக்கப்பட்ட போதிலும், வெறுமனே அறிவு, கல்வி சார்ந்த நிகழ்ச்சி நிரலோடு மாத்திரம் அக்கொள்கை குறுகியதாக இருக்க மாட்டாது. மாற்றமாக அதன் மையப் பிரச்சனையாக முஸ்லிமின் சிந்தனையிலுள்ள கோளாறுகளை இனம் கண்டு, அவற்றிற்கு இஸ்லாமியத் தீர்வுகளை முன்வைப்பதானது, வாழ்வின் ஏனைய சிக்கல்களுக்கும் தீர்வாக அமைகிறது.
மனித அறிவை இஸ்லாமிய மயப்படுத்தலுக்கான முறைகள், அதன் எல்லைகள், இலக்குகள் குறித்த ஆய்வுகளும் விரிவாக சமகால உலகில் இத்துறை சார்ந்தவர்களால் முன்வைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சி நிரல் ஏனைய இஸ்லாமிய ரீதியான பணிகள், எழுச்சித் திட்டங்கள் என்பவற்றை ஓரங்கட்டுவதாக இருக்க மாட்டாது. மாறாக சமகாலத்தில் மேற்கொள்ளப்படும் ஆக்கப்பூர்வமான இஸ்லாமிய எழுச்சிப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஒரு செயல் திட்டமாகவே இஸ்லாமிய மயப்படுத்தல் இயக்கம் செயல்படுகிறது.
அடிக்குறிப்பும் துணை நூல்களும்
1. பேராசிரியர் இஸ்மாயீல் ராஜி ஃபாரூகி (1921 – 1986) ஃபலஸ்தீனில் பிறந்தார். மேற்கத்திய தத்துவ ஞானத்தில் தன்னுடைய முதுகலைப் பட்டத்தை ஹார்வட் பல்கலைக் கழகத்திலும், அதே துறையில் கலாநிதிப் பட்டத்தை இந்தியானா பல்கலைக் கழகத்திலும் பெற்றார்.
2. பேராசிரியர் சைய்யித் முஹம்மத் அத்தாஸ் (1931) மலேசியாவைச் சேர்ந்த ஒரு தத்துவஞானி, அவர் தன்னுடைய கலாநிதிப் பட்டத்தை தத்துவத் துறையில் லண்டன் பல்கலைக் கழகத்தில் பெற்றுக் கொண்டார்.
3. டன்ஜுமா ஏ மைவாதா Islamization of Knowledje background and scope அமெரிக்க ஜெர்னல் ஆஃப் இஸ்லாமிக் சோசியல் சைன்ஸ், இதழ் 14. 1997
4. சைய்யத் முஹம்மத் நகிப் அத்தாஸ், Islam and secularism, பதிப்பகம் : இஸ்லாமிக் யூத் மூவ்மெண்ட் ஆஃப் மலேசியா, 1978, பக்கம் 127
5. முஹம்மது அஸ்லம் ஹனீபா A critical survey of Islamization of Knowledge IIUM பதிப்பு, 2009, பக்கம் 11
6. முஹம்மத் அஸ்லம் ஹனீஃபா, பக்கம் 12
7. இஸ்மாயீல் ஃபாரூகி Islamization of Knowledge, Genaral Principles and Work Plan, pag no 42
8. சைய்யத் முஹம்மத் நகிப் அத்தாஸ், Islam and secularism. Pag no, 130
9. அம்பர் ஹக் Muslim and Islamization in North America Problems and Prospects, அமானா பப்ளிகேஷன்ஸ், கோலாலம்பூர், 1999, பக்கம் – 51
10. பேராசிரியர் கமால் ஹஸன் (1942 பிறப்பு மலேசியன் கல்விமான். இஸ்லாமியப் பாடத்தில் கற்கைகளில் தன்னுடைய முதுமானி, கலாநிதிப் பட்டங்களை நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பெற்றுக் கொண்டார். இவர் இஸ்லாமிய கலைகளான தஃப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹ் முதலானவற்றை – இஸ்லாமியப்படுத்தல் என்பது குறிக்காது என்றும் அவற்றை சமகால தேவைகளுக்கு ஏற்ப முன்வைத்தல் Relavantization என்ற கொள்கை குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறார்.)
11. ரோஷ்னானி ஹாஷிம், இம்ரான் ருஷ்தி Islamization of Knowledge; A Comperative Gnalysis of the conception of Al Attas and Al –Faruqi” இண்டெலக்சுவல் டிஸ்கஸ், 8, (2000) பக்கம் – 20
12. அத்தாஸ், Islam and secularism. Pag no, 9
– அஷ்ஷேக் எம்.ஜெ.எம். அரஃபாத் கரீம் (நளீமி)
source: http://www.samooganeethi.org/