பொய்களே… பொய்களே…!
[ இறுக்கமான உடைகள் எப்போதும் உடல் மீதுள்ள அகங்காரம் கூட்டுபவை. அவை எப்போதும் ஒரு விறைப்புத் தன்மையோடு கூடிய அகங்கார மனோநிலையை கொடுக்கும். தளர்ந்த கூடிய மட்டும் தெளிவான எளிமையான உடைகள் மன ஓட்டத்தைச் சாந்தப்படுத்தும்.
உயிர் அல்லது ஆத்மா கொஞ்சம் மேலேறி வந்து திடப்பட்டு மனமாய் மாறி நின்று கட்டுக்களின்றி அலை பாய்ந்து முதலில் உடல்தான் தானென்று கற்பனைகள் கொள்ளத் தொடங்கியதன் அடுத்த நிலைதான் உடைதான் தானென்று நம்புவது. உடுத்தும் உடைக்கு ஏற்ப தன்னைப் பற்றிய உயர்வும் தாழ்வும் மனிதர்களுக்கு சட்டென்று வந்து விடுகிறது.
என்னுடைய உடை தொள தொளவென்றிருந்த ஒரு பைஜமா அதுவும் வெள்ளை நிறம். எனக்கு எந்த உறுத்தலையும் கொடுக்காமல் உடையென்ற ஒரு அகங்காரம் தொலைந்து மனம் என்ற நிலைக்கு ரிவர்ஸ் கியரில் போனது.
நன்றாக யோசித்து சொல்லுங்கள் உங்கள் வாழ்வில் ஏற்பட்டிருகும் எல்லா நிகழ்வுகளும் உங்களால் மட்டுமா நிகழ்ந்தது? உங்களின் செயலுக்குப் பின்னே எத்தனை புறக்காரணிகள் இருந்திருக்கின்றன என்று கணக்குகள் கூட்டிப் பார்த்திருக்கிறீர்களா?]
பொய்களே… பொய்களே…!
ஆர்ப்பரிக்கும் அலைகளும் பெயர்த்தெடுத்து தூக்கிச் செல்லும் காற்றும் சேர்ந்த ஆள் அரவமற்ற கடற்கரை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து பரந்த நீல வானம் 4 மணி சூரியனின் உபாயத்தில் பளிச்சென்று இல்லாத நீல நிறத்தை இருப்பதைப் போலவே காட்டிக் கொண்டு இருந்தது. இடை இடையே தவழ்ந்து செல்லும் வெள்ளை வெளேர் மேகங்கள் குறிக்கோளற்று நகர்ந்து கொண்டிருந்தன.
மனிதர்களற்ற ஒரு வெளியைத் தேடி தேடி காத்திருந்து வார இறுதிகளில் இப்படி என்னை தனித்திருத்திக் கொள்ளும் நேரங்கள் எல்லாம் நேரமற்றுதான் நகரும். வெறுமனே லயித்துப் போய் அலைகளை வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குள் இருந்த ஒரே பயம் யாரும் மனிதர்கள் வந்துவிடக் கூடாது. என்பதுதான். பரந்த கடல்வெளியில் என்னை தொலைத்து நான் கிடக்கும் பொழுதில் எண்ணத்தோடு மனிதர்கள் வந்து விடுவார்கள். அதிகப்பிரசங்கித் தனமாக ஏதாவது பேசுவார்கள்… வேண்டாம்.வேண்டாம்…..வேண்டவே வேண்டாம்!
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் உலகின் கலப்பெனக்கு வேண்டாம். உத்தமொருவரும் வேண்டாம், தீயவரொருவரும் வேண்டாம்.. இன்னும் சொல்லப் போனால் யாரும் எனக்கு வேண்டாம். சம்மணமிட்டு அமர்ந்தேன். அப்படி அமர என் உடை எனக்கு செளகரியமாய் உதவியது. உடையும், நடையும் உறவுகளும், உணவும் நமது உள் அமைதியை அவ்வப்போது கூட்டி குறைக்கும் காரணிகள்.
இறுக்கமான உடைகள் எப்போதும் உடல் மீதுள்ள அகங்காரம் கூட்டுபவை. அவை எப்போதும் ஒரு விறைப்புத் தன்மையோடு கூடிய அகங்கார மனோநிலையை கொடுக்கும். தளர்ந்த கூடிய மட்டும் தெளிவான எளிமையான உடைகள் மன ஓட்டத்தைச் சாந்தப்படுத்தும்.
உயிர் அல்லது ஆத்மா கொஞ்சம் மேலேறி வந்து திடப்பட்டு மனமாய் மாறி நின்று கட்டுக்களின்றி அலை பாய்ந்து முதலில் உடல்தான் தானென்று கற்பனைகள் கொள்ளத் தொடங்கியதன் அடுத்த நிலைதான் உடைதான் தானென்று நம்புவது. உடுத்தும் உடைக்கு ஏற்ப தன்னைப் பற்றிய உயர்வும் தாழ்வும் மனிதர்களுக்கு சட்டென்று வந்து விடுகிறது.
என்னுடைய உடை தொள தொளவென்றிருந்த ஒரு பைஜமா அதுவும் வெள்ளை நிறம். எனக்கு எந்த உறுத்தலையும் கொடுக்காமல் உடையென்ற ஒரு அகங்காரம் தொலைந்து மனம் என்ற நிலைக்கு ரிவர்ஸ் கியரில் போனது. மனம் என்ற ஒன்றினை குழி தோண்டி எனது தினசரி வேலைகக்ளுகு நடுவே அவ்வப்போது புதைக்கும் வழக்கம் எனக்கு இருக்கிறது. அந்த பழக்கம் மனதை வேகமா தள்ளிவிட்டு உள்ளுக்குள் இன்னும் வேகமாக செல்ல எனக்கு உதவியது.
நல்ல பாம்பின் விசத்தை தினசரி உடம்பில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து விட ஒரு கட்டத்தில் பாம்பு நம்மை தீண்டினாலே நம்மை அந்த விசம் ஒன்றும் செய்யாது. அதுபோலத்தான் பழக்கத்தின் படி எல்லா செயல்களையும் நம்மருகே வைத்துக் கொள்ளவும் முடியும் தீர்த்துக் கட்டி தூர எறியவும் முடியும். வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுதுகளின் இடையிடையே மனதை நிறுத்தி, நிறுத்தி, பயின்று, பயின்று மனமற்று இருப்பது எளிதாகவே எனக்கு கை கூடிப் போனது.
ஏன் மனமற்று இருக்கவேண்டும்? என்ற கேள்வி பல நேரம் எனக்கும் உதித்ததுண்டு. ஆரம்ப காலங்களில் இப்படிப்பட்ட கேள்விகளோடு நான் மல்லுக் கட்டி புத்தங்களில் விடை தேட முயன்று இயலாமல் ஆங்காங்கே கிடைத்த கருத்துக்களை உட்கொண்டு செரித்து கிடைத்த தெளிதலில் மனம் என்பது பற்றை வளர்த்து போலியான எல்லா நிகழ்வுகளையும் நிரந்தரமாய் நம்பவைக்கும் ஒரு சூட்சும இயந்திரம் என்பது விளங்கப்பட்டது. நான் தானே எல்லாமே செய்கிறேன்..அதெப்படி நான் செய்தேனென்று நம்பாமல் இருக்க முடியும் என்றுதனே கேட்கிறீர்கள்?
நன்றாக யோசித்து சொல்லுங்கள் உங்கள் வாழ்வில் ஏற்பட்டிருகும் எல்லா நிகழ்வுகளும் உங்களால் மட்டுமா நிகழ்ந்தது? உங்களின் செயலுக்குப் பின்னே எத்தனை புறக்காரணிகள் இருந்திருக்கின்றன என்று கணக்குகள் கூட்டிப் பார்த்திருக்கிறீர்களா?
ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் நாம் எதிர்பார்த்தே இல்லாத அளவிற்கு நமக்கு ஆயிரம் ஒத்தாசைகள் மறைமுகமாக நடந்திருக்கும்… நாம் கவனித்திருக்க மாட்டோம். செயலின் உச்சத்தில் போய் நின்று கொண்டு நான் செய்தேன்..!. நான் செய்தேன்…! என்று கொக்கரிப்போம்…நிஜத்தில் நானென்ற ஒன்றே கிடையாது என்றறியாமல்….
எப்போதும் நான்…நான் என்று வாழ்ந்து எல்லாவற்றிலும் இறுமாப்பு கொண்டிருக்கும் நம்மிடம் ஒரு நாள் எல்லாவற்றையும் வைத்து விட்டுப் போ என்று கேட்குமே மரணம்… அன்று என்ன செய்யப் போகிறோம் நண்பர்களே?
ஒவ்வொருவரும் மரணம் என்பது இப்போது எனக்கு வராது என்று வேண்டுமனால் நினைத்துக் கொள்ளுங்கள் ஆனால் அது உங்களுக்கு வெகு அருகிலேயேதான் நின்று கொண்டிருக்கிறது என்பதையும் மறக்க வேண்டாம்.
அப்படியானால் உங்களின் கூற்றுப்படி நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்க கூடாதா? என்ற கேள்வி ஒன்று மிச்சமாய் மனதிற்குள் இருந்து எட்டிப் பார்க்கிறதா? ம்ம்ம்ம்… எட்டிப்பார்த்துதான் ஆகவேண்டும்..திடமான மனம் இப்படி கேள்வி எழுப்பித்தான் ஆகும்.
தன்னுடைய விருந்தினராய் வந்திருந்த ஒரு துறவி கேளிக்கைகளும், விளையாட்டிலும் லயித்துப் போய் கிடந்ததை கண்ட அந்த நாட்டின் அரசன் அவர் துறவிதானா? என்று சந்தேகித்தான்…! சந்தேகித்ததோடு நிற்காமல் துறவியை அழைத்து கேட்டும் விட்டான்…! உடனே துறவி கூறினார், ‘மன்னா என்னுடன் வாரும்’ என்று அரசனை அழைத்துக் கொண்டு அந்த நாட்டின் எல்லை வரை சென்று எல்லையில் நின்று கொண்டு தன்னுடைய பட்டு ஆடை, அணிகலன்கள் எல்லாம் களைந்து விட்டு, ஒரு சிறு கோவணத்தோடு நாட்டு எல்லையை விட்டு நகர்ந்து அடுத்த நாட்டிற்குள் நின்று கொண்டு, ‘அரசே! என்னைப் போலவே எல்லாம் களைந்து விட்டு என்னோடு வாருங்கள்’ என்று அழைத்தான்.
மன்னன் மிரண்டு போனான்…! அவனால் செல்ல முடியவில்லை. காரணம் அவன் ஒரு அரசன் என்றே நம்பிக்கையை ஆழமாக விதைத்துப் போட்டு இருந்தது அவனது மனது. ஸ்தூல உடலால் நகர முடிந்தாலும் சூட்சும மனம் அவனை கட்டிப்போட்டு வைத்திருந்தது. அரசனாகவே உறங்கி, அரசனாகவே உண்டு, அரசனாகவே உடுத்தி, இது என் நாடு, நான் அரசன் என் சொத்து என்று ஏற்படுத்தி வைத்திருந்த கற்பிதங்கள் அவனை நகர விடவில்லை.
ஆனால் துறவி அந்த அரசனை விட அதிக அளவில் எல்லா சந்தோசத்தையும், அனுபவித்த போதும், பட்டாடைகள் உடுத்திய போதும், பெண்களோடு சல்லாபித்திருந்த போதும் எதுவும் எனதில்லை என்ற தெளிவினைக் கைக்கொண்டு மனமின்றி அனுபவித்தான்….! துறவியைப் பொறுத்த வரைக்கும் அவன் யாருமில்லை. மேலும் அவனுக்கு கிட்டிய எல்லாம் வாழ்வின் கூட்டு நிகழ்வில் கிட்டியது. எல்லாம் என்னால் விளைந்தது என்ற சிறு புத்தியை எப்போதோ கடந்து இருந்தான் அந்த துறவி…!
இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் அரசனைப் போல கற்பிதங்கள் கொண்டு வாழ்கிறீர்கள்? கற்பனையில் தன்னை யாரோ என்று கற்பித்துக் கொண்டு நான் யாராக்கும் என்று இறுமாப்பு கொண்டிருக்கிறீர்கள்? நாட்டின் எல்லையில் அந்த துறவி கேட்டது போல அந்திமத்தில் மரணுமுறும் தறுவாயில் மரணம் கேட்கும் கொடு எல்லாவற்றையும் என்று…? என்ன செய்யப் போகிறீர்கள்? முடியாதென்றால் முடியுமா? இல்லை என்றால் விடுமா?
‘இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது’
துறவியிடம் காலம் கணக்கு கேட்கும் போது…. சஞ்சலமில்லாமல் கொடுத்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துதானே விடுவார்? அவர் மனமற்றவர், அகங்காரம் தொலைத்தவர்….!
இதோ நான் மனம் தொலைக்கும் பயிற்சிக்காக மனிதர்களை விட்டு அலையடிக்கும் இந்த கடற்கரையில் ஒதுங்கியிருக்கிறேன்….! நானில்லை… எதுவும் என்னால் இயன்றதில்லை எல்லாம் ஒரு கூட்டு நிகழ்வு…! பித்து மனமே ஓடி ஒளி… ! மனம் சுருண்டு புத்தியை பார்த்தது…புத்தி மனதைப்பார்த்தது…கேள்விகளும் பதிலுமில்லை அங்கே நானே இல்லை….!
ஏய்… பரந்து விரிந்த நீலப் பொய்களே….
உமக்கு கடலென்றும் வானென்றும்
யாம் கற்பிதம் கொண்ட மூலப் பொய்களே
ஆழப் பொய்களே….ஞாலப் பொய்களே…
மெய்யென்ற பொய் கொண்டு…
நோக்கும் நான் யார்?
மெய்யில்லாத நீங்கள் யார்?
கண்களுக்குள் வானமும், கடலும் நுழைந்து கொள்ள மெல்ல சொருகிக் கொண்டிருந்தது அது. மூச்சு சீராக… எங்கோ இருந்தேன் ஆனால் இல்லாமல் இருந்தேன்..! மனமற்ற வெளியில் ஒரு மந்தைக் கூட்டதிலுள்ள ஆடாய் ஒரு நகர்தலோடு இலகுவாகிக் கிடந்தேன்… நிறங்கள் கடந்த குணங்கள் கடந்த பெருவெளி அது…! மனம் இல்லை அங்கே…! காலம் நின்று போயிருந்தது…
என் தேடலின் தூரங்கள் எல்லாம் புள்ளியில் சுருங்கிப் போயிருந்தது…! எப்போது கண்விழித்தேனோ அப்போது விழித்தேன்..உடலுக்குள் வந்து சுருண்டு கொண்டேன்…மீண்டும்….மெல்ல நடந்தேன்… மனம் மெலிதாய் துளிர்த்திருந்தது ஆனால் வலுவில்லமால் கிடந்தது….! நீலப் பொய்யும் ஆழப்பொய்யும்…கருமை நிறம் கொண்டிருந்தன…! அப்போதுதான் முளைத்த சில நட்சத்திரங்கள் பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டிருந்தன….!
ஒற்றை முறுக்கலில் என் இரு சக்கர வாகனம் சீறிப்பாய இடதில் திரும்பி நேராய் சென்று….வலப்பக்கம் திரும்பி….மெயின் ரோட்டில் என்னை இணைத்துக் கொண்டேன்….இரைச்சலான சென்னையின் வாழ்க்கை மீண்டும் என்னை ஸ்தூலப்படுத்த கடிகாரம் பார்த்தேன்..காலம் நகரத் தொடங்கியிருந்தது… இரவு மணி 8:30
“டேய் டாபரு…. வீட்ல சொல்லிகினு வந்துட்டியா… ஒழுங்கா போடா பேமானி….” என்று தலையிலிருக்கும் ஒன்றின் பெயர் சொல்லி யாரோ ஒரு ஆட்டோகாரன் யாரையோ திட்டியது என் காதில் விழுந்தது….
நான் வண்டியை விரட்டத் தொடங்கியிருந்தேன்…!
– தேவா. S
source: http://maruthupaandi.blogspot.in/2011/04/blog-post_16.html