அந்திமத்தின் விடியல்…!
[ என்னை அன்பு செய்யவே பிறந்தவள். உயிரில் நிறைந்தவள். என் கவிதைகளின் கரு. இறக்கும் வரை என்னை விட்டால் வேறெதுவும் தெரியாமல் இருந்து விட்டவள். எத்தனையோ பெண்களைக் நான் கடந்து வந்திருந்தாலும் அவையெல்லாம் எனக்கு முளைத்த கனவுச் சிறகுகள்… ஆனால் அவள் என் எதார்த்த உலகின் பாதங்களாய் என்னை ஏந்திச் சென்றிருக்கிறாள்.
சுற்றி இருந்த எல்லோரையும் காலம் மிச்சமில்லாமல் கொண்டு சென்ற போது அவ்வளவாக கலங்காத நான்… என் அவள் என்னை பிரிந்த அந்த கணத்தினை விவரிக்க வார்த்தைகளின்றி என் விழி நீராய் வடிக்கத்தான் முடியும். சந்தோசங்களை பகிர நிறைய பேர்கள் என்னோடு இருந்தபோது என் கஷ்டங்களை என்னோடு பங்கிட்டுக் கொண்டவளை எப்படி விட்டு விடும் இந்த மனது…?
முதுமை அழகானது… ஆழமானது! புரிதல் இருக்கும் பட்சத்தில் அது அற்புதமானது… ஆனால் எப்படி பார்த்தாலும் அந்திமம் கொடுமையானது. சூன்யத்தின் அடர்த்தி நம்மை சூழும் போது, உயிரோடு இருக்கும் போதே மனிதர்கள் நம்மை நிராகரித்து உலகத்திலிருந்து ஒதுக்கி ஒரு மூலையில் கிடத்தி விடும் போது பேச்சுத் துணைக்கு கூட ஆட்களின்றி வெறும் வாயை மென்றபடி வானத்தை வெறித்துப் பார்த்தபடி மூன்று வேளை உணவுக்கும் இயற்கை உபாதைகளைத் தீர்க்கவும்தான் இந்த உடம்பு என்று ஆகிப் போகும் போது… அது எப்படி இனிமையாகும்…?]
அந்திமத்தின் விடியல்…!
இன்னும் சற்று நேரத்தில் நான் மரணித்து விடக் கூடும். தளர்ந்து போன கால்கள் துவண்டு கிடந்தன, இடுப்பில் சுத்தமாய் திடமில்லை. கைகளில் சக்தியில்லை. பிராணனை மூளைக்குள் செலுத்தி, திசுக்களில் பரப்பி பிராணனின் பொலிவினை எப்போதும் என் விழிகள் பளபளப்பாய் காட்டியிருக்கின்றன….ஆனால் இதோ என் விழிகளிலும் ஜீவனில்லை இப்போது…
கடந்த ஒரு மாதமாய் விடிகிறது…..இருள்கிறது….விடிகிறது இருள்கிறது அவ்வளவே. நினைவுச் செல்களில் நான் சேர்த்து வைத்திருக்கும் கடந்த கால நினைவுகள் எல்லாம் மீண்டும் ஒரு முறை ஒரு புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுவதைப் போல புரட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
ஏதேதோ செய்தேன்…யார் யாரிடமோ சினேகம் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் என்னைச் சுற்றி நிறைய மனிதர்கள் இருந்தார்கள். ஒரு சினிமாப்படத்தின் காட்சிகளாய் எல்லாம் நடந்தன…. நகர்ந்தன. முதன் முறையாய் மெல்ல அடியெடுத்து வைத்து நான் நடை பழகிய என் குழந்தைப் பருவத்தில் நடப்பதும், ஓடுவதுமே எனக்கு மிக அதிகமான சந்தோசமாய் இருந்தது.
காலம் நகர, நகர சந்தோசம் என்பது வேறு வேறாக எனக்கு கற்பிக்கப்பட….வளர்ந்தேன் வாழ்ந்தேன்….! இதோ என் அந்திமத்தில் ஒரு கிழிந்த துணியாய் இந்த சுவற்றோரம் முடங்கிக் கிடக்கிறேன். முதுமை என்னைத் தொடத் தொட எனக்கான அங்கீகாரத்தை உலகம் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டது. பிள்ளைகளும், சுற்றங்களும், என்னை ஒய்வெடுக்கச் சொல்லியே வற்புறுத்தின. பேசும் வார்த்தைகளை எல்லாம் கேட்க யாரும் இல்லை….! வாய் திறக்கும் போதே அது அடைக்கப்பட்டது.
தனிமை என்னை சூழ்ந்தது. எனக்கென வாழ்க்கைத் துணையாய் வந்தவள் வழியிலேயே என்னை விட்டுச் சென்றுவிட்ட அன்று தனிமையோடு ஒரு சூன்யம் பேரமைதியாய் என்னில் படர்ந்தது. இப்போது எப்படி பால்யமும், பதின்மமும் இளமையும் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு பரபரப்பாய் இருக்கிறதோ…அதைவிட அதிகமான பரபரப்பில் நான் இருந்திருக்கிறேன்.
காதலை நெஞ்சுக்குள் உணர்வுகளாய் தேக்கிக் கொண்டு திமிர் கொண்டு திரிந்திருக்கிறேன். பிடித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டவுடன் அந்த திமிரின் அளவு இன்னும் ஏறிப்போனது. காதலும், காமமும் சேர்ந்து வாழ்க்கையின் பக்கங்களை சந்தோச வர்ணங்களால் தீட்டித் தீட்டி இன்னும் என் வாழ்க்கையை அழகாக்கியது. நான் அப்போதெல்லாம் அதிகம் பேசுவேன். ஒரு தொழில் ரீதியான எழுத்தாளன் இல்லையென்றாலும் ஏதோ அவ்வப்போது தோன்றும் உணர்வுகளை கொட்டி கிறுக்கியும் வைப்பேன்.
அதோ அந்தப் பரணில் கிடக்கும் பெட்டியில் தூசிகளுக்கும் குப்பைகளுக்கும் நடுவில் புதைந்து கிடக்கிறது நான் எழுதி கவிதைகளும் கட்டுரைகளும். பல முறை அதை குப்பையில் எரிந்து விட என் மருமகளும் மகனும் முடிவெடுத்தபோது ஒரு பிச்சைக்காரனாய் கெஞ்சி கெஞ்சி அவற்றை காப்பாற்றி வைத்திருக்கிறேன். நான் எப்படி எழுதினாலும் என் மனைவி ரசித்திருக்கிறாள். அவளின் நினைவுகளை எல்லாம் அவளின் மரணத்திற்குப் பிறகு என் கண்ணீரோடு சேர்த்து காகிதத்தில்தான் கரைத்திருக்கிறேன்.
இளமையில் உடலின் உள்ளே சுரக்கும் சுரப்பிகளின் வேகம் அதிகாயிருக்கும். பிராணனை அழகாக, அதிகமாக சுவாசிக்க எனக்குத் தெரியுமாதலால் நான் வேகமாக சிந்திக்கவும், பேசவும் செய்வேன். என்னைச் சுற்றி இருக்கும் நேசிப்புகளை எல்லாம் ரசித்திருக்கிறேன். எதிரிகளை எல்லாம் என்னை முதலில் அடிக்க விட்டிருக்கிறேன். அப்படி அடிக்க விடுவது எனக்கு வலிக்கட்டும் என்றுதான்….அப்படி வலித்தால்தான் என்னால் சரியாய் அவர்களுக்கு திருப்பிக் கொடுக்க முடியும். சில நேரம் மனிதர்கள் என் எதிரியாயும் பலநேரம் காலம் என் எதிரியாயும் இருந்திருக்கிறது…. வலிக்க வலிக்க வாங்கிக் கொண்டு வலிக்க வலிக்க கொடுக்கவும் செய்திருக்கிறேன்.
எல்லா நேரங்களிலும் தனிமை எனக்கு இளமையில் சந்தோசத்தை கொடுத்திருக்கிறது. அதனாலேயே தனிமையில் நான் இருந்து விடலாம் என்று நினைத்தது மிகப்பெரிய தவறு. இளமையில் தனிமை, அமைதி என்று தேடிய என்னால் முதுமையில் நிஜமான தனிமையையும் பேரமைதியையும்…. எதிர் கொள்ள முடியவில்லை. சுற்றி சுற்றி கோடிப் பேர் இருக்கையில் தனிமையைத் தேடுகிறேன் என்று கூறுவது ஒரு போலி வேசம். அதை நான் என் இளமையில் குறையில்லாமல் போட்டிருக்கிறேன்…!
நிராகரிப்பின் நிமிடங்களை யாருமற்ற தனிமைகள்… வலுக்கட்டாயமாக திணிக்கும் போது அது ஒரு மிகப் பெரிய வலி. என்னால் இயன்ற போது தியானம் செய்து பழகி இருக்கிறேன். இப்போது கண்களை மூடி தியானிக்கலாம் என்று யோசிக்கும் போது… இமைகளை ஒன்று சேர்த்து கண்களை மூடவே பயமாயிருக்கிறது.
இமைகள் இரண்டும் மூடும் போது அது மிகப்பெரிய பாராங்கல்லை எடுத்து விழிகளின் மீது வைத்தது போல கனக்கிறது. இதற்கு பயந்தே கண்களை நான் மூடுவதில்லை. யார் யாரோ என்னைப் பார்க்க வருகிறார்கள். உருவம் தெரிகிறது ஆனால் யாரென்று மூளையைத் தொட்டு நினைவுப்பகுதியைச் சரிபார்க்க முயலுகையில் வழுக்கி விழுந்து விடுகிறேன். அனேகமாய் என் நினைவுப்பகுதியிலிருக்கும் செல்க்கள் செத்துப் போயிருக்க வேண்டும் இல்லை செயலாற்ற முடியாமல் இருக்க வேண்டும்.
யாரையும் எனக்கு இப்போது தெரிவதில்லை. என் புத்திக்குள் இரண்டு பேரை மட்டுமே.. நான் நினைவு கொள்கிறேன். ஒன்று என் மனைவி…இன்னொன்று என் மகன். கட்டிப் பிடித்து, சீராட்டி பாரட்டி வாந்த வாழ்க்கை அல்லவா…? எப்படி மறக்கும்…?
ஒரு நாள் எனக்கு வேலை அயற்சியில் ஒரு கையும் காலும் வலிக்கிறது என்று சொல்லி விட்டு நான் நான் உறங்கி விட்டேன். நடு இரவில் யாரோ கால் அமுக்குவதைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது கண்கலங்கியபடி என் கால்களை என் மனைவி பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கும் நான் இதை செய்வது உண்டு ஆனால் நான் செய்கிறேன் என்ற ஒரு உணர்வினைத் தேக்கிய படி செய்யும் ஒரு பரோபாகரம் அது. அதற்கான அங்கீகாரத்தை தேடும் ஒரு மறைமுக முயற்சி எப்போதும் என்னிடம் இருக்கும்…
ஆனால் அவள் அப்படியல்ல…
என்னை அன்பு செய்யவே பிறந்தவள். உயிரில் நிறைந்தவள். என் கவிதைகளின் கரு. இறக்கும் வரை என்னை விட்டால் வேறெதுவும் தெரியாமல் இருந்து விட்டவள். எத்தனையோ பெண்களைக் நான் கடந்து வந்திருந்தாலும் அவையெல்லாம் எனக்கு முளைத்த கனவுச் சிறகுகள்…ஆனால் அவள் என் எதார்த்த உலகின் பாதங்களாய் என்னை ஏந்திச் சென்றிருக்கிறாள்.
சுற்றி இருந்த எல்லோரையும் காலம் மிச்சமில்லாமல் கொண்டு சென்ற போது அவ்வளவாக கலங்காத நான்… என் அவள் என்னை பிரிந்த அந்த கணத்தினை விவரிக்க வார்த்தைகளின்றி என் விழி நீராய் வடிக்கத்தான் முடியும். சந்தோசங்களை பகிர நிறைய பேர்கள் என்னோடு இருந்தபோது என் கஷ்டங்களை என்னோடு பங்கிட்டுக் கொண்டவளை எப்படி விட்டு விடும் இந்த மனது….?
முதுமை அழகானது…ஆழமானது! புரிதல் இருக்கும் பட்சத்தில் அது அற்புதமானது….. ஆனால் எப்படி பார்த்தாலும் அந்திமம் கொடுமையானது. சூன்யத்தின் அடர்த்தி நம்மை சூழும் போது, உயிரோடு இருக்கும் போதே மனிதர்கள் நம்மை நிராகரித்து உலகத்திலிருந்து ஒதுக்கி ஒரு மூலையில் கிடத்தி விடும் போது பேச்சுத் துணைக்கு கூட ஆட்களின்றி வெறும் வாயை மென்ற படி வானத்தை வெறித்துப் பார்த்தபடி மூன்று வேளை உணவுக்கும் இயற்கை உபாதைகளைத் தீர்க்கவும்தான் இந்த உடம்பு என்று ஆகிப் போகும் போது…. அது எப்படி இனிமையாகும்….?
ரசித்தலும், அனுபவித்தலும் அந்திமத்தில் சாத்தியப்படாமல் போய்விடுவதற்கு புரிதலில்லாத வாழ்க்கை காரணமாய் ஆகி விடுகிறது. மரணத்தின் பக்கத்தில் நின்று கொண்டு, அதாவது அடுத்த நகர்வு மரணம் என்று தெரிந்த பின் மனம் மரணத்தைத்தான் ஆராயுமே அன்றி… வாழ்க்கையை ரசிக்க முயலாது. நானும் மரணத்தை பால்யத்திலும், பருவத்திலும் ஆராய்ந்திருக்கிறேன் ஆனால் அதுவெல்லாம் யாருக்கோ நிகழுவதாய் மனம் கற்பனை செய்து கொண்டு தேடிப்பார்த்த நாடகங்கள்…
இதோ என் உயிரின் அடுத்த நகர்வு மரணம். அது இருளாய் இருக்குமா? ஒளியாய் இருக்குமா? மரணிக்கும் போது வலிக்குமா? என் உறவுகள் எல்லாம் அங்கிருக்குமா? எனக்கு தெரியவில்லை மனம் கனக்க தலை பாரமாக நடு நெஞ்சுக்கூட்டுக்குள் ஒரு கடுமையான வலி பரவியது.
பரணில் அழுக்குக் கட்டாய் நான் வாசித்த புத்தகங்களும்… எழுதிய கட்டுரைகளும், கவிதைகளும் என்னைப் பார்த்து சிரித்தன…கூடவே வாழ்க்கை முழுதும்…..ஒவ்வொரு சூழலிலும் நான் யார் தெரியுமா…? நான் யார் தெரியுமா…? என்று உரக்க கேட்டு சண்டையிட்டதும், பல நேரங்களில் மனதுக்குள் நான் யாரோ என்று நினைத்துக் கொண்டு இறுமாப்பாய் இருந்ததும் சட்டென்று புத்திக்குள் எட்டிப்பார்த்தன…
இதோ… வலியோடு, அழுக்குகளோடு, ஒரு குப்பைக்காகிதமாய், நாற்றத்தோடு, முடிகள் கொட்டி, பற்கள் விழுந்து விழித்திரைகளிள் ஒளியிழந்து, இடுப்பில் உரமின்றி வாய் கோணிப்போய் எச்சில் வடிய அதை துடைக்கும் திரணியுமற்று…. கடந்த காலத்தை எல்லாம் கனவு கண்டு கொண்டிருக்கும் ஒரு நாற்றப் பிண்டம் நான்….
மரணித்த கொஞ்ச நேரத்தில் பிணம் நான். நான் செய்த நன்மைகளையும் தீமைகளையும் பற்றி இந்த உலகம் பேசும். அப்படி பேசினால் எனக்கு என்ன? பேசாவிட்டால் எனக்கென்ன… ஒன்றுமில்லை….
இலக்கில்லா ஒரு பயணத்தில் நடுவில் நிறையவே இறுமாப்புடன் நடந்து கொண்டதும், மனிதர்களிடம் சண்டையிட்டதும், தலைக்கனங்கள் கொண்டதும், நிறைய பேரிடம் பேசாமல் இருந்ததும் நான் இழந்தவை அவ்வளவே…
வாழும் வரை எத்தனை பேரை நட்பு கொன்டோம், எவ்வளவு பேசி சிரித்தோம், எத்தனை பேரை சந்தோசப்படுத்தினோம்… இது மட்டுமே மிச்சம். அதுவும் வெற்று நினைவுகளான மிச்சம்…!
அடிவயிறு கலங்கியது… உள்ளுக்குள் ஒரு உஷ்ணம் பீறிட்டு… உடம்பு முழுதும் வலியாய்ப் பரவியது. நரம்புகள் இழுத்துக் கொள்ள இரத்த ஓட்டத்தின் வேகம் மெல்ல மெல்ல தடைப்பட… நுரையீரல் சுவாசிக்க திராணியற்று சுருங்க, இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைப்பட… மெதுவாய் அதன் துடிப்பினை நிறுத்த… புத்திக்கு பிராணன் கிடைக்காமல் மெல்ல மெல்ல ஒரு விளக்குகள் அணைவது போல மின்சாரம் அறுந்து விழ…. வாய் கோணிக் கொள்ள ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்று மனமாய் நின்று நான் பதற….
எதுவுமே தோன்றாமல்… என்ன செய்வது என்று தெரியாமல் உயிர் திகைத்து நிற்க… ஆயிரம் ஊசிகளை உடல் முழுதும் குத்தியது போன்ற ஒரு வேதனையில்… துடி துடித்து மேல் விட்டத்தை விழிகளாய் பார்த்தபடி… மெல்ல மெல்ல… நான் அடங்கிக் கொண்டிருந்தேன்…
– தேவா. S
source: http://maruthupaandi.blogspot.in/2012_02_01_archive.html