பாலியல் அடிமை என்பதுதான் பெண்ணின் அடையாளமா?
சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி கார்த்திகா, காதலிக்கவில்லை என்று தொடர்ந்து கேலிக்குள்ளாகி தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டிருக்கிறார். அவரைக் கேலி செய்தவர்கள் சக வயதில் உள்ள சக பள்ளி மாணவ, மாணவிகளுமே.
இந்தக் கேலிப் பேச்சுக் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கார்த்திகா புகார் தெரிவித்தும் அவர்கள் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தச் சம்பவத்தில் யார் குற்றவாளி என்று கேட்டு, நேரடி பதிலை பெறுவதைவிட இதன் சமூகப் பின்னணிகளை ஆராய்வது அவசியமெனத் தோன்றுகிறது.
ஒரு பெண்ணின் உருவம் எப்படி இருக்க வேண்டும்?
காய்கறிச் சந்தையில் போய் ‘நல்ல பழுத்த தக்காளியாப் பார்த்துக் கொடுங்க’ என்பதுபோல் ஒரு பெண்ணின் உருவம் இந்த உயரத்தில், இந்த எடையில், இந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்று இந்தச் சமூகம் வரையறை செய்கிறது.
கருப்பாக இருக்கக் கூடாது, உயரமாகவும் இருக்கக் கூடாது, குள்ளமாகவும் இருக்கக் கூடாது, குண்டாகவும் இருக்கக் கூடாது, ஒல்லியாகவும் இருக்கக் கூடாது என்று பெண்ணின் உருவத்தை செதுக்குகிறது சமூகம்.
தொன்மைகாலம் தொட்டே பருத்த, திரண்ட மார்பகங்களும், கொடி போன்ற இடையும் பெண்ணுக்கான உருவ இலக்கணங்களாகச் சொல்லப்பட்டு இலக்கியங்களும் சிற்பங்களும் வடிக்கப்பட்டிருக்கின்றன.
இவையெல்லாம் புலவர்கள், சிற்பிகளின் பாலியல் கற்பனைகளே தவிர, மனித உடலமைப்பின் படி சாத்தியமற்றவை. அறிவின் கண்ணோட்டத்தில் பார்த்தால் மார்பகங்கள் திரண்டு இருக்க முடியாது, தளர்வாகத்தான் இருக்கும். சென்ற நூற்றாண்டின் முற்பகுதி வரை, தோள் சேலை அணியாத பெண்களின் புகைப்படங்களைப் பார்த்தால் இதுபுரியும். மார்பகங்கள் தெரியும் அந்தப் பெண்களின் புகைப்படங்களில் விரசம் இருக்காது. கற்சிலைகளில் விரசம் இருக்கும். விரசம் ஏற்படுத்தத்தான் கற்சிலைகள் படைக்கப்பட்டன என்று பகுத்தறிகிற அறிவும் நமக்கில்லை.
எது விரசம்?
கற்பனையான உதாரணங்களைத் தேடும் ஆண்கள்!
ஆனால் நமது ஆண்மய சமூகம் காலம்காலமாக கற்பனையான உதாரணங்களைத்தான் பெண்களிடத்தில் திணிக்கிறது, தேடுகிறது. தொல் இலக்கியங்களின், சிற்பங்களில் நீட்சியாக இன்றைய வெகுஜென ஊடகங்களும் அதையே திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. குறிப்பாக சினிமாக்கள் போகப் பொருளாகவும் ஆணுக்கு சேவை செய்யும் பாலியல் அடிமைகளாகவும் பெண்களைத் தொடர்ந்து கட்டமைப்பதில் பெரும்பங்காற்றி வருகின்றன. ஆணின் பாலியல் இச்சைகளை தீர்ப்பதன் பொருட்டே ஒல்லி – குண்டு, ஆணுக்கேற்ற உயரம் என பெண்களின் உருவம் குறித்து சினிமாக்கள் மீண்டும் மீண்டும் பாடம் எடுக்கின்றன. ஒரு பெண் இந்த வயதில் பருவமடைய வேண்டும் என்பது தொடங்கி இந்த வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும், இந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாடம் எடுப்பது தொடர்கிறது.
நுகர்வு ஏற்படுத்தும் தாக்கம்
மிக அதிகமாக சினிமாவை நுகரும் நம் சமூகமும் சினிமா உருவாக்கிய பெண் குறித்த பொது பிம்பத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. நாயகனின் மனம் கவர்ந்த நாயகிபோல தாங்களும் மாறவேண்டிய நிர்ப்பந்தம் இன்றைய இளம் பெண்களுக்கு ஏற்படுகிறது. சினிமாவின் நீட்சியாக உள்ள இணையம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் இந்த பிம்பத்தின் அடிப்படையிலேயே பெண்ணை அணுகுகின்றன. சினிமா நடிகைகளுக்கு மட்டும்தான் வில்போன்ற திருத்தப்பட்ட புருவம் இருந்தது. இன்றைக்கு 10 வயது சிறுமியும் புருவம் திருத்திக் கொள்ள விரும்புகிறார். ஆண்களை ஈர்க்கிற விதமாக பெண்ணின் முகம் பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் வில்போன்று வளைந்த புருவத்தை பெண்கள் கொண்டிருக்க வேண்டும் என்கிற திணிப்பு குறித்து பெண்களும்கூட அறிவதில்லை. முகத்திலுள்ள பூனை முடியை நீக்குவதற்கும் முகத்தின் இயல்பில் இருக்கக்கூடிய மேடுபள்ளங்களும் மூடி மழுமழுமென முகம் பொலிவுறும் களிம்புகள் விற்கப்படுகின்றன. இத்தகைய பொருட்களின் உற்பத்தி என்பதே பெண்களை பாலியல் நுகர்வுக்கானவளாக மாற்றுவதற்கே என்பதை பெண்கள் உணரவேண்டும்.
மறுப்பதும் எதிர்ப்பதும் கேலிக்குரியது
சமூகமும் சமூகத்தை வடிவமைக்கும் ஊடகங்களும் முன்னிறுத்தும் ‘பெண்ணை’ மறுப்பது எதிர்ப்பது கேலிக்குரியதாகிறது. இதன் ஒரு உதாரண விளைவே பத்தாம் வகுப்பு மாணவி கார்த்திகாவின் தற்கொலைக்குக் காரணமான நிகழ்வும். காதலிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமும் உரிமையுமாகும். அதை ஏன் மற்ற மாணவிகள் கார்த்திகா மீது திணித்தார்கள்? உதாரணப் பெண்ணுக்குரிய குணங்களிடமிருந்து வேறுபட்டு நின்ற கார்த்திகாவை மனவுளைச்சலுக்கு ஆளாக்கியது இந்த மாணவிகளா? அல்லது இந்த மாணவிகளிடம் சமூகம் கட்டமைத்திருக்கும் பெண் பற்றிய பிம்பமா? பெண் பற்றிய கற்பனை பிம்பத்தை ஊடகங்கள் எப்போது மாற்றிக் கொள்ளும்?
நன்றி – நந்தினி – ippodhu.com
source: http://www.penniyam.com/2015/09/blog-post_8.html