சிரமம் இலகுபடுத்தலை வேண்டி நிற்கும்
இந்த விதியின் அடிப்படையில்தான் சிரமம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஷரீஅத் ஷருக்ஸத் என்ற சலுகைகளை முஃமீன்களுக்கு வழங்குகின்றது. இச்சலுகைகள் இஸ்லாம் மனிதனைச் சிரமப்படுத்த விரும்புவதில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
பிரயாணம் என்பது ஒரு சிரமமான காரியம் என இஸ்லாம் கருதுகின்றது. எனவே பிரயாணிக்கு பல விஷேட சலுகைகளை வழங்குகின்றது. உதாரணமாக ஐங்காலத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதற்கும் சேர்த்துத் தொழுவதற்கும் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றாமல் இருப்பதற்கும், நோன்பை விடுவதற்கும் பிரயாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நோயையும் இஸ்லாம் ஒரு சிரமமெனக் கொண்டு நோயாளிக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது. வுழூவுக்குப் பதிலாக தயம்மும் செய்வதற்கும், இருந்த நிலையில் அல்லது படுத்த நிலையில் அல்லது சைக்கினை மூலம் தொழுவதற்கும், கூட்டுத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை ஆகியவற்றை விடுவதற்கும் ரமழான் நோன்பை நோற்காதிருப்பதற்கும் இன்னும் பல விடயங்களுக்கும் இஸ்லாம் நோயாளிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பலவந்தப்படுத்தலையும் இஸ்லாம் ஒரு சிரமமாகக் கருதுகின்றது. எனவே ஒருவர் பலவந்தத்தின் காரணமாக ஒரு ஹராத்தைச் செய்தால் இஸ்லாம் அவரைக் குற்றவாளியாகக் கருதுவதில்லை. (இது தொடர்பான பிரத்தியேகமான ஒரு சட்டவிதி இருக்கின்றது. அவ்விதி பற்றி பின்னர் நோக்க முடியும்).
இஸ்லாமிய நோக்கில் மறதியும் ஒரு சிரமமாகும். மறதியாகச் செய்யும் தவறுகளை இஸ்லாம் பாவமாகக் கருதுவதில்லை. அவ்வாறே அறியாமை, நிர்ப்பந்தம் ஆகியவற்றின் காரணமாகச் செய்கின்ற குற்றங்களையும் இஸ்லாம் குற்றமாகக் கொள்வதில்லை.
பருவமடையாத சிறார்கள், சித்த சுவாதீனமற்றோர் ஆகியோருக்கும் சட்டங்களில் பல விதிவிலக்குகளும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அவர்களுக்குள்ள சில சிரமங்களைக் கவனத்திற் கொண்டு பல விஷேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இஸ்லாம், பிக்ஹு என்ற சட்டத்துறையில் மட்டுமன்றி தஃவாவைப் பொறுத்தவரையிலும் அது இலகுவான முறையிலும் நளினமாகவும் பண்பாடாகவும் மனிதருக்கு வெறுப்பேற்படாத வண்ணமும் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது.
யெமன் பிரதேசத்திற்கு தஃவாப் பணிக்காக முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு, அபூமூஸா அல்அஷ்அரி ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரையும் அனுப்பிய வேளையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை ஞாபகமூட்டினார்கள்:
இலகுபடுத்துங்கள். சிரமப்படுத்தாதீர்கள். ஆசையூட்டுங்கள், வெறுப்பூட்டாதீர்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
மற்றுமொரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் பின்வருமாறு தனது தோழர்களுக்குக் கூறினார்கள்:
நீங்கள் இலகுபடுத்துவோராக அனுப்பப்பட்டுள்ளீர்களே அன்றி சிரமப்படுத்துவோர்களாக அல்ல. (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
கடுமையான போக்குடையோரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “மார்க்கத்தில் கடுமையான போக்குடையோர் நாசமாகட்டும்” எனக்கூறி சபித்துள்ளார்கள். (நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்)
தஃவாவின் போது நளினமாகவும், தாராளத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி அல்குர்ஆன் நபியை விளித்து இப்படிக் கூறுகின்றது:
நபியே! நீர் (மனிதர்களை) நளினமாகவும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உமது இறைவனின் பால் அழைப்பீராக. மேலும் அவர்களுடன் தர்க்கிக்க நேரிட்டால் மிக அழகான முறையில் விவாதிப்பீராக. (அல்குர்ஆன் – அந்நஹ்ல் : 125)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரச்சாரத்தின் வெற்றிக்கு அவர்களின் நளினமான போக்கும் பண்பாடான அணுகுமுறையும் தான் காரணம் என்பதை அல்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
நபியே! அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் நளினமாக, இரக்கமாக நடந்து கொண்டீர். கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுள்ளவராகவும் நீர் இருந்திருப்பீரானால் உம்மை விட்டும் அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். (அல்குர்ஆன் – ஆலஇம்ரான்: 159)