“செந்நீரால் வளர்த்தப் பயிரை வெந்நீர் ஊற்றி சாய்த்தல் தகுமோ?”
மதிப்பிற்குரிய பேராசிரியர் ஜவாஹருல்லாஹ் அவர்களுக்கும்,
அன்பிற்குரிய தமீமுன் அன்சாரி அவர்களுக்கும்
தங்கள் இயக்கம் சாராத, எந்த இயக்கத்திலும் தற்பொழுதுவரை சேராத ஒரு சாதாரண சாமானியனின் கடிதம்.
கடந்த ஒருவார காலமாக சமூக வலைத்தளங்களில் உலாவிவரும் சீண்டல்கள், சீறல்கள், அவமதிப்புகள், எகத்தாளங்கள் இவை அனைத்தையும் படித்துப் பார்த்ததினால் வந்த விளைவுதான் இக்கடிதம்.
முதலில் பேராசிரியர் அவர்களுக்கு…
ஒரு இயக்கத்தை வளர்த்தெடுப்பது அத்துணை சுலபமானக் காரியமல்ல.தாங்கள் ம.ம.க.வை கட்டிக்காத்து வளர்த்து அதற்கு ஒரு நல்ல இடம் நம் சமுதாயத்தில் கிடைக்க அரும்பாடு பட்டமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்துனை அரும்பாடு பட்டு வளர்த்த தாங்கள், தங்களுடன் பணியாற்றும் மற்ற செயல்வீரர்களை அவர்களின் மனம்போன போக்கிற்கு செயல்பட அனுமதித்தது அவர்களின் தவறா…? அல்லது தங்களின் தவறா…? இதை ஏன் நான் கேட்க்கிறேன் என்றால் சமூக வலைத்தளங்களில் உங்களை வாழ்த்தியும் அன்சாரியை ஏசியும் எழுதியவர்களெல்லாம் “நாங்கள் மமக தலைமை அலுவலகம் செல்லும் போதெல்லாம் அங்கு பொதுச்செயலாளருக்கும், இணைச்செயலாளருக்கும் தனித்தனி அறைகள் இருக்கும் ஆனால் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருக்கும் நம் தலைவர் பேராசிரியர் அவர்களுக்கு ஒரு தனி அறையில்லை. அவர் மக்களோடு மக்களாகத்தான் அமர்வார் ” – என்று எழுதியிருந்தார்கள்.
இத்துனை தூரம் அவர்கள் தனிச்சையாக தலைமையின் அனுமதி இல்லாது எதேச்சாரியமாக வளரக் காரணம் அவர்களா…? அல்லது நீங்களா…?
கடந்த ஒரு வருடமாக அன்சாரியும், அவரைச் சார்ந்தவர்களும் ஊர் ஊராகச் சென்று தங்களுக்கு கீழ்படியும் நபர்களை மட்டுமே பொறுப்பாளர்களாக நியமித்தார்கள் கட்சிக்காக அரும்பாடு பட்டு அயராது உழைத்த ஏனையோர்களை ஓரம் கட்டினார்கள் என்றும் பலர் சொல்கிறார்கள்.இத்துணை தூரம் அவர்களை வளர்ந்ததற்கு காரணம் அவர்களா…? அல்லது நீங்களா…?
நம் தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு “மாட்டின் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது ” -எனக்கு அந்த பழமொழி தான் இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது.
எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு ம.ம.க. என்றால் பேராசிரியராகிய நீங்களும், பொதுச்செயலாளராக இருந்த தமீமுன் அன்சாரியும் மற்றும் த.மு.மு.க.வின் பேராசிரியர் ஹாஜா கனியும் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள். உங்கள் இயக்க நண்பர்களுக்கு வேண்டுமானால் அடுக்கடுக்காக வேறு வேறு நபர்களின் பெயர்கள் ஞாபகத்திற்கு வரலாம் ஆனால் எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு நினைவில் நிழலாடுவது நீங்கள் மூவரும்தான்.
கடைசியாக ...
கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்கள் கண்ட இந்திய யூனியன் முஸ்லிம்லீக் இப்படித்தான் சில விஷமிகளின் நாச வேலையால் இரண்டாக உடைக்கப்பட்டு இன்றுவரை பழைய நிலைமைக்கு திரும்ப முடியாமலிருக்கிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியாததல்ல.
எங்கே அந்த நிலைமைக்கு ம.ம.க வும் தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சம் எங்களைப் போன்றோருக்கு மிகவும் வருத்தத்தை உண்டாக்குகிறது.
மிக நன்றாக வளர்ச்சியடைந்துக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம் அதுவும் தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் இதுபோன்று துண்டாடப்படுவது மிகமிக வேதனையை அளிக்கிறது.
ஒரு தலைமைக்கு அழகு எல்லோரையும் அரவணைத்துச் செல்வதுதான்.அதற்கிணங்க கட்சிக்காக பாடுபட்டவர்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதனை மனம் பொறுத்து மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த முஸ்லீம்களின் எண்ணங்களை தங்களுக்கு கோரிக்கையாக வைக்கிறேன். ஆண்டவனின் நாட்டமிருந்தால் நீங்கள் மீண்டும் ஒருங்கிணைவீர்கள் என்ற நம்பிக்கையுடன் …
அடுத்து தம்பி அன்சாரி அவர்களுக்கு…
தங்களின் மனவேதனையை, தங்கள் கட்சிக்காக உழைத்த உழைப்பை- கண்டும், கேட்டும் இக்கடிதம் எழுதுகிறேன்.
ஒரு சாதாரண தொண்டனாக வாழ்க்கையைத் தொடங்கி தங்களின் அயராத உழைப்பாலும்,பேச்சுத் திறமையாலும் ஈர்க்கப்பட்டத் தலைமை தங்களுக்கு ஒவ்வொரு பதவியாகத் தந்து அதன் உச்சக்கட்டமாக கட்சியின் பொதுச்செயலாளராக வைத்து அழகு பார்த்தது.அந்த உயர் அந்தஸ்த்தை தங்களுக்கு வழங்கிய பேராசிரியர் ஜவாஹருல்லாஹ் அவர்களை தங்களின் தந்தைக்கு சமமாக கருதி போற்றுவதாக நீங்களே கூறியுள்ளீர்கள். அப்படிப்பட்ட தந்தைக்கு சமமான ஒருவருக்கு தாங்கள் கொடுக்கும் மரியாதைதான் நீங்கள் இப்பொழுது செய்துக்கொண்டிருக்கும் செயலா…?
ஒருதாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புக்களுக்கிடையிலேயே ஊடல்கள் வரும்பொழுது எங்கோ பிறந்து இயக்கத்திற்காக ஒன்று சேர்ந்தவர்களுக்கிடையே ஊடல் வருவதென்பது சர்வ சாதாரணம்.
ம.ம.க. என்ற கட்சியை நடத்துவதின் நோக்கமே நம் மக்களுக்கு நன்மை செய்வதற்கேயன்றி நமது விருப்பு வெறுப்புகளுக்காக அல்ல என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
தலைவர் ஒரு செயற்குழுவை கூட்டுகிறார் என்றால் அதில் கலந்துக் கொள்வதற்கு அப்படியென்ன தங்களுக்கு ஒரு வருத்தம். நான்தான் செயலாளர் நான் தான் செயற்குழுவை கூட்டுவேன் என்று அப்படியென்ன தங்களுக்கு ஒரு பிடிவாதம்?
தலைவரின் அனுமதியில்லாமல் ஒரு செயற்குழுவைக் கூட்டுவதென்பது தலைமைக்கு கட்டுப்படவில்லை என்றுதானே அர்த்தம்..?
ஒன்றைமட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் …
இதுவரை தமிழகத்தில் தனிகட்சி ஆரம்பித்தவர்களின் நிலையை.
உதாரணம்: சிவாஜிகணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், வைகோ, விஜயகாந்த், மூப்பனார்.இதில் ஜெயித்தவர்கள் மூப்பனாரும், விஜயகாந்தும் மாத்திரமே. விஜயகாந்திற்கு ரசிகர் பட்டாளம் இருந்தது, மூப்பனாருக்கு தேசிய செல்வாக்கு இருந்தது.
ஆனால் உங்களுக்கு….!!!
இறுதியாக மீண்டும் ஒருமுறை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்…
நம் மக்களுக்கு நீண்ட ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு நம்பிக்கையை விதைத்த இயக்கம் இது.
மிக நன்றாக வளர்ச்சியடைந்துக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம் அதுவும் தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் இதுபோன்று துண்டாடப்படுவது மிகமிக வேதனையை அளிக்கிறது.
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் மக்களுக்கு சேவை செய்யத்தான் இயக்கமே தவிர, நான் பெரியவன் நீ பெரியவன் என்று சண்டையிட அல்ல.
இப்போது உங்களை கொண்டாடுபவர்கள் தேர்தலை மைய்யப்படுத்தி பயன்படுத்திக் கொள்ளத்தானே தவிர வேறொன்றும் இல்லை.
தேர்தல் முடிந்தால் கறிவேப்பிலைதான் …..
யோசியுங்கள் நாட்கள் அதிகமில்லை…
பொதுநலம் வேண்டி,
கிளியனூர் ரகுமான் பஷீர்.