காவு வாங்கிய முக்காடு! சைக்கோ தனத்தின் வெளிப்பாடு!
உத்திர பிரதேஷத்தில் பரேலியில் சாப்பிடும் போது தலை முக்காடு நழுவியதை கவனிக்காததால் நான்கு வயது சிறுமி தன் தந்தையால் கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கண்டு அதிர்ந்தோம். ஆழ்ந்த அனுதாபங்களையும் வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கிறோம்.
ஹிஜாப் என்பதே அவசியப்படாத இடத்தில், கட்டாயமாக்கபடாத வயதில் அறியாமையும் வெறித்தனமும் நிறைந்த ஒரு மனித மிருகத்தால் நிகழ்ந்த இச்சம்பவம் உண்மையில் வேதனைக்குரியது.
ஹிஜாப் கோட்பாட்டில் இரு பகுதி உள்ளது. ஒன்று அகம் சார்ந்தது. பார்வை தாழ்த்துவது, தீய எண்ணங்களை தவிர்ப்பது, மானக்கேடான விஷயங்களை நாடாது இருப்பது இந்த பிரிவில் சேரும். மற்றொன்று புறம் சார்ந்தது. மொத்தமாக ஆடை சார்ந்த விஷயம். தளர்வான ஆடை அணிவது, தலையை மறைப்பது இதில் அடங்கும். அகமும் புறமும் சார்ந்த விஷயங்களின் சேர்க்கை தான் ஹிஜாப்.
சரி இந்த ஹிஜாப் எதற்கு? எப்போது? ஏன் பயன்படுத்த வேண்டுமென்பதை குர்ஆன் தெளிவாக விளக்கியுள்ளது. அந்நிய ஆண்களுக்கு அந்நிய பெண்ணின் உடலோ அழகோ மீது ஈர்ப்பும் ஆசையும் வந்துவிட கூடாது என்பதற்காகவும் தானும் பாதுகாக்கப்படவும் உதவுவது தான் ஹிஜாப்.
தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், மாமனார்கள், தம் புதல்வர்கள், தம் கணவர்களின் புதல்வர்கள், தம் சகோதரர்கள், தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், தங்கள் பெண்கள், தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் முன் ஹிஜாப் அணிய அவசியமில்லை. இதை குர்ஆன் தான் சொல்கிறது.
ஆக வீட்டார் முன் ஹிஜாப் இல்லாமல் ஒரு பெண் இருப்பதற்கு தடையேயில்லை இஸ்லாத்தில். அந்நிய ஆண் முன், தொழுகை -இங்கே மட்டும் ஹிஜாப் அவசியம்.
இதை புரியாத மக்கள், முக்காடு என்பதை தலையில் பெவிகால் போட்டு ஒட்டவேண்டிய ஆடை என்ற ரீதியில் கருதுகிறார்கள். பெண்களும் கூட கூடுதல் பேணுதலாக தூங்கும் போதும், உணவு உண்ணும் போதும், பாங்கு சொல்லும் போதும், எந்த விஷயத்தை செய்யும் போதும் துணியினை தலையில் சுற்றிக்கொள்கிறார்கள். இந்த கூடுதல் பேணுதல் பின்னாளில் மார்க்கமாக பார்க்கப்பட்டது. சில வீடுகளில் தலையில் துணியில்லை என்றால் தெய்வகுத்தம் போல் ‘தாம்தூம்’ என்று குதிப்பார்கள். இவர்களிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டுப்பாருங்கள்… குர் ஆனில் இப்படி செய்யச் சொல்லி கொடுக்கப்பட்டுள்ளதா என ஆதாரம் கேட்டுப்பாருங்கள்… ம்ஹூம்.. கிடைக்காது. இப்படியாக அறியாமையில் முக்காடு என்பது வீட்டிலும் தேவையேயில்லாமல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
உலகமே அறியாத 4 வயது சிறுமியை, ஹிஜாப் தேவைப்படாத அப்பாவியை, தானும் தன் மனைவியும் மட்டுமே இருக்கும் வீட்டில் சாப்பிடும் போது முக்காடு நழுவியதற்கு ஒருவன் கொலை செய்கிறான் எனில் ஒன்று இவன் எவ்வளவு சைக்கோவாக இருந்திருக்க வேண்டும்? அல்லது செய்தியை மிகைப்படுத்தி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். மார்க்கத்தை சரியாக விளங்கிக்கொள்ளாதவன் என்றே அவன் மீது முடிவுக்கு வரவேண்டியுள்ளது. என்னவாக இருந்த போதும் இச்செயல் இஸ்லாத்துடன் சற்றும் சம்மந்தமில்லாதது. அல்லாஹ்வே கட்டளையிடாத விஷயங்களில் தன் அதிகாரத்தை செலுத்துவது அபாயகரமானது. இதனை எந்த இஸ்லாமியனும் ஏற்கமுடியாது. பெண் குழந்தையின் மகத்துவத்தை இஸ்லாம் மிக அழகாக தெளிவுபடுத்தியுள்ளது.
யார் இரண்டு பெண் குழந்தைகளை பருவ வயதை அடையும் வரையில் பொறுப்பாக வளர்க்கின்றாரரோ அவர் நாளை மறுமையில் என்னுடன் இப்படி இருப்பார் என்று நபியவர்கள் தன்னுடைய கை விரல்களை இணைத்துக் காண்பித்தார்கள் – (முஸ்லிம் 2631, திர்மிதி 1837, அஹ்மத் 12089)
யாருக்கு மூன்று பெண் பிள்ளைகள் அல்லது மூன்று சகோதரிகள் அல்லது இரண்டு பெண் பிள்ளைகள் அல்லது இரண்டு சகோதரிகள் இருந்து அவர்களுடன் மிக நல்ல முறையில் நடப்பதுடன் அவர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்கின்றாரோ அவருக்கு சுவர்க்கம் இருக்கின்றது – திர்மிதி 1835
யார் இந்தப் பெண் குழந்தைகளால் ஓரளவுக்கேனும் சோதிக்கப்படுகின்றார்களளோ அவர்கள் அவருக்கும் நரகத்துக்குமிடையில் தடையாக இருப்பார்கள் – (புகாரி 1352) (ஒரு நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
இவ்வாறாக இஸ்லாம் பெண் குழந்தைகளின் மகத்துவத்தை போற்றியுள்ளதையும் கவனத்தில் அனைவரும் கொள்ளவேண்டும்.
இது ஒரு புறம் இருக்க,
மாட்டிறைச்சி வைத்திருந்ததால் ஹிந்துத்துவத்தீவிரவாதிகளால் அடித்தே கொல்லப்பட்டார் ஒரு பெரியவர். இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே இந்தியாவின் மீது காரி உமிழ, அந்த அவமானம் தாங்க முடியாதவர்கள் இந்த சம்பவத்தை வைத்து “இஸ்லாமியர்களின் லட்சணத்தை பாரீர்”ன்னு கூவ ஆரம்பிச்சிருக்காங்க . ஒரு பைத்தியம் இன்னொரு பைத்தியத்தை கை நீட்டும் கதை தான் இது!
அறியாமையின் விளைவால் நடந்த இச்சம்பவத்தினை எதிர்த்து அம்மிருகத்திற்கு தண்டனை பெற்றுதருவதை நோக்கமாக கொள்ளாமல் இதனை வேறுவித அரசியல்க்கு ஆட்படுத்த முயல்கின்றனர் சிலர். இன்னும் சிலரோ இதுதான் சந்தர்ப்பமென்று இஸ்லாத்தை தூற்றி வருகிறார்கள். சமூக ஆர்வலர் என்ற போர்வைக்குள் ஒளிந்துக்கொண்டுள்ள , பலமுறை முகத்திரை கிழிக்கப்பட்ட ஒரு நபர் முகநூலில் இந்த சம்பவத்தினை இவ்வாறாக தொடர்பு படுத்துகிறார் ” மாட்டுக்கறி போராட்டம் நடத்தியவர்கள் இந்த சிறுமிக்காக முக்காடு போராட்டம் நடத்துவார்களா?”. சகோதரர் மாட்டுக்கறி தின்னும் போராட்டத்தால் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். அதனால் தான் ஒட்டுமொத்தமாக இந்தியர்களை போராட்டத்திற்கு கூப்பிடாமல் தானும் அது பற்றி சிந்திக்காமல் மாட்டுக்கறி போராட்டம் நடத்தியவர்களை போராட்டம் செய்ய அழைக்கிறார். ஏன் சார்? பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?
முட்டாள்தனங்களுக்கெல்லாம் இஸ்லாமியர்கள் எப்போதும் துணைப் போவதில்லை. அந்த மிருகத்தை தண்டிப்பதிலும் எதிர்ப்பதிலும் முதல் குரல் எங்கள் குரலாகவே தான் இருக்கும். நடுநிலையை எங்களுக்கு கற்பிக்காதீர்கள்… அது ஏற்கனவே எங்களுக்கு குர்ஆன் மூலம் கடமையாக்கப்பட்டுள்ளது.
பெண் சிசு என்றால் அது கேவலமாக நடத்தும் நிலை இஸ்லாத்தில் இல்லை. ஏனென்றால் பெண்சிசுகொலையை 1400 வருடங்களுக்கு முன்பே தடை செய்த மார்க்கம் இஸ்லாம். கள்ளிப்பால் கொடுத்தும் நெற்பயிர் கொடுத்தும் பெண் சிசுக்கள் கொல்லப்பட்டு வந்த நிலை இன்றும் சில இடங்களில் தொடரவே செய்கிறது. அதனை சமூக அவலமாகவே தான் பார்க்கிறோமே அன்றி மதத்தின் கோட்பாடாக பார்க்கவில்லை. அதையே முஸ்லிம் பெயர் தாங்கிவிட்ட காரணத்தால் ஒரு கொடூரன் செய்தால் அதனை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்துவதா?
முஸ்லிம்களிடத்தில் மட்டுமா இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன? சமீபத்தில் பெற்ற பிள்ளையையே கொன்ற இந்தியவாழ் வெளிநாட்டு பெண் செய்தி அதிகமாக பரபரப்பாக பேசப்பட்டது. பிலிப்பைன்ஸில் ஒரு பெண் நாயைப்போல் தன் மகனை கயிற்றில் கட்டி நாய் உண்ணும் உணவை உண்ண வைத்து பேஸ்புக்கில் படம் பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். குடிகார தந்தையால் கொலை செய்யப்பட்டும் கற்பழிக்கபடும் சிறுமிகள் பற்றிய செய்திகள் வாரத்தில் ஒருமுறையேனும் வாசிக்க முடியவில்லை என்றால் ஆச்சர்யம் என்ற நிலையில் தான் இன்று நிலைமை இருக்கிறது. ஆருஷி கொலை வழக்கும் அறிவோம், இந்திராணி தன் மகளை கொலை செய்து மறைத்த விஷயமும் இப்போது பரபரப்பாய் பேசப்படுகிறது. இப்படி எத்தனையோ முஸ்லிம்களால் செய்யப்படாத குற்றங்களை பட்டியலிடலாம். ஆனால் அப்போதெல்லாம் பொங்காதவர்கள் முஸ்லிம் என்றதும் குற்றவாளியை விட்டுவிட்டு இஸ்லாத்தை குறை கூறிவருகிறார்கள். நான் விதிக்கும் கட்டுபாடுகளுக்கு மட்டுமே தான் நான் பொறுப்பாக முடியும். இல்லையா?
குழந்தைகளுக்கு எதிரான ஒவ்வொரு சம்பவமும் துரதிஷ்ட்டமே! ஆனால் இதற்கு ஓர் சமூகத்தின் கோட்பாட்டை பொறுப்பாக்க முயல்வது அறிவுடைமையாகாது. நடுநிலை பேணுவோம் மக்களே!! ஒவ்வொரு பெண்ணும் பாதுகாக்கப்பட வேண்டியவளே.. அதற்கு எதிராக இருக்கும் எந்த ஒரு செயலையும் ஒருமித்த குரலில் எதிர்ப்போம்.. தடுப்போம்.
உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்
source: http://www.islamiyapenmani.com/2015/10/blog-post_6.html