Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

காலிப் பானையும் கலீஃபாவும்!

Posted on October 8, 2015 by admin

காலிப் பானையும் கலீஃபாவும்!

இறையச்சமும் மறுமை நம்பிக்கையும் மனித மனங்களில் விதைக்கப் பட்டால் அது உலகில் எப்படிப்பட்ட அற்புத மாற்றங்களை உண்டாக்கும் எனபதை விளங்க உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.

அறியாமைக் காலத்தில் மக்கா வாசிகளோடு சேர்ந்து நபிகள் நாயகத்தையே கொல்லப் புறப்பட்டவர் உமர் அவர்கள். வழியில் அவர் செவியுற்ற திருக்குர்ஆன் வசனங்கள் அவரது வாழ்க்கையின் திசையை நேர் எதிராக மாற்றியது. அவருக்குள் படைத்த இறைவனைப் பற்றிய முறையான உணர்வும் மறுமை நம்பிக்கையும் நுழைந்தன. உடன் இஸ்லாத்தை ஏற்றார். தொடர்ந்து நபிகளாரின் ஆருயிர் தோழரானார். நபிகளாரின் மரணத்திற்குப் பின் அவரது இன்னொரு தோழரான அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அவரை அடுத்து உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் மக்களின் ஜனாதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவராகப் பதவியைத் தேடி அலையவில்லை. ஆனால் ஆட்சிப்பொறுப்பு அவரைத் தேடி வந்தது. இஸ்லாமிய வழக்கில் ஜனாதிபதிக்கு கலீஃபா என்று வழங்கப்படும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

நினைவில் கொள்க! “நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 3733)

‘நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளே, உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றியது பற்றி மறுமையில் இறைவனால் வினவப்படுவீர்கள்’ என்றல்லவா கற்பிக்கிறது இறை மார்க்கம்.! சாதாரணமான குடும்பப் பொறுப்புக்கே விசாரணை என்றிருக்கும்போது ஆட்சிப் பொறுப்பு என்றால் அலட்சியம் காட்ட முடியுமா? இறையச்சம் உள்ளவர்கள் பதவியில் அமர்ந்தால் நிம்மதியாக உறங்கமுடியுமா? ஆம், மக்களின் குறைகளை ஆராய்வதற்காக இரவுகளை ஊர் உலா செல்வதில் செலவிட்டார் கலீபா உமர் ரளியல்லாஹு அன்ஹு.

கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அஸ்லம் என்றொரு அடிமை இருந்தார். சில காலத்திற்குப் பிறகு அவருக்கு விடுதலை அளித்துவிட்டார் உமர். தனது இரா உலவுக்குத் துணைக்கு சில சந்தர்ப்பங்களில் இந்த அஸ்லமை துணைக்கு அழைத்துக் கொள்வார் உமர். ஒருநாள் இரவு உமரும் அஸ்லமும் உலா கிளம்பினார்கள்.

மதீனாவைச் சுற்றி கறுப்பு எரிமலைக் குன்றுகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிக்கு ஹர்ராஹ் (harrah) என்று பெயர். மதீனா நகரம் இந்த இரு ஹர்ராஹ்விற்கு மத்தியில் அமைந்துள்ளது. அந்த ஹர்ரத் வாகிம் (Harrat Waqim) எனும் பகுதிக்கு அன்றிரவு உமரும் அஸ்லமும் சென்றார்கள். அங்கு சரார் (Sarar) என்று ஒரு சிறு ஊர். மதீனாவிலிருந்து தோராயமாய் 5 கி.மீ. தொலைவிருக்கும். இந்த சராரை இருவரும் நெருங்கும்போது தொலைவில் நெருப்பு எரிவது தெரிந்தது. பிரகாசமான விளக்கொளி வசதிகள் எதுவும் இல்லாத காலமது. அதனாலேயே இரவில் நெருப்பு விளச்சம் மேலும் துல்லியமாய்க் கவனத்தை ஈர்த்தது.

அதைக் கண்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு, “ஓ அஸ்லம்! யாரோ பயணிகள் இந்த குளிர்மிக்க இரவில் அங்கு வந்து தங்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. வாருங்கள் சென்று பார்ப்போம்” என்றார்.

இருவரும் அங்கு விரைந்தார்கள். அருகில் நெருங்கினால், ஒரு பெண்ணும் அவளுடைய சிறு பிள்ளைகளும் அமர்ந்திருந்தனர். அருகில் மூட்டப்பட்ட அடுப்பின் மேல் ஒரு பானை இருந்தது. அவளுடைய குழந்தைகளோ அழுது கொண்டிருந்தனர்.

“அஸ்லாமு அலைக்கும், ஒளியின் மக்களே” என்றார் உமர் ரளியல்லாஹு அன்ஹு.

“வ அலைக்கும் ஸலாம்” என்று பதிலளித்தார் அந்தப் பெண்.

“நான் அருகே வரலாமா?” என்று உமர் கேட்க, “ஏதேனும் நல்லது செய்பவராய் இருந்தால் வரவும்; இல்லையெனில் எங்களைத் தொந்தரவு செய்யாமல் சென்று விடவும்,” என்று கறாராய் பதில் வந்தது.

அவர்களுக்கு அருகில் சென்றவர், “இங்கு என்ன நடக்கிறது?” என்று விசாரித்தார்.

“இரவும் இந்தக் குளிரும் எங்களை இங்குத் தங்க வைத்து விட்டன.”

“சரி. இந்தக் குழந்தைகளுக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி அழுகிறார்கள்.”

“அவர்களுக்குப் பசி.”

“அந்தப் பானையில் என்ன?” என்றார்.

“அதுவா, அதில் வெறும் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். சமையலாகிக் கொண்டிருக்கிறது என்று பிள்ளைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். களைப்பில் சிறிது நேரத்தில் உறங்கி விடுவார்கள்,” என்று அநதப் பெண் கூறியதைக் கேட்டு உமர் ஆச்சரியமடைய, அவர் அடுத்துக் கூறியது அதிர்ச்சியளித்தது.

“ஒருநாள் அல்லாஹ் எங்களுக்கும் உமருக்கும் மத்தியில் நீதியளிப்பான்!”

மக்கள் அனைவருக்கும் அக்காலத்தில் கலீஃபாவின் உருவம் அறிமுகமாய் இருந்ததில்லை. அதனால் தாம் பேசிக் கொண்டிருப்பது கலீஃபா உமரிடம் என்று அப்பெண்மணிக்குத் தெரியவில்லை.

“அல்லாஹ்வின் கருணை உங்கள் மேல் பொழிவதாக. உமருக்கு உங்களைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லையே” என்றார் உமர்.

“அதெப்படி? அவர்தானே மக்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு எங்கள் நிலையை அவர் அறிந்துகொள்ள இயலாவிடில் அவர் என்ன கலீஃபா?”

இதென்ன எதிர்பார்ப்பு? அளவிற்கு அதிகமான எதிர்பார்ப்பா இல்லையா? ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட வறுமையையும் பிரச்னையையும் ஓர் ஆட்சியாளர் தெரிந்து வைத்துக் கொள்ள முடியுமா என்ன? ஆனால் உமர் அந்தப் பெண்ணை கடிந்து கொள்ளவில்லை; அதட்டவில்லை; சமாதானம் சொல்லவில்லை; ‘சரிதான் போம்மா’ என்று உதாசீனப்படுத்தவில்லை. அஸ்லமை நோக்கித் திரும்பி இரண்டே வார்த்தை சொன்னார். “வா போகலாம்.”

ஓடினார்கள்! கலீஃபாவும் அவரது தோழரும் அந்த இருள்படிந்த இரவில் 5 கி.மீ. ஓடினார்கள்! எங்கே? கோதுமையும் இதர உணவுப் பொருட்களும் சேமித்து வைக்கும் அரசாங்கக் கிடங்கு ஒன்று இருந்தது. அந்தக் கிடங்கிற்கு ஓடினார்கள். ஒரு சாக்குப் பையில் கோதுமையையும் பதப்படுத்தப்பட்ட கொழுப்பையும் எடுத்துக் கொண்டார் உமர்.

“அஸ்லம் இங்கு வா! இதை என் தோளில் ஏற்று!”

“அமீருல் மூஃமினின்! அதை இங்குக் கொடுங்கள், நான் தூக்கி வருகிறேன்,” என்றார் அஸ்லம்.

கோபம் வந்துவிட்டது உமருக்கு. “ஏனய்யா? மறுமையில் நீயா வந்து என்னுடைய சுமையை சுமப்பாய்?” என்று அஸ்லத்தைக் கடுமையாய் அதட்ட மறுபேச்சு பேசாமல் அஸ்லம் மூட்டையைத் தூக்கி கலீஃபாவின் தோளில் வைத்தார். இப்பொழுது மீண்டும் 5 கி.மீ. தொலைவில் உள்ள சரார் நோக்கி ஓடினார் உமர். பின்னாலேயே மூச்சிரைக்க அஸ்லமும் ஓடினார்.

அந்தப் பயணிகள் தங்கியிருந்த இடத்தை அடைந்தவர், சுமையைத் தரையில் இறக்கி வைத்துவிட்டு, சிறிதளவு கோதுமையை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து, “இந்தாருங்கள் இதைப் புடைத்துக் கொடுங்கள், நான் சமைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு மண்டியிட்டுக் குனிந்து பானையின் கீழிருந்த அடுப்பு நெருப்பை ஊதி ஊதிப் பெரிதாக்க ஆரம்பித்துவிட்டார். எழும்பிய புகை அவரது தாடியின் ஊடே புகுந்து வெளிவருவதைப் பார்த்துக் கொண்டு நின்றார் அஸ்லம்.

பிறகு அந்தக் கோதுமையைச் சமைத்து, அந்தப் பெண்ணிடம் பானையை எடுத்துச் சென்று, “ஏதாவது பாத்திரம் எடுத்து வாருங்கள்,” என்றார்.

அந்தப் பெண் ஒரு பாத்திரத்தை எடுத்துவர, அதில் சமைத்ததைப் பரிமாறியவர், “நான் இதை பாத்திரத்தில் பரப்பி சூடு தணிய வைக்கிறேன்; தாங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டுங்கள்.”

அந்தச் சிறுவர்கள் உண்ண உண்ண, அவர்கள் வயிறு நிரம்பும் வரை அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு மீத உணவையும் மற்றவற்றையும் அவர்களுக்கு அளித்துவி்டடு உமர் எழ அஸ்லமும் எழுந்து கொண்டார். அப்பொழுது அந்தப் பெண், “அல்லாஹ் உங்களுக்கு நல்ல கைம்மாறு அளிப்பானாக. அந்த அமீருல் மூஃமினீனைவிட நீங்கள்தான் கலீஃபாவாய் இருப்பதற்கு மிகவும் பொருத்தமானவர்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

“நல்லது உரையுங்கள். அமீருல் மூஃமினீனிடம் நீங்கள் செல்ல நேர்ந்தால், அல்லாஹ் நாடினால் அங்கு என்னைக் காண்பீர்கள்” என்றார் உமரும்.

நடக்க ஆரம்பித்தார்கள் கலீஃபாவும் அஸ்லமும். சிறிது தொலைவு சென்று அவர்களை நோக்கித் திரும்பி அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றார் உமர். “இன்னும் என்ன?” என்று அஸ்லம் விசாரிக்க உமர் பதில் அளிக்கவில்லை. அங்கேயே அமர்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். பசி அடங்கிய சிறுவர்கள் கட்டிப்பிடித்து உருண்டு விளையாடி, பின்னர் உறங்கும் வரை பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு எழுந்து “எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்” என்று கூறியவர், “ஓ அஸ்லம்! பசி அந்தச் சிறுவர்களைத் தூங்க விடாமல் அழ வைத்துவிட்டது. அவர்கள் அமைதியடைந்து தூங்கும் வரை நான் கிளம்பிச் செல்ல விரும்பவில்லை. வாருங்கள் போகலாம்!”

இந்தச் சேவையை எப்படி வர்ணிப்பது? எத்தகைய இலவச மக்கள் உதவித் திட்டத்திற்குள் இதை வரையறுப்பது? உதவி என்ற பெயரில் தூக்கியெறியும் சில்லறைக்கெல்லாம் அரசாங்கமும் தலைவர்களும் செய்தித்தாள்களில் முழுப் பக்கத்திற்கு விளம்பரம் தேடும் இக்காலத்தில, மூட்டைத் தூக்கி, சமைத்து, பரிமாறி, சேவை செய்துவிட்டு தாம் யாரென்பதை சூசகமாய்க் கூடத் தெரிவிக்காமல் திரும்பும் தலைவரை என்ன சொல்லிப் புகழ்வது? நெஞ்சமும் சகலமும் இறை பக்தியில், இறை அச்சத்தில் மூழ்கி இறைவனுக்காக வாழ்ந்து இறைவனுக்காக சேவை புரிந்தவர் அவர்.

ஆம், அவர்தாம் உமர் ரளியல்லாஹு அன்ஹு

source: http://quranmalar.blogspot.in/2015/08/blog-post_18.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

50 − = 43

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb