இறைவா! எங்களுக்கு உதவி செய்!
பேரன்புக்குரிய சகோதர, சகோதரிகளே, ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உரித்தாகுக!
கடந்த 2 நாட்களாக மனிதநேய மக்கள் கட்சியில் நிலவிவரும் குழப்பங்களுக்கு யார் காரணம் என்பதை இறைவன் அறிவான், நிங்களும் அறிவீர்கள்.
செயற்குழுவில் பேசித்தீர்க்க வேண்டிய விவகாரங்களை பொதுச் செயலாளருக்கும், மமக நிர்வாகக் குழுவுக்கும் தெரியாமல்; சட்ட விரோதமாக; தாம்பரத்தில் பொதுக்குழு கூடும் என பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வும், அண்ணன் ரிபாயும் அறிவித்தது தான் குழப்பம் வெளியே தெரிய காரணமாக அமைந்தது.
அவர்களின் அவசர போக்கு காரணமாக கட்சியின் கண்ணியத்தை சந்தியில் போட்டு உடைத்து தலைகுனிய வைத்தார்கள்.
வேறு வழியில்லாமல், தலைமை நிர்வாக குழுவின் முடிவின் படி நேற்று மதியம் 12.45 மணிக்கு அதிகாரப்பூர்வ பொதுக்குழுவை நாங்கள் முறையாக அறிவித்தோம்.
உடனே பலரும் இருதரப்பையும் அணுகி இரண்டு பொதுகுழுவையும் கைவிட சொன்னார்கள். ஜமாத்தார்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் எங்களை தொடர்பு கொண்டு
சமாதானப்படுத்தினார்கள்.
அதே சமயம் சட்டவிரோதமாக, நீதிக்கு புறம்பாக பொதுக்குழுவை கூட்டியவர்கள் இறுமாப்பாக இருந்தார்கள்.
இதனிடையே துபையிலிருந்து அதிரை ஹாதி அவர்கள் எங்களை தொடர்புகொண்டு, நீங்கள் முதலில் முன்வந்து அல்லாவிற்காக பொதுக்குழுவை ரத்து செய்யுங்கள் என்றார்.
கூட்டமைப்பு தலைவர் அப்பல்லோ ஹனிபா, இந்திய தேசிய லீக் பொது செயலாளர் நிஜாமுதின், இந்திய தௌஹீத்ஜமாஅத் தலைவர் பாக்கர், சமூக ஆர்வலர் எஸ்.கே.எஸ் ஆகியோர் எங்களை முதலில் விட்டு கொடுக்கமாறு வற்புறுத்தினார்கள்.
நாங்கள் இன்று காலை 8.00 மணிக்கு நடந்த நிர்வாக குழுவில் கட்சியின் நலனை கருதி நமது பெருந்தன்மையை, நல்லெண்ணத்தை காட்டும் வகையில் நமது பொதுக்குழுவை ரத்து செய்ய முடிவு செய்தோம்.
இதனிடையே அண்ணன் திருமாவளவனும், அண்ணன் சீமானும் எங்களை அமைதிபடுத்தி சுமூகப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்கள்.
பொதுக்குழுவை ரத்து செய்த எங்களின் நல்லெண்ண முடிவை தொலைகாட்சியில் பார்த்து அனைவரும் எங்களை வாழ்த்தினர், பாராட்டினர். நீங்கள் “ஒருபடி உயர்ந்துவிட்டீர்கள்” என கூறினார்கள் . தமிழ்நாட்டை தாண்டியும் வெளிநாடுகளில் எங்களுக்கு ஆதரவும், வாழ்த்தும் குவிந்தது.
இந்நிலையில் இன்று மாலை பேராசிரியர் தரப்போடு நாங்கள் சந்திக்க வாய்ப்புள்ளது என்றும் கூறி, கட்சி பிளவுப்படக்கூடாது என்றும் பத்திரிக்கையாளர்களிடம் கூறினோம்.
தாம்பரம் சென்ற அண்ணன் திருமாவளவன், SKS அப்போலோ ஹனிபா ஆகியோர் எங்களின் நல்லெண்ணத்தையும்,விட்டுக் கொடுத்தலையும் அவர்களிடம் கூறியுள்ளனர் . அவர்கள் முயற்சி எடுபடவில்லை.
அங்கு பொதுக்குழு உறுப்பினர்களை மட்டுமே கூடுவதற்கு பதிலாக வேன், பஸ்களில் பொதுக்கூட்டம் போல பொதுக்குழுவுக்கு சம்மந்தமில்லாதவர்களை 90 சதவிதம் நிரப்பி இருந்த ரகசியம் யாருக்கும் தெரியாமல் போயிற்று.
இந்நிலையில் என்னையும், ஹாருன் ரஷீதையும் கட்சியை விட்டு நீக்குவதாக சட்டவிரோத பொதுகுழுவில் அறிவித்துள்ளார்கள். இது எங்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6 மாதமாக எங்கள் தலைமையில் கட்சி சுறுசுறுப்பாக செயல்பட்டதை ஜீரணிக்க முடியாத பொறாமைதான் இதற்கு முக்கிய காரணமாகும். இதற்கு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், சகோதரர் ஹைதர் அலி, ஜே.எஸ்.ரிபாயி ஆகியோர் தான் காரணம் என்பதை கூறத் தேவையில்லை. இறைவன் போதுமானவன்.
பொதுமக்களே! என் இளமை காலத்தையே சமுதாயத்திற்காக தியாகம் செய்த எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சமாதனத்திற்காக விட்டு கொடுத்தற்கு பரிசாக என் முதுகில் குத்தியுள்ளனர். படித்து முடித்து விட்டு சிங்கப்பூரில் குடியேறி நிம்மதியாக வாழ வேண்டும் என நினைத்தவன் நான். பிறகு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று கருதி,காசு, பணம், சம்பாதிக்காமல், குடும்பத்தை கவனிக்காமல் வாரத்திற்கு 5 நாட்கள் ஊர் ஊராக சுற்றி இயக்கம் வளர்த்துமக்கள் பணியாற்றிய எனக்கு பொதுகுழு என்ற பெயரில், பொறாமையை தீர்க்கும்விதமாக கட்சியை விட்டு நீக்கியுள்ளார்கள்.
சொந்த வாழ்க்கையில் இழப்பை ஏற்படுத்தி கொண்டு தியாகம் செய்த எங்களுக்கு ஏன் இந்த தண்டனை?
பேருந்து நிலையங்களில் படுத்துறங்கி, ரயிலிலேயே ஓய்வெடுத்துசாப்பாடு, தூக்கம் பற்றி கவலைபடாமல் ஊர், ஊராக சுற்றி கட்சியை வளர்த்தது குற்றமா?
தொண்டர்களோடு தோழமையாக பழகி கட்சியை வலுபடுத்தியது குற்றமா?
கட்சியில் எங்களுக்கு பெருகிய செல்வாக்கும், மக்கள் ஆதரவும்தானே அவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. எங்களை ஒழித்துகட்ட போட்ட சதியை இப்போது நிறைவேற்றியுள்ளார்கள். அற்ப குற்றசாட்டுகளை கூறி தங்கள் பதவிஆசைகளை பூர்த்தி செய்திருக்கிறார்கள். எங்கள் ரத்தத்தை உறிஞ்சிவிட்டு துரத்துகிறார்கள்.
நானும், ஹாரூனும் கட்சியில் சம்பளம் பெறாமல் முழு நேரமாக பணியாற்றியவர்கள். எங்களுக்கு வரும் அன்பளிப்புகளை நிராகரித்து அதை கட்சிக்கு கொடுத்தவர்கள். இப்படி நேர்மையாக பணியாற்றியதாலேயே வணிகம் செய்வதில் கவனம் செலுத்தமுடியாமல் சொந்த வாழ்க்கையில் நாள்தோறும் இழப்புகளை சந்திப்பவர்கள்.
எங்களுக்குகே இந்த அநீதியா? சமுதாயமே இது நியாயமா? தாய்கழக உறவுகளே… உங்களின் இரு பிள்ளைகளை பலிகொடுக்க சம்மதமா? மனிதநேய சொந்தங்களே… உங்களுக்காக இரவு, பகலாக உழைத்த எங்களுக்கு கிடைத்த பரிசை பார்த்தீர்களா? தமிழக மக்களே, தலைவர்களே… அநீதியை பாருங்கள்.
இறைவா நீயே எங்களின் பொறுப்பாளர். எங்கள் குமுறலை உன்னிடம் ஒப்படைக்கின்றோம், நீயே எங்களை வழிநடத்து.
கண்ணீருடன்…
எம்.தமீமுன் அன்சாரி
6.10.2015