‘முஅத்தின்’களின் பிரச்சனையை களைய முயற்சித்திருக்கிறோமா?
[ பாங்கு சொல்வதற்குள்ள நன்மையையும், முதல் சஃபில் நின்று தொழும் நன்மையையும் ஒருவர் அறிந்தால் அதை அடைய சீட்டு குலுக்கி போட்டு பெற முயற்சிப்பார்கள் என்ற ஹதீஸும்,
பாங்கு சொன்னவர் மறுமையில் கழுத்து நீண்டவராக வருவார் என்ற் ஹதீஸும்,
பாங்கு சொன்னவருக்காக அவர் பாங்கின் ஒலியைக் கேட்ட ஜீவராசிகள் எல்லாம் அவருக்காக வேண்டி, சாட்சி சொல்வார்கள் என்ற ஹதீஸும்,
பாங்கின் மகிமையை, அதை சொல்லும் “முஅத்தின்”களின் உயர்வை எடுத்துக் காட்டும் வகை அல்லவா?
அந்த அருமையான பணியை செய்யும், அந்த ஆத்மாக்களின் வாழ்வு சுபிட்சமாக உள்ளதா? இல்லை! இல்லை! இல்லவே இல்லை! ஏன்?
“முஅத்தின்” என்ற பெயரையே மோதினாராக்கி, களங்கப்படுத்தி விட்டோம்.]
‘முஅத்தின்’களின் பிரச்சனையை களைய முயற்சித்திருக்கிறோமா?
ஏக இறைவனைத் தொழ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தினால், கட்டப்பட்ட பள்ளி வாசல்கள். அந்தப் பள்ளியின் பெயர் மாநிலமெங்கும் பரவவேண்டும் என்ற ஆர்ப்பரிப்பில் ஆடம்பர வேலைப் பாடுகள். இந்தியாவின் எந்த மாநிலத்தில் எந்தக் கல் கிடைத்தாலும் – அதைக் கொண்டு தரைகள், தூண்கள் இத்யாதி இத்யாதிகள்!
“ஒரு காலம் வரும்போது, பள்ளி வாசல்களைக் கட்டி, பெருமைப்பட்டுக் கொள்வார்கள்” என்ற கருத்தில் உள்ள அண்ணல் நபிகளின் `பொன்மொழி இங்கு நினைவுகூர்தல் வேண்டும்.
இப்படி பார்த்து, பார்த்து,பள்ளி வாசல் கட்டியாயிற்று! ஐங்காலத் தொழுகையும் நடைபெறுகிறது. அனைத்தும் அமர்க்களமாய் நடைபெறும் சந்தோஷ தினங்கள் தான் என்றென்றும்! இறைவனை தியானிப்பதின் மகோன்னதம், அது மிக உயர்ந்த பாக்கியம் அல்லவா?
எல்லாவற்றையும் செய்து விட்டு, மிக முக்கிய, இஸ்லாத்தின் உன்னத பதவியான,தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தம சஹாபாக்கள் பார்த்த அந்த பணியை செய்யும் “இவர்களை” ஏனோ நம் மக்கள் மறந்து விட்டார்கள்.
ஆம்! கொடுமையான தண்டனையின் உச்சம் அது! சுடுமணல்! வெற்றுடம்பு,தீக்காயங்கள், சுடும் பாறை நெஞ்சின் மீது வைத்து, `ஏக இறைவனை மறு` என்று சொன்ன இறைநம்பிக்கை அற்ற அந்த மக்கத்து குரைஷிகளைப் பார்த்து “ஏகன் ஒருவனே! ஏகன் ஒருவனே! என்று முழங்கிய பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்த அந்தப் பணி அல்லவா? அது!
இரண்டு கண்களும் தெரியாது, சமுதாய அந்தஸ்து கிடையாது. ஆனால், ஈருலக தலைவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் – அந்த நல்ல மனிதரை உயரிய பணிக்கு நியமித்தார்கள். அவர்கள் தான் உம்மி மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு. அந்த இரு பெருந்தகைகளும் செய்த பணி “முஅத்தின்” தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் பெரிய பணி. இஸ்லாத்தின் மணி மகுடமாய் விளங்கும் அற்புத பணிஅல்லவா அது!
பாங்கு சொல்வதற்குள்ள நன்மையையும், முதல் ஸஃபில் நின்று தொழும் நன்மையையும் ஒருவர் அறிந்தால் அதை அடைய சீட்டு குலுக்கி போட்டு பெற முயற்சிப்பார்கள் என்ற ஹதீஸும், பாங்கு சொன்னவர் மறுமையில் கழுத்து நீண்டவராக வருவார் என்ற் ஹதீஸும், பாங்கு சொன்னவருக்காக அவர் பாங்கின் ஒலியைக் கேட்ட ஜீவராசிகள் எல்லாம் அவருக்காக வேண்டி, சாட்சி சொல்வார்கள் என்ற ஹதீஸும், பாங்கின் மகிமையை, அதை சொல்லும் “முஅத்தின்”களின் உயர்வை எடுத்துக் காட்டும் வகை அல்லவா?
அந்த அருமையான பணியை செய்யும், அந்த ஆத்மாக்களின் வாழ்வு சுபிட்சமாக உள்ளதா? இல்லை! இல்லை! இல்லவே இல்லை! ஏன்?
அந்த நல்ல பணியை செய்யும் அவர்களை நாம் எந்த இடத்தில வைத்திருக்கிறோம். நாம் அனைவரும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். நாம் அந்த உன்னத பணியை விளங்கவில்லை, அல்லது மறந்து விட்டோம்.
“முஅத்தின்” என்ற பெயரையே மோதினாராக்கி, களங்கப்படுத்தி விட்டோம். அவர்கள் பாங்கு மட்டும் சொல்லவில்லை. அதிகாலையில் எழுந்து, தன் அடிப்படை தேவைகளை முடித்து மழையோ, குளிரோ எதையும் பொருட்படுத்தாமல், பள்ளிவாசல் கதவு திறந்து லைட் போட்டு, ஹவுளில், கக்கூஸில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து கொண்டு விட்டு, பாங்கு சொல்லும் நேரம் வந்ததும் அந்த குறித்த நேரத்தில் பாங்கு சொல்ல வேண்டும்.
ஒவ்வொருவராக தொழவரும் நபர்களின் கண்ணுக்கு ஏனோ ஒன்று உதாரணமாக,தண்ணீர் தேங்கியிருப்பது குறையாகத் தெரியும் (குறைகள் மட்டும்தான் தெரியும்) அதற்கு அந்த பள்ளியின் மோதினாரைத்தான் ஒரு பிடிபிடிப்பார்கள். முத்தவல்லி, தொழவைக்கும், இமாம், நாற்காலிகளில் தொழும் நல்லவர்கள், ஏன் எல்லோரும் அந்த “முஅத்தினை” கேட்கவேண்டிய கேள்விகள் கேட்டு துளைத்தெடுப்பார்கள். நாம் அதை சரி செய்து, உதவலாமே என வருபவர் மிக மிக சிலரே.
தொழுகை முடிந்தவுடன், பள்ளி வாசலை சுத்தம் செய்தல், கழிவறைகளை கண்காணித்தல் இப்படியான சில வேலைகளில் நேரங்கள் நகரும்!
காலை, பகல், இரவு உணவுக்கு தனது அடுக்குச் சாப்பாட்டு செட்டைத் தூக்கிக் கொண்டு அன்றைய பொழுதிற்கு உணவளிக்கும் வீட்டிற்கு சென்று ,அலைந்து திரிய வேண்டும்.பள்ளிவாசலின் மின்விசிறியை ஜமாத் தொழுகை நேரம் முடிந்ததும் ஒரு குறிப்பிட்ட அவகாசத்தில் நிறுத்திவிடுவார்(பள்ளி ரூல்ஸ்), ஜமாத் தொழுகை முடிந்து லேட்டாக தொழவரும் நபர் தன்னிச்சையாக மின்விசிறியை போட்டுக் கொண்டு தொழுது விட்டதை யாரும் பார்த்துவிட்டால அதனை முத்தவல்லியிடம் சொல்லி இவருக்கு திட்டும் வாங்கிக் கொடுக்கும் ஒரு கூட்டமும் பள்ளியில் அமர்ந்துதான் இருக்கும்.
சொந்த் வீடு, மக்களை பார்க்க போதிய நேரம் ஒதுக்க இயலாது, லீவு கிடைப்பது இல்லை, சம்பளமும் சொல்லிக் கொள்ளும்படியாக பெரும்பாலான பள்ளிவாசல்களில் கிடையாது. இன்றையச் சூழல் விலைவாசியில் அந்த சம்பளத்தைக் கொண்டு 10 நாட்கள்கூட வாழ்க்கையையை ஓட்ட இயலாத சூழல். இன்னும், அவர்களுக்கு மன உளைச்சல்கள், காயங்கள், ஏச்சுப் பேச்சுகள் ஏராளம்.
மார்க்கத்தின் உயர்ந்த பணி செய்யும் அம்மக்களைப் பற்றி, நாம் சிந்தனை செய்தோமா? நம் அருகில் உள்ள் அப்பள்ளியின், முஅத்தின்களை அரவணைத்திருக்கிறோமா? இதுவரை இல்லை என்றாலும் பரவாயில்லை! இனியாவது, இன்ஷா அல்லாஹ், அந்த முஅத்தின்களின் தோள்களில் தோழமையுடன் கைபோட்டு, அவர்களின் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அணுகி, அவர்கள் பிள்ளைகளின் கல்வி மேம்பாடு போன்றவற்றில் அனுசரனையாக விளங்கி, அந்த உயர்ந்த பணி செய்யும் அவர்களுக்கு தோள் கொடுப்போம். ஏனெனினில் அவர்கள் நீண்ட கழுத்துடன் மறுமையில் (தனி அந்தஸ்துடன்) வருவார்கள்! எல்லா ஜீவராசிகளும் அவர்களுக்காக சாட்சி சொல்லும்!
நாம்?!
(‘முஅத்தின்’களின் இப்பிரச்சனையை நாம் எவ்வாறு களைய வேண்டும்? அவர்களின் சம்பள உயர்வுக்கு என்ன செய்ய வேண்டும்?போன்ற கருத்துக்கள் பரிமாறி, அதை எப்படி முன்னெடுப்பது? என்பதைப்பற்றி எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா…?!
source: http://adirainirubar.blogspot.com/2015/08/blog-post_31.html#