முஸ்லிம்களே அல்லாஹ்வின் கடும் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்!
அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களே, சகோதரிகளே நமது ஈமானின்-இறைநம்பிக்கையின் எதார்த்த நிலையை மீள் பரிசோதனைச் செய்யும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
இன்று உலகளாவிய அளவில் முஸ்லிம்கள் கடும் துன்பத்திற்கும், கஷ்ட நஷ்டத்திற்கு, பெரும் உயிரிழப்பிற்கும் ஆளாகி வருகிறோம். இன்றைய முஸ்லிம்களின் வாழ்க்கை நரக வாழ்க்கையை நினைவு படுத்துவதாக இருக்கிறது.
நம் தாய் நாடான இந்தியாவில் மட்டும் முஸ்லிம்கள் இத்துத்வா வெறியர்களால் கொடுமைப் படுத்தப்படவில்லை உலகளாவிய அளவில் அனைத்து நாடுகளிலும் முஸ்லிம்கள் பல வகைகளில் பெரும் கொடுமைக்கும், கடுந்துன்பத்திற்கும் ஆளாகி வருகிறார்கள். ஏன்? முஸ்லிம் நாடுகளில் கூட முஸ்லிம்களே ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் கோர நிகழ்ச்சிகள் தொடர் கதையாக அரங்கேறி வருகின்றன.
போதாக்குறைக்கு அல்லாஹ்வும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது தனது கோபப் பார்வையை இறக்க ஆரம்பித்திருக்கிறான். இன்று முஸ்லிம்கள் அந்தளவு அல்லாஹ்வின் கட்டளைகளை நிராகரித்துவிட்டு மனோ இச்சைக்கு வசப்பட்டு தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களை தங்களின் வழிகாட்டிகளாக ஏற்று கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இம்மை, மறுமை வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
குர்ஆன் கூறும் முன் சென்ற நபிமார்களின் சமுதாயத்தினர், அவர்களிடையே வந்த நபிமார்கள் இறைவன் புறத்திலிருந்து வஹி மூலம் பெற்ற நேர்வழிச் செய்திகளை புறக்கணித்துவிட்டு, நிராகரித்து விட்டு, அவர்கள் முழு நம்பிக்கை வைத்திருந்த தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களின் வழிகேட்டுப் போதனைகளை ஏற்று நடந்த காரணத்தால், அவர்கள் இவ்வுலகிலேயே கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். நாளை மறுமையிலும் மிகமிகக் கடுமையான நரக வேதனை அவர்களுக்காகக் காத்திருக்கிறது. இந்த உண்மைகளை குர்ஆனில் சுமார் 25 நபிமார்களின் சமுதாயங்களின் இழி நிலையை அல்லாஹ் விவரித்துள்ளான்.
மேலும் அவர்கள் எப்படிப்பட்ட தண்டனைகளுக்கு ஆளானார்கள் என்பதையும் விவரித்துள்ளான். 29:69 இறைவாக்குக் கூறுவது போல் பெரும் ஜிஹாதாக பொறுமையோடு நிதானமாக அந்த நபிமார்களின் சரித்திரத்தை நேரடியாகப் படித்து அறிகிறவர்களின் ஈமான் உறுதிப்படும்.
அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு எவ்வித மறுப்பும் இல்லாமல், அவற்றிற்கு சில மதகுருமார்கள் கொடுக்கும் சுய விளக்கம், மேல் விளக்கம் எதையும் ஏற்காமல் குர்ஆனின் முஹ்க்கமாத் வசனங்கள் கூறும் கருத்துக்களை உள்ளது உள்ளபடி எடுத்து நடக்க முன்வருவார்கள். குர்ஆனைப் புறக்கணித்து (பார்க்க 25:30, 12:106) இவர்கள் பின்னால் செல்பவர்கள், இங்கும் கடும் வேதனைகளை அனுபவிப்பதோடு, நாளை கொடும் நரகில் புக நேரிடும்.
இந்த உண்மைகளை அஷ்ஷிஅரா: 26 அத்தியாயம் மற்றும் அல்கஸஸ் 28ம் அத்தியாயம் இவற்றைக் கவனமாக நேரடியாகச் சுய சிந்தனையுடன் படித்து அறிகிறவர்கள் நிச்சயம் அறிய முடியும்.
இன்றும் அதே அடிப்படையில் இறுதி உம்மத்தான முஸ்லிம் சமுதாயமும் 25:30 இறைவாக்குக் கூறுவது போல் இறுதி இறைநூல் அல்குர்ஆனை முற்றிலும் புறக்கணித்துவிட்டு அல்லாஹ்வின் விரோதிகளான தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களின் கற்பனைக் கட்டுக் கதைகளை வேதவாக்காகக் கொண்டு செயல்படுவதைப் பார்க்க முடிகிறது.
12:106 இறைவாக்குக் கூறுவது போல் முஸ்லிம் சமுதாயத்தினரில் மிகப் பெரும்பான்மையினர் தங்களுக்கும் தங்களின் எஜமானனான, தங்களைப் படைத்த ஏகன் அல்லாஹ்வுக்கும் இடையில் இவர்களைப் புகுத்தி அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் பெரும் குற்றத்தையே செய்து வருகின்றனர்.
9:31 குர்ஆன் வசனம் இதைத் தெளிவாக நேரடியாகச் சொல்லியும் இவர்களும், அவர்கள் பின்னால் செல்லும் முகல்லிதுகளும் அதை உணரத் தயாரில்லை.
மேற்கண்ட இரு அத்தியாய வசனங்கள் 277+88 =365 அனைத்தையும் பொறுமையாக நடு நிலையுடன் படித்து உணர்கிறவர்கள் அன்று இறைவனின் கடுங்கோபத்திற்கு ஆளாகி இவ்வுலகிலேயே கொடூரமான தண்டனைக்கு ஆளாகியவர்கள் எப்படி இறைவழிகாட்டலை நிராகரித்து, நபிமார்கள் போதித்த இறைவழிகாட் டல்களை துச்சமாக எண்ணித் தூக்கி எறிந்தார்களோ, இறைச் செய்திகளை வெறுத்தார்களோ அதே நிலையில்தான் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தினர்களில் மிகப் பெரும்பான்மையினர் இருக்கின்றனர்.
47:24 குர்ஆன் வசனம் கூறுவது போல் குர்ஆனை ஆராய்ந்து பார்க்காமல் தங்கள் உள்ளங்களுக்குப் பூட்டுப் போட்டுக் கொண்டுள்ளனர். குர்ஆன் வசனங்கள் அவர்களுக்கு மீண்டும், மீண்டும் படித்துக்காட்டப்பட்டால் 17:41, 45-47,89, 22:72, 25:60, 39:45 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் அவர்கள் வெறுப்பையே காட்டுகின்றனர். குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டுபவர்களை தங்களின் பரம எதிரிகளாக எண்ணுகின்றனர். அந்தோ பரிதாபம்!
ஆம்! குர்ஆன் வசனங்கள் இன்றைய பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு எட்டிக் காயாகக் கசக்கிறது. அதற்கு மாறாக 39:45 குர்ஆன் வசனம் கூறுவது போல், அல்லாஹ்வுடைய வசனங்கள் மட்டும் கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் சுருங்கி விடுகின்றன. மனிதர்களின் கட்டுக் கதைகள், கப்சாக்கள் கூறப்பட்டால் அவர்கள் மகிழ்வுற்று அவற்றை ஏற்றுக் கொள்கிறார்கள்.
இன்றைய மிகமிகப் பெரும்பான்மை முஸ்லிம்கள் 25:30 குர்ஆன் வசனம் கூறுவது போல் குர் ஆனை முற்றிலுமாகப் புறக்கணித்தே செயல்படுகின்றனர். அதனால் அல்லாஹ்வின் மிகக் கடுமையான கோபத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
ஆம்! இன்றைய முஸ்லிம்கள் குர்ஆன் 10:36 வசனம் கூறுவது போல் குர்ஆனைப் புறக்கணித்து வெறும் யூகங்களையே பின்பற்றுகின்றனர். 4:140, 6:68, 18:54, 22:8,40:35 வசனங்கள் கூறுவது போல் எவ்வித ஆதாரமுமின்றி மார்க்கத்தில் வீண் தர்க்கம் செய்வதில் குறியாக இருக்கின்றனர். 3:117, 10:44 வசனங்கள் கூறுவது போல் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொள்கின்றனர்.
2:95,195, 3:182, 4:62, 8:51,28:47, 30:36,41, 42:30,48, 59:2 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் முஸ்லிம்கள் இன்று தங்கள் கைகளால் தேடிக் கொண்ட துன்பங்களையே அனுபவித்து வருகிறார்கள். இதற்காக முஸ்லிம் அல்லாதவர்களையும் குற்றப்படுத்த முடியாது. படைத்த அல்லாஹ் வையும் குற்றப்படுத்த முடியாது.
முஸ்லிம்கள் தங்கள் தவறை உணர்ந்து தங்க ளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் நம்மைப் போக்கி விட்டு இந்த இடத்தில் பிரிதொரு சமுதாயத்தைக் கொண்டு வருவதில் அல்லாஹ்வுக்கு எவ்விதச் சிரமமும் இல்லை. அதற்காக அவன் வருந்தப் போவதுமில்லை. பெரும் நட்டம் இன்றைய முஸ்லிம் சமுதாயத்திற்குத்தான். இவ்வுலகிலும் பெரும் துன்பம், துயரம், மீளா வேதனைகள், நாளை மறுமையிலும் நிரந்தர நரகம். காரணம் மதகுருமார்களையும், கழக, இயக்க, ஜமாஅத், பிரிவுத் தலைவர்களையும் நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்வது தான்.
மார்க்க அடிப்படையில் இஸ்லாத்தில் பிரிவுகளுக்கு அணுவளவும் அனுமதி இல்லவே இல்லை. மறுமை வெற்றிக்காக, சுவர்க்கம் செல்ல செய்யப் படும் எப்படிப்பட்ட உயர் செயலை செய்தாலும் அப்படிப்பட்டவர்கள் தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் (மினல் முஸ்லிமீன்) என்று மட்டுமே சொல்லிக் கொள்ள மட்டுமே அல்லாஹ் அனுமதி தந்துள்ளான். (பார்க்க : 41:33)
முஸ்லிம்களிலிருந்துத் தங்களைப் பிரித்துக் காட்டத் தனித்தனிப் பெயர்களைக் கற்பனை செய்து சூட்டிக் கொள்பவர்கள் மிகப் பயங்கரமான பெரும் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14, 12:108, 6:153 இறை வசனங்கள் நேரடியாகப் படித்து விளங்குபவர்கள் நிச்சயம் ஏற்பார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் நடைமுறையிலிருந்த குறைஷ், முஹாஜிர், அன்சாரி, இன்னும் பல கோத்திரப் பெயர்களை ஆதாரமாகக்காட்டி தங்கள் பிரிவுப் பெயர்களை நியாயப்படுத்து கின்றனர். இக்குலப் பெயர்கள் பற்றி அல்லாஹ் 49:13 குர்ஆன் வசனத்தில் “”மனிதர்களே! நிச்சய மாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். பின்னர் நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்ஸ.” என்று நேரடியாகத் தெளிவாகக் கூறியுள்ளான்.
ஆக இப்படிப்பட்ட இவ்வுலகில் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள குல, கோத்திர, இனப் பெயர்களால் அழைக்கப்படுவதை மார்க்கம் அனுமதிக்கிறது. இப்படிப்பட்டப் பெயர்களையுடையவர்கள் யாரும் நாங்கள்தான் நேர்வழி நடப்பவர்கள். சுவர்க்கத்து ஜமாஅத் என்று பெருமைப்படுவதில்லை. இப்படிப்பட்ட, இப்படிப்பட்ட நற்செயல்களைச் செய்து வருகிறோம் என விளம்பரப்படுத்துவதில்லை. பெருமைப்பட்டுக் கொள்வதில்லை. இவர்கள் ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தைப் பிளவு படுத்துவதுமில்லை.
ஆனால் இன்று இவர்கள் சுயமாகக் கற்பனை செய்து சூட்டிக் கொண்டு, விளம்பரப்படுத்திக் கொண்டு பெருமைப்படும் அனைத்துப் பிரிவுப் பெயர்களை நியாயப்படுத்துகிறவர்கள் ஒன்று பட்ட ஒரே சமுதாயத்தை எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி பல பிரிவுகளாக்கி உலகியல் ஆதாயங்களைத் தேட முற்படுபவர்களே. பேர், புகழ், தலைமைப் பதவி இவற்றை விரும்புகிறவர்களே!