மலக்குகள் எழுதும் பாஷை எது?
[ ஆலிம் என்றால் என்ன நினைச்சே? கல்வி உயர உயர அவர்கள் தாழ்வார்கள். தாழ்மையோடு இருப்பதற்குத்தான் அவர்களிடத்தில் ஏழ்மையும் சேர்ந்துள்ளது.
ஓதிக்கொடுத்தவர்களெல்லாம் கையொப்பமிட்டு உலகறிய வழங்குவது தான் ஸனது என்னும் பட்டயம் – டிப்ளோமா, மவ்லவி என்னும் முன்னுரை. மதரஸாவின் பெயர் பின்னுரை.
பாகவி என்றால் வேலூர்,
மன்பஈ என்றால் லால்பேட்டை,
மிஸ்பாஹி என்றால் நீடூர்,
மஸ்லஹி என்றால் தூத்துக்குடி,
அன்வரி என்றால் திருச்சி,
ரஷாதி என்பது ஈரோடு.
வெளியாகிறபோது கொடுக்கிற ஸனதைப் பெற்று வருகிறார்களே அவர்கள் தான் ஆலிம்.]
மலக்குகள் எழுதும் பாஷை எது?
எம்மிடத்தில் ஒருவர் கேட்டார்: “ஆலிம் என்றால் என்ன?”
“தெரியாதப்பா!” என்றோம்.
“என்ன நீங்க? அஃப்ஸலுல் உலமாங்கிறீங்க! இது கூடத் தெரியாது…?” என்றார்.
“ஏதோ தெரியாத்தனமா தந்துட்டாங்க, நாமும் வாங்கிக்கிட்டோம். இவ்வளவு வில்லங்கம் இருக்குமென்று தெரிந்தால் கண்டிப்பாக ஓதி இருக்க மாட்டோம்” என்றோம்.
நான் சொன்னேன்: “ஆலிம் என்றால் அறிந்தவன்.”
“ஆஹா என்ன அருமையான விளக்கம். அப்போ எதை அறிந்திருந்தாலும் அவர் அறிஞரு, அப்படியா?”
“சரி நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன், சொல்லுங்க… ‘படித்தவர் என்றால் என்ன?”
“படித்தவர் என்றால்…” உதட்டை ஒரு தட்டு தட்டிவிட்டு, “ம்ம்.. படித்தவர் என்றால் படித்தவர் தான்” என்று சொன்னார்.
“என்ன படித்தவர்? தினமணி, தினத்தந்தி படித்தவர். கீழே கிடக்கிற எல்லா தாள்களையும் படித்தவர். சரியா?” என்று நாம் கேட்டோம்.
விழித்தார். “வார்த்தைகளுக்கு அருத்தம் சொன்னால் இப்படித்தான், நீ சொல்ற மாதிரி வரும். அப்படிப் பார்த்தால் மருத்துவ மலர் விடாமல் படித்தவர் மருத்துவர். கருப்பு சூட் போட்டு ஒரு கேஸ் கட்டைத் தூக்கிக்கொண்டு போகிறவரெல்லாம் குமாஸ்தா அல்ல; அட்வகேட். அதாவது வழக்கறிஞர்… அப்படித்தானே?!
ஆலிம் என்றால் என்ன நினைச்சே? அறிவுக்கல்ல பட்டம். ஏழு வருஷம் ஒரு உஸ்தாதுக்கு முன்பாக முழந்தாளிட்டுக் கஷ்டப்பட்டு அத்தஹிய்யாத்து இருப்பில் அரை மணி நேரமல்ல; ஒரு மணித்தியானமல்ல, பல மணித்துளிகள் உட்கார்ந்து அவரிடத்திலிருந்து வெளியாகிற ஃபைழ்(ஜ்) என்று சொல்லக்கூடிய அறிவொளியைப் பெற வேண்டும். வருடம் ஏழு என்பதல்ல முக்கியம். வருத்தம் முக்கியம். எவ்வளவு? அதுதான் முக்கியம்.
கல்வி உயர உயர அவர்கள் தாழ்வார்கள். தாழ்மையோடு இருப்பதற்குத்தான் அவர்களிடத்தில் ஏழ்மையும் சேர்ந்துள்ளது. ஓதிக்கொடுத்தவர்களெல்லாம் கையொப்பமிட்டு உலகறிய வழங்குவது தான் ஸனது என்னும் பட்டயம் – டிப்ளோமா, மவ்லவி என்னும் முன்னுரை. மதரஸாவின் பெயர் பின்னுரை.
பாகவி என்றால் வேலூர், மன்பஈ என்றால் லால்பேட்டை, மிஸ்பாஹி என்றால் நீடூர், மஸ்லஹி என்றால் தூத்துக்குடி, அன்வரி என்றால் திருச்சி, ரஷாதி என்பது ஈரோடு. வெளியாகிறபோது கொடுக்கிற ஸனதைப் பெற்று வருகிறார்களே அவர்கள் தான் ஆலிம். நீ வாங்கின எம்மே. எம்மெஸ்ஸிக்கு இந்த மேதாவிலாசம் உண்டா? படித்துக்கொடுத்தவன் ஒருவன். பட்டந்தருபவன் வேறொருவன். படித்த கல்லூரி ஒன்று முடித்து வைப்பது வேறொன்று. என்ன படித்தாய் என்பதுதான் உன் நினைவில் உள்ளது. இணைவில் இல்லை.
அவர்கள் வாங்குகின்ற பட்டயம் ஓதிக் கொடுத்த உஸ்தாதிலிருந்து துவங்கி அவருக்கு ஆசிரியர், அவர்களின் ஆசிரியர் என்று மேலே போய் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் போய் முடியும்.
தேவ்பந்தில் சுருள் கொடுப்பார்கள். விரித்தால் நீண்டு கொண்டே இருக்கும். அவ்வளவு ஆசிரியப் பெருமக்கள். ஹதீஸ் பாடத்திலே நீ ஓதி இருந்தால் ஸனதைப் பற்றி நீ அறிய முடியும்” என்று நாம் சொல்லி முடித்தோம்.
மாற்று மதத்தவர்கள் மதிக்கிறார்கள். நம்மவர்கள் மிதிக்கிறார்கள்.
“நீ இப்போது என் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறாயா?”
“இருங்க கேட்டுக்கொண்டு வந்து சொல்றேன்.”
“அடுத்து ஒரே ஒரு கேள்வி… வானவர்களுக்கு தமிழ் மலையாளம், கன்னடம், ஆங்கிலம் வேறு எந்தப் பாஷையாவது தெரியுமா? நம்முடைய அமல் நாமாவை எழுதுகிற மலக்குகள் எந்தப் பாஷையில் எழுதுகிறார்கள்?” என்றார்.
“தெரியாது” “உனக்குமட்டுமல்ல, அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் தெரியாது. இது தெரிந்தால் எல்லோரும் உலகக் கல்வியுடன் மார்க்கக்கல்வியைக் கண்டிப்பாகக் கற்பார்கள்.
-மவ்லானா அஃப்ஸலுல் உலமா உவைஸ்
source: முஸ்லிம் முரசு ஆகஸ்ட் 2015
www.nidur.info