மக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 தமிழர்கள் பற்றி உருக்கமான தகவல்கள்
மக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 தமிழர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
இந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 லட்சம் பேர் மக்காவுக்கு ஹஜ் பயணம் சென்று உள்ளனர். இந்தியாவில் இருந்து 1+ லட்சம் பேர் சென்றுள்ளனர்.
மக்கா அருகே மினா நகரில் நேற்று முன்தினம் சாத்தான் தூண் மீது கல் எறியும் நிகழ்ச்சியின் போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 700-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். மேலும் 800-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உயிர் இழந்தவர்களில் 14 பேர் இந்தியர் என்பதும், அதில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இவர்களில் 2 பேர் பெண்கள் ஆவார்கள்.
தமிழர்கள் 4 பேரின் உடல்களும் மக்காவிலேயே நல்லடக்கம் செய்யப்படுகிறது.
உருக்கமான தகவல்கள்
இறந்தவர்களை பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இறந்தவர்களில் ஒருவர் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வடகரையைச் சேர்ந்த ஷம்சுத்தீன் (வயது 70). மலேசியாவில் வேலை பார்த்து வந்த அவர், பின்னர் அங்கிருந்து சொந்த ஊர் திரும்பி அங்கு வசித்து வந்தார். இவர் தனது மனைவி சம்சாத் பேகத்துடன் மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் சென்று இருந்தார். அவர் அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சம்சுதீன் இறந்து விட்டார்.
ஷம்சுத்தீனின் உடல் மெக்காவிலேயே நல்லடக்கம் செய்யப்படுகிறது.
ஜவுளிக்கடை அதிபர் மனைவி
நெரிசலில் சிக்கி பலியான மற்றொருவர் திருச்சி தென்னூர் அண்ணா நகர் சிவபிரகாசம் சாலையைச் சேர்ந்த முகமது அமானுல்லாவின் மனைவி ரெமிஜான் (51). முஹம்மது அமானுல்லா திருச்சி சிங்காரத்தோப்பில் ஜவுளிக் கடை வைத்துள்ளார். இவர் தனது மனைவி ரெமிஜான், மகள் நிசாத், மருமகன் அமானுல்லா ஆகியோருடன் ஹஜ் பயணம் சென்றார்.
நேற்று முன்தினம் மாலை மக்காவில் நெரிசலில் ஏராளமானோர் உயிர் இழந்ததாக செய்தி வெளியானதும் முகமது அமானுல்லாவை உறவினர்கள் திருச்சியில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது ரெமிஜான் இறந்த தகவல் தெரிய வந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.
முஹம்மது அமானுல்லாவின் உறவினர்கள் நேற்று காலை அவரது வீட்டுக்கு திரண்டு வந்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். குமார் எம்.பி.யும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
மக்காவில் பலியான ரெமிஜானின் உடல் அங்கேயே நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
குடியாத்தம் பெண்
நெரிசலில் சிக்கி பலியான மற்றொரு பெண் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தைப்பேட்டை மதார்சாகிப் தெருவைச் சேர்ந்த கதிர் அகமதுவின் மனைவி ஷமிம்முன்னிஸா (54). இவர்களுக்கு அப்சல் (37) என்ற மகனும் 3 மகள்களும் உள்ளனர். கதிர் அகமது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அப்சல் குடியாத்தத்தில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணி புரிகிறார்.
கடந்த 6-ந் தேதி ஷமிம்முன்னிஸாவும், அப்சலும் புனித ஹஜ் பயணமாக மெக்காவுக்கு புறப்பட்டு சென்றனர். இருவரும் நேற்று முன்தினம் மினா நகரில் நடந்த சாத்தான் தூண் மீது கல் எறியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஷமிம்முன்னிஷா உயிர் இழந்தார். இந்த தகவலை அப்சல், அவரது குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தெரிவித்தார்,
ஷமிம்முன்னிஸாவின் உடல் மக்காவிலேயே அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கூட்டுறவு முன்னாள் அதிகாரி
நெரிசலில் சிக்கி பலியான மற்றொருவர் நெல்லை மாவட்டம் தென்காசி அரிப்புக்காரத் தெருவைச் சேர்ந்த முகைதீன் பிச்சை (64). கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தனது மனைவி ரெஜினா பேகத்துடன் ஹஜ் யாத்திரை சென்றார்.
முகைதீன் பிச்சை நெரிசலில் சிக்கி பலியான விவரம் உறுதி செய்யப்பட்டு, தென்காசியில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது. அவருடைய மனைவி ரெஜினா பேகம் பத்திரமாக இருப்பதாகவும் தகவல் வந்தது.
முகைதீன் பிச்சைக்கு ஷேக் முகம்மது, ரெசவு மைதீன் ஆகிய 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகிவிட்டது.
மக்காவில் உடல் அடக்கம்
ஹஜ் பயணத்தில் முகைதீன் பிச்சை இறந்தது குறித்து அவரது மூத்த மகன் ஷேக் முகம்மது கூறுகையில், என் தந்தையும், தாயும் கடந்த 5-ந் தேதி சென்னையில் இருந்து மெக்காவுக்கு சென்றார்கள். தினமும் என்னிடம் போனில் பேசினார்கள். 2 நாட்களுக்கு முன்பு பேசிய போது நலமாக இருப்பதாக கூறினார்கள். அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி என்னுடைய தந்தை இறந்த சம்பவம் எங்கள் குடும்பத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்றார்.
முகைதீன் பிச்சையின் உடல் மெக்காவிலேயே அடக்கம் செய்யப்பட இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதற்காக குடும்பத்தினர் சிலர் தென்காசியில் இருந்து அங்கு செல்ல இருப்பதாகவும் கூறினார்கள்.