குர்பானி பிராணியை அறுப்பதை போட்டோவும் வீடியோவும் எடுக்காதீர்கள்!
இன்றைய தினத்தில் நம்முடைய கைகளில் Touch Mobile சர்வசாதாரணமாக இருப்பதால் செல்பி, குரூப் போட்டோ என எடுத்து அதனை பேஸ்புக்கிலும் வாட்ஸ்ஆப்பிலும் பதிவேற்றுவது வழக்கம் ஆகிவிட்டது.
அதனால் தான் இந்த பதிவு இன்னும் சில நாட்களில் பக்ரீத் பெருநாளை நாம் அடைய இருக்கிறோம். (இன்ஷா அல்லாஹ்). அன்றைய தினத்தில் நம்மில் பலரின் வீடுகளில் அல்லாஹ் நமக்கு கட்டளையிட்ட குர்பானி என்ற அமல் நிறைவேற்றப்படும்.
அப்படி குர்பானி பிராணியை அறுக்கும் போது பலர் ஆர்வத்தில் அறுப்பதை போட்டோவும் வீடியோவும் எடுத்து பேஸ்புக்கிலும் வாட்ஸ்ஆப்பிலும் பரப்புகின்றனர்.
இவ்வாறு பரப்பி பெருமை அடைவதற்கு அல்ல குர்பானி என்ற அமல். நம்முடைய இறையச்சத்தின் அடிப்படையில் செய்யும் அமல்தான் குர்பானி.
”அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!” (அல்குர்ஆன் 22:37)
மேலும் இவ்வாறு குர்பானி பிராணியை அறுப்பதை போட்டோவும் வீடியோவும் எடுத்து அனுப்புவதால் இன்னொரு பிரச்சினையும் எழ கூடும்.
ஹஜ்ஜுப் பெருநாளின் போது, குர்பானி செய்யும் ஆடு, மாடு, ஒட்டகை போன்ற விலங்கினங்கள் அறுக்கப்படும் நிகழ்வுகளை வீடியோ,போட்டோ வடிவங்களில் Facebook, WhatsApp, imo, telegram, Twitter, Google+ போன்றவைகளில் பதிவுசெய்வதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ளுங்கள்!
ஏனென்றால், பகிரப்படும் அக்காட்சிகளைகொண்டு, இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் இயக்கங்கள், Blue Cross போன்ற அமைப்புகள் இட்டுக்கட்டி பொய்யான பிரச்சாரம் செய்யவும், இஸ்லாமிய சமுதாய மக்களை கொடூரமானவர்களாக சித்தரிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது!
எனவே இஸ்லாமிய சொந்தங்களே கண்டிப்பாக ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் குர்பானி பிராணிகள் அறுக்கப்படுவதை யாரும் போட்டோவும் வீடியோவும் எடுக்காதீர்கள்.
இறையச்சத்தின் அடிப்படையில் செய்யும் அந்த அமலின் முழு நன்மையையும் எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் வழங்குவானாக!
– யாசர் அரபாத்