ஒழுக்கத்துறை வீழ்ச்சியே முஸ்லிம்களின் பலவீனத்திற்குக்காரணம்
எம்.ரீ.எம்.பாரிஸ்
இஸ்லாம் பண்பாட்டு ஒழுக்கத்தின் மார்க்கம்
இஸ்லாம் அறிவை ஆயுதமாக கொண்டு கட்டியொழுப்பபட்ட மார்க்கமாயினும், அதன் போதனைகள் அனைத்தினதும் அடிப்படையான நோக்கம் நல்லொழுக்கமும், சிறந்த பண்பாடும் நிறைந்த சமூகம் ஒன்றை கட்டியொழுப்புவதாகும்.
இதனாலேயே இறைத்தூதரின் பணி பற்றி பிரஸ்தாபித்த அல்-குர்ஆன் ’அவனே எழுத வாசிக்க தெரியாத சமூகத்திலிருந்து ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவர்களுக்கு இறை வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக்கொடுக்கின்றார். அவர்களை அவர் பண்படுத்தவும் செய்கின்றார்’ எனக்கூறுகின்றது.
எனவே, இங்கு நபியின் பணியானது அறிவூட்டலும், அதன் அடிப்படையில் மனித சமூகத்தை பண்படுத்தலுமாகும் என்பது புலனாகின்றது. எனவே தான், நபியவர்கள் கூறும் போது ‘சிறந்த பண்பாடுகளை பரிபூரணம் செய்வதற்காகவே நான் இறை தூதராக அனுப்பட்டேன்’ எனக் கூறுகின்றார்கள்.
எனவே, இஸ்லாமிய போதனைகள் அனைத்தினதும் இறுதி இலக்கு நற்பண்பும், மானிட நேயமும் மிக்க மனித சமூகம் ஒன்றை இவ்வுலகிற்கு வழங்குவதாகும்.
பண்பாட்டை போதிக்கும் வணக்க வழிபாடுகள்:
இஸ்லாமிய போதனைகளில் பிரதானமான இடத்தை வகிக்கின்ற வணக்க வழிபாடுகள் வெற்றி சடங்குகளோ, சம்பிரதாயங்களோ அன்று. சிறந்த பண்பாட்டுப் பயிற்சியை வழங்குகின்ற பொறி முறைகளில் இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகள் எதுவாயினும் நல்லொழுக்கத்தை வழங்குவதனையே இலக்காக கொண்டுள்ளது.
தொழுகை பற்றி குறிப்பிட்ட அல்குர்ஆன் ‘ தொழுகையை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக, தொழுகை மானக்கேடான விடங்களில் இருந்து தடுக்கும் என்கின்றது.
ஸகாத் பற்றி கூறும் போது, அவர்களது பொருளாதாரத்தில் இருந்து ஸகாத்தை பெற்று, அதன் மூலம் அவர்களை தூய்மைப்படுத்தி பரிசுத்தப்படுத்துவாயாக என்கின்றது.
நோன்பு பற்றி குறிப்பிட்ட அல்குர்ஆன் ‘நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆக வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கு முன் சென்ற சமூதாயங்கள் மீதும் கடமையாக்கப்பட்டது என கூறுகின்றது.
ஹஜ் பற்றி கூறுகையில், யார் ஹஜ்ஜை நாடி விட்டாரோ, அவர் உடல் இச்சையை தீர்க்கும் விடயங்களிலோ, பாவ காரியங்களிலோ, குதர்க்கங்களிலோ ஈடுபட வேண்டாம் என கூறுகின்றது.
ஆக இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகள் எல்லாமே நல்லதொரு பண்பாடு மிக்கதொரு சமூகத்தை உருவாக்குவதை இலக்காக கொண்டிருப்பதனை காண்கின்றோம்.
பண்பாட்டை இழந்த வணக்கங்கள் பயனளிக்காது:
பண்பாட்டு பயிற்சியை வழங்குவதையே இலக்காக கொண்டு வணக்க வழிபாடுகள் விதியாக்கப்பட்டுள்ளதால், நல்லொழுக்கத்தையும், மனித நேயப்பண்புகளையும் வழங்காத வழிபாடுகள் வெற்று சடங்குகளேயன்றி இறைவனிடத்தில் எவ்வித பயனையும் பெற்றுத்தராது. இத்தகைய பண்பாட்டை இழந்த வணக்கசாலிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் திவாலானவர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
இவர்கள் தொழுகை, நோன்பு, தான தர்மங்கள் உள்ளிட்ட நற்காரியங்களுடன் மறுமையில் இறைவனை சந்திப்பர். ஆயினும், அவர்களது பண்பாடு சிதைந்திருந்தன் காரணமாக அவர்களுக்கெதிரான பல வழக்குகள் இறைவன் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களால் தொடுக்கப்படும்.
அவர்கள் அநீதியாக பிறரின் இரத்ததை ஓட்டியமை, பொருளாதாரத்தை அபகரீத்தமை, பிறரைத்தண்டித்தமை, வஞ்சித்தமை, வீண்வதந்திகளைப்பரப்பியமை என்பன போன்ற பல நூறு வழக்குகள் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்படும். இறைவனின் நீதிமன்றத்தில் அவர்களது நன்மைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். போதாத போது பாதிக்கப்பட்டவர்களின் பாவச்சுமைகள் அவர்கள் மீது சுமத்தப்படும். பின்னர் நரகத்தில் தூக்கி வீசப்படுவார்கள்.
இங்கு பெறுமதியான வணக்க வழிபாடுகள் பல இருந்தும், அவர்களது பண்பாட்டு சிதைவு அனைத்தையும் பயனற்றதாக்கி விட்டது.
இறைத்தூதரிடம் ஒரு பெண் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது. அவரது நிறைவான தொழுகையும், நோன்பும் எடுத்துக் கூறப்பட்டன.
ஆயினும், அப்பெண்மணி அயலவருக்கு எப்போதும் அநீதி இழைப்பதாகவும், தொந்தரவு கொடுப்பதாகவும் கூறப்பட்ட போது, அப்பெண் நரகவாதி என்றார்கள். வேறு ஒரு பெண்ணோ குறைவான தொழுகையும், நோன்பும், தர்மமுடையவளாக இருந்த போது அயலவருடன் நல்லூறவு பேணுவதாகக் கூறப்பட்ட போது அப்பெண்ணோ சுவர்க்கவாதி என்றார்கள்.
பண்பாட்டை இழந்த இன்றைய முஸ்லிம் சமூகம்
இஸ்லாம் பண்பாட்டு எழுச்சியை இலக்காகக் கொண்ட மார்க்கமாக இருந்த போதும், அதனை வழியாகக் கொண்ட இன்றைய முஸ்லிம் சமூகம் பண்பாட்டுத்துறையில் அதாளபாதளத்தில் பிற சமூகங்கபை போல் ஆகிவிட்டது.
உலகத்துக்கே உயர்ந்த ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்த இந்த சமூகத்தின் பெரும்பாலானோரின் செயற்பாடுகள் இஸ்லாத்தையும், முஸ்லிம் சமுதாயத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விட்டது.
முஸ்லிம்களின் பலர் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளில் அக்கரையோடு செயற்படினும், பண்பாட்டை இழந்த வெறும் சடங்குகளாகவே அவர்கள் செயற்படுத்துகின்றார்கள். இதனாலேயே தொழுகையாளியாக இருந்து, ஹாஜிகளாக இருந்து, இஸ்லாத்தை பிரதி நிதித்துவம் செய்யும் அவர்களில் பலர் தங்களது கொடுக்கல், வாங்கல்களில் குடும்ப வாழ்வில் சமூக உறவுகளில் படுமேசமான மனிதர்களாகக் காணப்படுகின்றார்கள்.
பொய், ஏமாற்று, கலப்படம், நம்பிக்கைத்துரோகம், வாக்கு மீறுதல், பிறரின் சொத்துக்களை அபகரித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இறை இல்லங்களில் மட்டுமே இஸ்லாமும் இறைவன் பற்றிய பயமும். வெளியே வந்து விட்டால் எல்லாவற்றையும் மறந்த ஒழுக்கச் சீர்கேடுகள் அவர்களை ஆட்கொண்டு விடுகின்றன.
ஒழுக்கத்துறை வீழ்ச்சியே முஸ்லிம்களின் பலவீனத்துக்கு காரணம் உயர்ந்த ஒழுக்கத்தைக் கொண்டு பிறருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம் இன்று அவற்றாலேயே இகழ்ந்துரைக்கப்படும் நிலமைக்கு தள்ளப்பட்டு விட்டது.
முன்பு இஸ்லாத்தின் வளர்ச்சியானது முஸ்லிம்களது பண்பாடுகளை கொண்டே பெரிதும் வளர்ந்தது. நபி அவர்களும், அவரது நல்லறத் தோழர்களும் தமது பலத்தால் இஸ்லாத்தை ஆளும் சக்தியாக மாற்றினார்கள். என்பதை விட தமது பண்பாட்டினாலேயே அதனை ஆளும் சக்தியாக மாற்றினார்கள்.
இன்று உலகில் 160 கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம்களும், 55க்கு மேற்பட்ட முஸ்லிம் நாடுகளும் இருக்கிறதென்றால், அது எமது முன்னோர்களின் முன் மாதிரிகளாலேயே அன்றி வேறில்லை. உலகில் பல நாடுகளில் இஸ்லாம் பரவுவதற்கு குறிப்பாக தெற்கு தென் கிழக்காசிய நாடுகளில் இஸ்லாம் பரவ அரோபியாவிலிருந்து வருகை தந்த வியாபாரிகளே காரணமானார்கள்.
அவர்கள் தமது கொடுக்கல் வாங்கல்களில் கடைப்பிடித்த வாய்மை, நேர்மை, மனித நேயம் உள்ளிட்ட உயர் குணங்கள் சுதோச மக்கள் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட காரணமானது. ஆனால், இன்றைய முஸ்லிம்களாகிய நாமோ இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கின்றோம். தமது பண்பாடுகளைப் பார்த்து இஸ்லாத்திற்கு வர யாரும் இன்று தயாரில்லை. அந்தளவுக்கு பண்பாட்டை இழந்து போன ஒரு சமூகமாக இன்று நாம் காணப்படுகின்றோம்.
பொப்பிசைப் பாடகர் கட்ஸ்டிவன் எனும் யூசுப் இஸ்லாம் இஸ்லாத்தைத் தழுவியமை பற்றி குறிப்பிடும் போது ‘நான் முஸ்லிம்களை பார்த்து இஸ்லாத்திற்கு வர வில்லை குர்ஆனை படித்து இஸ்லாத்திற்;கு வந்தேன்.
முஸ்லிம்களை பார்த்திருத்தால், நான் இஸ்லாத்திற்கு வந்திருக்க மாட்டேன். என்ற அவரது அறை கூவல் எவ்வளவு யதார்த்தமானது.
இது போன்றே இஸ்லாத்திற்க்கு வந்த பலரும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு இஸ்லாமிய அறிஞர் கூறும் போது ‘இஸ்லாம் என்பது ஒரு பூங்காவனம் அதிலே எல்லா வகையான நறு மலர்களும் உண்டு. அதனை நுகர, அதற்குள் நுழைய எல்லோருக்கும் ஆசை தான். ஆனால், அந்த வனத்தைச் சுற்றி முஸ்லிம்கள் என்ற முள் வேலிகள் இருக்கிறார்கள். அந்த முள் வேலியே அங்கு வருவதற்குத் தடையாக இருக்கின்றனர் என குறிப்பிட்டார்.
எனவே, இன்றைய முஸ்லிம் உம்மாவின் வீழ்ச்சிக்கு பல காரணிகள் இருந்த போதும், இஸ்லாத்தை நாம் முறையாக கடைப்பிடிக்காமையும், இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை அடியொட்டி பிறருக்கு முன் மாதிரியாக நாம்; வாழாமையும் முக்கிய காரணியாகும்.
இக்குறைபாட்டை நாம் அனைவரும் சீர் செய்து இஸ்லாத்தின் இலக்கை நிறைவு செய்ய, இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை நம் வாழ்வில் அடியொட்டி நடக்க முயற்சி எடுப்போமாக.
[ காத்தான்குடியில் இஸ்லாமிக் சென்டரில் இடம் பெற்ற இஸ்லாமிய மாநாட்டில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திக் காலசார உத்தியோகத்தர் மௌலவி அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) எம்.ஏ அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு இது.]