உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்!
[ “உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்). மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.” (அல்குர்ஆன் 10:92)]
1981-ல் ஃபிரான்ஸிஸ் மித்ரான் ஃபிரான்ஸ் நாட்டின் அதிபரானபோது, உலகின் மிகக்கொடிய கொடுங்கோல் அரசன் என்று கூறப்பட்ட ‘பாரோஹ்’ என்ற ஃபிர்அவ்னின் சடலத்தை பகுப்பாய்வு செய்வதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு எகிப்திய அரசாங்கத்திடம் வேண்டிக்கொண்டார்.
இவ்வேண்டுகோளுக்கிணங்க ஃபிர்அவ்னின் உடல் விமானம் மூலமாக ஃப்ரான்ஸின் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அவ்விமானத்தை வரவேற்பதற்காக ஃபிரான்ஸின் அதிபர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் விமான நிலையத்தில் காத்திருந்து, அரச வரவேற்பளித்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.
அதன் பின் அந்த மம்மி ஆய்வுக்கூடத்தின் ஒரு பிரத்தியேக பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விஞ்ஞானி மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) தலைமையில் பல்வேறு தொல்லியல் மற்றும் உடற்கூறியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது. தொல்பொருள் ஆய்வாளர்கள், சத்திர சிகிச்சை நிபுணர்கள் என ஆரய்ச்சிக்குத் தேவையானவர்கள் அனைவரும் ஆய்வகத்திலே குழுமி, ஃபிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இறுதியாக அன்றிரவு விஞ்ஞானி மாரிஸ் புகைல் (Maurice Bucaille), ஃபிர்அவ்னின் உடல் கடலுக்குள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும் அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதி அறிக்கையினைத் தயாரித்தார்.
அப்போது வெளியிடப்பட்ட விஞ்ஞானிகளின் அறிக்கையில்…
‘உடலில் உப்பு படிந்திருப்பதானது, ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் ‘பாரோஹ்(ஃபிர்அவ்ன்) உயிர் பிரிந்தவுடன் உடல் மட்டும் ஏதோ ஒரு புதிய முறையில் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்றும் வெளியிட்டனர்.
கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் (அதே போன்று கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட) மற்ற உடல்களைவிட இந்த உடல் மட்டும் பழுதடையாமல், எந்த பாதிப்புக்களும் ஏற்படாமல், எவ்வித சிதைவுமில்லாமல் இத்தனை காலம் இருந்தது, டாக்டர். மாரிஸ் புகைலுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது.
அப்போது அங்கிருந்த சக விஞ்ஞானி ஒருவர் ‘முஸ்லிம்கள் இந்த மம்மியின் மரணம் பற்றி தங்கள் வேதப் புத்தகத்தில் (புனித அல்-குர்ஆனில்) கூறப்பட்டுள்ளது என்று ஏதோ கூறுகிறார்கள்’ என்று கூறினார்.
மாரிஸ் புகைல் அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. ‘இன்றைய விஞ்ஞான வளர்ச்சியும், உயர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் மற்றும் கம்ப்யூட்டர்கள் துணையும், நாம் கையாண்ட உத்திகளும் இல்லாமல் இதை யாரும் கூறமுடியாது’ என்றார்.
ஆனால் இன்னொரு சக விஞ்ஞானியோ, ‘ஃபிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும், மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே’ என்று கூறினார்.
இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் (Maurice Bucaille) வியப்பில் ஆழ்ந்தார்.
‘இது எப்படி சாத்தியமாகும்? 200 ஆண்டுகளுக்கு முன் (1898-ல் தான்) கண்டெடுக்கப்பட்ட ஒரு உடலைப்பற்றி, 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்களிடம் இருக்கின்ற அல்குர்ஆன் எவ்வாறு விவரிக்க முடியும்?
எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்தப் பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில பத்தாண்டுகளுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் அறிய வந்தது?
1400 ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்ப்பில்லாதபோது இது எப்படி அவர்களுக்கு சாத்தியமாயிற்று?’ என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.
பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விஞ்ஞானி மாரிஸ் புகைல் (Maurice Bucaille) அன்றைய இரவு ஃபிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார். முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவலை சிந்தித்து, ‘இதோ என் முன் வைக்கப்பட்டிருப்பதுதான் மோஸசை (மூஸாவை) விரட்டிச் சென்றவனின் உடலா..?
இது இவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதை முஸ்லிம்களின் முஹம்மத் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?’ போன்ற வினாக்களை அவருள் ஏற்படுத்தியது.
மாரிஸ் தன் தூக்கத்தை தொலைத்தார். பைபிளைக் கொண்டுவரச் சொல்லி அதன் பக்கங்களை புரட்டினார். “பாரோஹ்வும் அவன் சேனைகளும் கடலில் மூழ்கி மாண்டனர். அவர்களில் எவரும் உயிர் பிழைத்தாரில்லை” என்று மட்டுமே அதில் இருந்ததையும் பாரோஹ்வின் உடல் அழியாமல் பாதுகாக்கப்பட்ட விபரம் அதில் இல்லாதிருப்பதையும் கண்டு, மாரிஸ் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் ஃபிர்அவ்னின் உடல் எகிப்திய அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் மாரிஸ் புகைல் மட்டும் ஓயவில்லை. இந்த மம்மி பாதுகாக்கப்படும் என்ற விபரங்களை முஸ்லிம்கள் ஏற்கனவே அறிவார்கள் என்ற உண்மை அவரை ஓய விடவில்லை! இதுபற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாட இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார். எகிப்தின் உடற்கூறியல் முஸ்லிம் விஞ்ஞானிகளுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி, பாரோஹ்வின் உடல் இறப்புக்குப் பின் புதிய முறையில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்ற தமது கண்டுபிடிப்பைப் பற்றி விவாதித்தார். அப்போது சபையிலிருந்த ஒரு முஸ்லிம் விஞ்ஞானி அமைதியாய் எழுந்து அல்குர்ஆனில் சூரா யூனுஸில் இடம் பெற்றிருக்கும் பக்கத்தைப் புரட்டி, ஒரு வசனத்தை ஓதிக் காண்பித்தார்.
அந்த வசனத்தைப் படித்த மாரிஸ் புகைல் (Maurice Bucaille) உறைந்து போய் எழுந்து நின்றார்.
தமது வேதமான பைபிள் கூறியதை குர்ஆனின் கூற்றோடு கவனமாக ஒப்பிட்டு, ‘பாரோஹ்’ கடலில் மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றி மட்டுமே பைபிள் கூறுவதையும், குர்ஆன் அவனுடைய மரணத்தையும் மரணத்திற்கு பின் அவன் உடல் பாதுகாக்கப்படுமென்று கூறுவதையும் அறிந்து பிரமித்தார்.
அந்த குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் (Maurice Bucaille) அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது. உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக, “நான் அல்குர்ஆனை நம்பிவிட்டேன், இந்த குர்ஆன் கூறும் இஸ்லாத்தையும் ஏற்றுக்கொண்டேன்” என்று கூறி அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.
அந்த விஞ்ஞானியின் வாழ்வை புரட்டிப்போட்ட அந்த வசனம்..
“உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்). மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.” (அல்குர்ஆன் 10:92)
அல்லாஹ்வை மறுப்பவர்கள் “அல்குர்ஆனை” சிந்திக்கட்டும்! சிந்திக்க சொல்லும் ஒரே வேதம் அல்குர்ஆன் தான்..! இந்த ஆத்மா நிச்சயமா, சத்தியமா அவனையன்றி வேறு எங்குமே திரும்பாது!