திப்பு சுல்தான் உண்மை வரலாற்றின் சில துளிகள்
ஹிந்து சகோதரிகளுக்கு மேலாடை அணியும் உரிமையை பெற்று தந்த திப்பு சுல்தான்
விடுதலைப் போரின் விடிவெள்ளி என்றளவில் மட்டும் திப்புவின் வரலாறு நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி அவரின் நல்லாட்சி, சீர்திருத்தங்கள், மனித நேயம், சமய நல்லிணக்கம், அறிவு ஞானம், சமூக மாற்றத்திற்கான நடவடிக்கை, ராக்கெட் தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் தனி முத்திரை பதித்துள்ளார்.
ஆயினும் திப்பு சுல்தான் ஒரு மதவெறியர், கொடுங்கோலர், என்றெல்லாம் கட்டுக் கதைகள் இன்றளவும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
அக்கட்டுக் கதைகளுக்கு ஆதாரமாக W.Kirkpatrick, M.Wilks ஆகியோர் எழுதிய நூல்களையே மேற்கோளாய்க் காட்டுகின்றனர். இவ்விருவரும் கிழக்கிந்தியக் கம்பெனியிடத்தில் வேலை செய்தவர்கள்.
திப்பு சுல்தானுக்கு எதிரான போரில் கலந்து கொண்டு பிரிட்டிஷ் படையின் தோல்வியை நேரில் கண்டவர்கள். திப்புவின் பெருமையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட இவர்களின் நூல்கள் ஆதாரமற்றது என Brittlebank, Habib, Hasan, Chettyபோன்ற வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர்.
இந்திய வரலாற்றைத் திரித்து, வருங்கால சந்ததியினரை உண்மைக்குப் புறம்பான வரலாற்றை அறியச் செய்ததில் வெள்ளையர்கள் மிகப்பெரிய தந்திரதாரிகளாக செயல்பட்டனர்.
ஆனால் திப்புவின் ஆட்சி முறையும், அறச்செயல்களும் அவரது உண்மையான வரலாற்றுப் பக்கங்களை அலங்கரிக்கின்றன.
மதநல்லிணக்கத் தலைவர் திப்பு சுல்தானின் 1787ஆம் ஆண்டைய பிரகடனத்தில், ‘மதங்களிடையே நல்லுறவு என்பதே புனித குர்ஆனின் அடிப்படைக் கோட்பாடு. மத விஷயங்களில் நிர்பந்தம் கூடாது. அவரவர் விருப்பத்தை மதிப்பதே புனித குர்ஆனின் வாக்கு. பிற மதங்களின் விக்கிரகங்களை அவமதிக்காதீர். அது இறைவனையே அவமதிப்பதாகிவிடும். இறைவன் விரும்பியிருந்தால் உலக மக்கள் அனைவரையும் ஒரே மதமாகப் படைத்திருப்பார் அல்லவா? எனவே ஒருவர் மற்றவரின் நற்காரியங்களுக்குத் துணை புரியுங்கள்’ என்று தனது வீரர்களுக்கு உபதேசித்திருந்தார்.
ஆற்காட்டு நவாப்,ஹைதராபாத் நிஜாம் ஆகியோர் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்கள் ஆங்கிலேயரின் கூட்டாளிகள் என்ற அடிப்படையில் அவர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு திப்பு தயங்கவில்லை.
இந்துக் கோயில்களுக்கும், அறநிலையங்களுக்கும் வாரி வழங்கிய வள்ளலாகத் திகழ்ந்தார்.
1786ல் மேலக்கோட்டை நரசிம்மசாமிக் கோயிலுக்கு தங்கம் மற்றும் வெள்ளி ஆராதனைப் பாத்திரங்கள், பாரசீக மொழிப் பெட்டகம் மற்றும் 12 யானைகள் ஆகியவற்றை வழங்கினார். குருவாயூர் கோயிலுக்கும், அக்கோயிலைச் சுற்றியிருக்கும் இடங்களுக்கும் நிலவரி வசூல் செய்யும் உரிமையை கோயில் தேவஸ்தானத்துக்கே வழங்கினார்.
1791ல் மராத்தியர்கள் சேதப்படுத்திய சிருங்கேரி சாரதா கோயிலை மறுநிர்மானம் செய்வதற்காக ஜகத்குரு சங்கராச்சாரியார் உதவி வேண்டி திப்பு சுல்தானுக்குக் கடிதம் எழுதினார். மறுநிர்மானம் செய்வதற்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து கொடுத்தார். இது தொடர்பாக திப்பு சுல்தான் சங்கராச்சாரியருக்கு சுமார் 30 கடிதங்கள் எழுதியிருந்தார். அவர் இந்து ஆன்மீகவாதிகள் மீது கொண்டிருந்த மதிப்பிற்கு ஆதாரமாக அக்கடிதங்கள் இன்றளவும் மைசூர் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கோயில்களுக்கு திப்பு வழங்கிய மானியங்கள் பற்றிய அரசாணையும் இந்நூலகத்தில் உள்ளது.
நாராயண சுவாமி கோயிலுக்கும், கந்தேஸ்சுவாமி கோயிலுக்கும் ரத்திர ஆராதனைத் தட்டுகளை வழங்கினார். 1790ஆம் ஆண்டு காஞ்சீபுரம் கோயிலுக்கு 10,000 வராகன் நன்கொடை வழங்கினார். நஞ்சன்கூடுவில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்கு அங்குள்ள மூர்த்தியின் பெயரால் மரகத லிங்கம் ஒன்றையும் வழங்கினார். அது இன்றும் பாதுஷா லிங்கம் என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் மொத்தம் 102 இந்துக் கோயில்கள் இருந்தன. திப்புவின் மாளிகையான தரியா தௌலத் ஸ்ரீரங்கநாதசுவாமி கோயிலை நோக்கி அமைந்திருந்தது.
திப்பு சுல்தானின் ஆட்சிப் பகுதியில் முஸ்லிம்கள் 10 சதவிகிதத்தினரும், முஸ்லிம் அல்லாதவர்கள் 90 சதிவிகிதத்தினரும் இருந்தனர். மதச் சார்பின்றி மக்கள்தொகையின் அடிப்படையிலேயே மானியங்கள் வழங்கினார். தன் வாழ்நாளில் இந்து கோயில்கள் மற்றும் அறநிலையங்களுக்கு வழங்கிய மானியங்களின் தொகை 1,93,959 வராகன்கள். பிராமண மடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு வழங்கிய மானியம் 20,000 வராகன்கள். இஸ்லாமிய நிறுவனங்களுக்கு வழங்கிய மானியமோ 20,000 வராகன்கள் மட்டுமே.
பூர்ணையா உள்ளிட்ட இந்துக்களுக்கு தனது அமைச்சரவையிலும், படையிலும் பல முக்கியப் பொறுப்புகளை வழங்கியிருந்தார். இவை அனைத்தும் திப்புவின் பேதமற்ற மத நல்லிணக்கத்திற்கு சாலச் சிறந்த உதாரணங்களாகும்.
- தூண்டில் பதிப்பகத்தின் ”தேசம் மறந்த ஆளுமைகள்” நூலிலிருந்து சில வரிகள்.
ஹிந்து சகோதரிகளுக்கு மேலாடை அணியும் உரிமையை பெற்று தந்த திப்பு சுல்தான்
பெண்சமூகத்தில் திப்பு சுல்தான் நடைமுறைப் படுத்திய மற்றொரு சீர்திருத்தம்தான், பெண்களின் மேலாடை விஷயத்தில் தலையிட்டதாகும். இந்து சமுதாயத்தில் உயர்ஜாதி நம்பூதிரிப் பெண்களைத் தவிர வேறு எவருக்கும் இடுப்புக்கு மேல் ஆடை அணிவது கூடாத செயலாக இருந்தது. அவ்வாறு நம்பூதிரிப் பெண்களைத் தவிர மற்ற பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடைஅணிவது, மிகப்பெரிய மதவிரோதச் செயலாக நாயர் பெண்களும் இன்னபிற தாழ்த்தப் பட்ட பெண்களும் கருதி வந்தனர்.
அதனைக் குறித்து எழுத்தாளர் அனந்த கிருஷ்ணன் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“கீழ்ஜாதியினரில் ஆணும் பெண்ணும் உடம்பின் மேல்பாகத்தை மறைப்பது தங்களின் எஜமானர்களுக்கும் பிரபுக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய எதிர்ப்பாக கருதப்பட்டிருந்தது”.
அப்போதைய சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வேதங்களையும் உபயோகித்து கீழ்ஜாதிமக்களை அந்த அளவுக்குத் தவறான சிந்தனையில் உயர்ஜாதியினர் ஊறவைத்திருந்தனர். இடுப்புக்கு மேல் உடம்பை மறைக்காத பெண்களின் நடைமுறை, சாதாரண வாழ்க்கையை மிக அலோங்கலப்படுத்தும் என்றும் மக்களின் முன்னேற்றத்துக்கு அது பெரிய தடையாக இருக்கும் என்றும் திப்பு புரிந்து கொண்டார். அதன் காரணமாக, இத்தகைய ஜாதி சம்பிரதாயத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும் எல்லாப் பெண்களும் கட்டாயமாக தங்களின் மார்புகளை மறைக்க வேண்டும் என்றும் திப்பு சுல்தான் கண்டிப்பாக உத்தரவிட்டார். ஆனால், தன்னுடைய சீர்திருத்த முயற்சிகள் அனைத்தும் மக்களின் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குமான முயற்சிகள்தாம் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்து, தமது சீர்திருத்த முயற்சிகளை மக்கள் ஏற்றுக் கொள்மாறு செய்வது திப்புவுக்கு மிகக்கடினமானதாக இருந்தது.
தங்களின் கருத்துத் தெரிந்த காலம் முதல் தாங்கள் கடைபிடித்து வந்த ஆச்சார முறைகளை மீறுவதற்குக் கீழ்ஜாதி மக்கள் ஒருபோதும் தயாராகவில்லை. திப்புவின் சீர்திருத்தக் கட்டளைகள் அனைத்தும் அவர்களுக்கு மதமாற்ற முயற்சிகளாகவே உயர்ஜாதியினரால் திரித்துக் காட்டப் பட்டன. குறிப்பாக, இடுப்புக்கு மேல் உடம்பு முழுவதையும் மறைக்கும் விதத்திலான மேலாடை அணிவது, முஸ்லிம் பெண்கள் ஆடைக்கு ஒப்பானதாக இருந்ததால், அவ்வாறு மேலாடை அணிவதையே மதமாற்றத்திற்கு ஒப்பானதாக அவர்கள் கருதினர்.
அக்காலத்தில் மட்டுமன்றி தற்போதைய வரலாற்று ஆசிரியர்களிலும் பெரும்பாலோர், திப்பு இந்து மதச் சம்பிரதாயங்களில் மாற்றம் ஏற்படுத்த முயன்றதாக குற்றம் சுமத்துவதுண்டு. ஆனால், வரலாற்றை நடுநிலையாக உற்று நோக்கினால், இக்குற்றச்சாட்டு அநியாயமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் அனைத்தும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அனைவரையும் சமமானவர்களாக ஆக்கி, அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதற்குமான முயற்சியாகவே இருந்தன. அதற்கு, கி.பி. 1785இல் மலபார் கவர்னருக்குத் திப்பு எழுதிய கடிதம் ஆதாரமாகத் திகழ்கிறது.
திப்புவின் சீர்த்திருத்தக் கட்டளைகள் மதமாற்ற முயற்சிகளாகவும் இந்து மதத்தை அழிப்பதற்கான முயற்சிகளாகவும் திரிக்கப்பட்டதை அறிந்த திப்பு தன் நிலைபாட்டை மலபார் கவர்னருக்குக் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்:
“மலபாரில் சில பெண்கள் தங்களின் மார்புகளை மறைக்காமல் திரிவதைப் பார்த்தபோது எனக்கு வருத்தம் ஏற்பட்டது. அக்காட்சி வெறுப்பையும் நாகரீக, பண்பாட்டு சிந்தனைகளுக்கு எதிரான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. சன்மார்க்க சிந்தனைக்கு நிச்சயமாக அது எதிரானதுதான். இப்பெண்கள் ஒரு தனிப்பட்ட பரம்பரையில் உள்ளவர்கள் எனவும் அவர்களின் சம்பிரதாயப்படி, அவர்கள் தங்கள் மார்புகளை மறைப்பது கூடாத காரியம் எனவும் நீங்கள் எனக்கு விளக்கமளித்தீர்கள். நான் அதனைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். நீண்டகால சம்பிரதாயம் காரணமாகவா, அல்லது ஏழ்மையின் காரணமாகவா அவர்கள் தங்கள் மார்புகளை மறைக்காமல் இருக்கின்றனர்.
ஏழ்மையின் காரணமாகவே அவர்கள் தங்களின் மார்புகளை மறைக்காமல் இருக்கின்றனர் எனில், அவர்களுடைய பெண்கள் தங்களின் கவுரவத்திற்குக் களங்கம் ஏற்படாவண்ணம் கண்ணியமாக உடையணிவதற்குரிய உதவிகளை நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
அதற்கு மாற்றமாக நீண்டகால பழக்கமுடைய, கைவிடக் கூடாத சம்பிரதாயம் என்பது காரணம் எனில், அவர்களுடைய தலைவர்களிடையே நெருக்குதல் கொடுத்து இந்த (அரை நிர்வாணச்) சம்பிரதாயத்தை இல்லாமலாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அவர்களின் மதத் தத்துவங்களுக்கு எவ்வகையிலும் கேடுவிளைவிக்கா விதத்தில், சமாதானமான முறையிலான உபதேசத்தின் மூலமாக மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” (கேரள முஸ்லிம்களின் போராட்ட வரலாறு – பேராசிரியர்: கெ.எம்.பகாவுத்தீன், பக்கம் 118,119.)
சாதி மத பேதமின்றி மக்கள் நலனை மட்டுமே லட்சியமாக கொண்ட ஆட்சியாளராக திகழ்ந்த திப்பு சுல்தானை இன்றைய பார்ப்பனீய அடிமைகள் மதவெறியராக சித்தரிப்பது காலக்கொடுமை தான்.. என்ன செய்ய திப்பு சுல்தான் எதிர்த்து பார்பாநீயத்தை அல்லாவே.. அதனால் அவர்கள் எதிர்ப்பது என்பது எதிர்பார்க்கும் ஓன்று..
ஆனால் அதே நேரத்தில் எந்த சாதியத்தை எதிர்த்து மக்களின் நல்வாழ்வுக்காக போராடினாரோ அந்த மக்களும் கூட திப்பு சுல்தானின் உண்மையான வரலாற்றை தெரியாமல் இருப்பது வேதனையானது தான். எது எப்படியோ மால்கம் எக்ஸ் கூறியது போல வரலாற்றை மறந்த சமூகம் புதிய வராலாறை படைக்க முடியாது .. இது நம் சமூகத்துக்கு நன்கு பொருந்தும்.