பெண்களும், கல்வியும்
நாகூர் ரூமி
அறிவைத் தேடுகின்ற தகுதி ஆண்களுக்கு மட்டும்தான் உள்ளது என்று திருமறையின் எந்த வசனமும் சொல்லவில்லை. மாறாக, கிட்டத்தட்ட 750 வசனங்களில் இறைவனின் படைப்பினங்களைப் பற்றிச் சிந்திக்கும்படித் திருமறை ஆண்களையும், பெண்களையும் கேட்கிறது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் தெளிவாகக் கூறிய ஹதீதுகளையும் கல்வியின் முக்கியத்துவத்தை உறுதி செய்வதாக உள்ளன. சில உதாரணங்கள்.
“நபியே! எந்தக் காரியம் சிறந்தது?” என்று ஒரு முறை பெருமானாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அறிவே சிறந்தது” என்று பதில் சொன்னார்கள்.
“நபியே! திருமறையை ஓதுவதைவிட கல்வி கற்றுக் கொள்வது சிறந்ததா?” என்று ஒருமுறை பெருமானாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அறிவின் மூலமாக அன்றி, வேறு எப்படித் திருமறையால் உங்களுக்கு நன்மை செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.
“நான் எப்படி ஒரு சாதாரண மனிதரை விட (இறைத் தூதர் என்ற) அந்தஸ்தில் உயர்ந்திருக்கிறேனோ அதைப் போல, இறைவனை வணங்க மட்டுமே செய்கின்ற ஒருவரை விட ஓர் அறிஞர் உயர்ந்திருக்கின்றார்.”
ஒருமுறை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியில் வந்தபோது இரண்டு குழுவினர் தென்பட்டனர். ஒரு குழு இறைவனை வணங்கிக் கொண்டிருந்தது. இன்னொன்று கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது. பெருமானார் அந்த இரண்டாவது குழுவில் பொய் அமர்ந்து கொண்டார்கள்.
ஒரு மனிதன் இறக்கும்போது அவனுடைய எல்லா செயல்களும் நின்று போகின்றன. மூன்றைத் தவிர,
அவை;
1. நிரந்தரமான (கல்விச்சாலை, மருத்துவமனை போன்ற) தர்ம காரியங்கள்,
2. நற்குணம் கொண்ட வாரிசுகள்.
3. பயனுள்ள அறிவு. (அறிவு பயனுள்ளதாக இருப்பது மிகவும் முக்கியமானது. எது ஒருவனுடைய சூழ்நிலையில் அவனுக்குத் தேவையான அறிவாக இருக்கிறதோ, அதை மட்டும்தான் அவன் கற்றுக் கொள்ள வேண்டும். பயனற்ற அறிவிலிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக, இறைவா! என்று பெருமானார் இறைஞ்சிய ஹதீதும் உள்ளது.)
கற்றறிந்தவர்களே நபிமார்களின் வாரிசுகளாவார்கள். அறிஞர்களுடைய அந்தஸ்து இறைத்தூதர்களுடையதற்கு அடுத்தபடியானதாக இருக்கிறது.
விண்ணிலும், மண்ணிலும் உள்ளதெல்லாம் கற்றறிந்தவர்களுக்காக மன்றாடி இறைவனிடம் மன்னிப்புக் கேட்கிறது.
மறுமை நாளில், அறிஞனின் எழுதுகோலின் மையானது இறைப்பாதையில் போர் செய்து உயிர் துறந்த தியாகியின் ரத்தத்தைவிடச் சிறந்ததாக இருக்கும்.
இறைவனுடைய மார்க்கத்தைப் பற்றி அறிந்து கொள்பவரின் கவலைகளைப் போக்க இறைவன் ஒருவனே போதுமானவன். அவன் அறிந்திராத புரத்திலிருந்து அவனுக்கானது வந்து சேரும்.
இப்ராஹீமிடம் இறைவன் சொன்னான், “ஓ! இபுராஹீம், நான் எல்லாமறிந்த ஞானவானாக இருக்கிறேன். எனவே பூமியில் அறிஞர்களை நான் நேசிக்கிறேன்.”
அறிவைத் தேடி ஒரு மனிதன் செல்வானாகில், அவனுக்கு சொர்க்கத்தின் வழியை இறைவன் காட்டுவான். அறிவைத் தேடி ஒருவர் வெளியில் காலெடுத்து வைக்கையில் அவருக்காக தன் சிறகுகளை வானவர் விரிக்கின்றனர்.
அறியாதவர் தம் அறியாமை பற்றியும், அறிஞர் தம் அறிவின் மீதும் அலட்சியம் காட்டி இருந்துவிடக் கூடாது.
அறிவார்ந்த ஒரு வார்த்தை ஓராண்டு தொழுவதைவிடச் சிறந்தது. அறிவைத் தேடுவதே வணக்கமாகும். அதனை அடைவது இறையச்சமாகும். அதனை அறியாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது தர்மமாகும்.
இறந்த இதயங்களுக்கு உயிர் கொடுப்பது அறிவேயாகும். இறைவனால் படைக்கப்பட்ட முதல் விஷயமே அறிவுதான்.
கல்வியின் முக்கியத்துவம் பற்றிய இது போன்ற ஹதீதுகள் எண்ணற்றவை. அவற்றில் எதுவுமே இது ஆணுக்கு மட்டும் என்றோ, இது பெண்ணுக்கு மட்டும் என்றோ பிரித்துச் சொல்லப்பட்டதல்ல.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமிய ஞானவான்கள் பலரும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி சொல்லியிருக்கிறார்கள்.
அறிஞர்களைத் தவிர மற்ற அனைவரும் செத்தவர்களே. அறிஞர்கள் மட்டுமே நித்யமானவர்கள். செல்வத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும். ஆனால் கல்வி உங்களைப் பாதுகாக்கும். இவ்வாறு அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.
“இறைவா! எங்களுக்கு இம்மையில் சிறந்ததையும், மறுமையில் சிறந்ததையும் தந்தருள்வாயாக” (சூரா பகரா 2:297) என்று ஒரு பிரார்த்தனை உள்ளது. இந்த வசனத்தில் வரும் “சிறந்தது” என்ற சொல் இம்மையைப் பொறுத்தவரை கல்வியையும், மறுமையை பொறுத்தவரை சொர்க்கத்தையும் குறிக்கிறது என்று ஹஸன்பஸரீ என்ற இறைநேசர் விளக்கம் கொடுக்கிறார்கள்.
“அறிந்தோரும், அறியாதோரும் சமமானவர்களா?” என்று திருமறை (சூரா அஸ்ஸுமர் 39:09) கேட்கிறது. “சீனா சென்றேனும் கல்வி கற்றுக்கொள்” என்ற ஹதீதில் பெண் – ஆண் என்ற வேற்றுமை உளதா? அல்லது எந்த மொழி என்ற நிபந்தனையேனும் உளதா? என்று கேட்கிறார் தமிழில் முதல் நாவல் எழுதிய முஸ்லிம் பெண்மணி சித்தி ஜுனைதா பேகம் (காதலா கடமையா, 164)
இவை எல்லாவற்றுக்கும் மேலாக முத்திரையடியைப் போன்ற ஹதீது ஒன்றும் உள்ளது. “கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு முஸ்லிம் ஆணுக்கும், பெண்ணுக்கும் கடமையாகும்” என்று பெருமானார் சொன்னார்கள் என்பதுதான் அது. கல்வியை ஒரு கடமையின் அந்தஸ்திற்கு உயர்த்திய மார்க்கம் வேறெதுவும் உள்ளதா என்று தெரியவில்லை.
இதெல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலேயே கல்வி கேள்விகளில் உயர்ந்த பெண்மணிகள் பலரை நாம் பார்க்க முடிகிறது. இஸ்லாமியக் கலாச்சாரம், பண்பாடு, இறையியல், திருமறை ஹதீது விளக்கங்கள், மார்க்க சட்டங்கள் ஆகியவற்றை எடுத்துரைப்பதில் பெருமானாரின் மனைவிமார்கள் சிறந்து விளங்கினர். அவர்களில் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா , பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா ஆகியோர் மிக முக்கியமானவர்கள்.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சிறப்பு:
இவர்களிலும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் இடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவர்கள் மூலமாகத்தான் நூற்றுக்கணக்கான ஹதீதுகளை நாம் பெற்றிருக்கிறோம். பெருமானாருக்குப் பிறகு திருமறை ஹதீது இஸ்லாமிய சட்டம் ஆகியவற்றை விளக்குவதில் முக்கியமான ஆறு வல்லுநர்களில் ஒருவராக அவர்கள் திகழ்ந்தார்கள். அவர்களுக்கிருந்த அதிசயிக்கத்தக்க நினைவாற்றலும் இதற்கு உதவியது. அவர்கள் ஒரு விஷயத்துக்கு விளக்கம் சொல்லி விட்டால் அதற்கு அடுத்த பேச்சு என்பதே இல்லாமலிருந்தது. ஓர் உதாரணம்.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானாரின் நெருங்கிய தோழர்களில் ஒருவர். அவர் மூலமாகவே இஸ்லாமிய உலகுக்கு அதிகப்படியான ஹதீதுகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தகக்து. ஒருமுறை அபூஹுரைரா பின்வருமாறு சொன்னார்:
“ஒரு மனிதன் தொழுதுக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணோ, ஒரு கழுதையோ அல்லது ஒரு நாயோ குறுக்கே போனால் அவனுடைய தொழுகை செல்லாது.” அதைக் கேள்விப்பட்ட ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்,
“அபூஹுரைரா (ரளியல்லாஹு அன்ஹு) என்ன சொல்கிறார்? ஒரு கழுதை அல்லது ஒரு நாயைப் போன்றவள்தான் ஒரு பெண் என்று சொல்ல வருகிறாரா? என்னுடைய அறை மிகவும் சின்னது. அதில் நான் படுக்கும் பாய் பெருமானாரின் தொழுகை விரிப்புக்கு குறுக்காக இருக்கும். நான் காலை நீட்டிப் படுத்திருக்கும் போது பெருமானார் தொழுவார்கள். என்னுடைய கால்கள் அவர்களுடைய தொழுகை விரிப்பைத் தொட்டுக் கொண்டிருக்கும். நெற்றியை பூமியில் வைத்து சஜ்தா செய்யச் செல்லும் போது பெருமானார் லேசாக என் காலில் தட்டுவார்கள். நான் காலைத் தூக்கிக் கொள்வேன். பின் மறுபடியும் நீட்டிக் கொள்வேன். சில நேரங்களில் அவசியம் கருதி அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களுக்குக் குறுக்கே போவேன்.” இவ்வாறு ஆயிஷா அவர்கள் சொன்னவுடன் அபூஹுரைரா தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த உலகை விட்டுப் பிரிந்த பிறகு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் வரை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா வாழ்ந்தார்கள். பெருமானாரின் தோழர்களில் பெரும்பாலானவர்கள் மறைந்துவிட்ட போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளை அனுபவத்திலும், நெருக்கத்திலும் இருந்து கவனித்தவர்களான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமே மக்கள் சந்தேகங்களைத் தெரிவித்துத் தெளிவும் பெற்றனர்.
உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீஃபாவாக இருந்த காலத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு உஸ்மானின் கொள்கைகளே காரணம் என்று தன் அதிருப்தியை வெளிப்படையாகவே ஆயிஷா தெரிவித்தார்கள். அதே சமயம், உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு கொலை செய்யப்பட்ட போது, அதை வன்மையாகக் கண்டிக்கவும் செய்தார்கள்.
அந்தக் காலத்தில் ஒரு பேராசிரியையாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா திகழ்ந்தார்கள். அன்றாடம் சிறுவர்களையும், சிறுமிகளையும் தனது வீட்டுக்குள் அனுமதித்து சொல்லிக் கொடுப்பார்கள். பெரியவர்களை ஒரு திரைக்குப் பின்னால் அமர வைத்து சொற்பொழிவுகள் விவாதங்கள் மூலமாக அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். உச்சரிப்பில் தனிக்கவனம் செலுத்துவார்கள். மதினாவிலிருந்த அனாதைக் குழந்தைகளுக்கான செலவுகளை அவர்களே பார்த்துக் கொண்டார்கள். சிலரை தனது பிள்ளைகளாகவே சுவீகரித்துக் கொண்டார்கள்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் பயின்ற உர்வா என்பவர் பிற்காலத்தில் மதினாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். காசிம் என்பவர் இஸ்லாமிய சட்டத்தில் ஒரு வல்லுநரானார். அபூசல்மா என்பவர் ஹதீது கலை விற்பன்னரானார். மஸ்ரூக் என்பவர் ஈராக் நாட்டின் இஸ்லாமிய சட்ட வல்லுநரானார். உமைரா என்ற பெண் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கடிதங்களை எழுதியவராவர். இரண்டாம் உமரின் காலத்திலே தொகுக்கப்பட்ட ஹதீதுகளை விமர்சன நோக்கோடு ஆராய்ந்தவரும் இவரே.
( நர்கிஸ் – ஆகஸ்ட் 2015 )
Thanks to MUDHUVAI HIDHAYATH