வாழ்வாங்கு வாழ இயற்கையை ரசிக்கவேண்டுமே!
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
உலகின் கால் பகுதி நிலப் பரப்பு, முக்கால் வாசி நீர்ப்பகுதியாகும்.. அந்த நிலப் பரப்பில் ஏற்றத்தாழ்வு வராமல் நிரந்தரமாக நிலை நிறுத்தி வைப்பது மலைப்பகுதியாகும்.
ஐஸ்லேண்ட் பகுதியிலும், பாலைவனத்திலும் மரங்கள், செடிகொடிகள் வளர்வது மிகவும் அரிது. இறைவனின் வரப்பிரசாதத்தால் அவைகள் நீர் பிடிப்பு, காடுகள், மலைகள் மற்றும் மழைப்பகுதிகளில் வளர்கின்றது.
மனிதன் உயிர் வாழ அவசியமாக கருதப்படுவது தண்ணீர், காற்று. மழையினால் குளங்கள், ஆறுகள், ஊற்றுகள் ஏற்படுகின்றன. .மரங்கள், செடி கொடிகள் மூலம் சுத்தமான காற்றினை மனிதன் சுவாசிக்க முடிகிறது.
அந்த இயற்கை செல்வங்களிடையே சற்று காலாற நடப்பது, அதன் அழகை ரசிப்பது, தென்றல் காற்றினை சுவாசிப்பது எந்தந்த விதத்தில் நோயற்ற வாழ்வினைத் தருகின்றது என்று உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த ஆய்வின் முடிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.
அவைகள் பின்வருமாறு:
1) கனடா நாட்டின் குடும்ப மருத்துவர், மெலிசா ஏலம், ‘மரஞ்செடி, கொடிகள் உள்ள பூங்காவில் 20 நிமிட நேரம் காலாற நடைபயிற்சி மேற்கொள்ளும் ஒரு மனிதன், அவனுக்கு கொடுக்கும் மருந்து, ஊக்க மாத்திரையினை விட மேலானது’ என்கிறார்.
2) 2014 ஆம் ஆண்டு அமெரிக்க ஆராச்சியாளர்களின் குழுத் தலைவர் ‘விக்கி செர்பர்’, ”ஒரு கருத்தரங்கில் பங்கு பெரும் ஒரு நபர் அந்தக் கருத்தரங்கில் பங்கு பெறுமுன் சில மணித்துளிகள் ஒரு பசுமையான சூழலில் நடைப் பயணம் மேற்கொண்டால் அவருக்கு புது விதமான சிந்தனைகள் 60 சதவீதம் கூடுகின்றது” என்று கூறுகிறார். இதனேயே தான் உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள் ஏதாவது ஒரு பிரச்சனைக்காக மாஸ்கோவிலோ, பாரிசிலோ, பெர்லினிலோ அல்லது வாசிங்டனிலோ கூடும்போது ஒரு பார்க்கில் கூட்டாக நடந்து செல்வதினைப் பார்க்கலாம்.
3) 2009 ஆம் ஆண்டு ஜப்பானில் நடத்திய ஆய்வில் ”வீட்டுகுள்ளில் இல்லாது நடைப் பயிற்சியின் மூலம் வெளி உலகின் இயற்கைக் காற்றினை சுவாசித்தால் ஒரு மனிதனின் படபடப்பும், பதட்டமும் தணிந்து நிதானத்துடன் செயல் படுவான்” என்று சொல்கிறது. ஒரு மனிதன் ஒரு அறைக்குள் இருக்கும் ஜிம்மில்லில் உடற்பயிற்சி மேற்கொள்ளுவதிற்கும், பூங்காவில் நடைப் பயிற்சி மேற்கொள்ளுவதிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
4) அமெரிக்கா மற்றும் தைவான் தொழிலாளர்களை அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் ஆய்வு நடத்தியபோது, ”ஜன்னல் இல்லாத குடியிருப்புகளில் தூங்கும் தொழிலாலர்களை விட ஜன்னல் திறந்திருக்கும் வீடுகளில் தூங்கும் தொழிலாளர்கள் 45 நிமிடம் நிம்மதியாக களைப்பு நீங்கத் தூங்குகிறார்களாம்.” நீங்கள் சென்னை போன்ற நகரங்களில் தெருவோரம் வசிக்கும் மக்களைப் பார்க்கலாம், அவர்கள் அருகில் கனரக வண்டி கூடப் போகும். ஆனால் அவர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டு இருப்பார்கள். அதே நேரத்தில் வசதியுடன் இருப்பவர்கள் ஏசி அறையில் படுப்பார்கள், ஆனால் தூக்கம் வராது புரள்வதினைக் கேள்விப் படலாம்.
5) ஜப்பானில் பூங்காக்களில் நடப்பவர்களை ”சின்ரின் யோக்கு” என்று அழைப்பார்களாம். அப்படியென்றால் அவர்களை காடுகளில் குளிப்பவர்கள் என்று அர்த்தமாம். ”பூங்காக்களில் நடப்பது மூலம் ரத்த ஓட்டம் சீராகவும், நாடித் துடிப்பு அதிகமாகவும், புற்று நோயினை தடுக்கும் அரு மருந்தாகும்” என்கிறார்கள்.
6) ஜப்பான் டோக்யோ நகரில் இயற்கை சூழலில் வாழும் 3144 நபார்களை பற்றி ஆய்வு நடத்தியதில் அவர்கள் இயற்கை சூழல் இல்லாது வாழும் நபர்களைவிட அதிக நாட்கள் வழ்கின்றனராம்.
7) ‘டச்’ நாட்டில் 2009ஆம் ஆண்டு 10,089 நபர்களிடம் நடத்திய ஆய்வில், ‘இயற்கை சூழலில் வாழும் நபர்கள் தாங்கள் தனியாக வாழ்கின்றோம் என்ற உணர்வினையே மரம், செடி, கொடி என்ற பசுமையினை கண்டதும் மறந்து விடுகின்றனராம்.
8) இங்கிலாந்து நாட்டில் எடின்பரோ பல்கலைக் கழகத்தில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் இரண்டு விதமான நபர்களிடம் ஆய்வு நடத்தினார்களாம். அவர்களில் ஒரு குழுவினர் கடைப் பகுதியில் பயிற்சியினை மேற்கொண்டோர். மற்றொரு பகுதியினர் பூங்காக்களில் பயிற்சியினை மேற்கொண்டோர். அவர்களில் இயற்கை சூழலில் பயிற்சியனை மேற்கொண்டோர் மிகவும் அமைதியாகவும், மூளை சிந்தனையினை உடனுக்குடன் செயல் படுத்துவர்களாகும் உள்ளனராம்.
9) 2001 ஆம் ஆண்டு அமெரிக்க வாசிங்டன் நகரில் நடைப் பயிற்சி மேற்கொண்ட பெண்களிடம் ஆய்வு நடத்தியபோது, ஒரு நாளைக்கு 20 நிமிடம் பயிற்சியினை மேற்கொண்ட பெண்கள் தன்னம்பிக்கை கூடியவர்களாகவும், தோழ்வி மனப்பான்மை குறைந்தவர்களாகவும் இருந்தார்களாம்.
10) 2001ஆம் ஆண்டு அமெரிக்கா சிக்காக்கோ நகரில் இயற்கை சூழ கூட்டமாக அப்பார்ட்மெண்ட்டில் வசிப்பவர்கள் திருட்டுப் பயமில்லாமல், சுயக் கட்டுபாடுடன் நடந்து கொள்கிறார்களாம்.
11) 1984-இல் அமேரிக்கா பென்சில்வேனியா நகர் மருத்துவமனையில் நடத்திய ஆராய்ச்சியில் சிகிச்சை எடுக்க வரும் நோயாளிகள் தங்கியிருக்கும் அறைகளின் ஜன்னல் பக்கம் மரம்,செடி, கொடிகள் இருந்தால் அவர்கள் நோயின் வலியினை மறந்து, சீக்கிரமே குணமாகி விடுகின்றார்கலாம். நான் அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள யூனியன் சிட்டியில் உள்ள பிரசவ மருத்துவ மனைக்குச் சென்றேன். அங்கே பார்வையாளர் பகுதியில் ஒரு பெரிய மீன் தொட்டி வைத்து அதில் பல்வேறு மீன்கள் விளையாட விட்டிருந்தார்கள். அதன் நோக்கத்தினைக் கேட்டபோது, மீன்கள் வாலை அடித்து விளையாடும்போது கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வயிற்றில் விளையாடும் சிசுகளுக்கு இணையாக நினைத்து டாக்டரைப் பார்க்க காத்திருக்கும் நேரத்தில் இருக்கும் வலியினையே மறந்து விடுவார்களாம்.
11) ஒரு தொழிற்சாலையிலோ அல்லது ஒரு அலுவலகத்திலோ மரம், செடி, கொடிகள் அதிகமாக இருந்தால் தொழிலாளர்கள் லீவு எடுப்பது குறைவாகவும், தொழிற்சாலை உற்பத்தி அதிகமாக இருக்கின்றதாம்.
12) மேலை நாட்டில் நடைப் பயிற்சி மேற்கொள்ளுவோருக்கும், நமது நாட்டில் பார்க்கில் நடைப் பயிற்சி செய்பவர்களுக்கும் நிறைய வேறுபாடு காணலாம். அமெரிக்காவில் நடைப் பயிற்சியின் போது ஒரு அமெரிக்கரை பார்த்தால், ”ஹாய்” என்பதுடனும், சிட்னியில் பயிற்சி மேற்கொள்ளும்போது ”ஹலோ” என்று பெயரளவிற்கு சொல்லிவிட்டு நகன்று விடுவார்கள். ஆனால் நம் நாட்டில் அறிமுகமான நபரின் பூர்வீக சரித்திரத்தினையே பயிற்சி முடிவதிற்குள் கேட்டு விடுவார்கள். பந்த, பாச உணர்வுடன் நடந்து கொள்வார்கள். இன்பம், துன்பத்தினில் கலந்து கொள்வார்கள். அதில் சில நேரங்களில் சிரிப்பாகவும் மாறி விடும் என்பதினை ஒரு உதாணரம் மூலம் விளக்கலாம் என எண்ணுகின்றேன்.
எங்களுடன் பார்க்கில் நடைப் பயிற்சிக்கு வரும் தேவா என்ற நண்பர் அன்று பார்க்குக்கு வரவில்லை. அவர் வராதது பற்றி விசாரித்த ஒரு நண்பர் தவறாக அவருடைய மாமி இறந்து விட்டார்களாம், அவரை வரும் வழியில் சாவு வீட்டில் பார்த்தேன் என்றார். உடனே சில நண்பர்கள் ஒரு மாலையினை வாங்கிக் கொண்டு அவர் வீட்டுக்கு சென்றபோது அப்போது தான் தெரிந்ததாம் அவருடைய மாமி இறக்கவில்லை, மாறாக பக்கத்தில் குடியிருக்கும் ஒரு மாமி இறந்து விட்டது என்று. அந்த அளவிற்கு நடைப் பயிற்சியில் ஜாதி, மதம், இனம், வயது, உத்தியோகம், வசதி என்று பாராது ஒரு பழக்கக் கூட்டம் ஒன்று சேரும் இடம் நடைப் பயிற்சி பூங்காவாகும். சில நேரங்களில் சம்பந்த பேச்சும், வியாபார ஒப்பந்தமும் நிறைவேறும். எல்லா பார்க்கிலும் ஒரு அசோசியேசன் அமைத்து அந்த பூங்கா வளர்ச்சிக்கு யோசனையும், வழியும் செய்வார்கள்.
ஆகவே மேற்கூறிய ஆராய்ச்சிகள் பழமை காலத்தில் கிராமங்களில் வாழ்ந்தவர்களும், காடுகளில் வாழ்ந்த பழங்குடியினர், தவம் செய்த முனிவர், சித்தர் ஆகியோர் ஆரோக்கியமாகவும், நீண்ட நாட்களுக்கு வாழ்ந்த ரகசியம் இயற்கையில் அவர்கள் வாழ்ந்ததால் தான். நாம் சரித்திரத்தில் அசோக சக்கரவர்த்தி குளங்கள், தோண்டினார், மரங்கள் வெட்டினார், ரோடுகள் அமைத்தார் என்றெல்லாம் படித்து இருக்கின்றோம். ஆனால் அந்த நீர் நிலைகள் தூந்து போனதிற்கும் காரணம் அவைகளில் வீட்டு மனைகள் அமைத்த மனிதன் தான் காரணம். மரங்கள், மற்றும் சாலைகள் வெட்டப் பட்டதிற்கு காரணம் போராட்ட காலங்களில் அரசியல் கட்சிகள் அவைகளை வெட்டியும், தோண்டியதும் தான் காரணம். அதனால் மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும், வாழ்வாங்கு வாழ மரங்கள் அழிப்பதினை விட்டு விட்டு, மரங்கள் நட்டு அந்த மரங்களின் அழகினை ரசிக்க சிறிது காலாற நடப்போமா?
AP,Mohamed Ali