உண்மையை நோக்கி ஒரு பயணம்!
“யாருப்பா இன்னும் டிக்கட் வாங்கலை? வாங்காதவங்க எல்லாம் சீக்கிரம் வாங்குங்க பார்க்கலாம். பாட்டிம்மா… கூடைய அப்படி கொஞ்சம் தள்ளி வைங்களேன்…”
“ஒரு ஜி.பி குடுங்க…”
“பஸ்டாண்டு ரெண்டு”
“அங்கிள் சி.எம்.ஸ் ஸ்கூல் ரெண்டு”
“இந்தா புடிங்க எல்லாம்… இன்னும் யாரு வாங்கல..டிக்கட் டிக்கட்…”
“எனக்கு ஒரு டிக்கட்”
“எங்கே சார் போகணும்?”
“தெ…தெ…தெரியாது”
“என்னது..? எங்கே போகணும்ன்னாவது தெரியாதா..? போக வேண்டிய அட்ரஸ் எதுனாச்சும் வெச்சிருக்கீங்களா?”
“இ…இ…இல்லை. எங்கே போகணும்…?”
“நாசமா போச்சு… ஏன் சார், எங்கே போகணும்னு என்னை கேட்டா? எங்கே போகணும்னு தெரியாம பஸ்ல ஏறிட்டு ஏன் சார் எங்க உயிரை வாங்கறீங்க?
– – –
– – –
பஸ்ஸில் உள்ள அத்தனை தலையும் ஒரே தலையை பார்த்தபடி. ஒரு தலைக்கு பல கதைகளை யோசித்தபடி….
என்ன?
இப்படி ஒரு பயணத்தை நீங்கள் முன்ன பின்ன பார்த்திருக்கீங்களா?
போகுமிடம் தெரியாத அந்த நபரின் இடத்தில் நீங்க இருந்திருக்கீங்களா?
அதெப்படி, போகற இடம் எதுன்னு தெரியாம போகும்னு கேக்கறீங்களா?
இல்லை…அந்த நபர் எந்த நோயால் தாக்குண்டு இருப்பார்னு நினைக்கறீங்களா? எந்த நோயுமே இல்லாவிட்டால்…?!
ஒரு சிறிய பஸ் பயணத்தில் கூட நாம் போகுமிடம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
எதற்காக இந்தப் பயணம், எங்கே போகிறோம், எப்படி, எவருடன், எதைக்கொண்டு போகிறோம் என்பதை திட்டமிடுதல் அவசியமாகிறது.
ஆனால் அதை விட பன்மடங்கு பெரிதான வாழ்க்கைப்பயணத்தை இப்படி திட்டமிடுகிறோமா?
எதற்காக இந்த வாழ்க்கை, எங்கே போகிறது இந்தப் பயணம், எந்த இலக்கை நோக்கி?
அதற்கான திட்டங்கள் எங்கே?
இதற்கெல்லாம் உங்களின் பதில் “இல்லை / தெரியாது /யோசிக்கவில்லை” என்றால் பஸ் பயணத்தில் நாம் சந்தித்த அதே நபர் போல்தான் உங்களின் நிலையும்…. இல்லையா?
நீங்கள் மட்டுமல்ல. இந்த உலகில் எதற்காக பிறந்தீர்கள், உங்கள் வாழ்க்கையின் தேவை என்ன, உங்களை படைத்தது யார்? எதற்காக? உங்களின் மரணத்திற்கு பின் என்ன நடக்கப்போகிறது?”– என்ற இவ்வாறான கேள்விகளுக்கெல்லாம் பதிலில்லாத அனைவருமே அந்த நபரைப் போல்தான். பின் அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?? உண்மைக்கு திரையிட்டு இன்னும் எவ்வளவு நாட்கள்தான் நாம் அறியாமையிலேயே இருக்க போகிறோம்?