அநாதையாய் அடக்கமாகிறார்களே!
அனாதைப் பிணங்களை அடக்கம் செய்வதை சேவையாக செய்யும் ரவி சங்கரோடு ஒரு நேர்காணல்…
வாழ்வதே வழிபாடு என்றார் ஒருவர். உழைத்து, பிழைத்து, குடும்பத்துடன் உன்னதமாக, எளிமையாக, நிம்மதியாக வாழ்வதே ஒரு சுகம்தான்! வழிபாடும் ஒரு வித சுகம்தானே. அதனால்தான் வாழ்வதே வழிபாடு என்றார்களோ!
வாழ்வது மூன்று விதம். இப்படித்தான் வாழ வேண்டும் என்பது ஒன்று.
எப்படியும் வாழலாம் என்பது இரண்டு.
இப்படி அப்படி எப்படியோ வாழலாம் என்பது மூன்று.
குறிக்கோள்களோடு வாழ்வது ஒன்றே உன்னதம்.
அதிலும் பிறருக்காக தன் வாழ்வின் ஒரு பகுதியை விட்டுத் தருவது, உழைப்பை, பொருளை பிறருக்கு வழங்குவது என்பது சிலருக்குத்தான் கைகூடும்.
பிறப்பு என்றால் இறப்பும் உண்டு. இறப்பு எப்போது நிகழும் என்பதுதான் குழப்பம். மரணத்தை எவரும் நேசிக்கமாட்டார்கள். எனினும் தவிர்க்க இயலாது. வயது முதிர்ந்த நரை முடி, தோல்கள் திரை போல் சுருங்கிய கிழப்பருவ மரணம் இயல்பானது, இயற்கையானது. பிணக்குகளால் உறவுகளைத் துறந்து, பிழைப்புக்காக வந்த இடத்தில் நிகழும் மரணம் “அநாதை மரணம்.”
மரணிக்கும் போது எவர் ஒருவருக்கு உறவுகள் உடன் இல்லையோ அவர் அனாதை. அந்த உடல் அனாதைப் பிணம் என்ற தகுதியை அரசால் பெற்று விடும். அருகமை அரசு மருத்துவமனைகளில் கண்ட இடம், தேதி, நாள் குறிக்கப்பட்ட அட்டைக் குறிப்புகளோடு ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அரசு தொடர்பானது என்றாலே கோப்பாக இருந்தாலும், என்னவாக இருந்தாலும் அடுக்கி வைப்பதுதான் இயல்பு.
அக்கம் பக்கத்து காவல் நிலையங்களில் இவர்களைப் பற்றிய குறிப்புகளோடு ஜெராக்ஸ் பிரதி ஒட்டப்படும். புறக்கணிக்கப்பட்டவர்கள், விரட்டப்பட்டவர்கள், சொத்து, செல்வம், கைரேகை, கையெழுத்துப் போட வேண்டிய அவசியம் இல்லாதவர்களை பெரும்பாலும் தேட மாட்டார்கள். ஆறுமாதம்தான் அவர்கள் அரசு விருந்தினர். அவர்கள் உடல் குளிர்பதன அறையில் இருக்க அவகாசம். அதன் பின்னர் மண்ணறைக்குப் போக அனுமதி கிடைத்து விடும்.
இவ்வாறு அனுமதி பெறப்பட்ட அனாதை சடலங்களை சேகரித்து உரியவாறு அடக்கம் செய்து வருபவர் ரவிசங்கர். இதுவரை இவர் 4500 சடலங்களை சென்னை நகருக்குள் உள்ள அனைத்து இடுகாடுகளிலும் புதைத்துள்ளார். மனிதன் வாழும்போது எப்படி வேண்டுமானாலும் வாழலாம். மரணத்திற்குப்பின் மரியாதையுடன் அவனது அடக்கம் நடக்க வேண்டும். இதுதான் நான் அறிந்த மனிதம் என்கிறார் ரவிசங்கர். வித்தியாசமான இளைஞர். அதைப் போலவே இந்தப் பணியில் அவருக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்கள் பல. அதனை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
நாம் : சமூக சேவை பல உள்ள போது உங்களுக்குள் இது போன்ற சவ அடக்கத்தின் மீது ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
ரவி சங்கர் : என் பள்ளி நாட்களிலேயே ஆர்வம் ஏற்பட்டு விட்டது. 1987 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த போது மயிலை மி.நி. அலுவலகத்தின் பின்புறம் எனது பள்ளிக் கூடத்திற்குப் பக்கத்தில் இடுகாடு. பள்ளி வளாகத்தில் இருந்து பிணம் எரிப்பதை, புதைப்பதை பார்ப்பேன். அப்படி பார்த்த போது உறவுகளே இல்லாத அனாதைப் பிணங்கள் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு ஒரே குழியில் குவியலாக புதைக்கப்படும் போது என் மனதில் ஒரு விதமான சோகம் உண்டாகும். பாவம் இவர்கள் மனித வாழ்வின் இறுதியில் கூட மரியாதை இல்லாமல் அநாதையாய் அடக்கமாகிறார்களே! என்ற கவலை மனதை ஆட்கொள்ளும்! மனிதனை சக மனிதனே இப்படி அவலமாக நடத்துகிறார்களே! நாம் வளர்ந்து ஆளான பின்னர் நாமே அரசிடம் கேட்டு கௌரவமாக புதைக்க வழி செய்ய வேண்டும் என அப்போதுதான் முடிவு செய்தேன்.
நாம் : உங்கள் வீட்டில் ஒத்துழைப்பு எப்படி?
ரவி சங்கர் : 2007 ஆம் ஆண்டு என் சமூகப் பணிகளை நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் “சமாரிடன் ட்ரஸ்ட்” என்கின்ற ஒன்றை உருவாக்கினேன். என் செயலை முதலில் பாராட்டியவர் என் அம்மா. ஊக்கம் தந்தார். நண்பர்கள் பலரும் பாராட்டினர். எங்கள் அறக்கட்டளை வழியாக, வெறும் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்வது மட்டுமல்ல! பள்ளிக் கட்டணம் செலுத்த இயலாத பிள்ளைகளுக்கு உதவுதல், இரத்த தானம் என்பதும் அடங்கும்.
நாம் : இரத்த தானமும் தருகிறீர்களா?
ரவிஷங்கர் : ஆம்! சில முக்கியமான அறுவை சிகிச்சையின் போது உறவினர்களிடம் ரத்தம் கேட்பார்கள். அந்த சமயங்களில் எங்களிடம் குறிப்பிட்ட குரூப் வேண்டும் என்பவர்களுக்கு தருவோம். இதில் என் உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 120 யூனிட் ரத்தம் ஆண்டுதோறும் தருகிறோம். நான் மட்டுமே இதுவரை 50 முறை ரத்தம் தந்துள்ளேன். இதற்காக எனக்கு சிறப்பு விருதும் தந்துள்ளனர்.
நாம் : அரசு உங்களுக்கு அனாதை உடல்களை எப்படித் தருகிறது?
ரவி ஷங்கர் : சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் தான் நண்பர்களோடு அடக்கம் செய்வோம். ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள் நிகழும் உறவுகளற்ற மரணங்கள். அந்த காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு உடல்கள் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்படும். ஆறுமாத காலம் காத்திருப்பு இதனிடையே எவராவது காணாமல் போன உறவுகள் குறித்து புகார் தந்தால் அவர்களை அடையாளம் காண அழைத்துச் செல்வார்கள். சில உடல்கள் உறவுகளிடம் ஒப்படைக்கப்படும். பெரும்பாலும் சென்னை பெரு நகராக இருப்பதால் பிழைப்புக்காக, வீட்டில் சண்டையிட்டு, மனநலம் பாதித்து உறவே வேண்டாம் என தங்களை மறைத்து வாழ நினைப்பவர்கள் விபத்து, நோய், பசி என பல காரணங்களால் இறந்தால் அவர்களைத் தேடி எவரும் வர மாட்டார்கள். அத்தகையவர்களின் உடல்களை அனுமதி பெற்று நாங்கள் அடக்கம் செய்கிறோம். இதற்காக காவல் நிலையங்கள் எங்களுடன் தொடர்பு கொண்டு இத்தனை உடல்கள் இந்திந்த மருத்துவமனைகளில் உள்ளது என அறிவிப்பார்கள். அதன் பின்னர் அவற்றை நாங்கள் பெற்று உரியவாறு அடக்கம் செய்வோம்.
நாம் : ஒருவர் இன்ன இனத்தவர் என்பது திருமணம், இறப்பு இரண்டில் நிகழும் சடங்குகள் வழியாகத்தான் அறிய இயலும். சடங்கு இல்லாமல் சவ அடக்கம் இல்லை! நீங்கள் எப்படி செய்கிறீர்கள்?
ரவிஷங்கர் : உண்மைதான்! இறந்தவர் இந்துவோ, முஸ்லிமோ, கிறிஸ்தவரோ என்கிற சந்தேகமுண்டு. அதற்காக அடக்கம் செய்வதற்கு முன்பு நீள அகல வாக்கில் பெரிய அளவு குழிகளை வெட்டி தனித்தனியாக மலர் மாலையிட்டு படுக்க வைத்த பின் எங்கள் அறக்கட்டளையின் அங்கத்தினராக உள்ள இந்துக்களுக்கான மந்திரம் ஓதும் ஒரு புரோகிதர், ஒரு மௌலவி, ஒரு ஃபாதிரியார் என மூவரும் அவரவர் சடங்கு மந்திரம் உச்சாடனம் செய்த பின் நாங்கள் கூட்டாக ஊது பத்தி, மெழுகுவர்த்தி, சாம்பிராணி போன்றவற்றை ஏற்றி மண்ணில் புதைத்து அடக்கம் செய்கிறோம்.
நாம் : சவ அடக்கம் செய்வதற்கான செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?
ரவி ஷங்கர் : நல்ல உள்ளங்கள் நிறைய உள்ளதால் சமாளிக்கிறோம். தனிப்பட்ட முறையில் உதவிகள் கேட்பதில்லை. சொந்தப் பணம் செலவிடுவோம். எங்கள் சேவையைக் கவனத்தில் கொண்டு உடல்களை சுமந்து வரும் வாகன ஓட்டிகள் பிறரைப் போல் அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள். மாலை, கற்பூரம், பால், ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, சாம்பிராணி என எளிமையாக செலவிடுவோம். உடல்களுக்கு கௌரவக் குறைபாடு இல்லாமல் பொறுமையாக கையாள்வது என்ற ஒரே எண்ணம் குறிக்கோள்தான். என் நண்பர்கள் பாஞ்சை அரி, மணி, அய்யா என்பவர்கள் மனமார தொடர்ந்து உதவுபவர்கள். எத்தனை உடல்கள் என்ற எண்ணிக்கை தெரிந்தவுடன் அதற்கேற்ப ஏற்பாடுகளை என் நண்பர்கள் செய்து விடுவார்கள்.
நாம் : உங்கள் சேவையில் சொல்லும்படியாக…?
ரவி ஷங்கர் : 3 மாத, 6 மாத, 1 வயதுக் குழந்தைகள் கூட கேட்பாரில்லாமல் அனாதை உடலாக வரும் போது நாங்கள் கலங்கி விடுவோம். இது போல பலமுறை நிகழ்ந்துள்ளது.
நாம் : பொதுவாக இறந்த உடல்களைத் தொட ஒரு கூச்சம் வரும். இதுவோ ஆறுமாதம் குளிர் அறையில் இருந்ததால் தூக்கும் போது உங்கள் உணர்வு எப்படி?
ரவி ஷங்கர் : தொடக்கத்தில் கூச்சம், அருவருப்பு, வீசும் நாற்றம் என பலவும் சங்கடத்தில் ஆழ்த்தியது உண்டு. சில நண்பர்கள் ஆரம்பத்தில் ஆர்வமாக வருவார்கள். உடலைத் தொட்டு முகர்ந்த பின் முகம் மாறி அந்த முறை உதவி செய்து விட்டு அடுத்து அழைக்கும் போது வரமாட்டார்கள். உதவிக்கு யாரையும் வற்புறுத்துவது இல்லை. என்றாவது ஒருநாள் நமக்கும் இதுதான் முடிவு என்பதை உணர்கிறவர்கள் அவர்களாகவே துணிந்து வருவார்கள் என்பதால் யாரையும் வற்புறுத்துவது இல்லை.
நாம் : 4500 சடலங்களை அடக்கம் செய்துள்ளீர்கள். இதில் நீங்கள் நெகிழ்ந்த எதுவும் நடக்கவில்லையா?
ரவி ஷங்கர் : நிச்சயமாக. சில சம்பவங்கள் நடந்தது. காலம் தவறி நாங்கள் அடக்கம் செய்ய உடலைக் கொண்டு சென்றபின் காவல் நிலையம் வந்து சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் காணாமல் போனவர் பற்றிய குறிப்பை பார்த்தவர்கள் தங்கள் உறவு என்று அடையாளம் கண்டு கொள்வார்கள். பின் விசாரணையில் எங்களிடம் ஒப்படைத்த தகவலை அறிந்து பதறித்துடித்து வரும் போது நாங்கள் எங்கள் வேலைகளை முடித்துக் கிளம்பி இருப்போம். வந்தவர்கள் அடையாளம் கூறி எங்கு புதைத்தீர்கள் என்று கண்ணீர் மல்க கேட்டு மீண்டும் நாங்கள் புதைத்த இடத்தை அடையாளம் காட்டிட அழுது புரண்டு அங்கு அவர்கள் கைதொழும் காட்சி எங்களுக்கு கண்ணீரை வரவழைக்கும்….
நேர்காணல் : க. குணசேகரன்
source: http://www.samooganeethi.org