பேரழிவுக்கு முன் பேசுங்கள்!
சிரியச் சிறுவன் அய்லான் குர்தி, துருக்கிக் கடற்கரையில் மண்ணுக்கு முகம் காட்டி கரையொதுங்கிக் கிடந்த புகைப்படம் உலகின் மனசாட்சியையே உலுக்கிவிட்டது.
மேற்காசிய நாடுகளில் நடைபெறும் உள்நாட்டுப் போர் குறித்து வெளியான எத்தனையோ செய்திகள் உலக மக்களிடம் ஏற்படுத்தாத தாக்கத்தை, அந்த இளம் குருத்தின் புகைப்படம் ஏற்படுத்திவிட்டது.
கிரேக்கத்தின் கோஸ் தீவை நோக்கி மத்தியத் தரைக்கடல் வழியாகக் கடலில் சென்றபோது நிகழ்ந்த சோகச் சம்பவம் அது. அய்லான் குர்தியின் அண்ணன், அம்மாவும்கூடக் கடலில் மூழ்கி இறந்துவிட்டனர். இந்த சோகச் செய்தியை உலகுக்கு உறுதிப்படுத்த அவனுடைய தந்தை மட்டுமே உயிர் பிழைத்தார்.
சிரியாவிலிருந்து அடைக்கலம் தேடிச் சென்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்று அந்தச் சின்னஞ் சிறிய குடும்பம். அந்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப் போரில், சுமார் 4 லட்சம் பேர் உயிரிழந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடே தெரிவிக்கிறது.
40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக்கப்பட்டுவிட்டனர். இன்னும் லட்சக்கணக்கானவர்கள் சண்டை நடக்கும் இடங்களில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.
அய்லான் குர்தி என்ற இளம் மானிடப் பூவின் முகம் மண்ணில் புதைந்திருந்ததைக் கண்ட பிறகுதான் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல அரசாங்கங்கள் அகதிகளுக்குத் தங்கள் நாட்டு எல்லைகளைத் திறந்துவிட்டுள்ளன. அகதிகளை வரவேற்கத் தயாராகிவரும் ஐரோப்பிய நாடுகளைப் பாராட்டும் அதே சமயத்தில், சிரியாவின் இப்போதைய நிலைக்குக் காரணமே இதே ஐரோப்பிய நாடுகள்தான் என்பதை மறக்கவும் முடியாது.
2011-ல் சிரியாவில் உள்நாட்டுச் சண்டை மூண்டது முதல் இன்றுவரை இந்த மோதலுக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சி எதையும் சர்வதேசச் சமூகமும், அமைப்புகளும் எடுக்கவேயில்லை. மாறாக, சிரியாவை புவிஅரசியலுக்கான மோதல் களமாக மாற்றுவதிலேயே அவை ஆர்வம் காட்டின. ஈரானுக்கு வேண்டப்பட்டவரான சிரியா அதிபர் பஷார் அல் அஸ்ஸாத்தைப் பதவியிலிருந்து அகற்ற விரும்பிய, சவுதி அரேபியா, கத்தார் போன்ற பணக்கார நாடுகள், அவரை எதிர்த்த வெவ்வேறு கலகக் கும்பல்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய வல்லரசுகள் ஜனநாயக ஆதரவு என்ற போர்வையில், சிரியாவில் ஆட்சி மாற்றம் கோருகிறவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருகின்றன. ஆனால், இந்நாடுகளால் அஸ்ஸாதின் ஆட்சியைக் கவிழ்க்க முடியவில்லை; மாறாக சிரியாவின் சீரழிவுக்குத்தான் காரணமாகியிருக்கின்றன.
சிரிய உள்நாட்டுப் போருக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நேரம் கடந்துவிட்டது. நாட்டின் பாதிப்பகுதி இப்போது ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருக்கிறது. அஸ்ஸாதின் பிடியில் உள்ள பகுதியைக் கைப்பற்றவும் இப்போது முயற்சிகள் தொடங்கிவிட்டன. அதுமட்டும் நடந்துவிட்டால், இன்னும் பெருந்தொகை அகதிகள் வெளியேற்றத்துக்கும் கடும் மனித உரிமை மீறல்களுக்கும் அது வழிவகுக்கும்.
இதைத் தடுக்க வேண்டும் என்றால் இப்பிராந்தியத்தின் வலுவான நாடுகளான துருக்கி, சவுதி அரேபியா மற்றும் மேற்கத்திய நாடுகள் சிரியாகுறித்த தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். அஸ்ஸாத் அரசுடன் பேச வேண்டும். சிரியா தொடர்பான எந்த எதிர்காலத் திட்டத்துக்கும் அஸ்ஸாத்தையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக்கொண்டால்தான் அந்நாட்டில் அமைதி திரும்பும்.