உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்து!
பேரானந்தம் பெருந்துயரம் இவ்விரு காரணங்களால்தான் மனித உணர்ச்சிகள் பற்றி எரிகின்றன.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக நான் மூடத்தனமான அவக்கேடான இரண்டு சப்தங்களை வெளிப்படுத்துவதிலிருந்துத் தடுக்கப் பட்டுள்ளேன்: ஏதேனும் ஒரு நன்மை ஏற்படும்போது (மகிழ்ச்சியில் சப்தமிடுவதிலிருந்து)ம் ஏதேனும் ஒரு துன்பம் நேரும் போது (ஒப்பாரி வைப்பதிலிருந்தும்)ம் தடுக்கப்பட்டுள்ளேன்.
لِكَيْلَا تَأْسَوْا عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍِ
“உங்களுக்கு எந்த நஷ்டம் ஏற்பட்டாலும் நீங்கள் மனம் துவண்டுவிடக்கூடாது. அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருப்பவற்றைக் கொண்டு நீங்கள் பூரித்துப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்!” (குர்ஆன் 57:23)
மேலும் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: “துன்பம் ஏற்பட்ட உடனேயே மேற்கொள்ளப்படுவதுதான் பொறுமை.” (புகாரி).
இன்பம் துன்பம் ஆகிய இரண்டு நிலைகளிலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடியவன்தான் ‘வீரன்’ எனும் சொல்லுக்குத் தகுதியானவன். உணர்ச்சிகளுக்கு கடிவாளமிடுவதன் மூலம் உண்மையில் அவன் தனது ஆன்மாவிற்கு நிம்மதியையும், வெற்றியையும் சுவைக்கச் செய்து விட்டான். இறைவன் மனிதப் பன்புகள் குறித்து திருமறையில் கூறுகிறான்:
وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي ۚ إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌِ
“நிச்சயமாக மனிதன் (அதிவிரைவில்) மகிழ்ச்சியடையக் கூடியவனாகவும் பெருமையடிப்பவனாகவும் இருக்கிறான்” (குர்ஆன் 11:10)
இறைவனை வணங்கக் கூடியவர்கள் இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகக் காண்பார்கள் நல்லது நடக்கும் போது இறைவனுக்கு நன்றி கூறுவார்கள்.சோதனைகள் வரும்போது பொறுமையை மேற்கொள்வார்கள்.
எளிதில் உணர்ச்சி வசப்படுதல் மனிதனை எளிதில் சாகடித்து விடும்; அது அவனை தூங்க விடாமல் துன்புறுத்திக் கொண்டேயிருக்கும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவன் கோபம் கொள்ளும் போது வெறிபிடித்தவனைப் போல மாறி விடுவான்; பிறரை மிரட்டுவான்.சுயக்கட்டுப்பட்டை இழந்து, மூச்சு வாங்கி,நிலை தடுமாறுவான். மற்றவர்களுக்கு அநீதியிழைப்பான். அதைப்போல மகிழும் போது எல்லை மீறி,தன்னையே மறந்து விடுவான்.
எவர் மீதாவது அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டால் அவரைத் திட்டித் தீர்த்து விடுவான். அவர் செய்த நல்ல காரியங்களையெல்லாம் மறந்து, அவரது பெயருக்குக் களங்கம் ஏற்ப்படுத்துவான். அதே நேரம் எவரையாவது நேசிக்க ஆரம்பித்து விட்டால் அவருக்கு மரியாதைப் பதக்கங்களை அணிவித்து அழகு பார்ப்பான்; அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று விடுவான்.
உன் நண்பனை அளவோடு நேசி! ஒருநாள் அவன் உன் பகைவனாக மாறலாம்.
உன் பகைவனை அளவோடு வெறு! ஒரு நாள் அவன் உன் நண்பானாக ஆகலாம்.
“இறைவா கோபம், மகிழ்ச்சி இரண்டு நிலைகளிலும் நான் நடுநிலையுடன் செயல்பட உன்னிடம் வேண்டுகிறேன்” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்திப்பார்கள்.
எனவே, உணர்ச்சிகளை அடக்கி, அறிவை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவரும் ஒவ்வொன்றுக்கும் அதன் தகுதியறிந்து முக்கியத்துவம் அளிப்பவரும்தான் உண்மையை உண்மையாக உணர்ந்தவர்; நேர்வழியை அறிந்தவர்; சத்தியப் பதையில் நடப்பவர்.
لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنْزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ ۖ وَأَنْزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ مَنْ يَنْصُرُهُ وَرُسُلَهُ بِالْغَيْبِ ۚ إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌِ
“நாம் நம்முடைய தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்துக் கொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம்.” குர்ஆன் 57:25)
இஸ்லாமிய மார்க்கம் சமநிலைப் பண்புகளையும், ஒழுக்க நெறிகளையும் கொண்டு வந்திருக்கிறது.நேர்மையான, நடுநிலையான தூய வாழ்க்கை நெறியை நமக்குத் தந்திருக்கிறது.
“இவ்வாறே உங்களை நாம் ‘உம்மத்தன் வஸத்தன்’-சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம்.” குர்ஆன் 2:143)
சட்டங்களில் நீதி நலைநாட்டப்படுவது எவ்வளவு முக்கியமோ அவ்வாறே நமது உணர்வுகளிலும் செயல்பாடுகளிலும் நடுநிலையை மேற்கொள்வது அவசியம். ஏனெனில், மார்க்கம், உண்மை,சட்டங்கள், செயல்கள், வார்த்தைகள், பண்புகள் ஆகிய அனைத்திலும் நடுநிலை,நீதி,நேர்மை,-இதுவே மார்க்கத்தின் அடிப்படை.
وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا ۚ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُِ
“மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகிவிட்டது – அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை – அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.” (குர் ஆன் 6:115)
source: http://valaiyukam.blogspot.in/2012/02/blog-post_16.html