இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அரேபியர்களுக்காக வகுக்கப்பட்டதா?
அகில உலகுக்கும் அருட்கொடையாக வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் உம்மை மனிதகுலம் முழுமைக்கும் தூதராக அனுப்பியள்ளேன் என்று பல இடங்களில் கூறுகின்றான்
(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 34: 28)
ஆனால் தற்காலத்தில் இஸ்லாத்தை விமர்சிக்கக்கூடிய சிலர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் வகுத்தளித்த சட்ட திட்டங்கள் யாவும் அக்காலகட்டத்தில் அரேபியர்களின் வசதிகளுக்கேற்பவே முழுக்க முழுக்க அவர்களை கவனத்தில் கொண்டு அவர்களுக்காவே வகுக்கப்பட்டது என்றொறு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.
அவர்கள் இப்படிக் கூறுவதற்குக் காரனம் முஸ்லீம்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில அடையாளங்களை பார்த்துத்தான். குறிப்பாக தொப்பி தாடி ஜிப்பா (முஸ்லீம்களில் சிலர் அணியும் முக்கால் அல்லது முழு நீலங்கிச் சட்டை) பலதாரமணம் தொடங்கி பேரித்தம்பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பதையும் இஸலாத்தின் இறுதிக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற முஸ்லீம்கள் மக்காவிற்க்கு செல்வது உட்பட இன்னும் சில காரணங்களைச் சுட்டிக்காட்டி இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் அரேபியர்களுக்காவே வகுக்கப்பட்டது என்று வாதிடுகின்றனர்.
இவர்கள் சுட்டிக்காட்டக்கூடிய விஷயங்களில் தொப்பி ஜிப்பா போன்றவை உட்பட சில காரியங்கள் சில முஸ்லீம்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் மற்றுள்ள இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் ஆனாலும் சரி வணக்க வழிபாடுகள் ஆனாலும் சரி அவையெல்லாமே உலக அழிவு நாள் வரை தோன்றக்கூடிய அகில உலகமக்கள் அனைவறையும் கருத்தில் கொண்டு அவர்கள் அன்றாடம் தங்கள் வாழ்க்கையில் கடைபிடுத்தொழுகக்கூடிய வகையில் மிக எளிமையானதாகவே அல்லாஹ் தன்தூதர் மூலம் உலகுக்கு அளித்துள்ளான்
சரி, இனி இவர்கள் கூறுவதுபோல் சில இஸ்லாமியச் சட்டங்கள் அரேபியர்களைக் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டதா என்று பார்ததால் பல இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் அரேபியர்களின் அன்றைய ஆச்சாரங்களுக்கும் அவர்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட சில காரியங்களுக்கும் எதிராக உள்ளதை குர்ஆன் ஹதீஸில் வரக்கூடிய சில சட்டதிட்டங்களை காணும்பொழுது புரிந்து கொள்ள முடிகிறது அதுபோன்றவைகளில் ஒன்றுதான் முஸ்லீம்களுக்கு தினசரி ஐந்து நேரம் கடமையாக்கப்பட்டுள்ள தொழுகைகளுக்கு முன்பு செய்யும் உளூ (கை கால் முகம் உட்பட உடம்பின் சில பாகங்களை கழுவி அங்கசுத்தி செய்வது)
தொழுகைக்கு உளூ எவ்வளவு முக்கியம் என்றால் உளூ இல்லாமல் தொழப்படும் எந்த தொழுகையும் இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்படுவதில்லை இந்த அளவுக்கு முக்கியமான உளுவை முறிக்கக்கூடிய காரணங்கள் சிலவற்றுள் ஒன்றாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் ஒட்டகக்கறி சாப்பிடுவதை குறிப்பிட்டுள்ளார்கள் இதை கீழ்க்காணும் ஹதீஸின் மூலம் தெளிவாக அறியலாம்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் (வந்து), “ஆட்டிறைச்சி சாப்பிட்டால் நான் உளூச் செய்ய வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீர் விரும்பினால் உளூச் செய்து கொள்க! இல்லையேல் உளூச் செய்யத் தேவையில்லை” என்று சொன்னார்கள். மீண்டும் அவர், “ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் நான் (மீண்டும்) உளூச் செய்ய வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஆம்; ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூ செய்துக் கொள்க!” என்றார்கள். அவர், “ஆட்டுத் தொழுவத்தில் நான் தொழலாமா?” என்று கேட்டார். அதற்கு, “ஆம் (தொழலாம்)” என்றார்கள். அவர், “ஒட்டகத் தொழுவத்தில் தொழலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “கூடாது” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு)
குறிப்பு:
உணவில், ஒட்டக இறைச்சியைத் தவிர எதுவும் உளூவை முறிக்காது. (ஸஹீஹ் முஸ்லீம் 539)
ஆக ஒருவர் உளு செய்தபிறகு ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் மீண்டும் உளு செய்த பிறகே தொழுகயை நிறைவேற்ற வேண்டும். அதே நேரம் ஒருவர் உளு செய்த பிறகு ஆடு மாடு கோழி போன்றவைகளின் இறைச்சியை சாப்பிட்டால் அவர் மீண்டும் உளு செய்யாமலேயே தொழுகையை நிறைவேற்றலாம் இதை கீழ்க்காணும் ஹதீஸின் மூலம் அறியலாம்
அம்ர் இப்னு உமய்யா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்:
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தம் கரத்திலிருந்து ஆட்டுச் சப்பையை(க் கத்தியால்) துண்டுபோ(ட்டுச் சாப்பி)டுவதைப் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே, அவர்கள் அந்த ஆட்டுச் சப்பையையும் அதைத் துண்டிக்கப் பயன்படுத்திய கத்தியையும் (அப்படியே) கீழே போட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள். (புதிதாக) அங்கசுத்தி (உளு) செய்யவில்லை (ஸஹீஹ் புகாரி 5408)
இதைக் கவனத்தில் கொண்டு இனி விஷயத்திற்க்கு வருவோம் உலகின் மிக மிகப் பெரும்பாலான பகுதிகளில் இல்லாததும் அந்தப் பகுதி மக்கள் தாங்கள் உணவாக வாழ்நாளில் ஒருமுறை கூட உண்ணாததும் தான் ஒட்டகமும் ஒட்டக இறைச்சியும் ஆனால் அரேபியர்களுக்கு அவை அப்படியல்ல அன்றைய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் காலந்தொட்டு இன்றைய இந்த நவீன காலம் வரையிலும் அரேபியர்களின் வாழ்வில் அன்றாடத்தேவைகளுக்காகவும் அவர்கள் உண்ணும் பிரதான அசைவ உணவாகவும் உள்ளதால் அவர்களின் வாழ்வில் இரண்டறக்கலந்து விட்ட ஒரு பிராணிதான் ஒட்டகம்
இந்த அளவிற்க்கு அரபிகளின் முக்கிய அசைவ உணவான ஒட்டகக்கறியைச் சாப்பிட்டால் உளு முறிந்து விடும் என்பதால் ஒருவர் உளு செய்துவிட்டு ஒட்டக இறைச்சியை சாப்பிட்டால் அதற்க்காக அவர் மீண்டும் உளு செய்துவிட்டுத்தான் தொழ வேண்டும் என்பதிலிருந்தும் உலகின் பல பாகங்களில் முக்கியமான அசைவ உணவாக உட்க்கொள்ளப்படும் ஆடு மாடு கோழி போன்றவற்றின் இறைச்சியைச் சாப்பிட்ட ஒருவர் அவர் சாப்பிடுதற்க்கு முன்பு செய்த உளுவே போதும் மீண்டும் உளு செய்யவேண்டியதில்லை என்பதிலிருந்தே இது அரேபியர்களுக்கு பாதகமாகவும் மற்றுள்ளவர்களுக்குச் சாதகமாகவும் இருப்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் அறாயலாம் எனவே அன்புள்ளவர்களே கீழ்க்கானும் இறை வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல்,
(முஹம்மதே!)
நற்செய்தி கூறுபவராகவும்,
எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள்
அனைவருக்குமே
உம்மை அனுப்பியுள்ளோம். எனினும்
மனிதர்களில் அதிகமானோர் அறிய
மாட்டார்கள். (அல்குர்ஆன் 34 28)
இஸ்லாமியச்சட்டதிட்டங்கள் அரபியர்களின் வசதிக்கேற்ப வகுத்தளிக்கப்பட்டதல்ல அவை உலக முடிவு நாள் வரைத் தோன்றக்கூடிய ஒட்டுமொத்த மனிதகுல நன்மையைக் கருத்தில் கொண்டே அகிலங்களின் இறைவனால் தொகுக்கப்பட்டு அவனது இறுதித்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் மூலம் உலகுக்கு வழங்கப்பட்டதே என்பதை ஐயமற அறியலாம்
அல்லாஹ் மிக அறிந்தவன்
source: http://neermarkkam.blogspot.in/2011/08/blog-post.html