அறிவுத் திறனும் செயல்திறனும் மேம்பட தூக்கம் அவசியம்!
‘அதிகச் சுமை குறைவான தயாரிப்பு’ என்கிற பொருளில் அமைந்த புதிய புத்தகத்தைப் படித்தபோது இன்றைய அமெரிக்க உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர்களின் நிலையை எண்ணி மிகவும் பரிதாபப்பட்டேன். போட்டிகள் அதிகமாகிவிட்ட இந்நாளில் நல்ல உயர்நிலைக் கல்வியும் வேலையும் பெற கடினமாக பாடங்களைப் படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டுவிட்டனர்.
பள்ளிக்கூடத்திலும் வீட்டிலும் மாணவர்களை எப்போதும் “படி” “படி” என்றே நச்சரிக்கின்றனர். இந்த இம்சை தாங்காமல் சில மாணவர்கள் ஊக்க மருந்துகளைச் சாப்பிடுகின்றனர், சிலர் படிப்பதாக நடித்து ஏமாற்றுகின்றனர்.
இப்போதைய உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தூக்கம் வராமலோ தூங்க முடியாமலோ மிகவும் அவதிப்படுகின்றனர் என்ற தகவல் மிகவும் கவலையை அளிக்கிறது. உடல் நலமும் உள்ள நலமும் சிறக்க நல்ல தூக்கம் மிகமிக அவசியம்.
உணவு, ஓய்வு, உடல் பயிற்சி எந்த அளவுக்கு முக்கியமோ அவ்வாறே ஆழ்ந்த உறக்கமும் அவசியம். மூளை இயல்பாக வேலை செய்ய ஓய்வும் தூக்கமும் அவசியம். விடலைப் பருவத்திலிருந்து வாலிபனாக மாற்றுவதில் தூக்கத்தின் பங்கு முக்கியம். நல்ல தூக்கம் இல்லாவிட்டால் உடல் வனப்பும் குறைந்து மன அழுத்தமும் மிகுந்துவிடும்.
இப்போது பெரும்பாலான மாணவர்கள் பள்ளி முடிந்ததும் பெற்றோர் ஏற்பாடு செய்யும் தனிப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்கின்றனர். கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்காகவும் தரமான உயர்கல்வி நிலையங்களில் சேருவதற்கான கல்வித்தகுதியைப் பெறுவதற்காகவும் இத் தனிப்பயிற்சி வகுப்புகள் அவசியம் என்று பெற்றோர்கள் நம்பத் தொடங்கிவிட்டனர்.
இதனால் படிப்பதைவிட வெவ்வேறு விதமான வகுப்புகளுக்குச் செல்லவும் அவரவர் வைக்கும் தேர்வுகளுக்குத் தயாராகவும் பெரும்பகுதி நேரத்தை மாணவர்கள் செலவிடுகின்றனர்.
இதனால் விளையாட்டு என்பது அறவே பலியாகிறது, தூக்க நேரத்திலும் கணிசமாக களவாடப்படுகிறது. அத்துடன் சிறுசிறு பதற்றங்களும் பெரும் பதற்றங்களும் எதிர்காலத்தைப் பற்றிய சூனிய உணர்வுகளும் பெருகிவிடுகின்றன.
சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் தூங்கக் கற்றுத்தருவதற்காகவே ஒரு நிபுணரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறது, ஒரு பாடத் திட்டத்தையும் தயார் செய்திருக்கிறது. தூக்கம் பற்றி சிறு பாடல்களை எழுதி மாணவர்களையே பாடச் சொல்கின்றனர். ‘தூக்கத் தூதர்கள்’ என்று சிலரை இதற்காகவே நியமித்துள்ளனர். இப்படியெல்லாம் முயற்சி செய்தால்தான் இமைகளைச் சிறிதாவது இழுத்து மூட முடிகிறது என்கிறார்கள்.
தூக்கத்தின் அருமைதனைத் தெரிவிக்க புதிய கோஷங்களை எழுப்பும் போட்டியும் நடத்தப்படுகிறது. ’லைஃப் ஈஸ் லௌசி, வென் யூ ஆர் டிரௌசி’ (Life is lousy when you are drowsy) என்ற வாக்கியம் இப்போது பிரபலம். தூக்கமில்லாமல் சோர்ந்து விழுந்தால் வாழ்க்கையும் சோம்பிவிடும் என்பதே இதன் பொருள்.
தூக்கத்தைத் தர தூதர்களா?
தூக்கத்தை ஊக்குவிக்க தூதர்களா? தூங்கச் செய்வதற்கு குறும் பாடல்களா? நினைக்கவே வியப்பாக இருக்கிறது. 1980-களில் நான் பள்ளியில் படித்தபோதும் தூக்கம் ஒரு பிரச்சினையாகத்தான் இருந்தது; தூக்கம் வராத பிரச்சினை அல்ல,
பொழுது விடிந்து 2 அல்லது 3 மணி நேரம் ஆனால்கூட படுக்கையைவிட்டு மாணவர்கள் எழுவதில்லை என்பதுதான் அப்போதைய பிரச்சினை. தடியால் அடிப்பார்கள், தண்ணீரைப் போர்வை மீது ஊற்றுவார்கள். ஆனால் இப்போதைய கவலை எப்படி எழுப்புவது என்பதல்ல, எப்படித் தூங்க வைப்பது என்பதுதான். இது ஒன்றே போதும் பள்ளிப்பருவம் கொடூரமாகிவிட்டதைப் புரியவைக்க.
குழந்தைகளுக்கு உற்ற தோழனாக இருந்து அவர்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டிய பெற்றோரே, சூறாவளியாக சுற்றி வந்து அவர்களை உளவியல்ரீதியாகப் புரட்டிப்போடுகின்றனர்; களைத்து விழும் அளவுக்குத் தேர்வுகளுக்குத் தயார்படுத்துகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த மேடலின் லெவைன், பால் டஃப் ஆகியோரின் நூல்களும் இதையே சுட்டிக்காட்டியுள்ளன. இந்த வெறி அடங்கவில்லை என்பதால், ‘குழந்தையை வயதுவந்தவனாக வளர்ப்பது எப்படி?’ என்ற தலைப்பில் ஜூலி லித்காட்-ஹைம்ஸ் கடந்த மாதம் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘தோல்வியின் பரிசு’ என்ற பெயரில் ஜெஸ்ஸிகா லாஹி எழுதும் புத்தகம் விரைவில் வரவிருக்கிறது.
“தூக்கத்தை இழப்பதென்பது பைத்தியக்காரத்தனத்தின் ஒரு பகுதிதான். குழந்தைப்பருவத்தின் இயல்பான குதூகலத்தையும் உற்சாகத்தையும் விளையாட்டுத் தனத்தையும் கற்பனைச் செறிவையும் கலந்துறவாடும் பண்பையும் பறிப்பதில் புதிய பாடத்திட்டத்துக்கும் கல்விமுறைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது” என்று ‘டைம்ஸ்’ பத்திரிகைக் குறிப்பிட்டிருக்கிறது.
13 மாதங்களில் 6 தற்கொலைகள்
பென்சில்வேனியா பல்கலைக்கழகக் கல்லூரி வளாகத்தில் 13 மாத கால இடைவெளியில் 6 மாணவர்கள், மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நன்றாகப் படித்து முன்னுக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு, சிறிய பிரச்சினைகள்கூட மலையளவுக்குத் தெரிவதால், மருட்சி அடைந்து விபரீத முடிவெடுத்துவிடுகிறார்கள். அவர்களுக்குத் தொடர்பே இல்லாத, அவர்கள் வருத்தப்படவே கூடாத அற்பப் பிரச்சினைகள் அவர்கள் மீது பெரிய சுமையாக ஏற்றப்படுகிறது.
‘பெடியாட்ரிக்ஸ்’ என்ற மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில் 14 வயது முதல் 17 வயது வரையிலான அமெரிக்க மாணவர்களில் சுமார் 55% பேர் இரவில் 7 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகின்றனர் என்கிறது. ‘தேசிய தூக்க அறக்கட்டளை’ இந்த வயதில் உள்ள மாணவர்கள் குறைந்தபட்சம் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரையில் தூங்க வேண்டும் என்கிறது. ஆனால் ஏராளமான மாணவர்கள் ஒரு நாளைக்கு 5 மணி நேரம்தான் அதிகபட்சம் தூங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட் போன், டேப்லெட் போன்றவையும் அவர்களுடைய நேரங்களைக் கணிசமாக விழுங்கிவிடுகிறது. எனவே படிப்பதற்கான நேரம் குறைந்துவிடுவதால், வீட்டுப்பாடங்களை விரைந்து முடிக்க வேண்டுமே என்ற பீதி பெரிதாகிறது.
தன்னுடைய வகுப்பில் உள்ள நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண் வாங்க வேண்டும், ஆசிரியர் தரும் பாடங்களை வேகமாக முடிக்க வேண்டும், வீட்டில் சொல்லும் புதிய வகுப்புகளுக்கும் போய் பல்துறை வித்தகனாக வேண்டும் என்ற சுமை மாணவர்களைப் பெரிய பூதமாய் தொடர்ந்து அழுத்துகிறது.
“குழந்தைகள் எதையுமே படிக்காமல் சராசரிக்கும் கீழே மக்காக இருக்க வேண்டும் என்று யாருமே விரும்புவதில்லை. படிப்பில் சாதிப்பது என்றால் எது, எப்படி என்பதில் மறுவிவாதம் தேவை” என்று ஜெஃப்ரி குளூகர் ‘டைம்’ பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.
ஒரு செயலை உரிய காலத்தில் செய்து முடிக்காவிட்டால், அதிக மதிப்பெண் எடுக்காவிட்டால், தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் அந்தத் தோல்வியைத் தாங்கும் மனப்பக்குவம்கூட இல்லாமல் வெற்றி அல்லது சாவு என்ற மனநிலைக்கு மாணவர்களைத் தள்ளுவதுதான் இப்போதைய சூழல்.
தூக்கம் என்பது மாணவர்களுடைய படிப்புக்குத் தடையான சுவர் அல்ல, அவர்களுடைய லட்சியக் கனவுகளுக்கான நுழைவாயில். அவர்களுடைய கற்பனை பெருகவும் நினைவாற்றல் வலுப்படவும் அவசியம். அந்தத் தூக்கம் பெருக நம்மாலானவற்றைச் செய்வோம்.
-பிராங்க் புரூனி, தமிழில்: சாரி
source: http://tamil.thehindu.com/