விவாகரத்து வாழ்க்கையின் இரண்டாவது துயரம்
மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் இரண்டாவது துயரச் சம்பவம் விவாகரத்து… முதல் சம்பவம்? திருமணம்!’
விவாகரத்தைப் பற்றி இப்படி வேடிக்கையாகச் சொன்னாலும், அதன் பின்னணியில் உள்ள வலியும் வேதனையும் சம்பந்தப்பட்ட இருவரால் மட்டுமே உணரமுடியும். ‘ஆண்கள் திருமணத்துக்கு முன் நடப்பது போல, திருமணத்துக்குப் பின் நடந்தால் பெரும்பாலான விவாகரத்துகள் நடைபெறாது. ஒரு பெண் திருமணத்துக்குப் பின் நடந்து கொள்வது போல, முன்னர் நடந்து கொண்டால் பெரும்பாலான திருமணங்களே நடைபெறாது’ என எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.
‘விவாகரத்துக்குக் காரணம் ஆணா, பெண்ணா’ என்கிற கேள்விக்கு இடமின்றி, இருவரின் பங்கும் சமமாக இருப்பதுதான் நிஜம். ஒரு வழக்கறிஞருக்குப் பெரும் சவாலாக அமைவது விவாகரத்து வழக்குகளே. ஏனென்றால் சட்ட நுணுக்கங்களைத் தாண்டி மனிதர்களின் மனப்போராட்டங்களை எதிர்கொள்வதும், அவற்றைப் பக்குவமாகக் கையாண்டு, நல்ல ஆலோசகராக செயல்படுவதும் அவசியம். என்னைப் பொருத்த வரை, விவாகரத்து வழக்கில் வெற்றி என்பது ஒரு மாயையே.
இரு தரப்பினருமே இழப்பை சந்திக்கிறார்கள். அதனால் விவாகரத்து என்ற முடிவு அவசியம் தேவை என்று வரும்வரை அதனைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது சிறப்பு. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் ஒருங்கிணைந்து வாழக்கூடிய ஒரு ஜனநாயக நாடு. எனவே, ஒரு தனி மனிதனுக்குத் தேவையான திருமண மற்றும் விவாகரத்துச் சட்டங்கள், சொத்து ரிமைச் சட்டங்கள் போன்ற சிவில் சட்டங்கள் அவரவர் சார்ந்த மதத்தின் அடிப்படையிலேயே நடைமுறையில் உள்ளன.
விவாகரத்தைப் பொறுத்த வரை, இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் அனைவருக்கும் ‘இந்து திருமணச் சட்டம் 1955’ பொருந்தும். கிறிஸ்தவர்களுக்கு 1869ல் இயற்றப்பட்ட விவாகரத்துச் சட்டம் பொருந்தும். பார்சி மதத்தினருக்கு 1936ம் ஆண்டு இயற்றப்பட்ட பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் பொருந்தும். இஸ்லாமியர்களுக்கு அவர்கள் ஷரியத் மற்றும் 1939ம் ஆண்டு இயற்றப்பட்ட இஸ்லாமிய திருமணங்கள் ரத்துச் சட்டமும் பொருந்தும்.
வெவ்வேறு மதத்தைச் சார்ந்த இருவர் திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்காக 1954ம் ஆண்டு இயற்றப்பட்டுள்ள சிறப்பு திருமணச் சட்டம் பொருந்தும். இவ்வளவு சட்டங்கள் இருப்பினும் எந்த அடிப்படையில் எந்தக் காரணத்துக்காக விவாகரத்து கோர இயலும் என்று பார்க்கும்போது பெரும்பாலான காரணங்கள் அனைத்துச் சட்டங்களுக்கும் பொதுவாகவே உள்ளன.
விவாகரத்து கோர அனைத்துச் சட்டங்கள் கூறும் அடிப்படைக் காரணங்கள் :
1. திருமண உறவைத் தாண்டிய தவறான உறவு முறை.
2. உடலாலும் மனதாலும் ஏற்படுத்துகிற கொடுமை.
3. தகுந்த காரணம் இன்றி பிரிந்து செல்லுதல். மேலும் குறிப்பிட்ட காலம் வரை இணையாமல் இருத்தல்.
4. திருமணம் செய்து கொள்ளும்போது பின்பற்றும் மதத்தை மாற்றி வேறு மதம் ஏற்றுக் கொள்ளுதல்.
5. மனநலப் பாதிப்பு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய்.
6. தொழுநோய்.
7. பாலியல் நோய்.
8. உலக வாழ்வை துறந்து துறவறம் மேற்கொள்ளுதல்.
9. உயிருடன் இருப்பதாக 7 ஆண்டுகள் வரை கேள்வியுறாமல் இருப்பது.
10. தற்காலிக நீதிமன்ற பிரிவினை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பின் ஒரு ஆண்டுக்கு மேல் ஒன்று சேராமல் இருத்தல்.
11. கிரிமினல் குற்றத்துக்காக 7ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை பெறுதல்.
12.திருமண உறவில் அதாவது, உடல் உறவில் ஈடுபடாமல் இருப்பது.
மேற்கூறிய இந்த அடிப்படைக் காரணங்களுக்காக இரு சாராரும் (ஆண்களும் சரி, பெண்களும் சரி) விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம்.
விவாகரத்துச் சட்டங்களின் சில பிரிவுகள் கூறும் அடிப்படைக் காரணங்களில் பெண்கள் மட்டுமே விவாகரத்து கோர இயலும்.
1. கணவன் கற்பழிப்பு, இயற்கைக்கு மீறிய தவறான உடல் உறவு வைத்துக் கொள்ளுதல் (ஆண் ஆணுடனோ, மிருகத்துடனோ உடலுறவு வைத்துக்கொள்ளுதல்).
2. ஒரு திருமணம், சட்டப்படி நிலுவையில் இருக்கும் போதே மறுமணம் செய்து கொள்ளுதல்.
3. ஜீவனாம்சம் பெற்றுக்கொண்டு இருந்தும் கணவன் திருமண உறவில் ஈடுபடாமல் அதற்கான கடமை ஆற்றாமல் இருக்கும் போது (இது பற்றி ‘மெயினன்டனன்ஸ்’ சட்டம் பற்றி பேசும்போது விரிவாகப் பார்ப்போம்).
4.ஒரு பெண் 15 வயதுக்குள் திருமணம் செய்து வைக்கப்பட்டால் அவள் 18 வயதுக்கு முன் அதனை ரத்து செய்யக் கோருதல்.
திருமண உறவை தாண்டிய தவறான உறவுமுறை
திருமணமான ஆணோ, பெண்ணோ சட்டப்படி அவர்கள் திருமணம் நிலுவையில் இருக்கும் போது, ஒரு ஆண் ஒரு பெண்ணுடனோ, ஒரு பெண் ஒரு ஆணுடனோ உடலுறவு கொள்ளுவது விவாகரத்து கோர ஒரு அடிப்படை காரணமாக அமைகிறது. பெரும்பாலும் இந்த தவறுக்காக சட்டம் ஏற்றுக் கொள்ளக்கூடிய சாட்சியங்களை சேகரிப்பது மிகவும் சிரமமான ஒரு செயல். ஒரு நபருக்கு தன்னுடைய துணை, தகாத உறவில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகம் ஏற்படும்போது உடனே உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுவ தைக் காட்டிலும், ‘அந்த செய்தி உண்மைதானா’ என்பதைக் கண்டறிந்து ஒரு வேளை மன்னிக்கும் மனப்பக்குவம் இருப்பின் அந்தத் துணையுடன் வெளிப்படையாக பேசி நிலவரத்தை சரி செய்யலாம்.
அல்லது இந்தத் தவறான உறவுமுறையினால் அவருக்கு மன அதிர்ச்சியும் மன அழுத்தமும் ஏற்படும் என்றால் விவாகரத்து கோர முடிவு செய்யும் பட்சத்தில் அதற்கான ஆதாரங்களை (தொலைபேசி உரையாடலின் பதிவு, அந்த நபருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள், மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். மூலம் ஏற்பட்ட பரிவர்த்தனைகள்) போன்றவற்றை சேகரித்து, அவற்றின் உதவியுடன் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம்.
ஒரு கணவர் தன் மனைவியுடன் தகாத உறவு வைத்துக்கொள்ளும் அந்த நபரையும் மனுவில் இரண்டாவது எதிராளியாக சேர்க்கலாம். மேலும் அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அதுபோல ஒரு மனைவி, தன் கணவருடன் உடலுறவு வைத்துக் கொண்டிருக்கும் பெண் மீது, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய இயலாது. மேலும், இந்த தகாத உறவுமுறையினால் மன உளைச்சல் ஏற்படுமெனில் அந்த நபர் மனதளவில் ஏற்பட்ட கொடுமையின் கீழும் விவாகரத்து தாக்கல் செய்யலாம்.
மேலும் குழந்தைகள் இருப்பின், இந்த தகாத உறவு முறையில் ஈடுபடும் நபரின் பராமரிப்பிலிருக்குமாயின், இந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு குழந்தைப் பராமரிப்பை அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள எதிராளிக்கு போதிய காரணமாக அமையும். இவ்வாறு தவறான உறவு முறையில் ஈடுபடும் மனைவிக்கோ, கணவனுக்கோ எதிராளியிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் உரிமையும் ரத்தாகும். இந்து திருமணச் சட்டம்,கிறிஸ்தவர்களுக்கான விவாகரத்துச் சட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம், சிறப்புத் திரு மணச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் திருமண உறவை தாண்டிய தவறான உறவு முறையில் ஈடுபடுபவர்கள் மீது, பாதிக்கப்பட்டவர்கள் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய அடிப்படை காரணமாக கூறப்பட்டுள்ளது.
அனிதா வெர்சஸ் அனில்குமார் ரத்தோர் :
இந்து திருமணச் சட்டத்தின் கீழ் 1976 சட்டத் திருத்தத்துக்கு முன் ஒரு விவாகரத்து தாக்கல் செய்ய தவறான உறவுமுறையில் தொடர்ந்து வாழ்ந்திருத்தல் அவசியம். அச்சட்டத் திருத்தத்துக்குப் பின் திருமண உறவைத் தாண்டிய தன்னிச்சையான உடலுறவு ஒரு முறை மேற்கொண்டாலும் பாதிக்கப்பட்டவர் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம் என்று இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தன் மனைவி திருமண உறவை தாண்டிய தகாத உறவு முறையில் ஈடுபட்டதற்கான அடிப்படை காரணத்துக்காக விவாகரத்து மனு தாக்கல் செய்கிறார் கணவர்.
மேலும் அவர் மனைவி தனக்காகவும் தனது கணவரின் மூலம் பிறந்த குழந்தைக்காகவும் ஜீவனாம்சம் கோரி மனு செய்கிறார். அம்மனுவில் கொடுக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் திருமண உறவை தாண்டிய தவறான உறவு முறையில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதால், குழந்தைக்கு மட்டுமே நீதிமன்றம் ஜீவனாம்சம் வழங்கியது. மனைவிக்கு ஜீவனாம்சம் மறுக்கப்பட்டது. மேற்கூறிய இந்த நீதிமன்ற தீர்ப்பையே, கணவன் தன் விவாகரத்து வழக்கிலே சான்றாக எடுத்து இயம்பியதை கீழமை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, ‘திருமண உறவை தாண்டிய தவறான உறவு முறையில் ஈடுபட்டது நிருபிக்கப்பட்டால் ஜீவனாம்சம் மறுக்கப்பட்டது சரியே’ என்ற கூற்றை உறுதிப்படுத்தியது.
உடலாலும் மனதாலும் ஏற்படுத்துகிற கொடுமை :
விவாகரத்துக்காக இந்திய நீதிமன்றத்தில் பதிவாகும் பெரும்பாலான வழக்குகள் (கிட்டத்தட்ட 70 சதவிகிதம்) இந்தக் காரணத்தின் கீழே தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால், இந்த வன்கொடுமைக்கு எந்தச் சட்டத்தின் கீழும் விலாவாரியாக விளக்கம் அளிக்கப்படவில்லை. கொடுமை என்பது உடல்ரீதியாக அடித்தல், உதைத்தல், சாட்டை போன்ற பொருளைக் கொண்டு அடிப்பது, கன்னத்தில் அறைவது, குத்துவது, சூடு வைப்பது, துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களை அல்லது கொடிய அமிலம் போன்றவற்றின் மூலம் உடலுக்குப் பங்கம் விளைவிப்பது போன்றவை ஆகும்.
மனதளவிலான கொடுமையின் கீழ் சந்தேகப்படுதல், நச்சரித்தல், கொடுமையான சொற்களால் அவதூறாக, தரக்குறைவாக பேசுவது, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவது, மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடவடிக்கையில் ஈடுபடுவது, சந்தேகப்பட்டு பின் தொடர்வது, மற்றவருடன் இணைத்துப் பேசுவது, வேவு பார்ப்பது, உடல் அழகைக் குறை கூறுவது போன்ற பல நடவடிக்கைகளை கொண்டு வரலாம். சில நேரம் குழந்தைகளும் இவ்வாறான கொடுமைகளுக்கு தப்பு வதில்லை. கணவனையோ மனைவியையோ துன்புறுத்த வேண்டுமெனில் குழந்தையின் மீது கொடுமையை பிரயோகிப்பதும் நடைபெறும். அதுபோல திருமணத்துக்கு அடிப்படையாக உடல் உறவையும் நிராகரிப்பது அல்லது தவறான இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட கட்டாயப்படுத்துவதுஸ இவை அனைத்தும் மனரீதியான கொடுமைக்குள் அடங்கும்.
பெரும்பாலான இந்தியப் பெண்கள் இவ்வாறான உடலாலும் மனதாலும் ஏற்படுகிற கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்கவே 2005ம் ஆண்டு ‘வன்கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்’ இயற் றப்பட்டது. இவ்வகையான கொடுமை ஆண்களால் பெண்களுக்கு மட்டுமே இழைக்கப்படுவது என்றொரு தவறான அபிப்ராயம் இ ருக்கிறது. சில பெண்களும் தங்கள் கணவர் மீது அத்தகைய கொடுமையில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அது அபூர்வ நிகழ்வே. உலக அளவில் பெண்களே பெரிதும் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள்
எழுத்து வடிவம்: சாஹா
நன்றி: குங்குமம்தோழி
source: http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=2001&Cat=501