அறியாமைக்குப் பெயர்!
மு.முஹ்யித்தீன், ஓமன்
முஸ்லிம்களா? அல்லாஹு அக்பர்! முஸ்லிம் சமுதாயத்தை நினைத்தாலே நமக்கு வருவது கோபமும், வேதனையும்தான்.
காரணம் அல்லாஹு ரப்புல் ஆலமீனால் உலக மாந்தருக்கு அருளப்பெற்ற இறுதி சத்திய நேர்வழிகாட்டல் நூலான அல்குர்ஆன், அல்-பயான் (தெளிவுரை)யாகவும் அல்-ஃபுர்கான் (நன்மையையும், தீமையையும், பிரித்தறிவிப்பதாகவும்) தெளிவான அத்தாட்சியாகவும், அந்-நூர் (ஒளியாகவும் தெளிவுபடுத்தக் கூடியதாகவும் அல்-ஹுதா நேர்வழியும்) அல்-ஹிக்மத் (அறிவும்) அறிவை மென்மேலும் வளர்க்க கூடியதுமான அல்-குர்ஆன் என்னும் பொக்கிஷத்தை வைத்துக் கொண்டு திணருவதுதான் வேதனையிலும் வேதனை.
காரணம் முஸ்லிம்களாகி நாம் இந்த சத்திய நேர்வழிகாட்டல் நூலை அல்லாஹுவும், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வழிகாட்டிய பிரகாரம் ஆழ்ந்து ஆராயாத்தின் விளைவு, இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு உலகளாவிய அளவில் களங்கமே, களங்கம்!
அல்லாஹ்வையும், தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் மட்டும் பின்பற்றி வாழ்ந்தோமானால் களங்கம் களையப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லவே இல்லை.
அல்லாஹு கூறுகிறான்:
”இந்த குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடமிருந்துள்ளதாக இது இருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.” (அல்குர்ஆன் 4:82)
இந்த சத்திய நெறிநூல் அல்லாஹ்வுடையதே தவிர நிச்சயமாக வேறொருவருடைய வாக்காக இருக்க முடியாது என்பதற்கு இந்த சத்திய நெறிநூலே சான்றாக இருக்கிறது. இந்த இறுதி வழிகாட்டல் நூலின் எந்தப் பகுதியும் மற்றொரு பகுதியுடன் மோதக்கூடியதாகவும் இல்லை. அதே நேரத்தில் எந்த இடத்திலும் கருத்து முரண்பாட்டுக்கான அறிகுறி கூட இல்லவே இல்லை.
ஆனால் இந்த குர்ஆனுக்கு நாங்கள்தான் சரியான விளக்கங்கள் கொடுக்கக் கூடியவர்கள்; எங்களால் மட்டுமே சரியான விளக்கங்கள் கொடுக்க முடியும் என்று பாமர முஸ்லிம்களை ஏமாற்றி, அல்லாஹ், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சத்திய வழியை விட்டு திருப்பி ஷைத்தானிய வழிக்கு அழைத்துக் கொண்டிருக்கும் சில போலி உலமா பேர்வழிகள், அல்லாஹ்வுடைய சத்திய நெறி நூலை தங்களுக்கு சாதகமாக்கி, மக்களை, மாக்களாக்கி, சத்திய மார்க்கத்தை மதமாக்கி, குர்ஆன் மற்றும் தெளிவான நபிமொழிகளிலும், தங்கள் தங்கள் சுய கருத்துக்களை சொல்லி கருத்து மோதல்களையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தி சமுதாய ஒற்றுமைக்கு வேட்டு வைத்து, முஸ்லிம்களை அழிவுப் பாதைக்கு அழைத்து நரக படுகுழிக்கு வழிகாட்டி, அதன் பிரகாரம் இந்த முஸ்லிம்களும்-கண்மூடித்தனமாக போலி மவ்லவிகளை பின்பற்றி நடப்பவர்களை அறிவுள்ளவர்கள் என்பதா? அல்லது அறியாமை நிறைந்தவர்கள் என்பதா?
முஸ்லிம்களே! சிந்திக்க கடமைப்பட்டவர்களே! சிந்தியுங்கள் “இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? என்று அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம்மைப் பார்த்து கேள்வி கேட்பதில் பல ஆழமான கருத்துக்கள் உள்வாங்கி இருந்தாலும் அதுபற்றி சிந்திக்க முஸ்லிம்களாகிய நாம் தயாராக இல்லை! ஏன் என்றால் நாம்தான் நம்முடைய அறிவை புரோகித மவ்லவிகளிடம் அடகு வைத்து விட்டோமே!
பின்னர் எப்படி நாம் சுயசிந்தனையோடு இந்த குர்ஆனை ஆராய்வது? அல்லாஹ் அல்லாதவரிட மிருந்துள்ளதாக இது இருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். மேல்கண்ட அல்லாஹ்வுடைய சொல்லை சரியான முறையில் ஆழமாக சிந்திப்பவர்களுக்கு படிப்பினைகள் இல்லாமல் இல்லை. ஆனாலும், குர்ஆனையும், ஆராதபூர்வமான நபிமொழிகளையும், வைத்துக் கொண்டு பலவிதமான கருத்து மோதல்களையும், ஏராளமான புரோகிதர்களின் சிந்தனையில் உதித்த ஷைத்தானிய கருத்து முரண்பாடுகளையும், நாம் அப்படியே பின்பற்றினால் முரண்பாடுகள் வராமல் தெளிவா வரும்? முஸ்லிம்களே சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
அறிவுக்கும், அறிவியலுக்கும் சொந்தக் காரர்களான முஸ்லிம்கள் இன்று அறியாமைக்கு, அறிவீனத்திற்கும் சொந்தக்காரர்களாகி விட்டார்கள் அல்லாஹு ரப்புல் ஆலமீன் உடைய படைப்பின் அற்புதங்களில் பலவற்றைப் பார்க்கிறோம்; அவற்றைப் பற்றிய அறிவு எந்த அளவுக்கு நமக்கு இருக்கிறது என்றால் கேள்விக்குறியே! நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தில் பிறை பற்றி எத்தனை, எத்தனை கருத்து மோதல்களும், முரண்பாடுகளும் இதற்கெல்லாம் காரணகர்த்தாக்கள் யார்? கல்லாகிப் போன ஹஜரத்மார்களான புரோகிதர்களும், அவர்களை கண்மூடி பின்பற்றி குர்ஆனையும் நபி வழியையும் புறக்கணித்து வாழும் முஸ்லிம்களுமே என்று சொன்னால் மிகை இல்லைதானே!
அல்லாஹ் தெளிவாக, சத்தியநெறிநூல் குர்ஆனில் தெளிவுபடுத்திய பின் பிறை விசயத்தில் முரண்பாட்டுடன் முரண்டுழு பிடிப்பவர்களை அறிவுள்ளவர்கள் என்பதா? அறிவிலிகள் என்பதா?
”அவன்தான் சூரியனை பிரகாசமாகவும் சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான்; ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்..” (அல்குர்ஆன் 10:5)
”நம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்..” (அல்குர்ஆன்: 14:33)
இவ்வளவு அழகான, தெளிவான வழிகாட்டியாக, நாள்காட்டியாக அருள்மறை குர்ஆன் இருக்க, ஷைத்தானிய வழியையே பின்பற்றச் சொல்லும் புரோகித மவ்லவிகளை பின்பற்றுவது வழிகேடு இல்லையா? முஸ்லிம்களே சிந்திக்க வேண்டாமா? இந்த சத்திய மார்க்கமான இஸ்லாம் விஞ்ஞானத்தை வித்திட்ட மார்க்கமா? அல்லது அஞ்ஞானத்தை வித்திட்ட மார்க்கமா? அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களும் (வழிகாட்டி) வித்திட்ட மார்க்கம் சத்திய இஸ்லாம் மட்டுமே, இஸ்லாம், மற்றும் முஸ்லிம்கள் என்ற போர்வையில் அஞ்ஞானம் என்ற (மதத்தை) வித்திட்டவர்கள் வழிதவறிய மவ்லவிகளே! இவர்கள் யார் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுக்க? (நவூதுபில்லாஹ்) இவர்களும் இணையாளர்களே, இவர்களை கண்மூடி பின்பற்றும் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் இணைவைப்பவர்களே!
உண்மையான மவ்லானாவாகிய அல்லாஹு ரப்புல் ஆலமீனே! எங்களை இப்படிப்பட்ட இடி நிலைகளில் இருந்து காப்பாற்றுவாயாக!
இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்களாகிய நாம் மனித கற்பனையால், இஸ்லாமிய மார்க்கத்துக்கு எதிராக, உருவாக்கப்பட்ட சூரிய முறைபடியான உள்ள கற்பனை கணக்கை கொண்ட தினசரிகளைத்தான் பின்பற்றுகிறோம்; அல்லாஹ் 10:5, வசனத்தில் மாறி மாறி வரும் பல படித்தரங்களை (மனாஸில்) உண்டாக்கினான் என்பதிலிருந்தே பிறை மட்டுமே நாள்காட்டி என்பதை தெள்ளத் தெளிவாக திருமறை குர்ஆன் மனித சமுதாயத்திற்கு அறியத் தருகிறது என்பதே உண்மையிலும் உண்மை; இதை முஸ்லிம்களே சிந்திக்க மறுப்பதுதான் வேதனையிலும் வேதனை!
சூரியனுக்கு பல படித்தரங்கள் (மனாஸில்)கள் இல்லவே இல்லை, சூரியன் மனித சமுதாயத்திற்கு நேரத்தை அறிவிக்கக் கூடியதாகவும். தொழுகை நேரத்தை கணக்கிட உடவக்கூடியதாகவும் உள்ளது என்பதை அறிவுள்ளவர்கள் உணரவே செய்வார்கள். அல்லாஹ்வுடைய சத்திய நெறி நூலிலும் சரி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன் மொழிகளிலும் சரி, இந்த புரோகித மவ்லவிகளின் சொந்தக் கருத்தையும், அல்லாஹ்வுக்கும், தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் எதிரான கற்பனைக் கருத்துக்களையும் சொல்லி பாமர முஸ்லிம்களை வழி கெடுப்பதோடு, அவர்களும் இவர்கள் பின்னால் கண்மூடிச் சென்று முஸ்லிம் என்ற பெயரோடு மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட பலவிதமான குழப்படிகளினால் மாற்று மத சகோதரர்களால் முஸ்லிம் என்ற பெயரோடு மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட பலவிதமான குழப்படிகளினால் மாற்று மத சகோதரர்களால் முஸ்லிம்கள் பழிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. இங்கே ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
இஸ்லாமியர்கள் என்று சொல்லக் கூடிய முஸ்லிம்கள்தான் பழிக்கப்படுகிறார்களே தவிர சத்திய இஸ்லாமிய மார்க்கம் அல்ல ஏன்? என்றால் அறியாமைக்கும், அஞ்ஞானத்திற்கும் பெயர் இஸ்லாம் அல்ல! அறிவுக்கும் விஞ்ஞர்னத்திற்கும், அறிவியலுக்கும் சொந்தமானதே அல்லாஹ்வுடைய மார்க்கமும், அவனின் சத்திய இறுதி நேர்வழிகாட்டி குர்ஆனும் என்பதை மனதில் நிறுத்துங்கள். ஏன் என்றால் அறிவியல் பூர்வமான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே சத்திய நெறிநூல் திருகுர்ஆன் மட்டுமே. அறிவையும், விஞ்ஞானத்தையும், அறிவியல்பூர்வமான நல்ல பல கருத்துக்களையும் எந்தவிதமான மோதலும் இன்றி தெளிவாக சொல்லிக் கொண்டும், வழிகாட்டிக் கொண்டும் இருக்கும் ஒரே நூல் குர்ஆன் மட்டுமே.
இங்கே ஒரு செய்தியை குறிப்பிட விரும்புகிறேன். சுமார் ஏழு வருடங்களுக்கு முன் எங்களது நெல்லை-ஏர்வாடி அருகில் உள்ள வள்ளியூரில் ஒரு கிருத்துவ சகோதரரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் ஏதோ ஒரு விசயம் பற்றி பேசிக் கொண்டு இருந்தபோது அந்த கிருத்தவ சகோதரர், விஞ்ஞானத்தைப் பற்றி பேசுவதற்கு முஸ்லிம்களுக்கு என்ன அருகதை உள்ளது என்பது போன்ற கேள்வியோடு என்னைப் பார்த்து பேசினார்.
நான் கேட்டேன், ஏன் சார் அப்படி சொல்கிறீர்கள்? அவர் உடனே சொன்ன பதில் என்ன தெரியுமா? நவீன விஞ்ஞான அத்தனை கண்டுபிடிப்புகளையும் எங்களது கிருத்தவர்கள் கண்டு பிடித்ததே என்பதால் நீங்கள் பேச முடியாது என்று சொன்னார்;
நாம் உடனே அப்படியா சார். மனிதன் சந்திரமண்டலத்திற்கு போனதாக சொல்கிறானே எத்தனை வருடங்களுக்கு முன் போய் வந்தான். உங்களுக்கு தெரியும். சுமார் 50 வருடங்களுக்கு முன் போய்வந்து இருக்கலாம் அப்படித்தானே? ஆனால் சந்திர மண்டலத்திற்கு மனிதனால் போகமுடியும் என்று 1400 வருடங்களுக்கு முன்பே திருமறை குர்ஆன் தெளிவுபடுத்திவிட்டது சார். அது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டபோது, அவரால் பதில் சொல்ல முடியாது மவுனமாகிப் போனார்.
பின்னர் விஞ்ஞான உண்மைகள் பற்றி உங்கள் பைபிள் சொல்வதையும், எங்கள் குர்ஆன் சொல்வதையும் பற்றி சின்ன ஒரு விவாதம் நடத்த எங்களது ஊரில் ஏற்பாடு செய்கிறேன். நீங்களும் உங்களுடன் விஞ்ஞான விசயம் தெரிந்தவர்களையும் கூப்பிட்டு வாருங்கள் என்று அழைத்தோம். ஆனால் அவர் பதில் சொல்லவில்லை. இங்கே நாம் ஏன் இதை எழுதினோம் என்றால் அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்வது போல், இந்த சத்திய நெறி நூல் அல்லாஹ் அல்லாதவரிமிருந்துள்ளதாக இருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் என்று சொல்வதில் கோடி அர்த்தங்கள் உண்டு.
இங்கே கிருத்தவ புரோகிதர்களால் எழுதப்பட்ட பைபிள் வாசகங்களை பாருங்கள். பைபிளின் ஆதியாகமம் முதல்பக்கம் GENESIS முதல் 19 வசனங்களில், விஞ்ஞானத்துக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் (அந்த 19 வசனங்களையும் பக்கங்கள் அதிகரிக்கும் என்பதால் குறிப்பிட முடியவில்லை)
இந்த வசனங்கள் 19ம் வானம், பூமி, சூரியன், சந்திரன், இரவும், பகலும், பற்றி முரண்பட்டே சொல்லிக் கொண்டு இருக்கிறது – உதாரணத்திற்கு அறிவியல் உண்மைப்படி தாவரங்கள் மரம், செடி, கொடிகள் சூரிய ஒளி இல்லாமல் வளருமா? விளையுமா? நிச்சயமாக முடியாது. இதுபற்றி பைபிள் சொல்கிறது. மூன்றாம் நாள் (தேவன்) புல் பூண்டு கனி வர்க்கங்களையும் விருட்சங்களையும் படைத்து விட்டு (ஆதியாகமம் 1:12) நாளாம் நாள் சூரியன் சந்திரனையும் படைக்கிறார் (ஆதியாகமம் 1:14 முதல் 16) வதை சூரிய ஒளியில்லாமல் எப்படி தாவர இனங்கள் வளர்ந்தன? கனிகளைத் தந்தன? வர்க்கங்களை உற்பத்தியாக்கின? எந்த அறிவியல் விஞ்ஞானியாவது ஒப்புக் கொள்வார்களா? நிச்சயமாக மாட்டார்கள்.
ஆனால் அல்லாஹ்வுடைய சத்திய நூலாகிய குர்ஆன் அறிவியலுக்கு முரண்படாமல், விஞ்ஞானத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதாவது சூரியனை உண்டாக்கிய பின், தாவதங்களை உண்டாக்கினான் என்று தெள்ளத் தெளிவாக கூறுகிறது;
படைப்பால் நீங்கள் மிகக் கடினமா(னவர்களா?) அல்லது வானமா? அதனை அவன் படைத்தான்-அ)வ்வானத்)தினுடைய முகட்டை அவன் உயர்த்தினான்; பின்னர் அதனை ஒழுங்குபடுத்தினான். அதனுடைய இரவை அவன் இருளாக்கினான். அதனுடைய பகலையும் (சூரிய வெளிச்சத்தைக் கொண்டு) வெளியாக்கினான்; பூமியை அதற்கு பின் அவன் விரித்தான். அதிலிருந்து அதன் தண்ணிரையும் அதன் (புற்பூண்டு, தானியங்கள் முதலிய) மேய்ச்சல் பொருளையும் வெளிப்படுத்தினான். மலைகளையும் அவன் நிலைநாட்டினான். உங்களுக்கும், உங்களுடைய கால்நடைகளுக்கும் சுகமளிக்கும் பொருளாக (இவற்றை அமைத்தான்). (அல்குர்ஆன்: 79:27:33)
மேல்கண்ட மனித கரங்களால், புரோகிதர்களால் எழுதப்பட்ட பைபிளின் வசனங்களையும், நடுநிலையோடு, நம்முடைய அறிவை பயன்படுத்தி குர்ஆன், ஹதீஃதை மட்டும் மனதில் நிறுத்தி, சுய சிந்தனையோடு, புரோகித மவ்லவிகளையும் புறம் தள்ளிவிட்டு சிந்தியுங்கள். உங்களுக்கு விடை கிடைத்துவிடும்.
நம் எல்லோரையும், இந்த உலகையும் முழுமையாக படைத்து உருவாக்கினானே ரப்புல் ஆலமீன் அவன் மட்டுமே எல்லாவற்றையும் அறிந்தவன். அவனுக்கு நிகராக யாருமே இல்லவே இல்லை. விஞ்ஞர்னமும் அல்லாஹ்வுடைய செயலாகவே உள்ளது என்பதை முஸ்லிம்களாகிய நாம் ஒப்புக் கொள்ளவே வேண்டும். இந்த சத்தியமார்க்கத்தில் போலி மவ்லவிளுக்கு எந்த அதிகாரமும் இல்லவே இல்லை. முழு அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது என்பதை முஸ்லிம்களாகிய நாம் முழுமையாக நம்பவேண்டுமே தவிர, இந்த போலி மவ்லவிகளை அல்ல. புரோகித மவ்லவிகள் சொல்வதை கண்மூடி பின்பற்றினால், நாம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மையிலும் உண்மை, முஸ்லிம்கள் உணருவார்களா?
இந்த சத்திய இறுதி வழிகாட்டல் நூல் அல்லாஹ்விடம் இருந்து வந்ததே தவிர, போலி மவ்லவிகளிடம் இருந்து வந்தது அல்ல. அதுதான் அல்லாஹ் நெத்தியடியாக; அல்லாஹ் அல்லாதவரிடமிருந்துள்ளதாக இது இருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்? என்ற சத்திய நெறிநூல் 4:82 வசனம் அறிவுள்ளவர்களுக்கு அருமருந்து என்பதை முஸ்லிம்களாகிய நாம் புரிந்து செயல்பட்டு குர்ஆன், ஹதீஃத் விசயத்தில் புரோகித மவ்லவிகளின் ஷைத்தானிய கருத்து மோதல்களை (பிறை விசயத்தில் இருந்து எல்லா விசயத்திலும்) புறக்கணித்துவிட்டு, அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் கட்டுப்பட்ட முஸ்லிம்களாக வாழ்ந்து உலக மாந்தருக்கு வழிகாட்டி, அறியாமைக்குப் பெயர் முஸ்லிம்கள் அல்ல. அறிவுக்கு சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள் என்று உலகத்தாருக்கு பறைசாற்றுவோம். அல்லாஹ் அருளும் உதவியும் செய்யப் போதுமானவன்.