கர்வம் தவிர்க்க கருவறையை நினை!
இன்று மனிதன் அகந்தையோடு தான்தான் அனைத்திலும் பெரியவன் என்ற உணர்வோடு பூமியின் மீது நடமாடுவதைப் பார்க்கிறோம். அதன் விளைவாக படைத்தவனையும் மற்றும் மறுமையில் மீண்டும் ஒரு வாழ்வு இருக்கிறது என்ற உண்மையை மறந்து வாழ்கிறான். அந்த அகந்தை அழிய இறைவன் அவனது முந்தைய நிலையை இறைவன் தன் திருமறையில் நினைவூட்டுகிறான்:
”(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?” (அல்குர்ஆன் 75:37)
”அல்லாஹ் உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும் படைத்தான். பின்னர் உங்களை ஜோடிகளாக அமைத்தான். ஒரு பெண் கருவுறுவதும், ஈன்றெடுப்பதும் அவனுக்குத் தெரியாமல் இருப்பதில்லை. ஒருவனுக்கு வாழ் நாள் வழங்கப்படுவதும், அவனது வாழ் நாள் குறைக்கப்படுவதும் பதிவேட்டில் இல்லாமல் இல்லை. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. (அல்குர்ஆன் 35: 11)
”நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக் முடியாது”. (அல்குர்ஆன் 56: 57- 60)
”மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர்.
பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது. (அல்குர்ஆன் 22; 5).
ஒன்றுமே இல்லாத நிலை – இந்திரியத்துளி – சினை முட்டை – நிலை மாறும் தசைக்கட்டி –வளரும் கரு – சிசு – பிறப்பு – மழலை – குழந்தை – சிறுமை – வாலிபம் – இளமை – என்று பற்பல நிலைகளையும் பருவங்களையும் கடந்து முதுமை- பலவீனம்- வயோதிகம்- தள்ளாத நிலை என்று முடிவில் மரணத்தோடு இவ்வுலகில் இருந்து விடைபெறுகிறான் மனிதன். இவ்வாறு தான் இதுவரைக் கடந்துவந்த மற்றும் இனியும் கடக்கவிருக்கின்ற நிலைகளைப் பற்றி சற்று சிந்தித்தாலே மனிதனின் ஆணவம் அடங்கிவிடும்.
source: http://quranmalar.blogspot.in/2012/11/blog-post_9780.html