Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நல்லோரின் நந்தவனம்

Posted on August 23, 2015 by admin

(“இறைவா! நீயே என் இரட்சகன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு எவனுமில்லை! நீதான் என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை! என்னால் இயன்ற அளவுக்கு உனக்குத் தந்த வாக்குறுதி மற்றும் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவேன்! நான் செய்கின்ற அனைத்து தீமைகளைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்! நீ எனக்கு செய்துள்ள உன் அருட்கொடை மூலம் என் பாவத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன். நிச்சயமாக,பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை!”)

நல்லோரின் நந்தவனம்

“அந்த ஒப்பற்ற பெயர் கூறப்பட்டால் நம்பிக்கையாளர்களின் நெஞ்சங்கள் பயத்தால் நடுநடுங்கிப் போகும்! அவன் வார்த்தைகளை வாசித்துக் காண்பிக்கப்பட்டால் அந்த நல்லவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாகும். மேலும், தங்கள் இரட்சகன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைத்து விடுவார்கள்.” (அல்குர்ஆன் 8: 2)

அவன்தான் அர்ஷின் அதிபதி. அகில உலகங்களின் இரட்சகன். அல்லாஹ் ஜல்லஷானஹுத்தஆலா! அவன் எல்லாம் அறிந்தவன். எல்லாம் வல்லவன். உயரிய புகழ், புகழ்ச்சிகள் அனைத்திற்கும் உரியவன். எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லா மொழிகளிலும் எல்லா நாவுகளாலும் எல்லா உயிர்களாலும் துதிக்கப்படும் தூயோன் அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா! அனைத்தையும் எந்தவிதமான முன்மாதிரியின்றிப் படைத்து, பரிபாலித்து, காத்துவரும் அனைத்துப் படைப்பினங்களின் இரட்சகன்! என்றும் நிலைத்திருப்பவன்!

உயர்ந்தோன் அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து, பிரபஞ்சங்களுக்கெல்லாம் தலைமையகமான அர்ஷுக்கு மேல் அவனிடம் இருக்கும் (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும்) தூய்மையான பதிவேட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த வார்த்தையை இவ்வாறு எழுதி வைத்தான்:

“என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது!” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3194)

இப்படி அவனைப்பற்றி அவனே எப்படி சொல்லிக் கொள்கிறானோ நிச்சயமாக அப்படியே “கருணையைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டவனாகவே” அவன் இருக்கிறான்! (அல்குர்ஆன் : 6:54)

அலை முழங்கும் கடலும் ஆர்ப்பரிக்கும் காற்றும் நெடிதுயர்ந்த மரமும் வானுயர்ந்த மலையும் தலை வணங்கும் நிழலும் தரணிக்கு வரும் மழையும் தூயோன் ரஹ்மானைப் போற்றி அவன் புகழ் பாடிக்கொண்டே இருக்கின்றன!

நிச்சயமாக, அத்தனைப் பொருட்களையும் எழுதுகோல்களாகவும் அத்தனைக் கடல்நீரையும் மைகளாகவும் ஆக்கினால்கூட அவன் புகழை எவராலும் எழுதி முடித்துவிட இயலாது! பெருமையும் கண்ணியமும் அவன் மேலாடையும் கீழாடையும் ஆகும். மேலும், உணவு அளிப்பதற்கு அவன் பொறுப்பேற்காத எந்த ஓர் உயிரினமும் இந்தப் பிரபஞ்சத்திலேயே கிடையாது!

பெருமைக்கு ஆட்படாத பெருந்தலைவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தன்னிகரற்ற இறைவனாகிய அல்லாஹ் ஜல்ல ஜலாலஹு வை, முதன்முதலாக மக்கத்து மனிதர்களுக்கு விளக்கிக் காட்டியபோது; அல்லாஹ் ஜல்லஜலாலஹு வுக்கு ஈடு இணையாக எதுவுமே இல்லை என்ற ஒப்பற்ற அவன் தன்மையிலிருந்து ஓர் அங்குலம்கூட அவர்கள் பின்வாங்கவே இல்லை!

அவன் கருணையை அவர்களுக்கு விளக்கும்போது “தாயைவிட எழுபது மடங்கு கருணையாளன்” என்றும், அவன் கண்காணிப்பை அவர்களுக்கு விளக்கும்போது “பிடரி நரம்பைவிட அருகே இருப்பவன்” என்றும் நவின்றார்கள்.

மேலும் பேரருளாளன் அல்லாஹ் ஜல்ல ஜலாலஹு, தன் படைப்பினங்களின் மீது பொழியும் அருள்பற்றி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கீழ்வருமாறு பகன்றார்கள்.

“அல்லாஹ்விடம் நூறு வகையான அருள்கள் உள்ளன. அவற்றில் ஒரே ஒரு வகையின் மூலம்தான் அவன் படைப்புகள் (மனிதர்கள், மிருகங்கள், பறவைகள்) அனைத்தும் தமக்கிடையே அன்பைப் பரிமாறிக் கொள்கின்றன. மிருகங்கள்கூட தன் குட்டிகள் மீது அன்புகாட்டுவதும் அதனால்தான். மீதமுள்ள தொண்ணூற்று ஒன்பது வகைகளை மறுமை நாள்வரை தன்னிடமே அல்லாஹ் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றான்! (அறிவிப்பாளர்: ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2753)

அன்பு என்ற உன்னதமான மூலப் பிறப்பிடத்திலிருந்தே தாய்மை எனும் உயர் தன்மையும் நட்பு என்ற நேசமும் காதல் என்ற கனிவும் சகோதரத்துவம் என்ற பாசமும் பல வண்ணங்களில் உருவாகி மனிதர்களுக்கு பல்வேறு ஆடைகளாகவும் அணிகலன்களாகவும் அணிவித்து அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா வால் அழகு பார்க்கப்பட்டிருக்கிறது!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் இனிய மறையிலே இவ்வாறு இயம்புகின்றான்:

இன்னும் நீங்கள் மனைவியரிடம் ஆறுதல் பெறுவதற்காக (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே கனிவையும் கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமுதாயத்திற்கு நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் உள்ளன. (அல்குர்ஆன்: 30:21)

தாய்மை என்ற உன்னத தன்மையைப் படைத்தவன் எத்தகைய “தாய்மைக் குணம்” கொண்டவனாக இருக்க வேண்டும் என்பதன் விளக்கமாகவே “தாயைவிட எழுபது மடங்கு கருணையாளன்” என்றார்கள் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அறிக: அரபுமொழியில் எழுபது என்றால் “எண்ணற்ற” என்றும் பொருள்படும்).

சிறந்த குணங்களைப் படைத்தவன், தன்மைகளில் தலையாய சிரிப்பு என்ற நகைச்சுவையையும் படைத்தான்! வரம்பு மீறாத நகைச்சுவை என்பது மகிழ்ச்சியிலிருந்து வருவதாகும். மகிழ்ச்சி என்ற அற்புதம் நிச்சயமாக அல்லாஹ்வின் அருளில் இருந்தே கிட்டுவதாகும். புன்முறுவல் என்பது மனத்தின் பிரகாசமாகும்!

நாம் சிந்தும் புன்சிரிப்பு மற்றவர் சிரமத்தை, கவலையை நிவர்த்தி செய்ய நாம் செய்யும் உதவியாகிறது! எனவேதான், பாருலகம் போற்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உன் சகோதரனைச் சிரித்த முகத்துடன் வரவேற்பதும் இறை திருப்திக்குரிய காரியமாகும் என்றார்கள்!

அதனால்தான் சிரிப்பை எத்தனைமுறை செலவழித்தாலும் கொஞ்சம்கூட குறையாத பொக்கிஷமாக, அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா மனித சமுதாயத்திற்கு தன் அருளாக வழங்கியுள்ளான். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றான் ஒரு தமிழ் அறிஞன்! ஆனால், நாம் இறைவனின் சிரிப்பில் அவன் வழங்கும் அந்த சுந்தரச் சோலையைக் கொஞ்சம் கண்டுவருவோம் இன்ஷா அல்லாஹ்!

அது நல்லவர்களின் நந்தவனம்! புனிதர்களின் பூங்காவனம்! என்றென்றும் மாறாத மலர்ச்சி நிறைந்த மலர்வனம்! அதுதான் சுவர்க்கம் என்ற சுகவனம்!

சுவர்க்கம் என்பது சொல்லிமுடிக்க முடியாத சுகபோகங்களும் கற்பனைக் கெட்டாத, கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாத இன்பங்களும் நிறைந்த இடமுமாகும்! பூத்துக் குலுங்கும் மலர்களும் காய்த்துக் குலுங்கும் கனிகளும் நிறைந்த கவினான வனமாகும்! நினைத்ததும், கற்பனையில் நினைத்துப் பார்க்காததும் கிடைக்கும் நந்தவனமாகும்! சுகந்தரும் அந்தச் சொர்ண பூமியைப் பற்றி சொல்லப்படுவதை நாம் சற்றுப் பார்ப்போம்!

அந்த அழகிய சுவர்க்கமும் அழியாப் பேரின்பமும் குறித்து, அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். சுவர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு உள்ள இடம் என்பது இந்த உலகத்தையும் அதில் இருப்பதை எல்லாம் விடவும் சிறந்ததாகும். (அறிவிப்பாளர்: சஹ்ல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3250)

அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா சொல்கின்றான். “இறையச்சமுள்ளவர்கள் சுவனங்களிலும் அங்குள்ள நீரூற்றுகளிலும் இருப்பார்கள். மேலும் அவர்களிடம் கூறப்படும்: எவ்வித அச்சமுமின்றி சாந்தியுடன் அவற்றினுள் நுழையுங்கள்!”

அவர்களின் உள்ளங்களில் படிந்திருக்கும் குரோதங்களை நாம் அகற்றிவிடுவோம். ஒருவருக்கொருவர் சகோதரர்களாக கட்டில்களில் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். அங்கு அவர்களுக்கு யாதொரு சிரமமும் இருக்காது! அங்கிருந்து வெளியேற்றப் படவும் மாட்டார்கள்! (அல்குர்ஆன் :15:47)

இறையச்சமுடையவர்கள் அமைதியான இடத்தில் இருப்பார்கள். தோட்டங்களிலும் நீரூற்றுகளிலும் இருப்பார்கள். தடித்த மற்றும் மெல்லிய பட்டாடைகளை அணிந்து கொண்டு எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இதுதான் அவர்களின் நிலைமையாகும். மேலும் “நாம் அழகிய தோற்றமுள்ள எழில்விழி மங்கையரை அவர்களுக்கு ஜோடிகளாக்கிக் கொடுப்போம்.”

அங்கு அவர்கள் மன நிம்மதியுடன், எல்லாவிதமான சுவைமிகு பொருட்களையும் கேட்பார்கள். ஏற்கனவே, உலகில் அடைந்த மரணம் தவிர, மறு மரணத்தை அனுபவிக்க மாட்டார்கள். மேலும், உம் இறைவன் தன்னுடைய கருணையினால் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றிவிடுவான். இதுவே மாபெரும் வெற்றியாகும்! (அல்குர்ஆன் :44:51)

நம் மனங்கவர்ந்த மாமனிதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனித உள்ளமும் சிந்தித்துப் பார்த்திராத ஒன்றை என் அடியார்களில் நல்லவர்களுக்காக நான் தயார் செய்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் (ஜல்) கூறினான் என்றுரைத்த இறுதித் தூதர் (ஸல்)அவர்கள் “கண்களுக்குக் குளிர்ச்சி தரும் ஒன்றை அவர்களுக்காக நான் மறைத்திருப்பதை எந்த ஆத்மாவும் அறிய முடியாது என்ற அல்குர்ஆனின் வசனத்தை (32:17) நீங்கள் விரும்பினால் ஓதிக்கொள்ளுங்கள் என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2824)

நம் உள்ளங்கவர்ந்த உண்மைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். சுவர்க்கத்தில் நுழைகின்றவர்களில் முதல்கூட்டம், பவுர்ணமி நிலவுபோலத் தோற்றமளிப்பார்கள். பின்பு அவர்களை அடுத்து நுழைபவர்கள் வானில் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று இருப்பார்கள். அவர்கள் சிறுநீர் கழிக்கவோ, மலம் கழிக்கவோ மாட்டார்கள். எச்சில் துப்பமாட்டார்கள். சளி சிந்த மாட்டார்கள். அவர்கள் தலைவாரும் சீப்புகள் தங்கத்தில் இருக்கும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணம் போல் இருக்கும். எழில்விழி மங்கையருடன் இருப்பார்கள். சுவனவாசிகள் அனைவரும் அவர்கள் தம் தந்தை ஆதம் நபியின் உருவ அமைப்புப்படி அறுபது அடியாக இருப்பார்கள் என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3245)

கண்ணியம் கற்றுத் தந்த புண்ணியத்தூதர் பகன்றார்கள். சுவர்க்கத்தில் ஒரு கடைவீதி உண்டு. வெள்ளிக்கிழமை தோறும் அங்கு சுவர்க்கவாசிகள் வருவார்கள். வடக்குப் பகுதியிலிருந்து ஓர் இனிய தென்றல் வீசும்! அப்போது அவர்களின் முகங்கள் அவர்களின் ஆடைமீது பட்டு, அது மணம் கமழும்!

இதனால் அவர்கள் அழகும் பொலிவும் அதிகமாகி விட்டவர்களாக தங்கள் குடும்பத்தாரிடம் வருவார்கள். இவர்களைப் பார்த்ததும் குடும்பத்தினரும் அழகும் பொலிவும் அதிகம் பெற்றுவிடுவர்! “அல்லாஹ்வின்மீது ஆணையாக, நீங்கள் அழகிலும் பொலிவிலும் அதிகமாகி விட்டீர்களே!” என்று குடும்பத்தினர் கேட்பார்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்களும்தான்” என்று இவர்கள் கூறுவார்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2833)

“என் இறைவா! சுவர்க்கவாசியின் தகுதியில் உயர்வானவரின் நிலை என்ன?” என்ற மூஸா நபியின் கேள்விக்கு,

“அவர்கள் என் விருப்பத்திற்கு உரியவர்கள். என் கையால் அவர்களின் கண்ணியத்தைக் காத்துள்ளேன். அதன் மீது நான் முத்திரை இட்டுள்ளேன். எந்தக் கண்ணும் அதைப் பார்த்ததில்லை! எந்தக் காதும் அதைக் கேட்டதில்லை! எந்த மனித இதயத்திலும் அதுபோன்ற ஒரு சிந்தனை ஏற்பட்டதில்லை” என அல்லாஹ் கூறுவான்”. (அறிவிப்பாளர்: முகீரா பின் ஷுஅபா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 189)

பல தெய்வக் கொள்கைகளில் மூழ்கி, படுபாதகச் செயல்களில் திளைத்து, மனித உருவில் மிருகங்களாய்த் திரிந்த மடையர்களின் நாடி நரம்புகளில் எல்லாம் அதிர்வலைகளைத் தோற்றுவித்த, அவர்களின் கற்சிலை பீடங்களின் அஸ்திவாரத்தையே அசைத்துக் குலுக்கிய அற்புதவேதம் அல்குர்ஆனை, அல்லாஹ்விடமிருந்து பெற்று வந்த யுகப்புரட்சியின் தலை நாயகர், நிஜமான “புரட்சித்தலைவர்” நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.

சுவர்க்கவாசிகள் அவர்களின் சுவர்க்கத்தில் நுழைந்துவிட்டால் அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா, அவர்களை அழைத்து “எதையேனும் நீங்கள் விரும்பினால், உங்களுக்கு நான் அதிகப்படுத்துகிறேன்” என்று கேட்பான்!

அதற்கு அவர்கள், “எங்களின் முகங்களை நீ வெண்மையாக்கி விடவில்லையா? எங்களை சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்து, நரகை விட்டும் எங்களை நீ காப்பாற்றி விடவில்லையா?” என்பார்கள். உடனே அருளாளன் அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா, தனக்கும் அவர்களுக்கும் இடையேயுள்ள திரையை விலக்குவான்.

தங்களின் இரட்சகனைப் பார்ப்பதைவிட வேறு எதுவும் அவர்களுக்கு விருப்பமானதாக வழங்கப்படவில்லை! (அவர்களின் இறைவனைப் பார்ப்பதுதான் அவர்களுக்கு மிகவும் விருப்பமானது) என்று உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரைத்தார்கள்! (அறிவிப்பாளர்: ஸுஹைப் பின் ஸினான் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 181)

தன் உடலில் ஓர் எளிய சால்வை மட்டும் போர்த்திக்கொண்டு பயிர் வளர்க்க நிலத்தைச் செப்பனிடும் எளிய உழவன்போல, அல் இஸ்லாம் எனும் அழகிய பயிர் செழித்து சீராய் வளர தம் உடலால் விதைநட்டு, உயிர் உள்ளத்தால் நீர் பாய்ச்சி, கடும் உழைப்பால் களை நீக்கி, அன்பின் ஆன்மாவால் அறுவடை செய்த அண்ணல் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் இனிய தோழர்கள் முஹாஜிரீன்களும் அன்சார்களும் புடை சூழ மஸ்ஜித் நபவீயில் வீற்றிருந்தார்கள். ஒரு கிராமவாசியும் கூடவே அமர்ந்திருந்தார்.

சுவர்க்கத்தின் வர்ணனைகள் சுந்தர நபிகளால் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தன! சுவர்க்கத்தில் உங்களில் ஒருவரின் தாழ்ந்த நிலை என்பது, அவரிடம் அல்லாஹ் “நீ ஆசை கொள்!” என்று கூறுவதுதான். உடனே அவர் ஆசை கொள்வார். “மேற்கொண்டும் ஆசை கொள்” என்பான் அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா. மேலும் அவர் ஆசை கொள்வார். “நீ ஆசை கொண்டாயா?” என்று அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா அவரிடம் கேட்பான்.

அவர் “ஆம். என் இறைவா!” என்பார். உடனே அல்லாஹ் அவரிடம் “நீ என்னென்ன நினைத்தாயோ அத்தனையும் உனக்குண்டு! மேலும், அதுபோன்றதும் உனக்குண்டு!” என்று கூறுவான் என்று நவின்றார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 182)

சுவர்க்கவாசிகளுள் ஒருவர் தன் இறைவனிடம் சுவர்க்கத்தில் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா “நீ விரும்பியவாறு சுகபோக வாழ்க்கையை இந்நிலையில் நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?” என்று கேட்பான். “ஆம். இறைவா! நிச்சயமாக! நான் எல்லா சுகபோகத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால், நான் இப்போது விவசாயம் செய்ய விரும்புகிறேன்!” என்பார்.

அல்லாஹ் ஜல்லஷானஹுத்தஆலா அவருக்கு அனுமதி அளிப்பான். அந்த மனிதர் சென்று விதை தூவுவார். அங்கே கண்ணிமைக்கும் நேரத்தில் பயிர் வளர்ந்து நிற்கும்! அந்தப் பயிர் முதிர்ந்து, நிமிர்ந்து நிற்கும்! அறுவடைக்குத் தயார் என உரைக்காமல் உரைத்து நிற்கும்! மேலும், பெரும் மலைகளைப்போல் விளைந்து ஒரு நொடியில் குவிந்து போய்விடும்! அப்போது அல்லாஹ் ஜல்ல ஜலாலஹு “மனிதனின் மகனே! இதோ எடுத்துக்கொள்! உன்னை எதுவுமே திருப்திப் படுத்தாது” என்று கூறுவான்.

அல்லாஹ்வின் தூதரிடமிருந்து இதனை செவியுற்றதும் அந்த கிராமவாசி எழுந்தார்!

“அல்லாஹ்வின்மீது ஆணையாக, சுவனத்திலே விவசாயம் செய்து பார்க்க விரும்பிய அந்த மனிதர், மக்காவின் ஒரு குறைஷியாகவோ அல்லது மதீனாவின் ஒரு அன்சாரியாகவோதான் நிச்சயமாக இருக்க முடியும்! உறுதியாக நாங்களோ நாடோடிகள்! விவசாயிகள் அல்லர்!” என்றார் வெகுளித்தனமாக!

அவ்வளவுதான்! மடைதிறந்த வெள்ளம்போல் அந்தச் சபையில் குபீரெனப் பாய்ந்தது சிரிப்பு! ஆர்ப்பரித்த சிரிப்பலைகள் அடங்க வெகுநேரமாகியது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்நகைப்பலையில் அன்று நனைந்து போனார்கள்! (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2348)

அல்லாஹ் நாடினால், அற்புத சுவர்க்கம் அந்த அழியாப் பேரின்பம் நமக்கும் கிடைக்கும் நற்செய்தி நம் நபியிடம் உண்டு!

அந்த எளிய வழி இவ்வாறு கூறுவதுதான்:

بسم الله الرحمن الرحيم

اَللَّهُمَّ أَنْتَ رَبِّيْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا
اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوْءُ بِذَنْبِيْ
فَاغْفِرْ لِيْ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

அல்லாஹும்ம அன்த்த ரப்பி லாஇலாஹ இல்லா அன்த்த கலக்தனீ வஅன அப்துக, வஅன அலா அஹ்திக, வ வஹ்திக, மஸ்த்த தஃத்து. அவூதுபிக்க மின் ஷர்ரி மாஷனஃத்து. அபூவுலக்க பி நிஃமத்திக்க அலைய், வஅபூஉபிதன்பி, பஃபிஃர்லீ, ஃபஇன்னஹு லாயஹ்ஃபிருத்துநூப இல்லா அன்த்த!”

(“இறைவா! நீயே என் இரட்சகன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு எவனுமில்லை!

நீதான் என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை!

என்னால் இயன்ற அளவுக்கு உனக்குத் தந்த வாக்குறுதி மற்றும் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவேன்!

நான் செய்கின்ற அனைத்து தீமைகளைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்!

நீ எனக்கு செய்துள்ள உன் அருட்கொடை மூலம் என் பாவத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்.

நிச்சயமாக,பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை!”)

“இதை உறுதியுடன் அன்று காலையில் ஒருவர் கூறி, மாலை வருமுன் அவர் இறந்துவிட்டால், அவர் சுவர்க்கவாசியாவார்!

மேலும் இதை இரவில் ஒருவர் உறுதியுடன் கூறி காலை வருமுன் இறந்து விட்டால், அவர் சுவர்க்கத்தில் இருப்பார் என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பாளர்: ஷத்தாத் பின் அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6306)

-இக்பால் M. ஸாலிஹ்

source:  http://adirainirubar.blogspot.in/2015/08/blog-post_6.html

 

 

 

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 7 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb