மறைவழியில் இறைவனிடம் கையேந்துவோம்
“எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக!
எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக!
இறை மறுப்பான (காஃபி)ரான இம்மக்கள்
மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” (அல்குர்ஆன் 2:250)
இந்தப் பிரார்த்தனையை பனூ இஸ்ரவேலர்களில் தாலூத்துடைய மக்கள் ஜாலூத்தை எதிர்கொண்டு போர் புரிகையில் கேட்டதாக அல்லாஹ் அறிவிக்கின்றான்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மறைவுக்குப் பின் பனூ இஸ்ரவேலர்கள் வழிகேட்டில் வீழ்கின்றனர். அவர்களை நேர்வழிப் படுத்திச் செல்ல பல நபிமார்களை அல்லாஹ் அனுப்பி வைக்கின்றான். நேர்வழி செல்பவர்களுக்கும் வழிகேட்டிலிருப்பவர்களுக்குமிடையில் பெரும் போர்கள் நிகழ்கின்றன.
வழிகேட்டிலிருப்’பவர்கள் நேர்வழி செல்லும் நல்லடியார்களை வென்று அவர்களது வீடு சொத்துக்களை அபகரித்துக் கொண்டு பராரியாக விரட்டி விடுகின்றனர். தீயவர்களுக்கு எதிராக போர் புரியவும், அல்லாஹ்வின் நீதியை நிலைநாட்டவும் அவர்களில் வந்த ஒரு நபி அவர்களுக்கு அழைப்பு விடுகிறார். அந்நபியை ஏற்றுக் கொண்டவர்களும் மற்றவர்களும் பற்பல வினாக்களை எழுப்புகின்றனர். அல்லாஹ்வும் பற்பல விதமாக அவர்களைப் பரீட்சித்து நல்லவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்; ஈடேற்றம் தருகின்றான். அவர்கள் எழுப்பிய வினாக்களையும், அல்லாஹ் தேர்ந்தெடுத்த விதத்தையும் பார்ப்போம்.
1. போருக்கென அவர்களுக்கு அழைப்புக் கொடுத்தப் போது ஒரு சிலரைத் தவிர மற்றெல்லாரும் புறமுதுகுக் காட்டி திரும்பி விடுகின்றனர். அல்லாஹ்வுக்காக புனிதப் போர் செய்ய அவர்கள் தயாராகவில்லை.
2. நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்ப்படுத்துங்கள். எனக் கேட்கின்றனர். அவர்களது நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியுள்ளான்” என்கிறார்.
3. தாலூத் அவர்களை அவர்கள் ஏற்க மறுத்து காரணம் கூறுகின்றனர்: அதாவது எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்?” அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும் அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே? என பெருமை கொண்டு பேசுகின்றனர். அதற்கு அவர்களது நபி: தாலூத் அவர்களின் சிறப்புகளை பட்டியலிட்டுக் காட்டி அவர்களது அகங்காரத்தை உடைக்கிறார். அதாவது; தாலூத் அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அம்மக்களை விட அல்லாஹ்வால் சிறப்பிக்கப்பட்டவர்; அவரது அதிகாரத்திற்கு அடையாளமாக தாபூத் (என்ற பேழை) வரும்; அதில் அம்மக்களுக்குரிய ஆறுதல் இருக்கும்;
மேலும் மூஸாவின் சந்ததியினரும், ஹாருனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். என பற்பல சிறப்புகளைக் கூறி அவரை அல்லாஹ் தேர்ந்தெடுத்த விதத்தை விளக்குகிறார். இவ்விளக்கங்களைப் பெற்றப்பின் அம்மக்கள் தாலூத்தை தங்களது அரசனாக ஏற்கின்றனர்.
4. பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்டப் போது அவர் “நிச்சயமாக அல்லாஹ் உங்களை(வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னை சார்ந்தவரல்ல. தவிர சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதிலிருந்து (அதிகமாக) நீர் அருந்த வில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர் என்று கூறினார்.
அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள். பின்னர் தாலூத்தும் அவருடன் இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) ஜாலுத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்ய எங்களுக்கு பலமில்லை என்று கூறி விட்டனர்.
இவ்விதம் பற்பல பரீட்சைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையடியார்கள் மிகவும் குறைந்தவர்களே! எண்ணிக்கையில் குறைவாயிருப்பினும் அவர்களது ஈமான் பலமிக்கதாக, உறுதியானதாக இருந்தது. அல்லாஹ்வின் மீது அளப்பரிய நம்பிக்கைக் கொண்டிருந்தனர். வெற்றிக் கிடைத்தால் அல்லாஹ்வின் நீதி நிலைநாட்டப்படுகிறது. அப்போரில் தாங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டால் தங்களுக்கு மறுமையில் புனித போரில் மரணித்த ஷுஹதாக்களில் சேருவோம். இரண்டிலும் தங்களுக்கு ஈடேற்றமே என்ற நம்பிக்கையில் இருந்தனர். அந்நம்பிக்கையில் தங்களது பாதங்களை உறுதிப்படுத்தி வைக்கும்படியும், சோதனைகளில் தங்களுக்கு பொறுமையை தந்தருள்படியும் இறை மறுப்பாளர்களை தாங்கள் வெற்றிக் கொள்ள உதவும்படியும் மேலேக் கண்டது ஆவை (பிரார்த்தனையை)ப் பிரார்த்தித்து ஜாலுத்துடனும் போர் புரிகின்றனர். வெற்றியும் காண்கின்றனர்.
அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையையும், அவனது நீதிக்கு, உண்மைக்குப் போராடும் போக்கும் ஒரு இறை அடியானிடம் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படிப்பட்டவர்கள் மிகவும் குறைந்தவர்களாக இருப்பினும் அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை தருவான் என்பது உறுதி. இதனை அல்லாஹ்
“எத்தனையோ சிறுக்கூட்டத்தினர், பெருங்கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதிக் கொண்டு வென்றிருக்கின்றார்கள்.” (அல்குர்ஆன் 2:249)
-எனப் புகழ்ந்துரைக்கின்றான். இங்கு இறை நம்பிக்கை மட்டுமே நமக்கு வெற்றியைத் தேடித் தரும் என்பது புலனாகிறது,
அல்லாஹ்வின் மேற்படி கூற்று தாலூத், ஜாலூத் விஷயத்தில் மட்டுமல்ல. நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது விஷயத்திலும் நிகழ்ந்தது இங்கு நினைவுக் கூறத்தக்கது.
இஸ்லாத்தின் முதல் புனிதப் போரான “பத்ரு” போரை நினைவு கூறுங்கள். 313 ஏழ்மையான நபித் தோழர்கள். நல்ல தளவாடங்கள், போர் கருவிகளில்லை. நல்ல பயிற்சியில்லை. ஆனால் அவர்களிடம் அசைக்க முடியாத இறை நம்பிக்கை (ஈமான்) இருந்தது. தாங்கள் போராடுவது தன்னலத்திற்க்கல்ல. அல்லாஹுவின் நீதியை நிலை நாட்ட என்ற உண்மையான உணர்வு இருந்தது. சுமார் 13 ஆண்டுகள் பற்பல சோதனைகளை சகித்திருந்தனர். இவர்கள் சிறுக் கூட்டமே ஆனால் இவர்களை எதிர்த்த குறைஷிகள் 1000க்கு மேற்ப்பட்டவர்கள்; போர் பயிற்சி பெற்ற வீரர்கள். சிறந்த போர் கருவிகள், குதிரை, ஒட்டகம், தளவாடங்களைக் கொண்டிருந்தனர். பெரும் கூட்டம், இவர்கள் மேற்படி சிறு கூட்டத்தாரால் தோற்க்கடிக்கப்பட்டதும், போர் கைதிகளானதும் சரித்திரம் கூறும் உண்மையாகும்.
எனவே குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வாழும் நாமும் சிறு கூட்டமாக இருக்கிறோமே! பெரும்புள்ளிகள் நம்மிடமில்லையே! என்ற கவலை வேண்டாம். நாம் அல்லாஹ்விடம் “நமக்கு பொருமையைத் தந்தருள்படியும் ஈமானில் தனது பாதங்கள் உறுதியாக இருக்கும்படியும் நம்மை எதிர்க்கும் இறை மறுப்பாளர்களை வெற்றிக்கொள்ள உதவும்படியும் இறைஞ்சுவோமாக!