பல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள்!
வீட்டில் காணப்படும் பல்லிகள் நமக்கு பெரும் தொல்லையாக அமைகின்றன. நமக்கு தொல்லை தரும் பெரும்பாலான பூச்சிகளை அழித்து அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதில் இவை உதவினாலும், நமது வீடுகளுக்குள் பல்லிகளைக் காண்பதை நாம் விரும்புவதில்லை.
நமக்கு இவை வேண்டாத விருந்தாளிகளே. கடைகளில் காணப்படும் பல்லி விரட்டி மருந்துகள் நச்சுத்தன்மை கொண்டவை. குழந்தைகளுக்கு வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் மிகவும் ஆபத்தானவை. எனவே யாருக்கும் ஆபத்தை உண்டாக்காத, சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் பல்லிகளை விரட்டுவதற்கான எளிய வழிமுறைகளைப் பின்வருமாறு காணலாம்.
காபித்தூள்
சிறிது காபித்தூளை மூக்குப்பொடியுடன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். பல்குத்தும் குச்சிகளின் முனையில் இவ்வுருண்டைகளைக் குத்தி, பல்லிகள் நடமாடும் இடங்களில் அவற்றை வைக்கவும். இவற்றை உண்ணும் பல்லிகள் மடிந்துவிடும்.
நாப்தலின் உருண்டைகள்
நாப்தலின் உருண்டைகள் சிறந்த பூச்சிக்கொல்லிகள். உங்கள் வீட்டு அலமாரிகளிலும், சிங்க்குகளிலும், கேஸ் அடுப்புக்கு அடியிலும் போட்டு வையுங்கள். பல்லிகளை விரட்டும் சிறந்த முறை இது.
மயில் இறகுகள்
மயில் இறகுகளைப் பார்த்து பல்லிகள் பயப்படும். பல்லிகள் வசிக்கும் இடங்கள், நடமாடும் இடங்களுக்கு அருகிலுள்ள சுவர்களில் மயில் இறகை ஒட்டி வையுங்கள். பூச்சாடிகளில் மயிலிறகைப் போட்டு வையுங்கள். இதனால் உங்கள் வீட்டிலிருந்து பல்லிகள் ஓடிவிடும்.
மிளகுத் தூள்,
பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே மிளகுத் தூளை தண்ணீருடன் கலந்து கொண்டு ஒரு பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே தயாரியுங்கள். சமையலறையில் உள்ள அலமாரிகள், டியூப்லைட் இடுக்குகள், அடுப்புகளுக்கு அடிப்புறம் மற்றும் ஃப்ரிட்ஜ் அடிப்புறம் ஆகியவற்றில் இக்கலவையைத் தெளியுங்கள். இந்த வாசனையினால், எரிச்சலடைந்து பல்லிகள் ஓடிவிடும்.
குளிர்ந்த நீர்
ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சி செய்யப்பட்ட தண்ணீரை பல்லிகள் மீது தெளியுங்கள். இதன் மூலம் பல்லியின் உடல் வெப்பநிலை குறைந்து அவற்றால் அசைய முடியாத நிலை உண்டாகும். அப்போது ஒரு அட்டைப் பெட்டிக்குள் பிடித்து அடைத்து, வீட்டிற்கு வெளியே வீசி விடுங்கள்.
வெங்காயம்
வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக வெட்டி சுவர்களில் தொங்கவிடுங்கள். பல்லிகளின் மறைவிடங்களில் போட்டு வையுங்கள். வெங்காயத்திலுள்ள கந்தக ஆவியானது பல்லிகளால் சகிக்கமுடியாத மணத்தை உண்டாக்கும். இதனால் பல்லிகள் அவ்விடத்தை விட்டு ஓடிவிடும்.
முட்டை ஓடுகள்
முடிந்த அளவுக்கு முழுதாகக் காட்சியளிக்கும் கோழி முட்டை ஓடுகளை பல்லிகள் நடமாடும் பகுதிகளில் போட்டு வையுங்கள். வீட்டுக்குள் வேறு ஒரு பெரிய உயிரினம் இருப்பதாகக் கருதி பல்லிகள் ஓடிவிடும். முட்டை ஓடுகளை 3-4 வாரங்களுக்கு ஒருமுறை மாற்றவேண்டும்.
பூண்டு
ஸ்ப்ரே பாட்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெங்காயச் சாறு மற்றும் தண்ணீரைக் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பூண்டுச் சாற்றினைக் கலக்கவும். நன்றாகக் குலுக்கி, இதனை வீட்டு மூலைகளிலும், விரும்பும் வேறு இடங்களிலும், தெளியுங்கள் அல்லது பூண்டுப் பற்களைக் கூட வீட்டு மூலைகளில் வைத்து பல்லிகளை விரட்டலாம்.
வீட்டில் எறும்பு தொல்லை போக்க…
வீட்டில் சமையலறைக்கு சென்று சர்க்கரை டப்பாவை திறந்தால் எறும்புகளாக உள்ளதா? மேலும் வீட்டின் மூலைகளில் எறும்புகள் ஓட்டை போட்டு தங்கியுள்ளதா? இவற்ற அழிப்பதற்காக கடைகளில் சென்று மருந்துகள் கலந்த சாக்பீஸ் பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், இந்த சாக்பீஸ்களைப் பயன்படுத்த முடியாது.
ஆனால் இந்த எறும்புகளை வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே போக்கலாம். மேலும் இந்த இயற்கைப் பொருட்கள் அனைத்தும் எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாதவை. அது என்ன பொருட்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இப்போது எறும்புகளின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசமமாக கலந்து, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, எறும்புகள் மொய்க்கும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் அழிந்துவிடும்.
மசாலாப் பொருட்கள்
மசாலாப் பொருட்களான மிளகு தூள், மஞ்சள் தூள், பட்டைத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை எறும்புகள் வரும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
வெள்ளரிக்காய்
எறும்புகளை கொல்வதற்கு உதவும் பொருட்களில் ஒன்று தான் வெள்ளரிக்காய். அதற்கு வெள்ளரிக்காயை எறும்புகள் வரும் இடத்தில் வைத்தால், எறும்புகள் வராமல் தடுக்கலாம்.
புதினா
புதினாவை உலர்த்தி, அதனை பொடி செய்து, அவற்றை எறும்புகள் வரும் இடங்களான ஜன்னல் கதவுகள் மற்றும் வீட்டின் மூலைகளில் உள்ள ஓட்டைகளில் தெளித்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.
பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை
பேக்கிங் சோடாவுடன் சரிசமமான அளவில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை எறும்புகள் வரும் இடத்தில் தூவினால், எறும்புகள் அவற்றை சாப்பிட்டு, இறந்துவிடும்.
டால்கம் பவுடர்
இது மிகவும் சிறப்பான ஒரு எறும்புக் கொல்லிப் பொருள். அதற்கு எறும்புகள் உள்ள இடத்தில் டால்கம் பவுடரை தூவி விட வேண்டும்.
கிராம்பு
கிராம்பு சர்க்கரை டப்பாவில் 1-2 கிராம்புகளை போட்டு வைத்தால், எறும்புகள் சர்க்கரை டப்பாவில் வராமல் இருக்கும்.
பூண்டு
பூண்டுகளை தட்டி, அதனை எறும்புகள் உள்ள இடத்தில் வைத்தால், நொடியில் எறும்புகள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும்.
எலுமிச்சை சாறு
எறும்புகள் மொய்க்கும் இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், இனிமேல் எறும்புகள் வராமல் இருக்கும். அதிலும் வீட்டை மாப் கொண்டு துடைக்கும் போது, எலுமிச்சை சாறு கலந்த நீரில் நனைத்து துடைத்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
போராக்ஸ்
போராக்ஸ் பவுடரை எறும்புகள் உள்ள இடத்தில் தூவியோ அல்லது சர்க்கரை நீரில் கலந்தோ தெளித்தால், எறும்புகளின் தொல்லையில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.
எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!
வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் எலிப் பெட்டியைப் பயன்படுத்துவோம். ஆனால் தற்போதுள்ள எலிகளோ சாமர்த்தியமாக இருக்கிறது. எலிப் பெட்டியைக் கண்டாலே பயந்து ஓடும் எலிகள், தற்போது அதன் மேல் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. அதனால் கடைகளில் விற்கப்படும் எலி பிஸ்கட்டுகளை வாங்கி வைக்கலாம் என்றால், வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பயமாக உள்ளது. எனவே அந்த எலிகளை இயற்கை முறையில் அழிப்பதற்கும், அதனை வராமல் செய்வதற்கும் ஒருசில வழிகள் உள்ளன. அந்த இயற்கை வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் எலிகள் வருவதைத் தடுக்கலாம்.
பூனை
பூனைகளை வளர்த்து வாருங்கள் உங்களுக்கு செல்லப் பிராணிகள் பிடிக்கும் என்றால், வீட்டில் பூனைகளை வளர்த்து வாருங்கள். வீட்டில் பூனை இருந்தால், எலி வீட்டிற்குள் வரவே வராது.
புதினா
எலிகளுக்கு புதினாவின் வாசனையே பிடிக்காது. மேலும் அந்த வாசனை இருந்தாலே அவை போய்விடும். எனவே எலி பொந்து உள்ள இடத்தில் ஒரு காட்டனில் புதினா எண்ணெயை நனைத்து பொந்தினுள் வைத்தால், அதன் வாசனையை நுகரும் எலியின் நுரையீரல் சுருங்கி இறந்துவிடும்.
மனிதனின் முடி
மனிதனின் முடி உள்ள இடத்திலேயே எலிகள் நிற்காது. இதற்கு முக்கிய காரணம், எலிகள் முடியை விழுங்கிவிடும். இப்படி அவை முடியை விழுங்கினால், அவை இறந்துவிடும்.
நாப்தலின் உருண்டை
நாப்தலின் உருண்டை மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. எனவே நிச்சயம் இது எலிகளுக்கும் ஆபத்தானது தான். எனவே இதனைப் பயன்படுத்தியும் எலிகளை அழிக்கலாம்.
அம்மோனியா
எலி பொந்துகளில் சிறிது அம்மோனியாவை தெளித்தால், அதன் நாற்றத்திலேயே எலிகள் இறந்துவிடும்.
மாட்டு சாணம்
எலிகளை இயற்கையாக அழிக்க வேண்டுமானால் மாட்டுச் சாணம் பயன்படுத்தலாம். அதற்கு மாட்டுச்சாணத்தினை சிறு உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் சீஸ் தடவி வைத்தால், அதனை எலிகள் சாப்பிட்டு, அதன் வயிற்றில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வாந்தி எடுத்து, இறந்துவிடும்.
ஆந்தை
கடைகளில் பிளாஸ்டிக்கில் விற்கப்படும் ஆந்தை பொம்மையை எலி வரும் இடத்தில் வைத்தால், எலிகள் பயந்து வராமல் இருக்கும்.
மிளகு
எலி வரும் இடத்தில் மிளகுத் தூளை தூவி விட்டால், அதனை நுகரும் போது, அதன் நுரையீரலில் எரிச்சல் ஏற்பட்டு, மூச்சு விட முடியாமல் இறந்துவிடும்.
பிரியாணி இலை
பிரியாணி இலையின் நாற்றம் எலிகளுக்கு பிடிக்காது. எனவே அந்த இலையை பொடி செய்து எலி வரும் இடத்தில் தூவி விட்டால், அதன் நாற்றத்திலேயே இறந்துவிடும்.
வெங்காயம்
எலிகளை அழிப்பதற்கு பயன்படும் இயற்கை பொருட்களில் ஒன்று தான் வெங்காயம். அதற்கு வெங்காயத்தை நறுக்கி, எலி தங்கும் பொந்தில் வைத்தால், அதனை உட்கொண்டு எலிகள் அழியும்.
பேபி பவுடர்
பேபி பவுடரை எலி தங்கும் மற்றும் வரும் இடத்தில் தூவினால், எலிகள் அந்த வாசனையால் இறக்கக்கூடும்.