கவிதை கேளுங்கள்!
M.S. கமாலுத்தீன், பெங்களூர்
கவிதையை மனிதன் நீண்ட நெடுங்காலமாகவே ரசித்து வருகிறான். மொழி, எழுத்து இலக்கணம்,இவை தோன்றிய காலத்திலிருந்தே மனிதனுக்கும் கவிதைக்கும் நெருங்கிய உறவுண்டு. கவிதைகள் மனித வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது; கவிஞர்களும் அப்படியே.
இவ்வுலகை ஆண்ட அரசர்கள் கவிதைக்கு மயங்கி தான் ஆண்ட நாட்டின் ஒரு பகுதியை அல்லது ஒரு ஊரை கவிஞர்களுக்குத் தானமாக கொடுத்திருக்கிறார்கள். அநேக அரசர்கள் மக்களின் வரிப் பணத்தை வாரி வழங்கி தங்களை வள்ளலாகக் காட்டிக் கொண்டார்கள். அப்டி என்னதான் கவிதையில் இருக்கிறது என்றால் ஒன்றுமே இல்லை என்பது தான் பதில். கவிதை என்பது ஒரு விஷயத்தை உவமைகளுடன் வார்த்தை ஜாலங்களுடன் சொல்வதுதான்.
கவிதையை இஸ்லாம் வெறுக்கிறது; கவிஞர்களை இஸ்லாம் வழிகேடர்கள் என்ற சொல்கிறது; கவிதைக்கு இஸ்லாத்தில் இடமே இல்லை என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு.
கவிஞர்களைப் பற்றி அல்லாஹ் சொல்வதைப் பார்ப்போம்.
“இன்னும் கவிஞர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்களே பின்பற்றுகிறார்கள்” (அல்குர்ஆன் 26: 224) மேலும்பார்க்க 26:225, 226,36:69) யாரை அல்லாஹ் வழிகேடர்கள் என்று சொல்கிறான்? எப்படிப்பட்ட கவிதைகளை இஸ்லாம் அனுமதிக்ககிறது? மேலே உள்ளகுற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ஹதீஸ் வெளிச்சத்தில் தெளிவுபெறுவோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லிக்கொண்டிந்த ஆரம்பகாலத்திலும் சரி, இஸ்லாம் ஓரளவு வளர்ந்து மக்கள் அணி அணியாக இணைந்து கொண்டிருந்து போதும் சரி, குறைஷிகளின் கவிதை கலந்த குற்றசாட்டுக்கு, கவிதை மூலமே தங்கள் ஆஸ்தான கவிஞர்கள் மூலம் பதில் சொல்வார்கள்.” நபியின் கவிஞர்” என்ற பெயரும் அவர்களுக்கு இருந்தது. உதாரணமாக:
கஅப் இப்னுமாலிக் ரளியல்லாஹு அன்ஹு – போர்ப்பரணி பாடி எதிரிகளை அச்சுறுத்துவார்கள்.
ஹஸ்ஸான் இப்னுஸாபித் ரளியல்லாஹு அன்ஹு – எதிரிகளின் பாரம்பரியமான இலக்குகளைப் பழித்துப் பாடுவார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு – நிராகரிப்பைச் சாடி கவிதை பாடுவார்கள்.
இதே போல் பெண்களிலும் கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்வது என்றால், ஸஃபிய்யாபின்த் அப்துல் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹு, கன்ஸா பின்த் அமர் ரளியல்லாஹு அன்ஹு இவர்களைச் சொல்லலாம்.
உண்மையை சொல்லக் கூடிய, மிகைப் படுத்தாத – வரம்புமீறாத கவிதைகளை இஸ்லாம் வரவேற்கவே செய்கிறது. வரம்பு மீறும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருத்தியதை இந்த ஹதீஸ் மூலம் அறியலாம்:
என் கணவருடன் உறவைத் துவக்கிய காலை நேரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். நீ இப்போது எனக்கு எவ்வளவு அருகில் அமர்ந்து இருக்கிறாயோ அவ்வளவு பக்கத்தில் அமர்ந்தார்கள். அப்போது எங்களின் சிறுமிகள் தஃப்கள் அடித்தனர்.பத்ருப் போரில் கொல்லப்பட்ட என் முன்னோர்களின் புகழைப் பாடலானார்கள். அப்போது ஒரு பெண்மணி “நாளை நடப்பதை அறியக்கூடிய நபி எங்களிடம் இருக்கிறார்” என்று கவிதை பாடினார்.அவரிடம் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு பாடுவதைவிட்டும் வாயை மூடு; இதற்க முன்பு பாடியதைப்பாடு எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: ருபிய் பின்து மு அவ்வித் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ (ஹதீஸ் எண் 1096) இந்த புகாரீயில் சின்ன சின்ன மாற்றங்களுடன் இடம் பெற்று உள்ளது.
எதைப்பற்றி விமர்சிப்பதாக இருந்தாலும் அதைப்பற்றி ஞானம் வேண்டும். கவிதையைப்பற்றி விமர்சிக்க கவிதை ஞானம் வேண்டும் இருந்ததா? இந்த கேள்விக்கு அவர்களே பதில் சொல்கிறார்கள்.
“கவிதையிலும் ஞானம் உண்டு” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்கள்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ (ஹதீஸ் எண் 3001, 3002), அபூதாவூத் இப்னுமாஜ்ஜா)
கவிதையில் ஞானமுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பல சந்தர்பங்களில் வசன கவிதையில் பேசியதை ஹதீஸ்களில் காணமுடிகிறது.
ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் இருந்தபொழுது ஒரு கல் அவர்களின் மீது வந்து விழந்தது. அதன் காரணமாக அவர்களின் விரல் இரத்தமயமாகி விட்டது. அப்போது அவர்கள் ” நீ இரத்த (வெள்ள)த்தில் மாறிவிட்ட விரலேயன்றி வேறுயாதுமில்லை. அன்றி அல்லாஹ்வுடைய வழியில் இந்த வேதனை உனக்குக்கிடைத்துள்ளது” என்று (இரண்டு வரிவசன) கவிதை பாடினார்கள். (அறிவிப்பவர்: ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்திற்கு வந்தபோது அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் காணவில்லை. “உன் பெரியதந்தையின் மகன் எங்கே? என்று பாத்திமாவிடம் கேட்டார்கள். எனக்கும் அவருக்கும் சிறிய மனஸ்தாபம் இருந்தது. என்னிடம் தங்கவில்லை” என்று பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ” அவர் எங்கே என்று பார்த்துவாரும்!” என்று ஒருவரை அனுப்பினார்கள். அவர் திரும்பி வந்து “அலீ பள்ளி வாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார்” என்று பதில் சொன்னார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிக்கு வந்தபோது அலீ ரளியல்லாஹு அன்ஹு தமது மேலாடை விலகியவராகவும் மேனியில் மண் படிந்தவராகவும் ஒரு பக்கமாகப் படுத்திருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரது மேனியில் படிந்திருந்த மண்ணைத் தட்டிவிட்டு ” மண்ணின் தந்தையே எழும்; மண்ணின் தந்தையே எழும்!!” என (வசன கவிதையில்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ ஹதீஸ் எண் 441)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பள்ளியில் மேடை அமைத்துக் கொடுத்து கவிதை பாடசொன்ன சம்பவம் இதோ:
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸானுக்காக பள்ளியில் ஒரு மேடையை அமைப்பார்கள். அதன் மேல் ஹஸ்ஸான் ரளியல்லாஹு அன்ஹு நின்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்வார். அல்லது அவர்கள்மேல் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு அளிப்பார்” அல்லாஹ்வின் தூதரைப் புகழும்வரை அல்லது அல்லாஹ்வின் தூதர் சார்பில் மறுப்பளிக்கும் வரை ஹஸ்ஸானுக்கு அல்லாஹ் குஹுல்குதஸ் (ஜிப்ரயீல்) மூலம் பலப்படுத்து கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹு. நூல்: திர்மிதீ- ஹதீஸ் எண் 3003, 3004)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவிதையை அனுமதித்ததற்கு காரணம் வார்த்தையில் இருக்கும் வலிமைதான். சுடு சொற்களை எதிரிகளின் மீது வீசும்போது வார்த்தைகள் வதைக்கும். வாழ்நாள் முழுவதும், தமிழில் கூட சொல்வார்கள் : தீயினால் சுட்டபுண் ஆறிவிடும், நாவினால் சுட்டபுண் ஆறுவதில்லை என்று!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்ரதுல்களாவை நிறைவேற்ற மக்கா சென்ற போது அவர்களின் முன்னே கஃபுபின் மாலிக் பின் வரும் கவிதையை பாடியபடி நடந்து சென்றார். காஃபிர்களின் மைந்தர்களே! இவரை (நபியை) இவரது பாதையில் விட்டு விடுங்கள்! மண்டை ஓட்டை அதன் இடத்திலிருந்து நீக்கும் வகையில் இவரது சட்டங்களினால் இன்று உங்களை தாக்குவோம்; அத்தாக்குதல் உற்ற நண்பனையும் மறக்கச் செய்து விடும். அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மாலிக்கின் மகனே! அல்லாஹ்வின் தூதர் முன்னிலையில் அல்லாஹ்வின் ஹரம் (புனிதபூமி) எல்லையில் ்கவிதை பாடுகிறீரா? என்று கேட்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உமரே! அவரைவிட்டு விடும்; அக்கவிதை அம்பை விட வேகமாக அவர்களைத் தாக்கும்” எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்ு ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ-ஹதீஸ் எண் 3005)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல சந்தர்பங்களில் கவிதைகளை மேற்கோள்காட்டி உள்ளார்கள். உதாரனத்துக்கு இரண்டு ஹதீஸ்களைப் பார்ப்போம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவிதைகளை மேற்கோள் காட்டுவார்கள்? என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் அப்துல்லாஹ் பின் ரவாஹாவின் கவிதையை மேற்கோள் காட்டுவார்கள்.” நீ யாருக்கு உணவளிக்கவில்லையோ அவன் உன்னிடம் செய்திகளைக் கொண்டு வருவான்” என்ற கவிதையை கூறுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு,. நூல்: திரிமிதீ-ஹதீஸ் எண் 3006)
“அல்லாஹ்வைத் தவிர அனைத்தும் அழிந்துவிடும்” என்ற லபீத் எனும் கவிஞரின் கூற்றே அரபியரின் பேச்சுக்களில் சிறந்ததாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ, முஸ்லிம், திரிமிதீ: ஹதீஸ் எண் 3007)
நபித்தோழர்களும் கவிதைகளும்
எந்த நபிக்கும் எந்தத்தலைவர்களுக்கும் இல்லாத மிகச் சிறந்த தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் இருந்தார்கள். அந்த தோழர்களில் அதிகமான நபிவழியை அறிந்தவரும், அறிவித்தவருமான ஸஹாபி அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தாங்கள் செய்த பயானில் எடுத்துக்காட்டிய கவிதை.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு தமது உரையின்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்பற்றி அப்துல்லாஹ் பின்ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு இயற்றிய பின் வரும் கவிதையை எடுத்து கூறினார்கள். பஜ்ரு நேரம் வந்ததும் அவனது வேதத்தை ஓதுகிறார்கள்; நாங்கள் வழிகேட்டில் இருந்தபின் எங்களுக்கு அவர்கள் நேர் வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நடந்தேறும் என்று எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன. இணை வைப்பவர்கள் படுக்கையில் அழுந்திக் கிடக்கும் போது அவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள். (அறிவிப்பவர் : ஹைஸம்் பின் அபீஸினான், நூல்: புகாரீ (ஹதீஸ் எண் 1155)
நபித் தோழர்களில் மிக வித்தியாசமானவர்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடை,உடை, பாவனை என எல்லாவற்றிலும் அப்படியே தன் வாழ்வில் பிரதிபளிததவர் ஸஹாபி அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் செய்த பயானில் பயன்படுத்திய கவிதை: இவர் வெண்மை நிறத்தவர்; இவரால் மழை வேண்டப்படும்; இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும், விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார் என்று அபூதாலிப் பாடிய கவிதையை இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு எடுத்தாள்பவராக இருந்தனர். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ்பின்்தினார்,, (நூல்: புகாரீ (ஹதீஸ் எண் 1008,1009)
பாங்கின் பின்னணியில் ஒரு கவிதை
மக்களை தொழுகைக்கு அழைப்பது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தோழர்கள் ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது அப்துல்லாஹ் இப்னுஸைத் ரளியல்லாஹு அன்ஹு தான் கண்ட கனவை கவிதையாக சொல்கிறார்.
கண்ணியமும் மதிப்புமிக்க அல்லாஹ் பாங்கை வழங்கியமைக்காக அதிகமாக அவனைப் புகழ்கிறேன். அல்லாஹ்விடமிருந்து நற்செய்தி கூறுபவர் என்னிடம் வந்தார்.என்னிடம் நற்செய்தி கூறுபவரை அனுப்பியது என்ன பாக்கியம்! தொடர்ந்து மூன்று இரவுகள் என்னிடம் வந்தார். ஒவ்வொரு முறை வரும் போதும் மதிப்பையே அதிகப்படுத்தினார். (இது கவிதையின் கருத்து) நூல்: இப்னுமாஜ்ஜா, (ஹதீஸ் எண் 706)
நான் நூறு தடவைகளுக்கும் அதிகமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அமர்ந்துள்ளேன். அவர்களின் தோழர்கள் கவிதை பாடுவார்கள். அறியாமைக்கால நிகழ்ச்சிகளை நினைவு கூறுவார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்போதெல்லாம் மெளனமாக இருப்பார்கள்; சில சமயம் புன்னகை செய்வார்கள். (அறிவிப்பவர் : ஜாபின்் பின் ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திரிமிதீ (ஹதீஸ் எண் 3008)
இந்த 12 ஹதீஸ்களிலிருந்து பல விஷயங்கள் நமக்கு தெளிவாகிறது. பொய் முலாம் பூசாத, உண்மையைச் சொல்லும் நல்ல கருத்துள்ள கவிதைகளை இஸ்லாம் அங்கீகரிக்கவே செய்கிறது. இதை கொண்டு அமல் செய்யவோ அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பை பெறவோ முடியாது. வரம்புக்கு உட்பட்ட கவிதைகளை ரசித்து கொள்ளலாம்; பயான்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இசை: இன்று யாரும் இஸ்லாமிய கவிதைகள் என்று தனியாக எழுதாவிட்டாலும், கவிதையோடு இசையைக் கலந்து இஸ்லாமிய பக்தி(?) பாடல்கள் என்ற பெயரில் மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மவ்லவிகளுக்கு அடுத்தபடியாக மக்களை வழிகெடுப்பவை “இஸ்லாமிய பாடல்கள்” என்று சொன்னால் அது மிகைபடுத்தாத உண்மை. இந்த பாடல்களை விமர்சிப்பதற்கு முன்னால், இசையை முஸ்லிம்கள் ரசிக்கலாமா? என்னபதை ஹதீஸ் வெளிச்சத்தில் விளங்கிக் கொள்வோம்.
ஷைத்தானின் இசையை கேட்பதை தடை செய்துள்ளேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ஹதீஸலின் சுருக்கம். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திரிமிதீ (ஹதீஸ் எண் 1011), அனஸ் ரளியல்லாஹு அன்ஹு மூலமாக புகாரிீ, முஸ்லிம்.
அஹ்மதில் இடம்பெறும் மற்றொரு மற்றொரு ஹதீஸில் “இசைக் கருவிகளை உடைப்பதற்காகவே நான் வந்துள்ளேன்” என்று இடம்பெற்று உள்ளது. இங்கு வாசக சகோதரர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம் ருபிய்பின்து முஅவ்வித் (ரழி) அறிவிக்கும் (திரிமிதீ 1096) ஹதிஸில் தஃப் அடித்ததாக உள்ளது. இது இசையை ரசித்ததாகதானே அர்த்தம்? என்று கேட்கலாம். தஃப் என்பது ஒரே விதமான சப்தத்தை மட்டுமே எழுப்பும் கருவி; இதைப்பற்றி மேலும் அறிய புகாரீயை புரட்டுவோம்.
புஆஸ் (எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என் முன்னே தஃப்அடித்து பாடிக் கொண்டிருந்தபோது என்னிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தமது முகத்தை (வேறுபுறமாகத்) திருப்பிக் கொண்டார்கள்.அப்போது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா? என்று கூறி கடிந்து கொண்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கரை நோக்கி அவ்விருவரையும் விட்டு விடும் என்றார்கள். அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பியபோது அவ்விருசிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறிவிடுமாறு கூறி)னேன். அவ்விருவரும் வெளியேறிவிட்டனர். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரீ (ஹதீஸ் எண் 949, 952, 987)
அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக்கருவிகளா? இந்த வாசகம் கவனிக்க வேண்டிய ஒன்று. தஃப் அடிக்கும் கருவி இசை குடும்பத்தைச் சேர்ந்தது என்றாலும் இதற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள். பலவிதமான சப்தங்களை எழுப்பக்கூடிய இசையையும், இசைக் கருவிகளையும் தடை செய்கிறார்கள் என்பதை அறியலாம்.
(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்; இன்னும் எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதைவிட்டும் (நீங்கள்) விலகிக் கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (அல்குர்ஆன் 59:7)
இதன்படி முஸ்லிம்கள் இசையை ரசிப்பதை தவிர்த்துக் கொண்டால் நல்லது. இல்லை எனில் இறைவனின் வேதனை நிச்சயம் உண்டு. டேப்ரிக் கார்டர் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் வீட்டிலும் குர்ஆன், ஹதீஸ் பயான் கேஸட்கள் இருக்கிறதோ இல்லையோ “இஸ்லாமிய பக்தி(?) பாடல்கள் கேஸ்ட்” கண்டிப்பாக இருக்கும். இந்துக்களைப் போல் காலையிலும் மாலையிலும் பக்தி(?) பாடல்களைக் கேட்டு தங்கள் பக்தியை வளர்த்துக் கொள்வார்கள். சில வியாபாரிகள் தங்கள் கடைகளை திறந்த உடன் இந்த பாடல்களை போட்டு பத்தி பொருத்தி வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள். அந்தப் பாடல்களை விமர்சிப்போம்.
இஸ்லாமிய பாடல்களும் இணைவைக்கும் கருத்துக்களும்
நம் எல்லோரும் பல முறை கேட்ட பாடல்கள் தான் இவை.
1. ”ஒருகையில் இறைவேதம் மறுகையில் நபி பேதம் இருக்கையில் நமக்கென்ன தயக்கம்”.
2. ” அல்லாஹ்வை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடிவரும் – அந்த வல்லோனை நினைத்திருந்தால் – நல்வாழ்க்கையும் தேடிவரும்.
3. இறைவனிடம் கையேந்துக்ள – அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் -அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை.
4. ஆற்றல் மிகு அல்லாஹ் – உனை போற்றுகின்றேன் அல்லாஹ்; உனக்கினை இல்லை உவமைகள் இல்லை.
5. உலக வாழ்க்கை என்பது உனக்கு இறைவன் தந்தது – இசையை நீக்கிவிட்டு ரசித்தால்
இந்த பாடல்கள் எல்லாம் நல்ல கருத்தை சொல்லக் கூடியவைதான். குர்ஆன் – ஹதீஸை பின்பற்றுங்கள்; அல்லாஹ்வை தொழுங்கள்; அவனிடமே கேளுங்கள் – அருள்புரிய ஆற்றல் உள்ளவன் அவன் மட்டுமே; இந்த வாழ்க்கை அவன் கொடுத்த வாய்ப்பு, நல்ல அமல் செய்து வெற்றி பெறு – என்று இந்த பாடல்கள் வலியுறுத்துகின்றன. இப்டிப்பட்ட நல்ல கருத்தைத சொல்லக் கூடிய பாடல்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்.
“நிச்சயமாக, சில கவிதைகளில் ஞானம் (கருத்தாழம்) இருக்கிறது”
(அறிவிப்பவர்: உபையுப்னுகஃபு ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ, அபூதாவூத்)
நல்ல கருத்தைச் சொல்லும் இந்த பாடல்களை கேட்டு ரசிப்பதோடு சரி; மக்கள் பின் பற்றுவதில்லை. அதே சமயம் ஷைத்தானின் சந்தோசத்தை அதிகப்படுத்த கூடிய பாடல்களை உடனே பின்பற்றுவார்கள். (உம்வாசல் தேடிவந்தோம் ஷாஹ் மீறானே – எனத் தொடங்கும் பாட்டில் – அருள் மழை பொழிய வேண்டுமையா)
1. எங்கள் அல்லல் நீங்கிட வேண்டுமையா
உங்கள் கருணை எமக்கு வேண்டுமையா
நாங்கள் கண்டதுயரங்கள் போதுமையா.
ஏர்வாடிப் போகாமல் என்றும் கதிர்குலுங்கி எனத் தொடங்கும் பாடலில் கண்களில் அருள் இருக்கும், கைகளில் பொருள் இருக்கும்.
2. கருணையின் வாசலிலே காரியங்கள் உடன் நடக்கும்
கண்ணிரண்டில் நீர் எடுத்து காலிரண்டில் முகம்புதைத்து கையேந்தி கேட்டவர்க்கு கட்டாயம் வழிபிறக்கும்.
தென்னகத்தின் திருவிளக்கு, எனத் தொடங்கும் பாட்டில்
3. அணையாத அகல் விளக்கு
இணையில்லாத மணி விளக்கு
இருக்க விரட்ட மருந்தொன்று விற்குது.
நாகூர் தர்காவில் – எனத்தொடங்கும் பாட்டில் எமனை விரட்ட மருந்து உண்டு நாகூர் தர்காவில்; அன்போடு போனால் எல்லோருக்கும் கிடைக்கும்; இதை சாப்பிட்டால் எல்லா நோய்களும் அகலும். 24 மணி நேரமும் விற்பனை உண்டு ; பக்தியோடு சாப்பிட்டால் எல்லா பாக்கியமும் கிடைக்கும். செல்வம குழந்தை உடல் ஆரோக்கியம் உடனே கிடைக்கும்; ஜாதி மதம் பார்க்காமல் வாங்கி சாப்பிடுங்கள் என்றும் மேலே உள்ள மூன்று பாட்டில் அல்லாஹ்விடம் கேட்க வேண்டியதை அவுலியாவிடம் கேட்கப்படுகிறது. ஆதாரம் காட்ட தேவையில்லாத அளவுக்கு குர்ஆன் ஹதீஸுக்கு எதிராக, அமல்களை அழிக்கக் கூடிய அல்லாஹ்வின் கோபத்தை அதிகரிக்கச் செய்யும் விதமாக எழுதப்பட்டு உள்ளன. இதை யார் பின்பற்றினாலும் நிச்சயமாக அவர் நஷ்டவாளிதான். மறுமையில் நரகவாதிதான். இப்படிப்பட்ட பாடல்களை பற்றி நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.
”உங்களில் ஒருவரது வயிற்றில் (கெட்ட) கவிதை நிரம்பி இருப்பதை விட சீழ் நிரம்பியிருப்பது சிறந்ததாகும்”
(அறிவிப்பவர் : ஸஃது பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திரிமிதீ (ஹதீஸ் எண் 3009 அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு மூலமாக புகாரீ, முஸ்லிம், இப்னுமாஜ்ஜா)
இந்தப் பாடல்க்ள எழுதிப் பாடியதன் மூலம் இவர்கள் சம்பாரித்தது அல்லாஹ்வின் கோபத்தை; ஷைத்தானின் சந்தோசத்தை.(மறுமையில்) மக்களின் சாபத்தை, இவ்வுலகில் வாழ்க்கை வசதிகளைத ்தவிர வேறு ஒன்றுமில்லை. இப்படிப்பட்ட கவிஞர்களை தான் அல்லாஹ் சபிக்கிறான்.இவர்கள் எழுதிய பாடல்களை பின்பற்றுகிறவர்களை வழிகேடர்கள் என்று அல்லாஹ் குர்ஆனிலே சொல்கிறான். இப்படிப்பட்ட பாடல்களை கேட்பதை விட்டும் இதன்படி நடப்பதை விட்டும், ஷைத்தானின் இசையை ரசிப்பதை விட்டும் யாஅல்லாஹ்! இந்த முஸ்லிம் சமுதாயத்தை காப்பாற்று. மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களுடைய நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை – பயபக்தியை (அல்லாஹ்)அளிக்கிறான். (அல்குர்ஆன் 47:17)
சகோதரர்கள் நினைவுக்கு:
இந்த கட்டுரையில் ஹதீஸ்களை ஆதாரம் காட்டும் போது எண்களையும் குறிப்பிட்டுள்ளோம். சரி பார்த்து விளங்கி பின்பற்ற வேண்டுகிறோம். குர்ஆன் ஹதீஸ் விளங்கி பின்பற்ற வேண்டுகிறோம். குர்ஆன், ஹதீஸ் ஞானத்ததை நமக்கு அல்லாஹ் அதிகப் படுத்துவானாக! ஆமீன்.