கண் மூடிக் கொண்ட பின்னால்…
அபூ சுமையா, நாகை.
சாவின் பெயராலும் அனாச்சாரங்கள்….
கண்களிரண்டும் மூடிக் கொள்கின்றன – மீண்டும் திறவா வண்ணம். “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”.
சகப்பு மாற்றுகிறார்களோ என்னவோ அதற்குள் கசாப்புக் கடைக்கு ஆள் போகும். மளிகைக் கடைக்கு வேறொரு ஆள் பறக்கும். பண்டாரியைத் தேடிக்கொண்டு வரச் சொல்லிப் பல குரல் எழும்பும்.
வழியின்றி வேதனைகளை அனுபவித்து ஓய்ந்து போனவனை மண் மூடிக் கொண்ட பின், கூடி அமர்ந்து உண்டிட!.. என்ன கேவலம்!
சாப்பிட வேண்டியதுதான். ஆண்டான்டு அழுதாலும் மாண்டவன் மீள மாட்டான் தான். பொறுமையைப் கைக் கொண்டு பணியைத் தொடரத்தான் பணிக்கிறது இஸ்லாம். அதற்காக இப்படியா? அதுவும் நெய்ச்சோறும் குருமாவும்!
தூர தொலைவிலிருந்து வரும் உற்றார் உறவினர்களுக்காகத்தான் இந்த ஏற்பாடு எனச் சப்பைக் கட்டு கட்டுவார்கள். சரி! அவர்கள் எளிய சோறு சாப்பிட மாட்டார்களா? பிரியானிக்காகத்தான் புறப்பட்டு வந்தார்களா? எளிய இல்லங்களைக்கூட இந்தப் பாழும் வழக்கம் விட்டு வைக்கவில்லையே? மார்க்கத்தின் பெயரால் ஒரு கடமையைப் போலன்றோ ஆக்கி விட்டார்கள்.
இதுமட்டுமா? கண் மூடிக் கொண்ட பின்னர் இன்னும் எத்தனை எத்தனை வேடிக்கைகள். சாவின் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சடங்குகள்தான் எத்தனை?
கபன் தபனிட்டு ஜனாஸா வெளியாகும். ஜனாஸாவைத் தூக்கிய மறுகணமே, உடலில் தூசு விழக்கூடாது என்ற நோக்கில் உடல் கிடத்தப்பட்ட இடத்தின் மேல் பந்தல் போல் கட்டப்பட்டிருந்த துணியை அவசரமாய் அகற்றுவார்கள். ஏன் அடக்கம் செய்து விட்டு வந்து நிதானமாக எடுத்தால் ஆகாதா?
ஜனாஸா வீட்டை விட்டு வெளியேறும். அடுத்தகணமே ஒருவர் கூரையிலிருக்கும் ஓடுகளில் ஒன்றை உருவி எடுத்துத் தரையில் போட்டு விடுவார். இது யார் சொல்லித் தந்தது? இரசூல்நபிகளா. ஓட்டை உருவி விடுகின்றீர்கள், சரி; கான்கிரீட் கட்டிடம் என்றால் எதை உருவி இச்சடங்கை நிறைவேற்றுவதாம்?
இன்னும் ஒன்று! இறக்கும் போது கூட கிழமை பார்த்துதான் இறக்க வேண்டும். செவ்வாய், சனிக் கிழமைகளில் இறந்தால் தொலைந்தது. இன்னொரு சாவு தொடரும். ஆனால் முதல் சாவிலேயே புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் பிழைத்தீர்கள். அதாவது ஒரு கோழியையும் ஜனாஸாவுடன் சேர்த்து வீட்டைவிட்டு வெளியேற்றிட வேண்டும். எத்தனை பெரிய சண்டாளத்தனம் இது.
பகுத்தறிவு மார்க்கத்தில் இப்படியொரு குருட்டுத்தனம். எனக்கு இதைக் கண்ட மாத்திரத்திலேயே ஒரு சிறு பொறி தட்டியது. நாயுடு இன நண்பரான சீனிவாசனிடமும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தனபாலிடமும் கேட்டேன் – அவர்களது மதச் சடங்குகளைப் பற்றி. திடுக்கிடத்தான் முடிந்தது. ஆம். செவ்வாய், சனிக்கிழமைச் சாவுகளுக்கு சேவலோ கோழியோ பாடையிற் கட்டி அனுப்பும் பழக்கம் எங்களுடையதே எனச் சொந்தம் கொண்டாடினர் அவ்விருவரும். எனக்குப் புரிந்து போனது – நம்மைத் தொற்றிய நோயின் மூலம் எதுவென்று!
ஜனாஸாவைக் குளிப்பாட்டும்போது அதற்காக ஆள் தேடும் அவலம் இருக்கிறதே, அல்லாஹு அக்பர்! சொல்லி மாளாது. உயிருடனிருக்கையில் ஒட்டி உறவாடியவர்களெல்லாம் ஒதுங்கி நிற்பார்கள். பெற்ற மக்களே நெருங்கி வந்த சுத்தப்படுத்தப் பயப்படும் இழி நிலை. எல்லாவற்றிற்கும் ‘மோதினார்’தான் ஈடுகொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்தானே சொற்ப ஊதியம் பெறும் இழிச்சவாயர்! பெருமானார் காலத்தில் பிலால் (ரழி) தான் இந்தக் காரியமாற்றியதாக நினைவு போலும்.
ஜனாஸா வீட்டைவிட்டு வெளியேறுகிறதா? கூடவே உப்பு, அரிசி, முட்டை சில பகுதிகளில் வாழைப்பழக்குலை – தட்டில் பரப்பி ஊர்வலம் போக வேண்டும். இந்து நண்பர்கள்தான் வாய்க்கரிசி எடுத்துச் செல்வார்கள். உப்பும் கடலையும் கலந்து இறைத்துக் கொண்டே போவார்கள். வல்ல அல்லாஹ் சொல்லாததை, வள்ளல் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இயம்பாததை – அதுவும் நம் கண் முன்னரே அல்லாஹ் அல்லாதவற்றை நம்புவோரின் பழக்கக வழக்கங்களைப் பின்பற்றுகிறோமே இது நியாயந்தானா?
நியாயமாகச் செய்யப்பட வேண்டிய காரியங்கள் தான் எவை என்கிறீர்களா? இறந்து போனவர்களின் இல்லத்தில் சமையல் செய்யப்படுவதை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடுத்துள்ளதுடன் அண்டை வீட்டாரே, உணவு தயாரித்து அளிக்க வேண்டுமேன வலியுறுத்தியுள்ளது இங்கு எண்ணிப் பார்க்கத் தக்கது. ஜனாஸாவைக் குளிப்பாட்டியபின் நெஞ்சில் பல கூட்டு மணத்தூளைக் கொட்டி, அல்லாஹ் முஹம்மது என எழுதுவதும் மேற்பட்டி பிரிப்பதும் ஓடு எடுப்பதும் சேவற்கொழி அனுப்புவதும் அண்ணலார் காட்டிய வழியில்லை; அதைப் பிடித்துக் கொண்டு நிற்பது அழகும் இல்லை!
இவ்வளவு அனாச்சாரங்களைச் சாவின் பெயரால் கடைப்பிடிக்கிறோமே, மிக முக்கியமான ஜனாஸாத் தொழுகையில் எத்தனை பேர் கலந்து கொள்கிறோம்? ஜனாஸாத் தொழுகை ஒருபுறம் நடக்கும்; மூலைக்கு மூலை கூடி நின்று அரசியல் முதல் சினிமா வரை அலசியாகும். ஜனாஸாவை அமைதியாகப் பின்பற்றுவதும் தொழுகையை நிறைவேற்றுவதும்தானே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹுவஸல்லம் அவர்கள் அருளிய மொழி.
கண்மூடிக் கொண்ட பின்னர், கண்மூடித்தனமாய்ப் பின்பற்றும் செயல்களைக் களைந்து வாழ்விலும் சாவிலும் வள்ளல் நபிகளைப் பின்பற்றி சத்திய இஸ்லாத்தை நிலைநாட்டுவோம்.