அல்லாஹ்வின் பார்வையில் ஆலிம்கள்!
A.H. முஹம்மது அலீ, சிங்கப்பூர்
ஆலிம்கள் என்றால் யார்? அவர்களின் இரலட்சணங்கள் என்ன? என்பதைப்பற்றி நாம் ஒவ்வொருவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருந்து வருகிறோம். காரணம், உண்மை இஸ்லாத்தை அறிந்து அதன்படி செயல்பட முன்வரும் ஒவ்வொருவரும் “தான் அறிந்தது சரிதானா?”, என்பதை பரீட்சித்துப் பார்க்க ஞானம் பெற்ற ஆலிம்களையே நாட வேண்டிய தேவையில் இருந்து வருகிறோம்.
இந்தக்கால சூழ்நிலையில் போலி உலாக்களுக்கும், உண்மை உலமாக்களுக்கும், உள்ள வேற்றுமையை உணர்ந்து நாம் தெளிவு பெற வேண்டிய நிலை ஏற்பட்டதினால் இந்தக் கட்டுரையை எழுதும் அவசியம் நமக்கு வந்திருக்கிறது. 3வருடம், 5வருடம், அல்லது 7 வருடம் தொடர்ந்து ஒரு மதரஸாவில் ஓதி ஸனது (பட்டம்) வாங்கியரவதான் ஆலிம்; பிப்ஹு மஸாயிரல்களை மனப்பாடம் செய்து உள்ளத்தில் உருப்போட்டவர் தான் ஆலிம்; கடகடவென்று மாட்டு வண்டி ஓடுவது பேல குர்ஆன் வசனங்களை “படபட” வென ஓதும் திறன் பெற்றவர்தான் ஆலிம்; ஒரே மூச்சில் நீளமாக 15 நிமிடங்களுக்கு புரியாத பாஷையில் துஆ ஓதத் தெரிந்ததவர்தான் ஆலிம் என்பதாக நாம் ஆலிம்களுக்கு வரைமுறை கற்பித்து வைத்திருக்கிறோம்.
ஆனால் ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ் ஆலிம்கள் என்றால் யார்? அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்பதை மிக அழகாக விளக்கமாக பின்வரும் வசனத்தில் விவரிக்கிறான்.
“இவ்வாறே மனிதர்களிலும் ஊர்வனவற்றிலும் கால்நடைகளலும் பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் ஆலிம்கள் – அறிஞர்கள் தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன் மிக மன்னிப்பவன்” (அல்குர்ஆன் 35:28)
ஆம் ‘தக்வா’ எனும் உள்ளச்சம் உடையவர்கள் தான ஒரிஜினல் ஆலிம் என்பதை மிக நேர்த்தியாக மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். ஆலிம் பெருமக்களுக்கு அல்லாஹ் வரையறுக்கும் ஒரே இலக்கணம் “தக்வா”
தக்வா என்றால் என்ன? பொதுமக்களாகிய நாம் நமது பழக்க பாஷையில் “தக்வா” என்பதற்கு வல்லமை, வலிமை என்று பொருள் கொண்டிருக்கிறோம். அத்தகைய தக்வா நமது தமிழக ஆலிம்களிடத்தில் நிறையவே இருக்கிறது. மூன்று பேரை அடிக்கும் அளவுக்கு உடல் வாகு உடையவர்களாக பெரும்பாலான ஆலிம்கள் இருக்கிறாரகள். மவ்லூது சாப்பாடுகளும், கத்தம் பாத்திஹா சாப்பாடுகளும், விதவிதமான பலகார பூமியான் வகைகளை சாப்பிட்டு உடல உரமாக வல்லமையாக பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதற்கு பெயர் தக்வா அல்ல; வேண்டுமானால் “குவ்வத்” என்று சொல்லலாம்.
ஆனால் அல்லாஹ் வரையறுத்த ‘தக்வா’ என்பது உள்ளசம் எனப் பொருள்படும். எந்த ஒரு காரியத்தை செய்யும்போதும் உள்ளச்சத்துடன் சகல நிலைககளிலும் அல்லாஹ்விற்கு எவர் அஞ்சியவர்களாக இருக்கிறார்களோ அவர்களைத் தான் ஆலிம்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆலிம் என்றால் “இல்மை உடையவன்’ என்று பொருள்படும். இல்மு என்றால் அறிவு. அதாவது மார்க்க அறிவு; இன்னும் சொல்லப்போனால் குர்ஆன், ஹதீஸைப் பற்றிய ஆழ்ந்த அறிவு என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், குர்ஆன், ஹதீஸ் பற்றிய ஆழ்ந்த அறிவு யாருக்கு பயன்படும் என்றால் ‘தக்வா’ தாரிகளுக்குத்தான் என்பதை மிக அழுத்தந்திருத்தமாக அல்லாஹ் கூறுகிறான். உள்ளச்சம் இல்லாத மார்க்க அறிவு பாறையில் கொட்டிய மழைக்குச் சமம். பிரயோஜனமே படாது.
மார்க்க அறிவு மட்டும் உள்ள ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு சரியான பூரணமாக வழிபட மாட்டான். உள்ளச்சம் உடைய மார்க்க அறிவை பெற்றவன்தான் அல்லாஹ்விற்கு சகல நிலைகளிலலும் வழிபடுவான் ன்பதற்கு ஒரு உதாரணத்ததைப் பார்ப்போம்.
மார்க்கத்தின் தூணாக கருதப்படும் தொழுகையைப் பற்றி அறியாத முஸ்லிம்கள் வெகு சொற்றபமானவர்களே. ஆனால் 90% மக்கள் தொழுகையைப் பற்றி நன்கு அறிந்த (இல்மு)வர்களாய் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் தொழுகையில் முழு விபரத்தயும் அறிந்து அதன் உள்பர்ளுகள். எத்தனை, வெளி பர்ளுகள் எத்தனை, வாஜிபுகள் எத்தனை, சுன்னத்துகள் எத்தனை என்பதைப் பற்றி எல்லாம் நம்பர்கள் போட்டு மனப்பாடமாக சொல்லும் எத்தனையோ பேர், தொழுவாததின் காரணம் என்ன? தொழுகையை மிக அலட்சியமாகக் கருதுகிறார்களே ஏன்? நிச்சயமாக அவர்களுக்கு தொழுகையைப்பற்றிய இல்மு(அறிவு) இருக்கிறது. ஆனால் அந்த அறிவை செயல்படுத்த தேவையான உள்ளச்சம்(தக்வா) இல்லை. ‘தக்வா’ இருந்தால் அவர்களால் தொழாமல் இருக்க முடியாது.
ஆகையினால் எந்த ஒரு அமலையும் அறிமுகப்படுத்த தான் “இல்மு” உதவுகிறது. வலியுறுத்துகிறது என்பதை மேற்கண்ட உதாரணத்தின் மூலம் நன்கு அறியலாம். வல்ல அல்லாஹ் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் உலக ஆலிம்களை இரண்டு பிரிவாகப்பிரிக்கிறான்.
1. தக்வா இல்லாதவர்கள். (இவர்கள் ஆலிம்களே அல்ல)
2. தக்வாதாரியான ஆலிம்கள்.
முதலாவதாக, தமிழகமெங்கும் நிறைந்து காணப்படும் மேற்கண்ட முதல் பிரிவினரைப்பற்றி கண்ணோட்டமிடுவோம்.
1. ‘தக்கவா’ இல்லாதவர்கள்
ஏழு வருடங்கள் வரை மத்ரஸாவில் ஓதிய பெரும்பாலான “ஸனது” வாங்கியவர்களுக்கு இல்மு இருக்கிறது. எந்த ஒரு மஸாயிலுக்கும் அரபி பிக்ஹு கிரந்தத்தை பார்த்து விளக்கம் சொல்லும் ஆற்றல் இருக்கிறது. ஆனால் அதிமுக்கியமாக தேவைப்படும்”தக்வா” எனும், உள்ளச்சம் தான் இவர்களிடத்தில் இல்லை. காரணம் இவர்களுக்குப் போதிக்கப்படுவது. குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணான – மாற்றமான எத்தனையோ குப்பை புத்தகங்களைத்தான் பாடநூல்களாக இவர்களுக்குப் படித்து கொடுக்கப்படுகிறது. உதவாக்கதை மஸாயில்களையும்,உருப்படாத சட்டதிட்டங்களையும் இவர்களது மூலையில் ஏற்றி குர்ஆன், ஹதீஸ் பக்கமே திரும்பாமல், ஏழு வருடங்கள் வீணாக்கியதை தவிர வேறு என்ன உருப்படியாக கற்று வந்திருக்கிறார்கள்?
பொது மக்களாகிய நாம் இவர்களிடத்தில் சென்று அந்நஜாத்தில் வெளியான ஹதீஸ் தொகுப்புகளையும், சட்டங்களையும பற்றி விளக்கம் கேட்டால் இவர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும். துர்ருல் முக்தாரும், ஆலம் கீரியும் தான் வேத வசனமாக போதிக்கப்பட்ட இவர்களிடத்தில் புகாரீ, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களை தூக்கிக்கொண்டு போனால் எப்படி சகித்துக் கொள்வார்கள். சில மத்ரஸாக்களில் புகாரீ, முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூல்களை அறவே பார்க்காமல் வெளிவருபவர்கள் நம்மிடத்தில் பதில் சொல்ல இயலாமல் தயங்குகிறார்கள்; தடுமாறுகிறார்கள். உள்ளுக்குள் புலம்புகிறார்கள். என்ன பதில் சொல்லி தப்பிப்பது என்று யோசனை செய்து திடீரென்று நம்மையே திருப்பி தாக்குகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் முதல் ஆயுதம் என்ன தெரியுமா? ‘வஹ்ஹாபி’ என்ற பெயர் தான். அதற்கு நாம் அசைந்து கொடுக்காமல் இருப்போமானால் இன்னோரு ஆயுதத்தை பயன்படுத்துவார்கள்.” சுன்னத் வல்ஜமாஅத்திற்கு மாற்றமான பத்திரிகை” என்பார்கள்.
குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் கேட்கும் சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் சொல்லாமல், குர்ஆன், ஹதீஸிற்கு பல விஷயங்களில் முரண்படும் நிலையிலுள்ள பிக்ஹு கிதாபுகளை தூக்கி கொண்டு வந்து நம்மிடம் காட்டுகிறார்கள். நமக்கு “அவாம்கள்” என்ற பட்டத்தையும் உங்களைப் போன்ற அவாம்கள் நேரடியாக குர்ஆன், ஹதீஸை புரிந்துக் கொள்ள முடியாததினால் தான் இது போன்ற ஃபிக்ஹு களஞ்சியங்கள் இருக்கிறது என்று மார்தட்டுவார்கள். நம்மிடத்திலேயே பணம் வாங்கி, நம்வீட்டில் சாப்பிட்டு நம் தயவில் வாழும் இவர்கள் நமக்கு சூட்டும் பெயர் அவாம்கள – பாமரர்கள்.
இத்தகு அதிமோவிகளில் ஒருவரான ஒரு நபருக்கும் எனக்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தை இங்கு எழுதுவது பொருத்தமாக இருக்கும். சமீப காலங்களில் தொழுகை சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் வெளிவந்தது. அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுத விதம் பற்றி எழுதி இருந்தார்கள் நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கட்டும்போது தன் நெஞ்சின் மேல் இரு கைகளைக் கட்டியதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் எடுத்துக் கொண்டு மேற்படி நபரிடம் சென்றேன். (அவர் ஹனஃபி மத்ஹபு பள்ளியில் இமாமத் பணிபுரிகிறார்) அவரிடத்திலேயே இதைப் பற்றி விசாரித்த போது அவருக்கு வந்த கோபத்தையும், அவர் பேசிய அசிங்கமான வார்த்தைகளையும் எழுத என் பேனா கூசுகிறது. இமாம் அபூஹனிஃபாவை விட இந்த புத்தகத்தை எழுதியவன் சிறந்தவனா? என்று சரமாரியாக கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார். நானும் விடாப்பிடியாக இப்புத்தகத்தை எழுதியவர் தனது சொந்த கருத்தைத எழுதவில்லை; ஹதீஸ்களை ஆதாரமாக கொடுத்துள்ளார் என்று பேசினேன். இறுதியாக தன் தரப்புவாதம் பலவீனமானதை உணர்ந்த அவர்,” ஹதீஸ் கிதாபுகளில் எங்கேயாவது ஹனஃபி மத்ஹபுகாரர்கள் செய்வது போல தொப்புளுக்கு கீழ் கை கட்ட கூடாது?” என்று இருக்கிறதா? என்ற என்னிடமே எதிர் கேள்வியை கேட்டார்.
அன்புச் சகோதரர்களே! இவரைப் போன்ற எத்தனையோ நபர்கள் “ஆலிம்கள்” என்ற போர்வையில் உலாவி வருகிறார்கள். இன்னும் கொஞ்ச காலத்திற்கு பின்பு நெற்றியில் இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து “இதுதான் தக்பீர்” என்று சொன்னாலும் சொல்லி விடுவார்கள். இதற்கு ஹதீஸ் கிரந்தங்களில் ஆதாரம் இல்லையே என்று சொன்னால் “நெற்றியில் கட்டவே கூடாது” என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்கேயாவது சொல்லி இருக்கிறார்களா? என்று நம்மிடமே எதிர் கேள்வியை போடுவார்கள்.
ஆகவே, பொது மக்களாகிய நாம் இவர்களையெல்லாம் “ஆலிம்கள்” என்று நம்பி பின்பற்றிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்கள் போன்ற “போலி வேடதாரிகளை” சரியான முறையில் அடையாளம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் இவர்களிடமிருந்து காப்பாற்றுவானாக. அடுத்து, நமது கண்ணோட்டத்தில் வரும்.
2. தக்வா தாரியான ஆலிம்கள்
தமிழக மத்ரஸாக்களிலிருந்து வெளிவரும் “ஸனது” பெற்றவர்கள் பெரும்பாலானவரிடத்தில் “தக்வா” வை எதிர்பார்ப்பது இயலாது என்றாலும், அல்லாஹ்வின் கிருபையால், விதிவிலக்காக சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.
இதுகாலம் வரை மார்க்கம் என்ற பெயரில் நடைபெற்ற பித்அத்களுக்கும், ஷிர்க்கான செயல்களுக்கும் ஆதரவாக இருந்துவிட்டு திடீரென்று மனம்மாறி இவைகளை கண்டிக்க ஆரம்பித்தால் பொது மக்களிடமும் , நிர்வாகத்திடமும் என்ன பதில் சொல்வது என்ற தயக்கம். மேலும் இந்த சமூக தீமைகளை எடுத்துச் சொல்லி மக்களிடம் ‘வஹ்ஹாபி’ என்ற பட்டத்தை வாங்கிவிட்டால் பின்விளைவு என்னாகுமோ?! என்ற கவலை. இந்த இரண்டு காரணங்கள் தான் மிக முக்கியமான காரணங்களாகும். இதைப் பற்றி சற்று தைரியமாகவே சமீபத்தில் என்னிடம் மனம் விட்டு பேசிய இளம் வயது ஆலிம் ஒருவர், “அனல் மீது விழுந்த புழுவாக நான் துடித்து கொண்டிருக்கிறேன். ஆனால் நான் ஒன்றும் செய்ய இயலாதவனாய் இருக்கிறேனே! (அவர் ஹனஃபி மத்ஹபை சார்ந்தவர்) ஒவ்வொரு வக்தும் நான் இமாமத் செய்ய தயாராகும் போது, தக்பீர் சொல்லி தொப்புள் மீது கைகட்டும் வேளையில், நபி வழிக்கு மாற்றமாக தக்பீர் கட்டுகிறோம் என்ற எண்ணம் என் இருதயத்தையே அறுக்கிறது. ஆனால், என்னால் ஒன்றும் செய்ய இயலாதவனாய் இருக்கிறேன்” என்று கண்ணீர் மல்க ஆதங்கத்தோடு கூறியதை என்னால் மறக்கவே முடியாது. இவரைப்போன்ற விரல்விட்டு எண்ணக் கூடிய சில ஆலிம்களிடம் “தக்வா” என்ற இறையச்சம் நீறுபூத்த நெருப்பு போல உள்ளேயே எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நெருப்பு சுடர் விட்டு பிரகாசிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நாம் அனைவரும் துஆ கேட்போமாக,
மேற்கண்ட சகோதரரைப் போன்ற தக்வாவின் உந்துதலில் தத்தளித்து தடுமாறும் ஆலிம் பெருமக்களே! உங்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள்!.
குர்ஆன், ஹதீஸை முழுக்க முழுக்க பின்பற்றி வாழ்க்கையை நடத்த தடையாயிருக்கும் இந்த “இமாமத்” வேலையை உதறி எறிந்து விட்டு சொந்தமாக, சுயமாக, சுதந்திரமாக ஒரு தொழில் புரிய முன் வாருங்கள். ரூ.500- சம்பளத்திற்காக குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமாக நடந்து மன உளைச்சல், போராட்டத்தோடு இம்மையில் வாழ்வதோடு மட்டுமின்றி, மறுமை வாழ்விலும் தண்டனைக்கு ஆளாகுவதை தவிர்த்து ஈருலக வாழ்விலும் அல்லாஹ்வின் திருப்பதியை பெறுவதற்கு உடனடியாக ஆவன செய்யுங்கள்.
மிக மிக குறைந்த வருவாயாக இருந்தாலும், எளிய வாழ்வாக இருந்தாலும், மறுமையில் நாம் சர்வ பாக்கியங்களையும் பெற்று திகழ்வோம் என்பதில் சந்தேகமே இல்லை. பொது மக்களின் பழிப்புச் சொல்லுக்கு ஆளாகும் நிலை வந்தாலும் அதனை கிஞ்சிற்றும் பொருட்படுத்ததாமல், குர்ஆன், ஹதீஸ், அடிப்படையிலேயே நானும் வாழ்வேன். என்னை சார்ந்தோரையும் வாழச் செய்வேன் என்ற சத்திய வேட்கையோடு உங்கள் இலட்சிய பயனத்தைத் தொடர ஆயத்தமாகுங்கள்.
மகத்தான இந்த ஜிஹாதிற்கு (போராட்டம்) நாம் தாயராகுவோம்! இஸ்லாத்தின் கோட்பாடுகளும், கொள்கைகளும் இஸ்லாத்தின் பெயராலேயே தகர்க்கப்படும் அவலநிலைக்கு நாம் முற்றுப் புள்ளி வைத்து குழி தோண்டி புதைப்போம்!
நபிவழி நடப்போம் என சபதமேற்று நாளை மறுமையில்
வல்ல நாயனின் அருளை சுகிப்போமாக! ஆமீன்!