வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம்!
மெளலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,
ஒரு மனிதன் சக மனிதனை மதிக்க வேண்டுமென இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தருகிறது. அந்த வகையில் ஒருவர் பிறசகோதரரின் நலனுக்காகச் செய்யும் பிரார்த்தனை அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுகிறது. அது மட்டுமன்றி, அதுபோன்ற நலன் பிரார்த்தனை செய்பவருக்கும் கிடைக்கிறது. எனவே பிறரின் நல்வாழ்விற்காக நம் நாவு பிரார்த்தனை செய்யட்டும். மேலும் அல்லாஹ்வுக்குப் பிடித்த அடியார்களைச் சந்திக்கும்போது, “எனக்காக துஆச் செய்யுங்கள்” என்று கேட்டுக்கொள்வது நபிவழி நடைமுறையாகும். அதை நம்முள் பலர் இன்றைய அவசர வாழ்க்கையில் மறந்தே போய்விட்டனர்.
ஒருவன் எளிய முறையில் உயர்நிலை அடைய உத்தம வழி இதுவே ஆகும். அல்லாஹ்வுக்குப் பிடித்த ஓர் அடியார் நமக்காக துஆச் செய்து அது அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் அது நம்முடைய வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும். கடைநிலையில் உள்ளவன் உயர்நிலையை அடைந்துவிடுவான். வறுமையில் உள்ளவன் வளம் கொழிக்கும் நிலைக்கு உயந்துவிடுவான். இது வாழும் இறைநேசர்களுக்கு வல்லோன் வழங்கும் இவ்வுலகப் பரிசு. எனவே அல்லாஹ்விற்குப் பிடித்த அடியார்களிடம் துஆச் செய்யுமாறு வேண்டிக்கொள்வது நன்மை வந்துசேர எளிய வழியாகும்.
அது சரி! அல்லாஹ்வுக்குப் பிடித்த அடியாரை எங்கே தேடுவது? எங்கேயும் தேட வேண்டாம். அவர் உங்கள் அருகிலேயே இருக்கலாம். ஒவ்வொரு பகுதியிலும் ஒருவரோ இருவரோ மூவரோ அதற்கும் மேற்பட்டவரோ இருப்பார்கள். அவர்களைப் பார்த்தவுடனே அல்லாஹ்வின் ஞாபகம் வரும்; தொழுகையைப் பற்றிய நினைவு நெஞ்சத்தில் எழும்; அவர்தாம் அல்லாஹ்வுக்குப் பிடித்த நபர். அத்தகையோர் பள்ளியில் தொழுகை நடத்துகின்ற இமாமாக இருக்கலாம்; ஏதேனும் அரபிக் கல்லூரியில் பாடம் நடத்தும் ஆசிரியராக இருக்கலாம்; வாய்மையான வியாபாரியாக இருக்கலாம்; கடைநிலை ஊழியராகவும் இருக்கலாம்; ஆனால் அவரைப் பார்த்ததும் நமக்கு ஓர் இனம் புரியாத மதிப்பும் அன்பும் தோன்றும். அத்தகையோரிடம் தான் நம்முடைய துஆ வேண்டுகோளை முன்வைக்க வேண்டும்.
அல்லாஹ்வுக்குப் பிடித்த அடியார்களுக்கெனச் சில அடையாளங்கள் உண்டு. அவர்கள் நாள்தோறும் ஐவேளைத் தொழுகையைப் பள்ளியில் ஜமாஅத்தோடு கூட்டாக நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வார்கள்; அதை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். எந்தப் பணியையும் செவ்வனே நிறைவேற்றுபவர்களாக இருப்பார்கள். கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவார்கள். இறையச்சம் அவர்களின் உள்ளத்தில் மிகுந்து காணப்படும்; வாய்மையையே பேசுபவர்களாக இருப்பார்கள்; அதிகமான நேரம் தனிமையில் இருப்பார்கள்; மெளனமாக இருப்பார்கள்; வழவழவெனப் பேச மாட்டார்கள்; இத்தகையோரே இப்புவியில் வாழும் இறைநேசர்கள். இத்தகையோரை அடையாளம் கண்டு அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதும் நமக்காக துஆச் செய்யுமாறு வேண்டிக்கொள்வதும் நம் கடமையாகும்.
இதற்கான சான்றுகளை நபிமொழித் தொகுப்பு நூல்களில் காண்கிறோம். ஒரு தடவை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உம்ராச் செய்வதற்காகப் புறப்பட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், “என் சகோதரரே, உம்முடைய பிரார்த்தனையில் என்னை மறந்துவிடாதீர்!” என்று கூறினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ முன், பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள். அவர்களுக்காக உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எப்படிப் பிரார்த்தனை செய்வார்கள்? என்ன துஆச் செய்வார்கள்? உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மதிப்பும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மதிப்பும் சமநிலை உடையதா? இருவரும் ஒரே மதிப்புடையோரா? இல்லை என்பது நமக்குத் தெரியும். இருப்பினும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு சொன்ன காரணம் என்ன? ஒருவர் மற்றொரு முஸ்லிமை மதிக்க வேண்டும்; கண்ணியப்படுத்த வேண்டும்; அவரிடம் துஆவிற்காக வேண்டிக் கொள்ள வேண்டும் என்பதை கற்பிக்கின்றார்கள்; மேலும் இவர் அல்லாஹ்விற்குப் பிடித்த அடியார் என்று அடையாளம் காட்டுகின்றார்கள். இதையே இந்நபிமொழியிலிருந்து விளங்குகிறோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஈராக் நாட்டில் கர்ன் எனும் ஊரில் அல்லாஹ்விற்குப் பிடித்த ஓர் அடியார் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் உவைஸ். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தார்; அல்லாஹ்வை வழிபடுவதில் அளவிலா ஆனந்தம் அடைந்து வந்தார்; அவர் தம்மை ஈன்றெடுத்த அன்னைக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபட்டிருந்தார். அதன் காரணத்தால் அவர் ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரடியாகச் சந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.
ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு, அலீ ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரையும் பார்த்து, “நீங்கள் இருவரும் உவைசுல் கர்னீயைச் சந்தித்தால், தங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
உமர் ரளியல்லாஹு அன்ஹு, அலீ ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரடியாகக் கண்டு இறைநம்பிக்கை கொண்டு அவர்களுடனேயே நீண்ட காலம் நட்பு கொண்டிருந்த மிகப்பெரும் நபித்தோழர்கள்; நேர்வழி பெற்ற கலீஃபாக்கள்; சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறப்பட்ட பதின்மருள் உள்ளோர். இவ்வளவு சிறப்பும் உயர்வும் கொண்ட நபித்தோழர்கள் ஏன் நபித்தோழர் அல்லாத ஓர் அடியாரிடம், தங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்? அதற்கான அவசியம் தான் என்ன? ஏனெனில் அல்லாஹ்விற்குப் பிடித்த அடியாரை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதே நபிகளாரின் நோக்கமாகும். எனவே உமர் ரளியல்லாஹு அன்ஹு, அலீ ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவருக்கும் அவரை அடையாளம் காட்டினார்கள்.
ஒருவர் சக மனிதரை மதிக்க வேண்டும் என்பதற்கும் அல்லாஹ்விற்குப் பிடித்த அடியார்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து துஆவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கும் மேற்கண்ட நிகழ்வுகள் தக்க சான்றாக உள்ளன. எனவே நாம் அத்தகைய அடியார்களை அடையாளம் கண்டு அவர்களிடம், நமக்காகப் பிரார்த்தனை செய்யக் கேட்டுக்கொள்வோம். அவர்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டால் அல்லாஹ்வின் கருணையும் அன்பும் நமக்குக் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களின் துஆவின் பொருட்டாலும் ஒருவரின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படலாம்.
அதே நேரத்தில் மக்கள் இன்றைக்கு இதற்கு முரணாகச் செயல்படுவதைக் காணமுடிகிறது. இறந்தவர்களிடம் சென்று தமக்காகப் பிரார்த்தனை செய்யுமாறும் பரிந்துரை செய்யுமாறும் மன்றாடிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக எவ்வளவு தூரமானாலும் பயணிக்கத் தயாராக இருக்கின்றார்கள். இது அவர்களின் அறியாமையாகும். இறந்தவர் மண்ணறைக்குள் வைத்து அடக்கம் செய்யப்பட்டவுடன் வானவர்கள் வந்து வினாக்களைத் தொடுக்கின்றார்கள்; நல்லவராக இருந்தால் சொர்க்கத்தின் வாசல் திறக்கப்பட்டு, அந்த மண்ணறை கண்ணுக்கெட்டிய தூரம் வரை விசாலமாக்கப்பட்டுவிடும். அதன்பின் அவர்கள் புதுமாப்பிள்ளை உறங்குவதைப் போல் உறங்குவீராக என்று கூறுகின்றார்கள்; கெட்டவராக இருந்தால் நரகத்தின் கதவு திறக்கப்பட்டு அதன் வெப்பத்தில் வேதனை செய்யப்பட்டவராக மறுமை நாள் வரை இருப்பார். இதுதான் இறந்தபின் உள்ள நிலை.
எனவே நிம்மதியாக உறங்கும் நல்லடியார்களை நாம் சிரமப்படுத்தக்கூடாது. அவர்களுக்காக நாம்தாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதோ திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்! எங்களுக்கு முன் நம்பிக்கை கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்! நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிகக் கருணையுடையவனும், இரக்கமுடையவனுமாக இருக்கின்றாய்!” என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பார்கள். (59 : 10) ஆகவே நம்முள் இறந்துவிட்டோருக்கு நாம் துஆச் செய்வோம். நம்மிடையே வாழுகின்ற நல்லடியார்களிடம் நமக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்வோம்.
(இனிய திசைகள் – சமுதாய மேம்ப்பாட்டு இதழ் – மே 2015)