ஜமாத்தார்கள் போர்வையில் குழப்பவாதிகள்!
சுன்னத் ஜமாத் என்று பெயரை மட்டும் வைத்துக்கொண்டு சுன்னத்தை வெறுக்கும் இவர்களை என்னவென்று சொல்வது?!
மஹர் தொகையை ஒரு ஜமாத் முடிவு செய்யலாமா?
தொகை இவ்வளவு தான் எழுதனும் என்று கட்டாயப்படுத்த முடியுமா?
இதை மார்க்கம் அனுமதிக்கிறதா?
ஏற்றத்தாழ்வுகளை காரணம் காட்டி மார்க்கச் சட்டத்தில் வரம்பு மீறலாமா?
மஹர் தொகையை ஒரு புத்தகத்தில் எழுதும்போது அது பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் மற்றும் நிர்வாகிகள் இவர்களை தவிர வேறு யாருக்கும் அது தெரிய வாய்ப்புகள் மிக குறைவு. ஆனால் இந்த ஏற்றத்தாழ்வுகளை காட்டக்கூடிய எத்தனையோ நிகழ்வுகளை நாம் அன்றாடம் நமதூர் திருமணத்தில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
ஒருவர் தனது பெருமையை, பொருளாதர பலத்தை, வெளியே காட்ட இந்த திருமணத்தைத் தான் தேர்வு செய்கிறார்.
இருப்பவர்கள் தனது சக்திக்கு தக்க ஊரை வளைத்து சாப்பாடு போடுவதும், ஊரில் உள்ள எல்லா இடத்திலும் விளம்பரப்படுத்துவதும், தோரணம் கட்டி தனது செல்வாக்கை நிலை நாட்டுவதும், தெருவுக்கு தெரு ஆர்ச் வைத்து நடத்தப்படும் திருமணத்தில் எல்லாம் இல்லாத இந்த ஏற்றத்தாழ்வு மஹர் தொகையை எழுதுவதில் மட்டும் தான் வந்துவிடுகிறது என்றால் அது ஒரு நியாயத்தை நிலை நாட்ட வைக்கும் வாதமாக தெரியவில்லை.
இருப்பவர்கள் தனது பணத்திமிரை காட்டி செய்யும் ஆடம்பர திருமணத்தால் இல்லாத எத்தனையோ மக்கள் மணம் வெதும்பி நிற்கும் நிலையை கண்கூடாக பார்க்கமுடிகிறது.
அதிலும் பலர் அந்த பணக்காரர் அளவுக்கு இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் நமது வீட்டு திருமணத்தை சிறப்பாக செய்ய நினைத்து வீட்டை அடமானம் வைப்பதும், வட்டிக்கு பணம் வாங்குவதும், அதிலும் மோசமாக பிற மக்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாக இந்த ஆடம்பர திருமணம் செய்தவர்கள் காரணம் அல்லவா?
இந்த அனாச்சாரங்கள், எல்லாவற்றையும் அனுமதித்துவிட்டு மார்க்கம் சொன்ன ஒரு விசயத்தை செய்யப்போனால் அதில் மட்டும் முட்டுக்கட்டை போடும் இந்த ஜமாத்தார்களை என்ன சொல்வது.?
இதை தடுக்கும் நோக்கம் எதனால் வருகிறது.
வரதட்சணைக்கு எதிரக ஒரு இயக்கம் களம் கண்டுவருவதால் அதற்கு மாறு செய்யும் நோக்கத்தில் அல்லாஹ்வின் சட்டத்தில் இவர்கள் கை வைக்கிறார்களா? என்பது புரியவில்லை.
வார்த்தைக்கு வார்த்தை ஊர் பாரம்பரியம், சுன்னத் ஜமாத் கொள்கை என்று பிதற்றிக்கொள்ளும் ஜமாத்தார்கள் கண்ணுக்கு அல்லாஹ்வின் வேதவரிகளும், நபி ஸல் அவர்களின் ஹதீஸ்களும் மிக துச்சமே எத்தனை விளக்கம் கொடுத்தாலும் நாங்க ஒரு முடிவு செய்துவிட்டால் எங்க பேச்சை நாங்களே கேட்க மாட்டோம் என்று அல்லாஹ்வின் வார்த்தைக்கு எதிரான யுத்தத்துக்கும் தயாராகிவிட்டார்கள் போல் இருக்கிறது இவர்களின் நிலை.
ஆனால் மார்க்கம் என்ன சொல்கிறது பார்க்கலாம்.
கீழ் வரும் இந்த ஹதீஸ் நமக்கு சொல்லும் பாடம் என்ன?
இன்று முஸ்லிம்களிடையே நடைமுறையிலிருக்கும் 101 அல்லது 1001 ரூபாய் என்று புத்தகத்தில் எழுதிக்கொள்ளும் மஹர் தொகையை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை.
மணப்பெண்தான் மஹர் தொகையை நிர்ணயிக்க வேண்டும்.
இதில் மற்றவரின் குறுக்கீடுகள் இருக்கக்கூடாது.
உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆட்சி காலத்தில் பெண்கள் மஹர் தொகையை அதிகமாகக் கேட்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது ஆட்சித் தலைவராக இருந்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மஹர் தொகையை அதிகரிக்கும் பெண்களின் செயலைக் கண்டிக்கும் வகையில் ”இனிமேல் மஹராக நாம் ஒரு தொகையை நிர்ணயிப்போம்” என்று கூறினார். இதைக் கண்டித்து ஒரு பெண்மணி ”மஹர் தொகையை அல்லாஹ்வே நிர்ணயிக்காத போது அதை நிர்ணயிப்பதற்கு நீங்கள் யார்? என்று கேட்டார். உடனே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைவனுக்கு நன்றியைச் செலுத்தி மஹர் தொகையை நிர்ணயிக்குபடி போடுவதாகச் சொன்ன சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குத்பா நிகழ்த்தும் போது மஹர் தொகையை வரையறை செய்ய முற்பட்டார்கள் என்றும் அப்போது ஒரு பெண் எழுந்து ஆட்சேபித்த வேளையில் தனது தவறை திருத்திக் கொண்டார்கள் என்றும் கூறப்படும்
செய்தியை நோக்குவோம்.
செய்தி இதுதான்:
“ஒரு முறை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மிம்பரிலே ஏறி ‘மனிதர்களே மஹர் கொடுப்பதில் நீங்கள் வரம்பு மீறுகிறீர்கள். நபியவர்களும் நபித் தோழர்களும் நானூறு திர்ஹங்களுக்கு மேல் கொடுக்கவில்லை. எனவே, நீங்களும் அதற்கு மேல் கொடுக்காதீர்கள்’ எனக் கூறினார்கள். பிறகு அவர் மிம்பரில் இருந்து இறங்கிய போது, ஒரு பெண்மணி ‘அமீருல் முஃமினீன் அவர்களே’ அல்லாஹ் குர் ஆனில் ‘பெண்களுக்கு ஒரு பாளத்தையே மஹராகக் கொடுத்த போதும்ஸ.’ எனக் கூறியிருக்க நீங்கள் எவ்வாறு தடுப்பீர்கள்’ என ஆட்சேபிக்க உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களோ அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரியபின் மீண்டும் மிம்பரிலே ஏறி தனது கருத்தை மீளப் பெற்றார்கள்”
பிற இயக்க மக்களை நோக்கி இவர்கள் ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று சொல்லி அவதூறு பிரச்சாரம் செய்யும் இவர்கள் இந்த ஹதீஸை என்ன செய்ய போகிறார்கள் இது இவர்கள் தொகையை நிர்ணயம் செய்வதை தடை செய்கிறது.
நபி அவர்கள் வாழ்ந்த போது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு என்ற நபித்தோழர் பேரித்தம் பழமளவு தங்கத்தை மஹராகக் கொடுத்து ஒரு மதீனத்து பெண்ணை மண முடித்தார்கள். (அறிவிப்பு: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி)
ஒரு இரும்பு மோதிரத்தையாவது மணப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து மணம் முடியுங்கள் என நபி அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டார்கள் (ஹதீஸின் சுருக்கம்) (அறிவிப்பு: ஸஹல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி, திர்மிதி)
ஒரு நபித் தோழரிடம் மஹராகக் கொடுக்க எந்த பொருளும் இல்லாததை அறிந்த ரசூல் அவர்கள் “உனக்கு எதாவது திருக்குர்ஆன் வசனங்கள் தெரியுமா? எனக் கேட்டார்கள். அந்நபித்தோழர், தனக்கு இன்னின்ன குர்ஆன் வசனங்கள் தெரியுமென விடையளித்தார்கள். உடனே அந்த வசனங்களை மணப்பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பாயாக! அது அப்பெண்ணுக்குரிய மஹராகும்” என்றார்கள். (அறிவிப்பு: ஸஹல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி, திர்மிதி)
போர் கைதியாக பிடிக்கப்பட்ட ஸஃபிய்யா என்ற யூதப் பெண்ணை நபி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை போர் கைதியிலிருந்து விடுவித்தலே அவருக்கான மஹராக இருந்தது. (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, திர்மிதி)
மஹர்-திருமணக்கொடை-மணப்பெண்ணின் தனி உரிமை. அதில் தலையிடவோ, அதற்கு வரையறையிடவோ எவருக்கும் உரிமையில்லை.
ஒரு மணப்பெண் ஒரு பொற்குவியலைக் கூட தனக்கு மஹராக கேட்க உரிமையுண்டு. (பார்க்க: அல்குர்ஆன் 4:20)
இவர்கள் சொல்லும் ஒன்றும் இல்லாத காரணத்தை வைத்துக்கொண்டு இத்தனை ஹதீஸ்களையும் , அல்லாஹ்வின் வார்தையான குர் ஆனையும் மறுக்கப்போகிறார்களா?
அல்லது அல்லாஹ்வின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தங்களது செயல்பாட்டை மாற்றிக்கொள்ள போகிறார்களா?
இப்படியானவர்களிடம் மர்க்கச்சட்டம் கேட்டு போய் நிற்கும் நமது சகோதரர்கள் சிந்திக்கவும்.
இப்படி அல்லாஹ்வின் மார்க்கத்தில் தனது சுய விருப்பத்தையும் மனோ இச்சையையும் திணித்து, பழமை வாதம் பேசி, ஊர் வழக்கம், பாரம்பரியாம், அது இது என்று காரணம் சொல்லும் இவர்களிடம் போய் நின்று ஈமானை இழக்காதீர்கள்.
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அவன் உங்கள் காரியத்தை இலகுவாக்குவான்.
அல்லாஹ்வின் பக்கமும் அல்லாஹ்வின் தூதர் பக்கமும் வாருங்கள்
உங்களுக்கு அவன் வெற்றியை கொடுப்பான்.
அதனால் படும் துன்பங்கள் கூட உங்களுக்கு நன்மையாக இருக்கும் என்பதை மறவாதீர்கள்.
ஒரு தீமையை கண்டால் கையால் தடுங்கள் இல்லை என்றால் வாயால் தடுங்கள் அதுவும் சரியாக வரவில்லை என்றால் மனதால் வெறூத்து ஒதுங்குங்கள்.
இதில் முதல் இரண்டையும் செய்து பலன் இல்லாத போது இவர்களை மனதால் வெறுத்து ஒதுங்கி சத்தியத்தின் பக்கம் வாருங்கள்
நூர் மைதீன் அவுக்கூர்