இயக்கச் சிந்தனையும் சிந்தனை இயக்கமும்!
இயக்கம் மற்றும் சிந்தனை இவ்விரு சொற்களையும் மாற்றி எழுதும் போது வித்தியாசமான இரு பெரும் கருத்துக்கள் தோற்றம் பெறுகின்றன. இயக்கச் சிந்தனை என்றால் என்ன? என்பதை ஆரம்பமாகவும் சிந்தனை இயக்கம் என்றால் என்ன? என்பதை அடுத்தும் பார்க்கலாம்.
முஸ்லிம் சமூகத்திற்கெதிரான பல்வேறுபட்ட சவால்கள் தோன்றிய போது அவற்றுக்கு முகம்கொடுப்பதற்காக இயக்கங்கள் தோற்றம் பெற்றன. ஒவ்வொரு இயக்கமும் தனக்கென்று ஓர் இலக்கு, நோக்கம், வழிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டது. அதற்கேற்ப தனது உறுப்பினர்களையும் பயிற்றுவிக்க முனைந்தது. இதையே இயக்கச் சிந்தனை என்போம்.
ஒவ்வொரு இஸ்லாமிய இயக்கமும் எப்போதும் தனது உறுப்பினர்களை தஃவா, செயல் ரீதியான பயிற்றுவிப்பு, அர்ப்பணம், கட்டுப்பாடு, தியாகம் போன்ற பகுதிகளில் புடம்போட்டெடுக்க முனையும். இஸ்லாமிய இயக்கம் மற்றும் அதன் உறுப்பினர்களிடம் ஒரு சிந்தனை இருக்கும். அந்த சிந்தனை இயக்கத்திற்கு பணிவிடை செய்யக்கூடியதொரு சிந்தனை. அது இயக்கம் வரைந்த கோட்டை பாதுகாக்கக் கூடியது.
அச்சிந்தனை இயக்க நிலைப்பாடுகளையும் அதன் தேர்வுகளையும் நியாயம் காணக்கூடியதாக இருக்கும். இயக்க நலன்களுக்கே அது முன்னுரிமை கொடுக்கும். இவ்வகை சிந்தனையை உஸ்தாத் ரைஸுனி ‘கட்டுப்போடப்பட்ட சிந்தனை ‘ என விளக்குகிறார். இவ்வகையான இயக்கச் சிந்தனை காலத்திற்கேற்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட புதிய சிந்தனைகளையும் புனர்நிர்மாணக் கருத்துக்களையும் மிக அரிதாகவே ஏற்றுக் கொள்கின்றன என விமர்சிப்பார்.
சிந்தனை இயக்கம் என்பது கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. இப்பிரிவினர் சிந்தனைகளை உருவாக்குவதிலும் அதனை வளர்த்தெடுப்பதிலும் மும்முரமாக இருப்பர். அமெரிக்காவில் இயங்கும் மிமிமிஜி நிறுவனம், கத்தாரில் இயங்கும் சிமிலிணி நிறுவனம் போன்றவை இவ்வகையைச் சார்ந்தவை. காலத்திற்கேற்ற புதிய சிந்தனைகளை உருவாக்குவதும் இஸ்லாத்தை அதன் மூலம் முன்வைக்க முனைவதும் இவர்களது போக்கு.
இந்தியாவிலும் இலங்கையிலும் இஸ்லாமிய இயக்கங்களில் அண்மைக் காலமாக சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. சிந்தனை இயக்கத்தை இலக்காக வைத்து சிலர்கள் உருவாகியுள்ளனர் என்பது ஆரோக்கியமான நகர்வு. குறிப்பாக இளைஞர்களை உள்ளடக்கிய ஆய்வு மன்றங்கள் தோன்றி இருப்பது வரவேற்கத்தக்கது. இங்கு அவர்கள் உருவாக்கும் சிந்தனைகளுக்கு உரிய வரவேற்பும் உற்சாகமும் அளிக்கப்பட வேண்டும். கட்டுப்போடப்பட்ட சிந்தனையாக இயக்கச் சிந்தனை தொடர்ந்தும் இருக்குமாயின் அதனால் எதனையும் சாதிக்க முடியாதிருக்கும்.
குறிப்பிட்ட பிரச்சினை ஆய்வு ரீதியாக அணுகப்படுவதும் கலந்துரையாடப்படுவதும் நமது வாழ்வியல் அமைப்பை மென்மேலும் சரிப்படுத்த இன்றியமையாதவை.
– ரிஷாத் நஜ்முதீன், இலங்கை.
source: http://www.samooganeethi.org/index.php/category/social-justice/last-