குர்ஆனை மனப்பாடம் செய்ய உதவும் குறிப்புகள்!
உங்களுடைய மூளை எப்படி வேலை செய்கிறது?
நரம்பணுக்கள் (Neurons) தான் மூளையின் கட்டுமான தொகுதிகள் (building blocks of the brain) அனைத்து யோசனைகளும் (நினைவாற்றல், நனவுநிலை அடங்கலாக) இச்சிறு செல்களைச் சார்ந்து தான் இருக்கின்றன. நரம்பணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து வலைப்பின்னல் (neural networks) இணைப்புகளை உருவாக்கி அவற்றின் மூலம் செய்திகளை ஒரு நரம்பணுவிலிருந்து மற்றொரு நரம்பணுவிற்கு கடத்துகின்றன.
இவ்விணைப்புகள், எவ்வளவு அவை உபயோகப்படுத்தப்படுகின்றனவோ அதற்கு ஏற்ப ஒத்துப்போகின்றன. அவைகள் அனுப்பும் சைகைகளின் (signal) வலிமையை அடிக்கடி அனுப்புவதன் மூலம் அதிகரிக்கலாம். ஒரு குறிப்பிட்ட இணைப்பு எத்தனை அதிகமாக பயன்படுத்தப்படுகிறதோ, அத்தனை வலிமையாக அது சைகைகளை அனுப்பும்.
நினைவுகள் என்றால் என்ன அவை எப்படி உருவாகின்றன?
நினைவுகள் உருவாக்கப்படுகின்றன, சேமித்து வைக்கப்படுகின்றன, திடீர் தாக்குதல்களால் நரம்பணுக்கள் தூண்டப்படும்போது இன்னும் வலிமை பெறுகின்றன. முதல் தூண்டுதல் – உதாரணமாக ஒரு வசனத்தைப்படித்தல்– ஒரு நினைவுச் சுவடு அல்லது ஒரு படிவத்தை குறிப்பிட்ட நரம்பணுவில் ஏற்படுத்திவிடும். அதை மீண்டும் படித்தல் அல்லது நினைவுபடுத்திக் கொள்ளுதல் அந்த நினைவுச்சுவட்டை உறுதியாக்கி, பலப்படுத்தி அதை அடைவதை எளிதாக்கும்.
இந்த நினைவுச்சுவட்டை எத்தனை அதிகமாக நினைவுபடுத்திக்கொள்கிறீர்களோ, அது அத்தனை உறுதியாகி, இன்னும் நிரந்தரமாக சேமித்து வைக்கப்படும். நம் மூளை புலன் சார்ந்த செய்திகளை ஒரு நொடியின் ஒரு பகுதிநேரம் தான் சேமிக்கும், அதன் பின் சில விவரங்கள் குறுகிய கால நினைவுகளாகவும், மற்றவை நடைமுறை நினைவாகவும் இருக்கும்.
இறுதியாக, சில செய்திகள் நெடுங்கால நினைவுகளாக மூளையின் வெளிப்பகுதியை மூடியிருக்கும் பொருளின் (cortex) பல பகுதிகளில் சேமிக்கப்பட்டு, பெரும்பாலானவை, முதல் முதலில் எந்த பாகத்திற்கு வந்தடைந்ததோ அங்கேயே திரும்பச் செல்லும். இத்தனை தூரத்திற்கு வரக்கூடிய தகவல்களை முடிவு செய்யும் பெரும் காரணி, அவற்றோடு முன்பே இருந்த தகவல் துணுக்குகளோடு இருக்கும் தொடர்பு தான்.
இவையெல்லாம் குர்ஆனை மனப்பாடம் செய்ய எப்படி உதவும்?
இவற்றை குர்ஆனை மனப்பாடம் செய்வதற்கு பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு நான்கு படிகள் உள்ளன.
1. இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்.
மனப்பாடம் செய்வதற்கு எளிதான சூராக்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். எப்படி? குர்ஆனின் இறுதி ஜுஸுவில் சிறிய சூராக்கள் இருப்பதால், அவற்றை மனனம் செய்வது எளிது; மேலும், ஒவ்வொன்றாக முடிக்கும்போது, வெற்றியுணர்ச்சியை உணர முடியும்.
உங்கள் ஆரம்ப இலக்கு 28, 29 அல்லது 30வது ஜுஸுவாக இருக்க வேண்டும். குர்ஆனின் மீதிப்பகுதியை ஒவ்வொன்றிலும், முந்தயதை விட பெரிய பகுதி இருப்பது போல் மூன்றாக பிரித்துக்கொள்ள வேண்டும்.உதாரணமாக, மீதிப்பகுதியை பின்வருமாறு பிரிக்கலாம்: சுமார் 20%, 35%, 45%, முந்தயதை விட சற்று அதிகமாக, சவாலை அதிகரிப்பது போல் இருக்க வேண்டும். இது ஒரு உதாரணம் தான்; உங்களுக்கு எது வசதியாக இருக்கிறதோ அதற்க்கேற்றார்போல் நீங்கள் இலக்குகளை நிர்ணயிக்கலாம், இன்னும் பல பகுதிகளாகவும் பிரித்துக்கொள்ளலாம். எப்படியிருந்தாலும், மனப்பாடம் செய்வதில் முதல் கட்டம், மீண்டும், மீண்டும், உங்களால் மிகச்சரியாக சொல்ல முடியும்வரை வசனங்களைப்படித்தல்.
ஒவ்வொரு பிரிவிலிருந்தும், உங்களால் முடிந்த அளவு பகுதியை பல முறை படிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு பகுதியையும் ஓத வேண்டும், இறுதியில் முழு ஜுஸுவையும், சரியான முறையில் ஓதுகிறார்களா என்பதை தவறின்றி கணித்திட தகுதியான ஒருவரிடம் ஒப்பிக்க வேண்டும். இதன் நோக்கம், தகவல்களை குறுகிய கால நினைவுகளாக சேமித்து, அதன்பின், நடைமுறை நினைவாக ஆக்குவது தான். தேர்ந்தெடுத்த பகுதியை இதன்படி முடித்தபின், அடுத்த கட்டத்துக்குப் போக தயாராகிவிட முடியும். இறுதிக் கட்டம் முடிந்தபின், அடுத்த பகுதிக்கு சென்று இதே முறையை முழுமை செய்கிறார்.
2. குறுகிய கால நினைவையும், நடைமுறை நினைவையும் தூண்டுங்கள்
இக்கட்டத்தில், இலக்கு, வெறுமனே ஒப்பிப்பது இல்லாமல், நினைவிலிருந்து சொல்வதற்குப்பழகுவதாக இருக்க வேண்டும். மூளையை தொடர்ந்து தகவல்களை நினைவுக்குக் கொண்டுவர விடுவது தான் குறிக்கோள். இதன் மூலம் நரம்புகள் சார்ந்த வழிகள் பலப்படுத்தப்படுவதோடு, தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவும்.தகவல்களை எத்தனை திறம்பட, நடைமுறை நினைவிற்கு அறிவிக்க, குறுகிய கால நினைவில் பதிய வைக்கிறோமோ, அத்தனை திறமாக நினைவுக்குக் கொண்டு வரும் முறை இருக்கும்.
மனப்பாடம் செய்வதற்கு ஒரு அடிப்படைத் திட்டம், தொடர்பு படுத்துதல். அல்ஹம்துலில்லாஹ், குர்ஆனின் கருப்பொருள் ஒன்றாக இருப்பதால், அல்லாஹ் (சுபஹ்) குர்ஆனை மனனம் செய்வதில், ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்துதலையும், மீண்டும், மீண்டும் வரும் கருத்துக்களையும் இணைத்திருக்கிறான். குர்ஆனில் 6000 வசனங்களுக்கு மேல் உள்ளன, அவற்றில் சுமார் 2000 வசனங்கள், மொத்தமாகவோ, சிறு (ஒரு எழுத்து, ஒரு சொல், இரு சொற்கள், போன்ற) வித்தியாசங்களுடனோ ஒன்றையொன்று ஒத்திருக்கின்றன.
3. மனப்பாடம் செய்வதன் மூலம், நெடுங்கால நினைவுகளை ஏற்படுத்துங்கள்.
ஒவ்வொருவரும் குர்ஆனில் ஒவ்வொரு படித்த பகுதிகளையும், சரியாக ஓதுகிறோம் என்ற நம்பிக்கை வரும் வரை ஓத வேண்டும். ஒரு பகுதியைப் படித்தவுடன், அடுத்த பகுதியைப் படிக்கும்போது, முன்னுள்ளதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி ஒரு முழு ஜுஸுவையும் முடிக்க வேண்டும். இந்நிலையில், (ஓதுதலில்) அடைய வேண்டிய இலக்கை வாழ்வோடு இணைக்க வேண்டும். உதாரணமாக, அந்த பாகங்களைத் தொழுகையில் ஓதலாம், எங்கெல்லாம், எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம், ஓத வேண்டும்.
4. உண்மையாக்குங்கள்
ஒரு ஜுஸுவை மனனம் செய்தபின், இதற்கு முன்னால் மனப்பாடம் செய்த ஜுஸுவுகளோடு சேர்த்து, முன்னால் செய்தது போல் திரும்ப செய்ய வேண்டும். இப்படி முழு குர்ஆனையும் முடிக்கும்வரை தொடர வேண்டும்.
இறுதியாக, முக்கியமாக..
நான் இதை இறுதியில் கூறினாலும், மற்றவைகளுக்கெல்லாம் முன்னால் ஒரு முக்கியமான அடி, குர்ஆனை மனனம் செய்வது உங்கள் புகழுக்காகவோ, பெருமைக்காகவோ, இம்மை வாழ்வுக்காகவோ இருக்கக்கூடாது. குர்ஆனை மனப்பாடம் செய்ய ஆரம்பிப்பது அல்லாஹ் ஒருவனுக்காக மட்டுமே என்ற தூய எண்ணத்தோடு தொடங்க வேண்டும்.
அல்லாஹ் (சுபஹ்) கூறுகிறான்: “(நபியே) நீர் கூறுவீராக: ‘நிச்சயமாக, மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியோடு அல்லாஹ்வை வணங்குமாறு நான் ஏவப்பட்டிருக்கிறேன்.’ [அல்-குர்ஆன் 39:11]
நன்றி: http://www.understandqurantamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%ஸ/